Wednesday, September 30, 2009

விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல - இனப்படுகொலைகளின் உச்சம்

தமிழீழ அப்பாவி மக்களின் படுகொலைகளுக்கு காரணமான ராஜ பக்சேவின் அரசின் கொடூரம், சகிக்க முடியாத உண்மை. மீனகம் செய்தி வலைத்தலத்தில் அவ்வப்போது உண்மை செய்திகள் விரைவாக வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு சில செய்திகள் இங்கே தரப்பட்டுள்ளன.

இவ்வளவு அநியாயங்களும் உலக நாடுகளின் ஆதரவில் அவர்களின் கண்கானிப்பில்தான் நடந்து கொண்டிருக்க, மடிந்து சாவது நம் தமிழர்கள்தான். உலக வரலாற்றின் இப்படியொரு கடுமையான உயிர் பலிக்கு ஆளான ஒரே இனமாக தமிழிழம் மட்டுமே இருக்க முடியும். தமிழர்களுக்கு ஏற்பட்ட இந்தத் துரோகங்களுக்கு உலகம் என்ன செய்யப் போகிறது? பார்த்துக் கொண்டிருக்கிறது. . .


இவ்வளவு கொடூரங்களை நடத்திய அரசிடம் பாதுகாப்பு தஞ்சம் அடைந்து கொண்டு அரசியல் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு பிரபாகரனைக் காட்டிக் கொடுக்கிறேன் என்று நினைத்துக் கொண்டு அப்பாவி மக்களின் இனப்படுகொலைகளுக்குத் துணைப்போன கருணா பேசுவதற்கோ அல்லது பேட்டி அளிக்கவோ என்ன தகுதி கொண்டிருக்கிறார்? பேசட்டும் பேசட்டும். .

-கே.பாலமுருகன்


இடம்பெயர் முகாம்களில் ஊட்டசத்து குறைந்த குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுவதில்லை: இந்திய மருத்துவர்

வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பொருத்தமான ஊட்டச் சத்து உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் ஊட்டச் சத்து குறைந்த குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது என்று இந்திய மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதமாக வன்னி தடுப்பு முகாம்களில் பணியாற்றிய இந்திய மருத்துவர்கள் நாடு திரும்புவதற்கு முன்பு, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் விருந்து கொடுத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர் போஸ் கூறுகையில்,

முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கடந்த மூன்று மாதங்களாக நான் சிகிச்சை அளித்து வருகின்றேன். குழந்தை மருத்துவர் என்ற முறையில் ஊட்டச் சத்துக் குறைபாட்டை மருத்துகளால் மட்டும் குணப்படுத்திவிட முடியாது என்றுதான் கூறுவேன்.

குறைந்தது மூன்று மாதங்களுக்காவது அவர்களுக்கு நல்ல சத்துணவு வழங்கப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு நல்ல சத்துணவு கிடைக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். முகாம்களில் தயாரிக்கப்படும் உணவு, ஊட்டச் சத்துக் குறைந்த குழந்தைகளுக்கு சரியானது என நான் நினைக்கவில்லை.

ஒவ்வொரு குழந்தைக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்துணவுகள் கொடுக்கப்பட வேண்டும். முட்டையின் விலை மிக அதிகமாக இருந்தாலும் கூட குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் முட்டை கொடுக்கப்பட வேண்டும். புரதச் சத்துள்ள முட்டை உணவு கொடுத்தாலேயே இந்தக் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என்றார்.


உலகத் தமிழ் மாநாட்டைப் புறக்கணியுங்கள்! : தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள்

தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்திருப்பது கடைந்தெடுத்த இரண்டகமாகும்!


இந்த மாநாடு தமிழ்மொழிக்கு சீரும் சிறப்பும் எழுச்சியும் ஏற்றமும் தர நடத்தப்படவில்லை. தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையேனும் உலகத் தமிழ் மாநாடு இடம்பெறவில்லை என்ற குறையைத் தீர்க்கவே முதல்வர் கருணாநிதி இந்த மாநாட்டை நடத்துகிறார். இன்னொரு காரணம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பழியைத் துடைத்துக் கொள்ள உலகத் தமிழ் மாநாடு கைகொடுக்கும் என நினைக்கிறார்.

தமிழகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகப் பெயரளவில் மட்டும் இருக்கிறது. பள்ளிக் கூடங்களில் தமிழ் கற்கைமொழியாக இல்லை. அரச திணைக்களங்களில் தமிழ் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. வழிபாட்டில் தமிழ் இல்லை. அங்காடிகளின் பெயரில் தமிழ் இல்லை. இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் அழகிரி தமிழில் பேசுவதற்கு அனுமதியில்லை. இப்படி எங்கும் எதிலும் தமிழ் இல்லை என்ற கண்றாவிக் காட்சியே தமிழகத்தில் உள்ளது. இந்த அழகில் முதல்வர் கருணாநிதி உலகத் தமி;ழ்நாடு நடத்த நினைப்பது உலகத் தமிழரை ஏமாற்றும் எத்தனமாகும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் உணவு, மருந்து இன்றி பல மாதங்கள் பதுங்கு குழிகளுக்குள் அடைந்து கிடந்தனர். சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் வானூர்திகள் மருத்துவமனைகள் மீதும் பள்ளிகள் மீதும் வீசிய குண்டுகளில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வந்தபோது மீண்டும் குண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகைதொகையின்றி எதிரியின் பல்குழல் பீரங்கித் தாக்குதலில் பொட்டுப் பூச்சிகள் போல் கொல்லப்பட்ட போது முதல்வர் கருணாநிதி டில்லியில் முகாமிட்டு மகனுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய இரண்டகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.


போரில் தப்பிய மூன்று இலக்கம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் ஆடு மாடுகள் போல் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, சட்டதிட்டங்களுக்கு முரணாக, திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். துப்பாக்கி ஏந்திய சிங்கள இராணுவத்தினர் காவலுக்கு நிற்கிறார்கள். மக்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தவணை முறையில் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர்” என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனிதவுரிமை ஆர்வலர் மருத்துவர் எலின் சந்தர் வேதனை தெரிவித்திருக்கிறார். அந்த யூத இனப் பெணணுக்கு இருக்கும் கவலை முதல்வர் கருணாநிதிக்கு இல்லை. இந்திய அரசு எலின் சந்தருக்கு முதலில் விசா வழங்கிவிட்டுப் பின்னர் மறுத்துவிட்டது!


இந்த வதைமுகாம்களில் நடைபெறும் சித்திரவதைகளைப் பார்வையிட ஐ.நா. உட்படப் பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை. இந்து ராம் தவிர ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அனுமதியில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியில்லை. தென்தமிழீழத்தில் செயல்பட்டுவந்த செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்கள் ஸ்ரீலங்கா அரசின் கட்டளைக்கு இணங்க மூடப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தமிழர்கள் வணங்காமண் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 884 தொன் உணவு. உடை, மருந்து இன்றுவரை முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள அந்த மக்களைச் சென்றடையவில்லை.

தமிழினப் படுகொலையை கன கச்சிதமாக நிறைவேற்றிய மகிந்த இராபச்சே அரசுக்கு உலக நாணய நிதியம் கடன் கொடுப்பதை மேற்குலக நாடுகள் எதிர்த்தபோது “நீங்கள் கொடுக்காவிட்டால் நாங்கள் கொடுப்போம்” என இந்தியா சொன்னது வெட்கக் கேடானது எனக் குற்றம் சாட்டுகிறோம்!

நன்றி: மீனகம் செய்தி இணையத்தளம்

அநங்கம் சிற்றிதழ் விமர்சனம் - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (2008)

நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில் நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ்.

இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன் முதல் இதழ் வெளியாகி உள்ளது.

பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு அதற்கான எதிர்வினைகளும் மிக குறைவாகவே இருக்கும். அதையும் தாண்டி தொடர்ந்து சிறுபத்திரிக்கைகள் உருவாவதற்கு முக்கிய காரணம் நமது அக்கறைகளே. அதற்காக நாம் கொள்ளும் கவனமும் மாற்று முயற்சிகளுமே சிற்றிதழ்களாக வெளியாகின்றன. நானும் அட்சரம் என்ற சிற்றிதழை நடத்தியிருக்கிறேன்.

கே.பாலமுருகன் இந்த சிற்றிதழின் ஆசிரியராக உள்ளார். இவரது நாவல் இந்த ஆண்டு ஆஸ்ட்ரோ நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. சிறந்த சிறுகதையாசிரியர். உற்சாகமான இளைஞர். வாசிப்பதிலும்  விவாதிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

முதல் இதழில் உள்ள முறிவின் நெடிக்குள் ஆண் கால்கள் என்ற கே.பாலமுருகனின் சிறுகதை சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கதையை அவர் கொண்டு செல்லும் விதமும் கதையின் குரலும் தனித்துவமானதாகயிருந்தது.

நவீன கவிதை குறித்த நவீனின் கட்டுரை முழுமையடையாத போதும் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருகிறது. பாண்டித்துரை, கவிதா மணிஜெகதீசன், ரமேஸ்டே தோழி ஆகியோரின் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக சிற்றிதழ் கவிதைகள் என்றே தனித்த வகையிருக்கிறது. அந்த வகைக்குள் சரியாக பொருந்தக்கூடியவை இவை. எனக்கு இதில் எதுவும் அதிகம் வசீகரிக்கவில்லை.அச்சு அமைப்பும் வடிவாக்கமும் நிறைய மேம்படவேண்டியுள்ளது. முதல் இதழ் என்ற அளவில் இவை பெரிதாக கவனிக்கபடாமல் போயிருக்க கூடும். ஆனால் இன்று வாசிப்பை நெருக்குமாக்குவதற்கு வடிவமைப்பு முக்கிய துணை போகிறது. அதை சரி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
தொடர்ந்து புதிய படைப்பிலக்கிய முயற்சிகளுடன் அநங்கம் சிறப்பாக வளரக்கூடும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.

முதல் அநங்கம் இதழின் போது எஸ்.ராமகிருஷ்ணன் அளித்த விமர்சன பத்தி.

நன்றி : அநங்கம் இதழ் 1
கே.பாலமுருகன்

Tuesday, September 29, 2009

“நான் காட்டிக் கொடுக்கவில்லை” – கருணாவின் பேட்டி

தமிழீழ துரோகி, காட்டிக் கொடுத்த கருணா, புலிகளின் யுத்த தந்திரங்களை அம்பலப்படுத்திய தூரோகி என பலவாறு அடையாளப்படுத்தப்பட்ட முன்னால் விடுதலை புலி இயக்கத்தின் போராளி கருணாவின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே வழங்கியிருக்கிறேன்.

