குழந்தைகள் முளைக்கும் பேருந்து
அன்றுதான் பள்ளிப் பேருந்திற்கு
இறக்கைகள் முளைத்திருந்ததைப்
பார்த்தேன்
இறக்கைகள்
அசையத் துவங்கியதும்
பேருந்து
பறக்கிறது
பேருந்தின்
கண்ணாடிகளுக்கு
வெளியில் இறக்கைகள்
முளைத்து
போவோர் வருவோரைப்
பார்த்துக் கையசைத்து
ஆரவாரம் செய்கின்றன
பேருந்துதுப்பிய
குச்சி முட்டைகள்
வாகனமோட்டிகளின்
முகத்தில் பட்டும்
யாரும் கலவரமடையவில்லை
பேருந்தின் வயிற்றிலிருந்து
குதித்து வரும்
பாலித்தின்களை
யாரும்
குப்பைகளாக
நினைப்பதில்லை
பேருந்து எழுப்பும்
ஆர்பாட்ட ஓசைகளை
எல்லோரும் ஆனந்தமாகச்
சகித்துக் கொள்கிறார்கள்
சாப்பாட்டுக் கடைகளில்
அமர்ந்திருப்பவர்கள்
மீன் கடை சீனக் கிழவி
பழ வியாபாரிகள்
முச்சந்தி கடையின்
வெளிச்சத்தில் நின்றிருப்பவர்கள்
எல்லோரையும் பார்த்து
பேருந்து கையசைத்துக்
கத்துகிறது
பேருந்தின் உடல்முழுவதும்
பேருந்தின் உடல்முழுவதும்
விரல்கள் தோன்றி
பட்டண வீதிகளைச்
சுரண்டி அலசுகிறன்றன
அன்றைய காலைபொழுதுகளில்
பேருந்து வயிறு குழுங்கி
சிரித்துக் கொண்டே
நகர்கிறது
எல்லோரும்
பேருந்துடன்
சேர்ந்து கொண்டு
சிரித்துக் கொண்டே
கடக்கிறார்கள்
ஏனோ தெரியவில்லை
சிலநேரங்களில்
பேருந்து முகம்
கவிழ்ந்து
இறந்த உடலுடன்
காலியாக
வந்து சேர்கிறது
இறக்கைகள் காணவில்லை
சவ ஊர்வலமாய்
பேரிரைச்சிலுடன்
புகைக் கக்கி
உறுமுகிறது
சிறகைத் தொலைத்த
பறவையாய்
நகரத்தில் விழும்
பேருந்தைச்
சிலருக்குப் பிடிப்பதில்லை
ஆக்கம்: கே.பாலமுருகன் ,
சுங்கைப்பட்டாணி