இந்தப் பதிவு எந்தச் சார்புத்தன்மையும் இல்லாமல், வாசகர்களின் பொதுப்பார்வைக்காக மட்டுமே இடப்படுகிறது. கருணா சொன்னவைகள் உண்மையா பொய்யா என்ற விவாதத்தை முன்னெடுக்க இந்தப் பதிவு உதவக்கூடும். உண்மை நிலவரம் அறிந்த வாசகர்கள் / பொது மக்கள் கருணாவின் இந்த வாக்குமூலத்தை எதிர்த்து தங்களின் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் அல்லது இங்கேயே பதிவிடலாம்.

அண்மையில் மலேசியாவில் கிடைக்கப்பெறாத அம்ருதா எனும் இதழிலிருந்து இந்தப் பேட்டியை மீண்டும் டைப் செய்து இங்கே கொடுத்துள்ளேன். நன்றி.


இலங்கையில் யுத்தம் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அங்கு சென்றிருந்தார். தன் நண்பர் ஒருவரின் மகளின் திருமணத்துக்காகச் சென்றிருந்தவர் இலங்கை தமிழ் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் போராளிகளையும் என பலரையும் இப்பயணத்தில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களில் யாராவது ஒருவரையாவது சந்தித்துவிட வேண்டும் என்னும் தோப்பிலின் முயற்சி, அவர்கள் யுத்தப் பகுதியில் இருந்ததால் நிறைவேறவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த, விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து பிரிந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கருணாவையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறார்.தோப்பில்: யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் முஸ்லீம் மக்கள் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் பெருமளவு முஸ்லீம்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? முஸ்லீம்கள் செய்த தவறு என்ன?

கருணா: முஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை, ஐயா. தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முஸ்லீம்கள் நல்ல ஆதரவு வழங்கி வரவேற்றார்கள். தங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழர்களோடு சேர்ந்து அவர்களும் ஒத்துழைத்தார்கள். ஆனால், புலிகள் இயக்கம் இதை சரிவர கையாளவில்லை. அப்பொழுது இருந்த சில போராட்ட அமைப்புகள் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சில சதித் திட்டங்களை மேற்கொண்டது. இந்த நோக்கத்தில் 18 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிலர் வந்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

அந்த சதிகள் எல்லாம் பிற்காலத்தில் அம்பலமாகியிருக்கிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ராணுவத்தை ஆங்காங்கே குவிப்பதற்காக புலிகளால் நிறைய படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்தான் முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லீம் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்த பொழுது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்கள் வேறு வழியில்லாமல் அரச படைகளால் உருவாக்கப்பட்ட சில ஊர்க்காவல் படை என்ற பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதனால், முஸ்லீம் மக்கள் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று புலிகள் கருதினார்கள். எனவே, யாழ்ப்பாணத்தில் எவரும் இருக்க இயலாது என்று வெளியேற்ற முற்பட்டார்கள். அந்த நேரத்திலும் நான் அதை எதிர்த்தேன். நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் கதைக்கிற ஒரு சகோதர இனத்தை வெளியேற்றுவது இயலாத விடயம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். அதை யாரும் கேட்கவில்லை. முஸ்லீம்களை, சகல உடமைகளையும் பறித்துப் போட்டு உடுத்தியிருந்த உடுப்போடு அனுப்பிவைத்தார்கள் யாழ்ப்பாண மக்கள். அந்நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். அதை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் அதை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு வலு இருக்கவில்லை. ஆனாலும், முஸ்லீம்கள் வெளியேற்றம் சரித்திரத்தில் ஒரு அழியாத வடுவாக வரப்போகிறது என்று எங்கள் ஆலோசனைகளை சொன்னோம்.

இக்காலகட்டத்தில், இந்த வெளியேற்றத்தின் ஊடாக வெளி நாட்டில் இருந்து பயிற்றுவிக் கப்பட்டு வந்திருந்தவர்கள் தங்கள் சதித் திட்டங்களை செயல்படுத்தி கலவரங்களை உண்டாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். உண்மையில் அதையெல்லாம் செய்தது வெளிநாட்டு சக்திகள். 85ஆம் ஆண்டு இது மேற்கொள்ளப்பட்டது.

தோப்பில்: கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதி தமிழர்கள் இருக்கிறார்கள் அடுத்து முஸ்லீம்களும் அதற்கடுத்து சிங்களவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இனங்கள். இந்த மூன்று இனத்தவர்களையும் இணைப்பது மாதிரியான ஒரு ஆட்சி முறையை ஏன் ஏற்படுத்த முடியாது?

கருணா: நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; பிரபாகரன் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஐயா. கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளையர்கஷீமீ வந்த காலத்தில் யாழ்ப்பாண ராச்சியம், கண்டி ராச்சியம், கோர்ட் ராச்சியம் என்று மூன்று ராச்சியமாக இருந்தது.
வெள்ளையர்கள் காலத்தில் யாழ்ப்பாண தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களின் கல்வியறிவை வளர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது கிழக்கு மாகாண மக்கள் கொஞ்சம் பின்தங்கி இருந்தாங்க. கிழக்கு மாகாணத் தமிழர்கள் விவசாயத்திலும் முஸ்லிம்கள் வர்த்தகத்திலும் ஈடுப்பட்டிருந்தார்கள். கல்வியறிவு பெற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அதிகார மையங்களின் முக்கியமான பதவிகளில் இருந்தார்கள். நீதிமானாக, மருத்துவராக, வக்கீலாக எல்லாமாக இருந்தார்கள். அதனால் கிழக்கு மாகாண மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியம் அவர்களிடம் இருந்தது. இந்தியாவில் பிராமணர்கள்தான் எல்லா அதிகார மையங்களிலும் இருக்கிறார்கள்; மலையாளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருப்பது போல், இங்கும் இருந்தது. எங்கட அப்பாவுக்கு அப்பா அதைப் பற்றி கதைப்பார். எங்கட காலத்தில் அது கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்படியான எண்ணக்கரு இப்பொழுதும் இருக்கிற ஏகாதிபத்திய பழமைவாதிகள், மாகாணம் பிரிவதை விரும்பமாட்டாங்க. மாகாண சபை பிரிந்து இருப்பதால் எதுவித பாதிப்பும் வரப்போவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.


தோப்பில்: புலிகள் அமைப்புக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பின்னடைவுக்கு, நீங்கள்தான் காரணம் என ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது, நீங்கள் அவர்களது யுத்த வழிமுறைகளையும் மறை பிரதேசங்களையும் காட்டிக் கொடுக்கிறீர்கள் என்று.

கருணா: அது எனக்கு தெரியும், ஐயா. நான் காட்டிக்கொடுக்கிற ஒரு ஆளாகத்தான் இன்று சுட்டப் படுகிறேன். விடுதலைப் புலிகளை எதிர்க்கிற ஆட்களை துரோகிகள், காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்வது இயக்கத்தில் ஒரு மரபு. ஏன் ஒருவன் வெளியேறுகிறான் என்று தளத்தில் உள்ள மக்கள் பிரச்சினையைப் பற்றி ஆராயமாட்டாங்க. கிழக்கு மாகாணத்தவர்கள் துரோகம் செய்து போட்டார்கள் என்று வடக்கு மாகாணத்தவர்கள் சொன்னார்கள். உண்மையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. யுத்தத்தில் அழிந்து கொண்டிருக்கிறதுக்கு ஒரு முடிவு வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிக்கிட்டோம், ஐயா.

நன்றி

அம்ருதா செப்டம்பர் இதழ் (இந்தியா)
வலைப்பூ தொகுப்பு : கே.பாலமுருகன்

Monday, September 28, 2009

சிறுகதை: நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்


1

பின் சீட்டில் மகன் அணிந்திருந்த இருக்கை வார் ஒரு விநோதமான ஒலியை எழுப்பியவாறு இருந்ததைச் சில கணங்கள் மட்டுமே சகித்துக் கொள்ள முடிந்தது. கொஞ்சமாய் கோபம் தலைக்கேறியதும் கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்தான். முகம் அசதியில் சோர்ந்திருந்தது. கண்ணாடியில் முகத்தை அப்பியவாறு வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் உடல் அசைவினூடாக அந்த ஒலி எழும்பியிருக்கலாம் போல. அவள் நிலைகுத்திய உடலுடன் வெறும் இரப்பர் காடுகளாக விரிந்திருக்கும் இருளை அவதானித்துக் கொண்டிருக்கக்கூடிய மனநிலையில் இருக்கிறாள் போல.

“சாந்தி! சாந்தி!”

சலனமில்லாத ஒரு திடமான இருப்பு.

“எம்மா. . வெளங்குதா இல்லையா?”

காருக்குப் பின்னாடி அமர்ந்திருந்த மகளின் வாயிலிருந்து வாநீர் மெல்ல ஒழுகத் துவங்கியது. அதை அவள் சரிசெய்து கொள்ளக்கூட எழ முயற்சிக்கவில்லை.  சீரான மூச்சிரைப்புக்கு நடுவே வாயிலிருந்து ஒழுகியவாறு இருந்த வாநீர் என்னவோ போல் இருந்தது.

“சாந்தி! ஏய் சாந்தி! ஏஞ்சிரு. . ஏய்”

இருளைக் கவனித்தாக வேண்டும். பாதை எங்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறது என்பதில் கூட பிசகல். கண்களுக்கு எட்டாத தூரம்வரைக்கும் வெறும் இருள் மட்டும்தான். செம்மண் பாதை அனேகமாக எங்காவது ஒரு குடியிருப்புப் பகுதிக்குத்தான் கொண்டு போய் எங்களைச் சேர்த்தாக வேண்டும். ஏனோ மனம் அதை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தது.

“சாந்தி! அப்பாக்குக் கண்ணு தெரிலம்மா. . ரொம்ப இருட்டிக்கிட்டு வருது. . கொஞ்சம் பாதெ சொல்றியா?. . ஓய்”

அவள் அமர்ந்திருந்த இருக்கைத் தனியாக கழன்று இரப்பர் காட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தது. கைகளை எக்கினேன் அவளைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில். என் கைகள் நீண்டு சுருங்கி வித்தைக் காட்டியதே தவிர அவள் காட்டின் இருளுக்குள் காணாமல் போகும் தருணத்தை எட்டிப் பிடிக்கவே இயலவில்லை.

“ஐயோ! அம்மா. . தனம். . காப்பாத்து. . சாந்தி!”

2“ப்ப்பா. . ப்பா. . என்னாச்சி?”

கண்கள் இருளைச் சுமந்திருந்தது. எங்கோ இரப்பர் காட்டுக்கு நடுவில் கார் நின்றிருந்தது. சுற்றிலும் நடு நடுவே யார் யாரோ நின்று கொண்டு எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. மகள் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் முகம்கூட சரியாகத் தெரியவில்லை.

“ஏன்ப்பா காரெ நிப்பாட்டனிங்க?”

“நீ எங்கயும் போகலியா?”

அருகில் அமர்ந்திருந்த தனம், கடுகடுப்புடன் இருந்தாள். முகத்தைக் காளியாத்தா போல கடும் கோபத்துடன் வைத்திருந்தாள்.

“என்னாங்க. . உங்களுக்கு என்னா பாதைகூடவா தெரில? ஏதோ மச்சான் கிட்ட வந்துர்றேன். . நான் பொறந்து வளந்த மண்ணுனு பீத்திகிட்டிங்க. . இப்பெ எங்க இருக்கோம்னு தெரியுதா? காடுதான் சுத்தி முத்தும்”

காரை எங்கேயோ சடாரென நான் நிறுத்திவிட்டிருக்கிறேன். எப்பொழுது என்னை நான் காருக்குள்ளேயே பிரக்ஞையைத் தொலைக்கும் வெறும் போதையாகக் கருதியிருப்பேன்? இருள் ஒரு மாயையைப் போன்றது போல. எவ்வள்ளவுதான் இருளை உடைப்பது? தொடர் முயற்சியில் எங்கயோ இருளை விழுங்கியிருக்கக்கூடும்.


“நொண்டி கும்சு. . என்னா எஸ்டேட் அது? எங்க இருக்குனு சரியாத்தான் கேட்டிங்களா? உங்கள நம்பி வந்து இப்பெ மணி 11 கிட்ட ஆச்சி”

யார் பேசுவதையும் என்னால் சிலாகித்துக் கொள்ள இயலவில்லை. மனம் அடுத்து வந்து தன் முகத்தைக் காட்ட போகும் இருளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. இரப்பர் காட்டையும் பார்த்துக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போகும் இருளையும் சுதாரித்துக் கொண்டு இரு பிளவுகளாக அவ்வப்போது போதையேறும் ஒருமுகப்படுத்துதலையும் சரிச்செய்து கொண்டு காருக்குள் அமர்ந்திருக்கும் நான் என்பதைக் கொஞ்சமாய் மறக்கவும் செய்தேன்.

“போன் பண்ணி பாருங்க. . வெளியெ எடுங்க. . இப்படியே போய்க்கிட்ட இருந்தா ஒன்னும் முடியாது.. போன் பண்ணுங்க உங்க மச்சானுக்கு”

மனைவி ஏதோ ஆணையிடுகிறாள் என்று மட்டும் உணர முடிந்தது. குரலிலிருந்து வெளியே கழன்று விழுந்த வார்த்தைகளின் தொனி அப்படித்தான் இருந்தன. பிறகு அவளே கைத்தொலைபேசியை வெளியே எடுத்தாள். யார் யாருக்கெல்லாம் தொடர்புக் கொள்ள முடியுமோ எல்லாவற்றையும் செய்து பார்த்தாள். மகள் தோல்பட்டையைக் உலுக்கியதும் காருக்குள் வந்துவிட்டது போல உணர்ந்தேன். அருகில் மனைவி அமர்ந்திருக்கும் இருக்கைக் காலியாக இருந்தது. கார் முழுவது வெறும் இருள்தான். மகளின் கைகள் மட்டுமே சிறிய ஒளிப்பரப்பில் என்னை நோக்கி நீட்டியவாறு இருந்தது.

“சாந்தி! சாந்தி! எங்க போற?”

மகள் கார் கண்ணாடியைத் திறந்து வெளியே குதித்தாள்.

3

“ஹலோ! ஹலோ! லைன் கிடைக்க மாட்டுதுங்க! என்னங்க! என்னங்க! என்னா இந்த மனுசன் பேய் மாதிரி உக்காந்துருக்காரு”

சடாரென நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போவதாக நான் நம்பிக் கொண்டிருக்கும் பாதைக்குத் திரும்பினேன். இன்னும் இருள் விலகவில்லை. கார் எந்தச் சலனமும் இல்லாமல் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு வளைவிலும் இருள் என்னைச் சரியாக இயக்கி வளையவிடுகிறது. எங்காவது சாக்கடையில் போய் விழுந்திருக்கலாம், அல்லது மரத்தில் மோதி சாய்ந்திருக்கலாம். வினோதமாக எந்தத் தடங்கலும் இல்லாமல் காரின் சக்கரங்கள் யாரையோத் துரத்தும் நேர்த்தியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

“ப்பா காரெ எங்காவது நிப்பாட்டுங்க. . உஸ் வருது”

மகன் அலறினான். தூக்கத்திலிருந்து அப்பொழுதான் விழித்திருக்க வேண்டும். எப்பொழுதும் அவன் 9மணிக்கு மேல் உறங்கிவிடுவான். இன்று வேறு காரில் 2மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

“அப்பா.. காரெ நிப்பாட்டுங்க”

எங்கு நிறுத்துவது? இரப்பர் மரங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. காருக்கு மேலாக பார்வையை அலையவிட்டப்படி அகோரமாய் அரக்கர்கள் நின்றிருப்பது போல தெரிந்தது. காரின் விளக்கு வெளிச்சம் எனக்கு முன் ஆங்காங்கே அறுந்தும் பின்னர் இணைந்தும் ஓரளவிற்கு இருளைக் கடக்க உதவிக் கொண்டிருந்தது. காரை எங்கேயோ நிறுத்தினேன். இருளை அறுத்த ஒரு பரவெளி, கண்ணுக்கு எட்டியவரையில் மரங்களும் சூன்யத்தின் ஒலியும் மட்டும்தான்.

மகனை கீழே இறக்கிவிட்டு மனைவியும் அவனுடன் காரின் விளக்கு வெளிச்சம் படும் வளாகத்திலேயே முன்னகர்ந்தார்கள். அங்குதான் நீண்ட சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. சலசலவென நீர் ஓடும் சத்தத்தைக் கற்பனை செய்து கொண்டேன். ஒலி துறந்த வெறும் காட்டில் ஒலிகளை மனம் சுயமாக உருவாக்கிக் கொள்கிறது.

“சட்டுனு பேய்டா”

காரை அங்கிருந்து மெல்ல அகட்டினேன். முடிவு பெறாத பாதையாக எங்கேயோ எங்களை இழுத்துக் கொண்டு போனது நொண்டி கும்சுக்குப் போகும் அப்பாதை. மனைவி சோர்விலும் அதிருப்தியிலும் தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தாள். சாந்தி உறங்கிவிட்டிருந்தாள். மகன் அப்பொழுதுதான் இருக்கை வாரைச் சரிப்படுத்திவிட்டு அணிந்து கொள்கிறான்.

“என்னங்க இது? எங்கங்க போது இந்த ரோடு..? நீங்க பாட்டுக்குப் போயிகிட்டே இருக்கீங்க? எங்க வந்து நுழைஞ்சிங்க, எந்தப் பாதையிலே திரும்புனிங்க. . சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி போய்கிட்டு இருக்கீங்க”

அவள் கோபத்தின் உக்கிரத்தில் வார்த்தைகளை எறிந்தாள். அந்த இருள் அடர்ந்த காட்டில் அவளின் ஒலி மட்டும் அசுரத்தனமாக ஒலித்து மீண்டும் எங்கோ இரப்பர் பத்திகளில் கரைந்து தொலைந்தது.

“அப்பா பின்னாலெ யாரோ தொரட்டிக்கிட்டு வராங்கப்பா. . அப்பா வேகமா போங்கப்பா.. ஐயோ கொம்புலாம் இருக்குப்பா. . மாடு இல்லப்பா.. வேகமா போங்கப்பா. . நம்ப இங்கயே சாவப் போறம்ப்பா. . சட்டுனு போங்கப்பா”

தலைக்கு மேல் இருக்கும் பின்பக்கத்தைப் பார்க்கும் கண்னாடியில் எக்கிப் பார்த்தேன். என் மகள் சாந்திதான் காருக்குப் பின்னால் தலையில் கொம்புகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தாள். மூச்சிரைப்பு அதிகமாகியது. காரை வேகமாக செலுத்தினேன். மனைவி மீண்டும் வாநீர் வடிய வினோதமான ஒலியை எழுப்பியவாறு வயிறை மேலே எழும்பவிட்டு மீண்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. . ஏய் நில்லு. .”

முதுகில் யாரோ ஏறி உட்கார்ந்து கொண்டதும், தலை கணமானது. இருள்!

4

“அவரு பதில் சொல்லமாட்டாருங்க. . என்னமோ ஆச்சி. . இந்தப் பாதை எங்க போது? வழி தெரியாம மாட்டிக்கிட்டோம், பிளிஸ் உதவி பண்ணுங்களேன்”

மீண்டும் காருக்குள் வந்துவிட்டேன். யாரோ என் சன்னல் கண்ணாடி பக்கமாக மிகவும் நெருக்கமாக தலையை உள்ளே நீட்ட முயற்சிக்கும் பாவணையில் நின்றிருந்தார். விழிப்பு வந்தது போல உணர்ந்தேன். உறங்கியிருப்பேனா? பிறகெப்பட்டி காரை நிறுத்தியிருப்பேன்?

“என்ன தம்பி ஒரு நிலையிலே இல்லெ போல. . காரெ நிப்பாட்டனெ ஆனா ஒன்னும் பேச மாட்டறெ?”

அவருக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லாதவனைப் போல அமர்ந்திருந்தேன்.

“நீங்க பாதையை உட்டுட்டு ரொம்ப தூரம் வந்துட்டீங்க. . இந்தப் பாதை எங்க போதுன்னு எனக்கும் தெரியாது. . அந்தக் காலத்துலே எஸ்டேட்டுக்கு எஸ்டேட்டு பல பாதைங்க போகுமாம். . இது எங்க போயி உடுமோ? எதுக்கு வம்பு.. ராத்திரி ஆச்சி வேற இங்க இருக்கறது அவ்வளவு நல்லது இல்ல தம்பி! பிள்ளிங்கள வேற வச்சிருக்கிங்க. . இந்தப் பாதையிலே பகல்லே யாரும் வரமாட்டாங்கெ”

“இப்பெ நாங்க வெளியாவறதுன்னா எப்படி? நொண்டி கும்சு எஸ்டேட்டுக்குப் போகனும்”

“பயப்படாதீங்க. . நீங்க வந்த பாதையிலெ இன்னும் 20 கிலோ மீட்டர் போனிங்கனா, வலது பக்கம் ஒரு கொட்டாய் தெரியும். . அங்க இன்னொரு வலைவு இருக்கறது யாருக்கும் அவ்ள சீக்கரம் தெரியாது. . அதனாலத்தான் இங்க வந்து விட்டிருச்சி உங்கள. அந்தப் பாதையில நுழைஞ்சி இன்னும் 15 கிலோ மீட்டர் போனிங்கனா அதுதான் நொண்டி கும்சு எஸ்டேட்டு”

“ஓ அப்படியாங்க. . அசந்து போயிட்டங்க. . பயமா வேற ஆச்சி. . சரி கெளம்பலாம் வாங்க. . வண்டிய எடுங்க”

காரை மீண்டும் அங்கிருந்து திருப்புவதற்காக தயார்ப்படுத்தினேன்.

“தம்பி கொஞ்ச நேரம் கீழ இறங்கி வா. . முக்கியமா பேசனும். . அம்மா. . கொஞ்ச நேரமா”

கார் கதவைத் திறந்தபோது இரப்பர் காட்டின் காற்று இலேசாக முனகியது. பூச்சிகளின் சத்தங்களைத் தவிர வெறோன்றும் இல்லை. அவருக்குப் பக்கத்தில் சென்றதும் ஏதோ பாதுகாப்புக் கிடைத்தது போல இருந்தது.

“தம்பி! நான் சொல்றதெ பதறாமெ அமைதியா பயப்படாமெ கேளு. . யாருக்கும் தெரியக்கூடாது. . நீ நிதானமா இருக்கறதுலாம் எல்லாமே இருக்கு! கார்லெ எத்தனை பேரு இருக்கீங்க?”

அவர் பேசியதை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலட்டல் இல்லாமல் அவர் எதையோ சொல்ல முற்படுகிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.

“நானு என் பொண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சார். . நாலு பேர். . ஏன் கேக்கறீங்க?”

“தம்பி நிதானமா இரு.. நான் சொன்னோன திரும்பி பாக்காதெ அவசரப்படாதே. . உன்னோட தைரியம்தான் இப்பெ உனக்குப் பலம். ஓகேவா?”

“சரி சொல்லுங்க”

“உன் கார்லே பின்னாலே 5ஆவது ஒரு ஆளு உக்காந்துருக்காங்க. .”

உடலின் சிலிர்ப்பைத் தாங்க முடியவில்லை. யாரோ தலையில் ஓங்கி அடித்தது போல உச்சந்தலை சிலிர்த்தது.

“ஒன்னும் பேசாமே நீ பாட்டுக்குக் காரெ எடுத்துக்கிட்டு இன்னும் 5 கிலோ மீட்டர் தாங்கிகிட்டு போ. . அதுக்கப்பறம் இடது பக்கம் காட்டுலே முனியாண்டி சாமி கோயிலு இருக்கு. . அதோட அவரோட எல்லை. . ஒன்னும் வராது. . எப்பவும் போல ஏறி போ. . மனசுல கடவுளெ நினைச்சிகிட்டு பின்னால பக்கம் கண்ணாடியெ பாக்காமெ போ”என்னைக் கேட்காமலேயே கால்கள் நடுங்கத் துவங்கின. ஏதோ சமாளித்துக் கொண்டு அவர் உதிர்த்த அந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய சமாதானத்துடன் காரில் ஏறி அமர்ந்தேன். பின்பக்கம் பார்க்க மனம் உசுப்பினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். காரில் மனைவி முனகுவது மட்டும் கேட்டது. வெளியெங்கும் அகால சூன்யம். மரக்கிளைகளின் சலசலப்பும் இருளின் முணுமுணுப்பும் என்னைக் காரிலிருந்து வெளியே வீசுவது போல் தோன்றியது. மனம் இறுக கடவுளின் நாமங்களை உச்சாடனம் செய்து கொண்டே இடது பக்க காட்டைக் கவனித்துக் கொண்டே வந்தேன். முனியாண்டி சாமி கோவிலின் கோபுரம் தட்டுப்பட்டால் பிறவி பலனை அடைந்துவிடலாம் என்று பட்டது. என் பயத்தை வெளிகாட்டிவிடுவேனோ என்ற அச்சம் வேறு.

“தம்பி! திரும்பிப் பார்த்துறாதீங்க. . முனியாண்டி துணை இருப்பாரு”

இருள் உடையும் கணங்களினூடாக சற்று முன்பு பார்த்தவர் யார் என்கிற சந்தேகம் கிளைவிடத்துவங்கியது. அவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்? அவர் பெயர் என்ன? ஏதும் தெரியாமல் வெறுமனே காரின் சக்கரத்தை நம்பிக் கொண்டு போய் கொண்டிருந்தேன். மகள் சாந்தி ஏதோ முனகியவாறே எழுந்தாள். என் தோள் பட்டையை அழுத்தி என்னவோ கேட்கத் தயாரானாள்.

“அப்பா. . எங்கப்பா இங்க என் பக்கத்துலே உக்காந்திருந்த அந்தச் சீனப் பிள்ளையே காணம்?”

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
நன்றி: திண்ணை

தமிழ்மணம் வலைத்தளத்தின் வார நட்சத்திரமாக ( 28.09.2009 – 05.10.2009) – உண்மையை விட்டு தப்பிக்க முடியாது

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியால் உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில் இந்த வாரத்தின் நட்சத்திரமாக தமிழ்மணம் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில சர்ச்சையில் சிக்கிக் கொண்ட பிறகே என் வலைப்பூ பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதால் நன்மையும் இருக்கிறது போல.

http://www.tamilmanam.net/index.html

படைப்பிலக்கியம் – நவீனத்துவம் – மதிப்பீடுகள் எனும் தலைப்பில் என் வலைப்பூ “கே.பாலமுருகன்” இயங்கிக் கொண்டிருக்கிறது. என் படைப்புகள் குறித்த எனது பார்வை, மதிப்பீடுகள், கட்டுரைகள், அனுபவ பகிர்வுகள், எதிர்வினை கட்டுரைகள், வம்புச் சண்டை என இந்த வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் அறிமுகம் மூலம் வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவரைப் பற்றியும் புதிதாக பலரும் அறிந்துகொள்ள, அதன் மூலம் தகுந்த ஊக்கம் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. தற்கால சூழலில் இணையத்தளமும், இணையத்தள வாசிப்பும், வலைப்பதிவாளர்களின் பங்களிப்பும் அதீதமான அளவில் வளர்ச்சிப் பெற்று வருகின்றன.

உண்மை மிக கசப்பானது. உண்மையை விட்டு எவரும் ஓடவும் முடியாது என்று நம்புகிறவன் என்பதால், இந்தப் புரிதல் அன்மையில் ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கக்கூடும். சில சமயங்களில் உண்மையைப் பூடகமாகவோ படைப்பாகவோ சொல்ல நேர்ந்துவிடுவதால், அந்த உண்மையைவிட்டு பலர் தப்பிக்க நினைக்கிறார்கள். பொய்யான பிம்பங்களுடன் உண்மைக்கு எதிராக வசைப்பாடுகிறார்கள், எல்லாம் நித்யம் என்கிற மாயையில், மொழி சார்ந்து மட்டும் இறுக்கமான தர்க்கங்களுடன், அரசியல் நெருக்கடி, வாழ்வின் பயங்கர பக்கங்களை, வாழ்வனுபவனுவத்தின் நிதர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு பரிபூரண கதாநாயகன் போல வலம் வர துடிக்கும் முயற்சிகளுடன் முன்னெடுக்கும் சிலரின் மனோபாவங்களுக்கு எதிரானதுதான் என் எழுத்து.

எனது பலவீனங்களை ஒப்புக் கொள்பவன் நான், ஆனால் என் பலவீனங்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் எனக்கு எதிரானவர்கள். தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பேசியவர்தான் என்னை உடல் வலிமையற்றவன் என்று எனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து கேலி செய்தவர். மனிதனாக வாழ முடியாதவனுக்கு மொழி எதற்கு? மொழியின் நாகரிகம் எதற்கு? உண்மையை மறைத்துவிட்டு ஏதும் நடக்காததைப் போல உயர்ந்த இலக்கை வகுத்துக் கொண்டு என்ன இலக்கியம் படைக்கப் போகிறோம்? இலக்கியம் வாழ்வின் கசப்புகளையும், வலியையும், கொண்டாட்டங்களையும், மனித நுகர்வையும், வாழ்பனுபவங்களையும், முன்னோர்களின் பதிவுகளையும், அடிமைப்பட்ட கணங்களையும், நம் வாழ்வின் தரங்களைத் தாழ்த்திய அதிகாரங்களையும் சொல்வதாக, உண்மையுடன் சொலவதாக இருக்க வேண்டும். சொகுசான ஒரு நண்ணெறிப் பண்பை வகுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதல்ல இலக்கியம். (ஓவ்வொரு படைப்பிற்குப் பின்னனியிலும் வாழ்விற்குத் தேவையான பலவித கூறுகளும், உண்மைகளாக அதன் அடுக்குகளில் புதைந்திருக்கும். வாழ்வும் அப்படித்தான் வாழ்ந்து கழிகிறது, அதைத் தேடி கண்டடையும் அனுபவம் வாசகனைச் சார்ந்தது, எல்லாவற்றையும் பிரச்சாரம் செய்து வாழ்வை விற்பனை செய்ய அது என்ன நாடகமா?)

இன்று நாட்டிற்கு நாடு இலக்கியம் வேறுபடுவது எதனால்? ஈழத்து இலக்கியம் போல தமிழ்நாட்டு இலக்கியம் காத்திரம் கொண்டிருக்கவில்லையே ஏன்? லத்தீன் அமெரிக்க இலக்கியம் போல அமெரிக்க இலக்கியம் காத்திரம் கொள்ளவில்லையே எதனால்? ஆப்ரிக்கா பூர்வக்குடியின் காலனித்துவ வாழ்வு அடிமட்ட அடிமைத்தனத்தில் புரண்டி கசிந்ததே, அதை எந்த உயர்ந்த இலக்குடன் சொல்லப் போகிறோம்? ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்ற நீதி கதையுடனா? உண்மை சுடும். அதிலிருந்து தப்பிக்க, இலக்கியம் என்றால் இலக்கு இருக்க வேண்டும், நோக்கம் இருக்க வேண்டும், இலக்கணம் இருக்க வேண்டும், தொடக்கம் முடிவு என்று பாடம் கற்பித்துக் கொள்ளத் துவங்குகிறார்கள். அவர்களின் தப்பித்தல் இங்கிருந்து துவங்குகிறது.

ஆகையால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் வாழ்பனுவம் வெவ்வேறு பின்னனியால், வெவ்வேறு வாழ்க்கை தரத்தால், வெவ்வேறு அதிகார நெருக்குதலால் மாறுப்பட்டு அதன் தளத்தில் அதன் உக்கிரத்தில், அதன் நிலைத்தன்மையுடன் தனது எல்லையை நுட்பத்துடன் ஒரு கதைச் சொல்லியாக விரித்துக் கொள்கிறது. இலக்கியம் அந்த வாழ்வின் நிசங்களை, யதார்த்தங்களை, உண்மையைச் சொல்லும் களமாகவே உலக நாடுகளில், ஈழத்து மண்ணில், புலம் பெயர் நாட்டின் நிலப்பரப்பில் பாவிக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் வெறும் புனைவு என்று பிறருக்குப் புத்திச் சொல்லி திரிவதல்ல இலக்கியம்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்: படைப்பு என்பது ஆமையின் குஞ்சுகள் போல, ஆமை முட்டையிட்டு, மணலில் தோண்டி முட்டைகளைப் புதைத்துவிட்டு வந்துவிடும். முட்டைகள் சொந்தமாகப் பொறிந்து, அதன் நுகர்வுத்தன்மைக்கேற்ப, கடலின் நெடியை உள்வாங்கிக் கொண்டு சுயமாகக் கடலை வந்து சேரும். அது போல் என் படைப்பு அதற்கான களத்தை சேர்ந்துவிடும், என் நுகர்வைக் கொண்டிருப்போர், என் படைப்பை வந்து அடைக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி: என் படைப்பு ஒரு சாவி. எல்லாம் பூட்டுகளையும் திறக்க முடியாவிட்டாலும், என் சாவி சில பூட்டுகளைத் திறந்துவிடும்போது, என் வாசகர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.

பொது நுகர்விற்காகவும், பிறர் விருப்பத்திற்கும் இலக்கியம் படைக்க துவங்கினால், அது போல ஒரு வியாபாரம் கிடையாது என்றே சொல்லலாம். அதற்குப் பதில் சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம். நீ வகுக்கும் இலக்கிற்காக என்னால் வாழ முடியாது, அப்படியிருக்க நீ நினைப்பது போல பிறர் இலக்கியம் படைக்க, இலக்கியம் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா? அல்லது இலக்கிய உரிமையை நீ வாங்கி விட்டாயா? படைப்புலகம் எழுத்துக்கு எழுத்து எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் மாறுப்படும். மற்றுமொரு மாற்றுச் சிந்தனையுடன் இலக்கியத்தை அணுகும் ஒரு உலகலாவிய சூழல் இருக்க, இன்னும் பழமைப்பேசிகள் போல நம் இலக்கியத்தை பின்னுக்கு இழுக்கும் உத்திகளுக்குப் பலர் தயாராகவே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நொடியும் வாசிப்பாலும் தெளிவாலும் நம்மை நாம் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. பழமை பேசிகளுக்கு வேண்டுமானால் அவர்கள் அறிவாளியாகவும், அவர்களின் உன்னத வடிவத்தை ஏற்காதவன் முட்டாளாகவும் தெரியக்கூடும். உண்மையை விட்டு நெடுந்தூரம் ஒரு கானல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் அந்த ஆன்மாக்களுக்காக வருந்துவதைத் தவிர கொஞ்சம் விவாதமும் செய்து பார்க்கலாம். ஆனால் அதிலேயே நமது சக்திகளை விரையமாக்குவது வீண் என நினைக்கிறேன். Ignore and go. அவர்களை நிராகரித்துவிட்டு நமது புரிதலுடன் பயணிப்பதுதான் சாமர்த்தியம் என நண்பர் ஒருவர் கூறினார். உண்மை.

மீண்டும் வருவேன்
கே.பாலமுருகன்

Saturday, September 26, 2009

டாக்டர் சண்முகசிவா இலக்கிய உரை-2 (கலை இலக்கிய விழா)

அண்மையில்(29.08.2009) தலைநகரில் நடந்த கலை இலக்கிய விழாவில் டாக்டர் சண்முகசிவா ஆற்றிய இலக்கிய உரையின் இரண்டாவது பகுதி இது.

Friday, September 25, 2009

இன்று மீண்டும் ஒரு அசம்பாவிதம் (அம்மா காயப்பட்டார்)

சாவி தொலைந்துவிட்டால், ஒரு பூட்டைத் திறக்க முடியாமல் போகும் நெருக்கடி மட்டும் நிகழ்வதற்கில்லை.

வீட்டின் முன் கதவு பூட்டிற்கு என்னிடம், அப்பாவிடம், அம்மாவிடம் சாவி இருந்தது. அம்மாவிடமிருந்த சாவி தொலைந்து போய் 1 வாரம் ஆகியிருக்கும். இன்று அக்கா வீட்டிலிருந்து வீடு திரும்பியவர், வீட்டில் யாரும் இல்லாததால், பூட்டைத் திறக்க முடியாமலும் போனதால், இரும்பு வேலியைக் கடந்து உள்ளே குதிக்க முயன்றிருக்கிறார். அம்மா உயரமானவர் அல்ல. மிகவும் குட்டையானவர். அந்த வேலியைக் கடக்கும்போது கூர்மையான இரும்பு கம்பியில் வலது கையின் சதைப் பிடிப்புள்ள பகுதியில் கம்பி சொருகிக் கொண்டது. கீழே விழுந்தபோது சொருகிவிட்ட கம்பி தோலை ஆழமாகக் கிழித்துவிட்டது.

அடுத்த 2 நிமிடத்திலேயே நான் வீடு திரும்பியிருந்தேன். கிழிந்த அம்மாவின் தோல், தொங்கிக் கொண்டிருக்க, இரத்தம் வீட்டின் தரை முழுக்க ஒழுகியிருந்தது. சதைக் கிழிந்து தொங்கிய கோலத்தைப் பார்த்ததும் பதறிவிட்டேன். வயதானவர்களின் தோல் சுருக்கமும் தளர்வும் கொண்டது. பெரிய ஓட்டை போல உள்ளுக்குள்ளிருந்து ஏதேதோ வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் அப்பாவின் நண்பர்கள் சிலர் மருத்துவமனைவரை வந்துவிட்டிருந்தனர். (மருத்துவமனையில் அரைமணி நேரம் காக்க வேண்டிய சூழல் – பெருநாள் காலம் என்பதால் இப்படியொரு நெருக்கடி, அவர்களிடம் போய் கத்தியும் பயனில்லை. எல்லாம் மிக மெதுவாகவே நடந்தது)

வாழ்வின் முக்கால்வாசியை அம்மா என் அக்காவிற்காகவும் அக்கா பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதிலும், தேய்ந்து போனவர். யாரையும் நம்பியிருக்காமல் அவரே சுயமாக இயங்கக்கூடியவர். எவ்வளவு தூரமானாலும் நடந்தே வந்துவிடுவார்.

ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள். ஓருவேளை அம்மா வீட்டிற்கு வந்த நேரம் நான் இருந்திருந்தால், முன் கதவைத் திறந்துவிட்டிருப்பேன். இது ஒரு அசம்பாவிதம். விபத்து. அம்மாவிற்கு ஏற்படும் 17 ஆவது விபத்தாக இருக்கக்கூடும். ஏற்கனவே கீழே விழுந்து உடைந்த கைதான் அது.

நண்பர்கள், அவர் சீக்கிரம் குணமாகி வர உங்களின் அன்பைச் செலுத்துங்கள். உங்களின் அன்பான எண்ணங்கள் அவரைச் சீக்கிரம் குணப்படுத்தும். நன்றி.

கே.பாலமுருகன்

முகமிழக்கும் தருணம்


அதிகாலை 12மணிக்கு மேல்தான் இருள் அடர்த்தியாக படர்ந்திருக்கும். சலனங்கள் தோன்றும்படியான சூழ்நிலை அங்குமிங்கும் இருப்பினும், 12மணிக்கு மேல் எப்பொழுதுமான ஒரு அமைதி பரவியிருக்கும். இந்தச் சமயத்தில் சத்தம் போட்டு பேசினால்தான் மகிழ்ச்சியை மிக அதீதமாகப் பகிர்ந்து கொள்ள முடியும் போல.
அப்படியென்றால், 12மணிக்கு மேல்தான் சரியான நேரம். எத்தனை பேர்? சுந்தர், யோகேஸ்வரன், மாதவன், கோமலன் மேலும் ஒருவன் இருந்தால் போதுமானதாகப் படுகிறது. அந்த ஒருவன் நானாகவே இருந்து கொள்கிறேன். இடம்? கடற்கரையோரம் நிச்சயம் பலமான காற்று வீசும். குளிர்ச்சியில் உறைந்து போகலாம். கைகள் இரண்டையும் இரண்டாகக் கோர்த்து, மார்போடு இறுக்கிக் கொண்டு உடல் நடுங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வார்த்தைகள் தடுமாறிப் போக, மகிழ்ச்சியை மிக பகிங்கரமாக வெளிப்படுத்திக் கொள்ளலாம்தான்.
“டேய் மாதவன். . . டேய் யோகேசு. . . அங்க பாருடா கோமலன். . . டேய் கைய உடுடா, இவன பாரேன், டேய் சுந்தரு. . .” மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் அவ்வளவு முக்கியமானதாகத் தோன்றாமல் போகும் அந்தக் கணத்தில் வார்த்தைகள் தடுமாறுவது யதார்த்தமானதுதான். அப்படியென்றால் கடற்கரையோரம் இன்னும் பல யதார்த்தங்களைக் கொண்டு வரும் என்று நினைக்கிறேன். காற்று, அலைகள் மோதி கொள்ளும் ஓசையும், அந்த ஓசைகளின் இடையிடையே அலைகள் பாறையின் மீது ஏறி சரிந்து கொள்ளும் முனகலும், நாங்கள் நடந்து கொண்டிருக்கும் காலடிச் சப்தங்களும், எல்லாமும் அன்றைய பொழுதில் எங்களின் தனிமையைக் கடந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்.
கோமலன் சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடியவன். மாதவனின் மௌனம் திடீரென்று களைந்து வெடிக்கும். யோகேஸ்வரன் அனைத்தையும் வேடிக்கையாக அவதானிக்கக்கூடியவன். சுந்தர் சோம்பலான அசைவு கொண்டவன். ஏதாவது கவிதைச் சொல்லிக் கொண்டே இருப்பான். இவர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் நான் கோமாளித்தனமாகப் பேசிப் பழகக்கூடியவனாகத்தான் இருக்கிறேன். ஏதாவது பேசி அடிக்கடி சிக்கிக் கொள்வேன். மூச்சுத் திணறும் அளவிற்குத் தடுமாற்றம் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கும். நான் அப்படி இருந்துவிடுவதுதான் உத்தமம் என்று தோன்றும் போதெல்லாம் நான் அப்படியாகத்தான் இருந்து விடுகிறேன்.
தத்துவம். நகைச்சுவை, விமர்சனம், கவிதை, இரசனை, இசை, ஆபாசம், கடவுள், பேய், உறவுகள், பாரதி என்று எங்களின் உரையாடலைக் கடற்கரையோரம் நிகழ்த்தினால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதற்காகத்தான், கடற்கரையைத் தேர்தெடுத்துருக்கிறேன்.
“இரவுகள் பற்றி நீ என்னா நெனைக்கறெ?”
“அது இயற்கை, எப்பவும் இருக்கும், வரும் போவும், வேற என்னா இருக்கு?”
“நெறைய இருக்கலாம். இரவு எப்பவும் அத வெளிப்படுத்திகாதுனு நான் நெனைக்கறென்”
“ எல்லாம் நம்ப பார்க்கற பார்வைலதான் இருக்கு, கோமலன்”
“ இந்த இரவு எங்க இருக்குனு தெரியுமா? யேன் இதோட வர்ணம் கறுப்புனு எல்லாரும் நெனைக்கறோம்?”
“ என்னாடா கொளப்பறிங்க? இரவுனு தனியா ஒன்னு இல்ல. பகல் இல்லாத நேரம்தான் இரவு”
“அப்படினா பகல்னா என்னா? அது எங்க இருக்கு?”
“அட இவனுங்க ஒருத்தனுங்க. எல்லாத்தையும் அறிவியலா பாத்துட்டா எந்தக் கோளாறும் இல்ல”
“இரவு பகல் எப்ப உணர பட்டுச்சுனு தெரியுமா? அந்தச் சமயத்துல அறிவியல்னா என்னானு தெரிஞ்சிருக்குமா? ஏன் மனுசன் தூங்கறதுக்கு இரவை தேர்ந்தெடுத்தான்?”
“இருளைப் பார்க்க மனுசனுக்குப் பயம்தானே? அதனாலதான் போல உறக்கம் உணரப்பட்டிருக்கும்”
கோமலனும் சுந்தரும் மாறி மாறி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்கள். திடீரென்று மகிழ்ச்சிக் குறைகிறது. வழக்கமான ஒரு தடுமாற்றம் எழுந்து வந்து முகத்தில் அப்பிக் கொள்கிறது. அவர்கள் இரவின் உடலைக் கண்டறிவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். சடாரென்று சுந்தர் கடற்கரையில் அமர்ந்து கொள்கிறான். வானத்தைப் பார்த்து ஏதோ கவிதை கூறத் தொடங்குகிறான்.
“வானம் இருளைப் போல் அல்லவா
எங்கும் விரிந்து கொண்டே போகிறது!
இரவின் எல்லையைக் கடக்க இயலாத
மனிதர்கள்தான் உறங்கிப் போகிறார்கள்!
பகலில்லாத பொழுதுகள் இரவென்றால்
பகல் ஏன் இல்லாமல் போகிறது?
அறிவியலா? அதிசியமா? இயற்கையா?
எல்லாமும் மனிதனுக்குள். . “
யோகேஸ்வரன் அன்று மட்டும் எதையும் வேடிக்கையாக அணுகாமல், அவனும் வானத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறான். சுந்தர் கூறிய கவிதையை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எல்லோரும் ஒன்று சேர வானத்தை மல்லாந்து வெறித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குத் திடிரென்று இருள் பிடிக்க தொடங்குகிறது. கோமலன் எல்லாரையும் கடற்தரையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறான்.
அவன்தான் பேசத் தொடங்குகிறான்.
“டேய், நம்பலாம் சேந்து ஒரு காரியம் பண்ணனும், எப்படி முடியுமா?”
“எல்லாம் சேந்துனா எது வேணும்னாலும் செய்யலாம், சொல்லு”
“ நம்ப யேன் செத்துப் போயி பாக்க கூடாது?”
“செத்துப் போயி எத பாக்க போற?”
“ நம்ப இல்லாம இந்த உலகம் இரவுல எப்படி இருக்கும்னு பாக்கனும்”
“எப்பவும் போலத்தான் இருக்கும். இதுல நீ யாரு நான் யாரு. எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கும்”
“இல்ல நம்ப அப்படி நெனைச்சிக்குறோம். நம்ப இல்லாத இந்த உலகம் இரவுல ஏதாவது ஒரு மாற்றத்துல நகர்ந்துகிட்டு இருக்கும்னு நெனைக்கிறேன்”
“ நீ கடவுளா மாற போறியா?”
“யேன் கடவுள்னு சொல்றெ?”
“செத்துப் போயிட்டா எல்லாரும் கடவுளா ஆயிறுவோம்னு சொல்லித்தான் எங்க வீட்டுல என்ன வளர்த்துருக்காங்க”
“சரி, அப்படினா யேன் நம்ப எல்லாம் ஒன்னா கடவுளா ஆகக்கூடாது?”
“எனக்குக் கடவுளா ஆவறதுல விருப்பம் இல்லனா? நான் இருக்கத்தான் விரும்பறேன், அதுவும் இங்க, இப்படிக் கடற்கரையில, இந்த இரவு நேரத்துல, இந்த மாதிரி நண்பர்களோடு”
“ நீயும் கடவுளா ஆகனும், அதான் இயற்கை. மாத்த முடியாது”
“அப்படினா சுந்தரை ஒரு கவிதைச் சொல்ல சொல்லு”
சுந்தர் மீண்டும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கொள்கிறான்.
“இரவும் மரணமும்
ஒன்று போல் தெரிகிறதே!
இரண்டையும் மீட்பது
எளிதாகத் தெரியவில்லை!
வாழ்வு அற்றுப் போகும் தருணம்
எல்லாமும் இரவில் போய் முடிந்து விடுகிறதோ?
இரவு பீதியூட்டுகிறது!”
எல்லாரும் ஒரு அமைதியில் உறைந்து கிடக்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாமல் இரவு அடர்ந்திருந்தது. 12 மணிக்கு மேல் மட்டும் ஏன் இரவு இவ்வளவு பயங்கரமாகத் தோன்றுகிறது? இந்த நேரம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியானதல்ல. கோமலன்தான் மீண்டும் பேசத் தொடங்கினான்.
“ நம்ப உடனே இல்லாமல் போகனும்டா”
“அவ்ள சுலபமா அதைச் செஞ்சிறலாமா?”
“ சுந்தர் சொன்ன மாதிரி எல்லாமும் நமக்குள்ளதான். தைரியமும், சாந்தமும், அமைதியும், வார்த்தைகளும், மரணமும்கூட”
“உனக்கு யேன் இந்த மாதிரி எண்ணம் வந்துச்சு?”
“தெரியல, ஒரு நாள் இரவுலதான் நான் எங்கப்பாவெ பார்த்தென். ஜன்னலோரமா நின்றுருந்தாரு. ரொம்ப நேரம். இரவு முழுக்க நின்றுருந்தாரு.”
“உங்க அப்பாவுக்கான இருப்பின் கால அளவை யாரு முடிவு செஞ்சானு தெரியுமா?”
“அது பத்தி அவ்வளவா அக்கறை இல்லையே”
“கோமலன் நீயோ நானோ புதுசா சிந்திக்க தொடங்குற விஷயம் இல்ல இது, இந்த இரவுகூட பழசுதான் தெரியுமா?”
“எதுமே தெரியலெ, ஆனா அப்பா அன்னிக்கு ரொம்ப அமைதியா சாந்தமா நிண்டுகிட்டு இருந்தாரு. அது மட்டும்தான் கண்ணுலே இருக்கு”
“என்னா சொன்னாரு?”
“மரணம்னா விடுதலைனு சொன்னாரு. இன்னோனும் சொன்னாரு. மரணத்தைப் பத்தி இரவுல சிந்திக்க தொடங்குனு சொன்னாரு”
திடீரென்று அனைவரும் மரணத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கினோம். எல்லோரின் முகத்திலும் இரவு பினைந்திருந்தது. கோமலனின் முகம் வெளிரிக் கொண்டே போனது. மீண்டும் பேசத் தொடங்கினான்.
“ நாந்தான் இதையெல்லாம் ஆரம்பிச்சிருக்கேன். அப்படினா நாந்தான் மொதல்ல இல்லாம போகனுமா? இந்தக் கடல் எல்லாத்துக்கும் பதில் சொல்லும் போல”
“அவ்ள சாதரணம் இல்ல, கோமலன். இருப்பும் இல்லாமையும் எல்லா இடத்துலயும் நடந்துகிட்டுதான் இருக்கு. உன் பக்கத்துல என் பக்கத்துல, அதோ அந்தப் பக்கம் திரிஞ்சிகிட்டு இருக்கும் எல்லா மனுசாளுங்க பக்கத்துலயும் எப்படி இரவு நகர்ந்துகிட்டு இருக்கோ, அது மாதிரிதான் இல்லாமையும் மரணமும் எப்பவும் கூடவே இருக்கு”
“எல்லாரும் அத பழகிகிட்டோம்தானே? பிறகு எதற்கு ரொம்பவும் வியாக்கியானம்? இருப்பை நம்ப முடிவு செய்ற மாதிரிதானே இல்லாமையும் நம்பலே தேர்ந்தெடுக்க போறம்”
“கோமலன், நீ கடவுளா ஆகப் பாக்கற, அதான் இப்படிலாம் தோனுது”
“எனக்கு இந்த உடம்போடு வாழ பிடிக்கல மாதவன். உனக்குக்கூட பிடிக்காதுதான். நல்லா யோசிச்சி பாரு.புரியும். கொஞ்ச நேரம்தான். அப்பறம் நமக்கே தெரியாத ஒரு சூன்யத்துல நம்பலாம் கரைஞ்சி போயிறலாம்”
அனைவரின் இருப்பும் சிறிது நேரத்திற்குக் கடற்கரை இருளோடு ஒரு ஆழ்ந்த மௌனத்தில் குவிந்து கொண்டது. யாருடைய முகத்தையும் பார்க்க முடியவில்லை. எல்லாரும் ஓர் இருளாக மாறிக் கொண்டிருப்பது போல பிரமையாக இருந்தது. கோமலன், சுந்தர், யோகேஸ்வரன், மாதவன் எல்லாரும் ஒன்று போலவே தெரிகிறார்கள்.
கடற்கரை வெகு நீளமாக எதையோ கடந்து கொண்டே போகிறது. அதன் எல்லை சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக தெரிகிறது. கடல் அலைகள் கால்களைத் தொடும்வரை உண்மையிலேயே உறைந்துதான் போயிருந்தேன்.
இப்பொழுது, சுந்தர் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல தொடங்குகிறான். அவன் மட்டும்தான் இருக்கிறான். அவனுடைய இருப்பு மட்டும்தான் இரவைப் பலமாக வலியுறுத்துகிறது. மாதவனோ, கோமலனோ அல்லது யோகேஸ்வரனோ, இவர்கள் யாருமற்ற ஒரு கடற்கரை யாருக்காகவோ நீண்டு வளர்ந்திருக்கிறது.
“தவறுதலாக
நான் கடவுளாகிவிட்டேன்!
இல்லாமல் போவதைப் பற்றி
சம்பாஷனை செய்யலாமா?
நீ நான் அவர்கள்
எல்லாரும் மகிழ்ச்சியை
இரவில்தான் வெளிப்படுத்த வேண்டும்!
அதன் எல்லையை கடற்கரைகள்
முடிவு செய்யட்டும்!”
சாவகாசமாக இந்தக் கவிதையை ஒப்புவித்துவிட்டு, வானத்தை மல்லாந்தவாறே சுந்தர் எழுந்து நின்று கொள்கிறான். அவன் முகமில்லாமல் வெறும் இருளாக போய் கடலில் மறைந்து கொண்டான். அதன் பிறகு நான் மட்டும்தான். நானேதான். கடற்கரை பயங்கரமானதாகத் தோன்றுகிறது.
யாருமற்ற ஒரு வெளி. சிறிது நேரத்தில் அப்பா தூரத்தில் நடந்து வருவது தெரிகிறது. கோமலன் கூறியதைப் போல அப்பா மிகவும் நிதானமாக நெருங்கிக் கொண்டிருந்தார். அவருடைய கண்களில் உலகமற்ற ஒரு பிரதேசத்தின் ஒளி ஊடுருவி தனிந்து கொண்டே இருந்தது. அவர் இரவை வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வந்தார்.
“ஐயா. பயப்பாடதெ. நான் இப்ப உன்ன பத்திதான் பேச வந்துருக்கேன்”
அப்பாவின் குரல் மிகுந்த நேசத்துடன் ஆறுதலாக ஒலித்துக் கொண்டிருந்தது.
“ஐயா, நீ இரவைப் பத்திக் கவலப்படறதெ விடுயா. நல்லா கண்ண மூடி தூங்குயா, பகல் வந்தோனே எல்லாம் சரியாயிரும். நீ மனுசன்யா. இந்த ஒடம்பு இருக்கே, அது இப்ப எதுக்கும் தயார் ஆகலயா. மறுபடியும் சொல்றேன்யா உன்ன நீ மனுசனா நெனைச்சிக்கோ. உனக்கும் வலி இருக்குயா. இரவுல இப்படி தனியா வெளிய வராதெ. . . . உன்ன நீ தனிமைப்படுத்தி ரொம்ப நாளா ஆச்சு. அது உன்னோட சுயவிருப்பம். மொதல்ல உன்னோட கற்பனைல இருக்கும் அந்தக் கோமலன், யோகேஸ், சுந்தர் இவுங்க எல்லாத்தையும் கொன்னுறுயா.. . . உன்ன பைத்தியம்னு நிறைய பேரு பேசிக்கறாங்க. வேதனையா இருக்குயா. நல்லா நிம்மதியா தூங்குயா. எல்லாம் சரியாயிரும்னு நெனைச்சிக்கோ. பிரச்சனைகளும் தீர்வுகளும் நமக்குள்ளத்தான் இருக்குயா. மனச போட்டுக் கொளப்பிக்காதெ. எழுந்து திடமா நடந்து பழகு. மனுசாளுங்ககூட பேசிப் பழகு. உன்னோட இரவுலேந்து வெளிய வந்து பாருயா, பகல் ரொம்ப வெளிச்சமா பிரகாசமா உனக்காகவே விரிஞ்சி கிடக்கு.”
அப்பா எழுந்து சிரித்துக் கொண்டே மீண்டும் எதையோ நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இல்லாமல் போகும்வரை அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா கடவுளாகிவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் சூன்யம். கடற்கரை. இருள். எந்தத் தருணத்திலும் இரவைத் தவிர்க்க முடியாமல் போய் விடுமோ? பயம் ஏற்பட்டதும், எழுந்து வீட்டை நோக்கி நடக்க தொடங்கினேன். கடற்கரையிலிருந்து விடுபடுவதே விமோச்சனமாகப் படுகிறது. தூரமாக நடந்து வந்துவிட்டேன்.
எல்லோரும் இரவில் தூக்கமின்றி அலைய தொடங்கினால், தூக்கமின்மை ஒரு மன நோயாக தெரியாமல் அன்றாட இயல்பாகிவிடும் போலும். வேகமாக நடக்க தொடங்கினேன். நடந்து கொண்டே இருந்தேன். எல்லோரும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி என்னுடன் நடக்க வேண்டுமென்று இன்னும் வேகமாக நடக்க தொடங்கினேன். இருளில் சாலை முழுவதும் இப்பொழுது மனிதக் கூட்டம் நிரம்பி கொண்டே போகிறது. வீட்டைத் தொலைத்தவர்கள், தூக்கத்தைத் தொலைத்தவர்கள் எல்லோரும் என்னுடன் நடக்க தொடங்குகிறார்கள்.
கோமலன், மாதவன், யோகேஸ்வரன். . இப்பொழுது புதிதாக ஆண்களும் பெண்களும் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மற்றுமொரு கடற்கரைக்கு விரைந்து கொண்டிருந்தோம். இரவு மகிழ்ச்சியை வெளிப்படுத்த சரியான தருணமாக மாறுகிறது. தூக்கமின்மை ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. மனம் காற்று போல் உணர்கிறது. எல்லோரும் வானத்தை மல்லாந்து பார்த்துக் கவிதைச் சொல்ல தொடங்குகிறோம்.
நாங்கள்
இரவாக மாறிவிட்டோம்!
கடவுளாகிவிட்டோம்!
தூக்கத்தைக் கடந்தவர்கள் நாங்கள்!
அமைதியும் சாந்தமும் எங்களுக்குள்ளே!
ஒரு கட்டத்தில் எங்களின் ஊர்வலம் திடீரென்று நின்று கொண்டது. எல்லோரும் ஒட்டு மொத்தமாக அசடு வழிந்தோம். இறுதியாக மீதமிருக்கும் என் முகமும் தொலைந்து போவதற்கு முன் ஒருமுறை வேகமாகக் கதறிப் பார்த்தேன்.
ஒர் அகலமான கட்டில்
இரவுகள் மிகவும் தீர்க்கத்தரிசனமாய்
என் மீது படுத்துக் கிடக்கிறது!
ஒவ்வொரு இரவிலும் தூக்கம்
புரண்டு எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கிறது!
தூக்கமின்மை மன நோயாகத்தான் தோன்றுகிறது. அகலமான சொகுசான கட்டில் மட்டும்தான் ஒரு சூன்யமாகக் கிடக்கிறது.


கே.பாலமுருகன்

bala_barathi@hotmail.com

Thursday, September 24, 2009

இன்றும் மனிதர்களைத் தேடி

பூட்டிக் கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசு என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள்வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறே நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். –கோணங்கி

முதன் முதலில் 2008-ல் கோணங்கியின் நாவலைப் படிக்க நேர்ந்தது. “உப்புக் கரையும் சிறுத்தை”. சீ.முத்துசாமி என்னிடம் கொடுத்த முதல் புத்தகம். வாங்கி இரு வாரங்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே வைத்து அழகு பார்த்தேன். அந்த நாவலின் தலைப்பே ஒரு வசீகரமான தோற்றத்தை எனக்குள் எழுப்பியிருந்தது. அப்பொழுது நான் வார்த்தைகளை, சொற்களைத் தேடி அலைபவனின் மனோபாவத்துடன் இருந்ததால், “உப்பு கத்தியில் எப்படி சிறுத்தை மறையும்?” என்ற சந்தேகத்துடன் அந்தச் சொற்களை வெறுமனே கடக்க முயற்சித்தும் எங்கோ ஒர் இடத்தில் தேங்கி விடுவதால் அந்த நாவலைப் படிக்கவே முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த நாவலைத் திறந்து முதல் இரு பக்கங்கள் படிக்கத் துவங்கினேன். மூன்றாவது பக்கத்திற்குப் போகும்போது நாவலிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே வெளியே தூக்கி வீசப்பட்டிருந்ததை உணர முடிந்தது. மீண்டும் அந்த இரு பக்கங்களையும் வாசிக்க முயற்சி செய்தபோது கோணங்கியின் அந்த நாவல் வரிகளை ஓர் இருண்மையான உலகம் என்ற கற்பித்தத்திற்குள் வந்துவிட்டிருந்தேன். இரண்டாவது பக்கத்தைக் கடக்க முடியாமல் அப்படியே தேங்கிவிட்டேன். வாசிப்பு மேலும் வலுப்பட வேண்டும் என்று, கோணங்கியை ஒரு மூலையில் போட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன், ஜீ.நாகராஜன், ஜெயகாந்தன், என வாசிப்பை தீவிரப்படுத்தினேன். முதலில் படித்த புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” கதை எப்படி என்னை வாசிப்பிற்குள் இழுத்துவிட்டதோ அதே போலத்தான் கோனங்கியின் நாவலும் வாசிப்பின் பின்னால் என்னை அலையவிட்டது.

பல நாவல்களைப் படித்து முடித்த பிறகும் இன்றும் கோணங்கியின் அந்த, “உப்பு கத்தியில் மறையும் சிறுத்தை” நாவலை எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கவிஞர் ஒருவரின் மூலம், கோணங்கியுடன் தொலைப்பேசியில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் எளிமையான சொற்களுடன் மென்மையான குரலில் கோணங்கி பேசினார். அவருடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, நேரில் சந்திக்க நேர்ந்தால் அவரது நாவல் அனுபவங்களைச் சொல்வதாகக் கூறினார்.

மனிதர்களைத் தேடி அலைந்து நான் பெற்ற வாழ்பனுபவங்கள்தான் என் படைப்பும் என் இலக்கியமும் என்று இன்றும் ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு தெருவில், இலக்கற்று, பயணித்துக் கொண்டிருக்கிறார் கோணங்கி மனித வாழ்வின் அதிசயங்களைத் தேடி. வாழ்வு ஒரு சுருங்கலான வடிவத்திற்குள் சிக்கிக் கொண்டு, நீ நான் நினைப்பது போல வடிவமைத்துக் கொள்ளும் களிமண் அல்ல. அது நீருற்று, காட்டாறு, வாழ்வெனும் நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கே.பாலமுருகன்

எவன் வாழ்விற்கு எவன் இலக்கு சொல்கிறான்?

1
சில அறங்களும்
சில கற்பிதங்களும்
சில நெறிகளும்
சில போதனைகளும்
எல்லாம் சிலவற்றையும்
துண்டித்துக் கொண்டு
வெறும் படைப்பாக
வந்து வீழ்கின்றன.

மலம் திண்ணு வாழ நேர்ந்த
தலித்துகளுக்கும்
மலத்தில் தேய்ந்து மலம் அள்ளி
மானுடமாக வாழ்ந்துகொண்டிருக்கும்
விளிம்புகளுக்கும்
காலால் எட்டி உதைத்து
விரட்டடிக்கப்பட்ட
அடிமைகளுக்கும்
வரலாற்றால் உருகுலைந்த
உருவங்களுக்கும்
அடக்கி அடக்கி
அடிமட்ட பிணமாய் மடிந்த
ஈழத்து மண்ணுக்கும்
வேறாய் அறுந்து நடையாய் நடந்து
தலைமுறை இழந்த அப்பாவிகளுக்கும்
வயிறு கிழிந்து தொங்கிய
தாய்க்குலத்தின் உக்கிர கொடுமைகளுக்கும்

மலம் கழிக்க
அவமானங்களையும் பொழுதுகளையும்
பாசா காட்டில் ஒளித்து வைத்த வாழ்வையும்
இரவோடு இரவாக மடிந்த இருளுக்குள்
துடித்த 3ஆம் நம்பர் லயத்தின்
பீ கொட்டாய்களையும்

முன்னோர்களின் இழப்புகளையும்
கொண்டாட்டங்களையும்
காட்டுப் பன்றி துரட்டிய துடிதுடிப்புகளையும்
லெண்டின் விளக்கு எரிய
பக்கத்து தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலுடன்
நடந்து சென்ற இரவுகளையும்

மேட்டுப் பாலத்தின் அருகில்
மூத்திரம் பெய்து தொலைத்த
மதியங்களையும்
துப்பாகிச் சூட்டிற்குப் பயந்து
வீடு தேடி வந்த தோட்டத்து நாய்களின்
மழைப்பொழுதுகளையும்

தாத்தாவின் உடலை
தோட்டத்தின் வடக்கில் வைத்துக்
கழுவும்போது பிரிந்து விலகிய சதைப் பிடிப்புகளையும்
மரணம் கொடுத்த இடைவெளியையும் கடைசியில் கழிந்து
வெளியேறிய மலங்களையும்

இதெல்லாம் வாழ்பனுவமல்ல
இதெல்லாம் இலக்கியம் ஆகாது
இலக்கைச் சிதைக்கும் துரோகம் என. . .

எவன் வாழ்வுக்கு எவன் அறம் சொல்கிறான் பார்.

2

இன்னும் இதிகாசங்களுக்குள்
புரளும் செத்த தலைமுறைகள்
தற்கால அரசியல் துரோகங்களுக்கு முன்
மண்டியிட்டு சொகுசான மனோபாவங்களுடன்
தமிழனுக்கு இழைந்த வாழ்வின் நெருக்கடிகளுக்கும்
பத்து காசு மீ கோரேங்கிற்காக
பக்கத்தில் அமர்ந்திருந்த பணக்காரனின் வாயில் ஒழுகும்
எச்சிலைப் பார்த்த ஏழ்மையின் முன்னும்
கொஞ்சமும் மனம் கூசாமல்
இதெல்லாம் இலக்கியமாகாது, இலக்குமாகாது
என துரோகியாக
வாழ்பனுவத்தை மென்று விழுங்கும்
உண்மைக்கு முன் கலாச்சார போர்வைக்குள்
பதுங்கும் காகித புலியாக. . .

எவன் வாழ்வுக்கு எவன் இலக்கு சொல்கிறான் பார்.

3

ஈழத்து இலக்கியத்தில்
இரத்தமும் கற்பழிப்பும்
சதையும்
துண்டித்து துண்டித்து
வீழும் உன் சொகுசான
இலக்கின் மீது.
எடுத்து முகர்ந்து பார்
அது இலக்கற்று
அலையும் கால்களின் ஆல்பமாக
வலிகளின் துயர் கதையாக
எவ்வித இலக்கணமும் இல்லாமல்
இழந்த வாழ்வின் மீதங்களை மட்டும்
காட்டிக் கொண்டிருக்கும்.

எவன் வாழ்வுக்கு எவன் புத்தி சொல்கிறான் பார்.

கே.பாலமுருகன்

Wednesday, September 23, 2009

அநங்கம் – சிறுகதை சிறப்பிதழ்

அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மேலும் வலுவான தனித்துவங்களுடன் சமரசமற்ற இருப்புடன் தொடர்ந்து அடுத்த கட்டத்தை/களத்தை எட்டும். அடுத்த இதழ் நவம்பர் மாதத்தில் சிறுகதை சிறப்பிதழாக வரவிருக்கிறது. தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் மட்டும் தங்களின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது போன்ற வாய்ப்புகளுக்கு இடம் தராமல் புதியவர்களையும் தீவிர எழுத்தில் ஆர்வமுள்ள இளைய படைப்பாளிகளையும் இதில் பங்களிப்பு செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

அயல் நாட்டில் இருக்கும் நண்பர்கள் வேறு எங்கும் பிரசுரமாகாத தங்களின் சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மலேசியாவின் நிலப்பரப்பில் வாழ்ந்து சென்ற அயலக எழுத்தாளர்களின் அனுபவங்களும் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தனி பக்கமாக அநங்கத்தில் இடம்பெறும்.

அநங்கத்தில் மலேசிய படைப்பாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மலேசியாவின் தீவிர இலக்கியத்திற்கு “அநங்கம்” தனியொரு இடத்தினை ஓர் அடையாளமாக நிறுவும். நம் கதைகளுக்கான ஒரு களத்தை அச்சு இதழில் கொண்டு வருவோம். அதைப் பரவலான மீள்வாசிப்பிற்குக் கொண்டு செல்வது மிக அவசியமானது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: Tscu-inaimathi/ paranar/ Unicode-font

bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com


அநங்கம் ஆசிரியர்
கே.பாலமுருகன்

Thursday, September 17, 2009

சமாட் சைட் மலாய் கவிதைகள் - தமிழில்: கே.பாலமுருகன்


1. அந்திம விருந்தாளி

ஓர் அந்திம விருந்தாளியாக வந்திருக்கிறோம்
பொழுதுகள் தீர்ந்ததும் திரும்ப வேண்டியதுதான்
வெறுங்கையுடன் வந்துவிட்டோம்
புறப்படும்போது கைகளில் பாவங்களையும்
தீரா ஆசைகளையும் சுமந்து கொள்வோம்

மீண்டும் திரும்புவதற்கான வழிகள் அறிந்து
வந்திருந்த அந்திம விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
பக்தியையும் இன்பத்தையும் கொண்டு செல்லலாம்
வழி மறந்து திசை தொலைத்த விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
சுமையாக வந்து சேரலாம்

ஒருவேளை
அந்திம விருந்தாளி
மனிதர்களைப் பார்த்துவிட்டால்
இருப்பிடத்தை மறந்து
பதவியையும் இனத்தையும்
கொண்டாடத் துவங்குகிறான்

ஓர் உயிர் ஓர் அணுவாக
வந்திருக்கிறோம்
அந்திம விருந்தாளியாக
விடைப்பெறும் கணத்தில்
பக்தியைக் கொண்டு
செல்லலாம்.

2. நூல் நிலையத்தின் உள்ளே

நூல் நிலையத்தின் உள்ளே
குறுகி போயிருந்த என்னைப் பார்த்து
ஒரு முதியவர் கூறினார் :
“கண்களை மூடிக் கொண்டு
புத்தகங்களைத் திறப்பதில்
அர்த்தமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து பார்”

நாளையலிருந்து
நான் நூல் நிலையத்தில் குறுகலாக
இருக்கப் இல்லை
அந்த முதியவரைப் பார்த்து
வெகுநாளாகியும்

இப்பொழுதுதெல்லாம்
நூல் நிலையத்தில்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
திறந்த கண்களுடன்
அந்த முதியவர்
இல்லாத நாற்காலியின்
வெறுமையைப் பார்த்தவாறே.

3. அலை

என் கால்களை
ஒருமுறை தொட்டுவிட்டு
போகும் அலையை
நான் மீண்டும்
அறிவதில்லை

4. வரம்

தேவையான அத்துனையும்
வரமளிக்கப்பட்டும்
அது கிடைக்காமலே
போவதுதான்
கடவுளின் மிக நெருக்கடியான
அன்பளிப்பு

சமாட் சைட் பற்றி

1986களில் பிரபல மலேசிய இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அப்துல் சமாட் பின் முகமாட் சைட் (சமாட் சைட்). 9 ஏப்ரல் 1935-இல் கம்போங் பலீம்பில் பிறந்த சமாட் சைட் இதுவரை இலக்கியத்தில் பல ஆசிய விருதுகளைப் பெற்றுள்ளார். சலீனா, இரவு வானம், காலை மழை என்று பல புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தீவுக்கு முன்பான நினைவுகள்’ என்கிற இவருடைய நாடகம் மலேசிய மலாய் நாடகத் துறையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. 2003-இல் இவருடைய கவிதைகள் “சுவரிலிருந்து வந்த குரல்கள்” எனும் தலைப்பில் பிரசுரமாகி மலேசிய மக்களின் கவனத்தைப் பெற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: அம்ருதா இதழ்
bala_barathi@hotmail.com

எழுத்தாளர் பாவண்ணனுடன் அநங்கம் இதழுக்காக கேள்வி/பதில்

அநங்கம் இதழ் 3க்காக (பிப்ரவரி 2009) எழுத்தாளர் பாவண்ணனை மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொண்டு சில கேள்விகளை முன் வைக்க வாய்ப்புக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுடன் ஏற்கனவே மின்னஞ்சலின் மூலம் நட்பு இருந்ததால், அதன் அடிப்படையில் அவருடன் இந்தக் கேள்வி/பதிலை நடத்தினேன்.

1. இன்றைய இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், மாய எதார்த்தம் போன்றவற்றின் பாதிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் பின்நவீனத்துவம் என்பது இலக்கியம் உட்பட்ட பிற அறிவுத்துறைகளையும் கலைத்துறைகளையும் மதிப்பீடு செய்கிற ஓர் உலகப்போக்கு. மாய எதார்த்தம் என்பது ஓர் இலக்கிய உத்தி. இரண்டுமே வேறுவேறானவை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவ்விரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்கிற அவசரம் நிலவியது. ஆனால் அந்த அவசரம் இப்போது இல்லை. ஆவேசங்கள் மெல்லத் தணிந்து, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் நிதானம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கைவந்திருக்கிறது. அதீத கற்பனை என்பது நம்முடைய கதைமரபில் தொடக்க காலத்திலிருந்தே இடம்பெற்று வந்திருக்கிற ஓர் அம்சம். நம் புராணங்களில் அது அழகான உத்தியாக நன்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
எதார்த்தவாதப் பார்வை நம் மண்ணில் காலூன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வாழ்க்கையை மண்ணின் தளத்தில் வைத்துப் பரிசீலிக்கிற எதார்த்த இலக்கியப் போக்கு உருவானது.


மன இயக்கங்களையும் புதிர்களையும் சிக்கல்களையும் எதார்த்த வாழ்விலிருந்தே கண்டடைகிற குறிப்புகள் வழியாகவும் படிமங்கள் வழியாகவும் எதார்த்தவாத இலக்கியப் படைப்புகள் முன்வைக்கத் தொடங்கின. ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியின் முடிவில் இக்குறியீடுகளும் படிமங்களும் பழகிவிட்டன என்பது ஒரு காரணம். சிக்கல்களின் தீவிரத்தை உணர்த்த எதார்த்தவாதம் போதுமான அளவுக்கு இடம் தரவில்லை என்பது இன்னொரு காரணம். புதிய குறியீடுகளையும் படிமங்களையும் கண்டடைகிற ஒரு மனநெருக்கடிக்கு ஆளானார்கள் படைப்பாளிகள்.


இதன் விளைவாக அதீத கற்பனை உத்திகள் பயன்பாட்டுக்கு வந்தன. இது எதார்த்தவாதப் பார்வைக்கு எதிரான ஒன்றல்ல. எதார்த்தவாதப் பார்வையின் எல்லையில் கண்டறியப்பட்ட இன்னொரு கிளைப்பாதை. மாய எதார்த்தவாதப் படைப்பகள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலில் உருவாகின. அந்நாடுகளின் அரசியல் சமூகச்சூழல்களும் நெருக்கடிகளும் மாய எதார்த்தவாத உத்திகளைக் கையாளும் வேகத்தை அந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தந்தன என்பது மிகையான கூற்றாகாது. நம் கதைமரபின் அதீதக் கற்பனைக்கும் மாய எதார்த்தத்துக்கும் இடையே ஒரு சில நுட்பமான வேறுபாடுகள்மட்டுமே உண்டு. அதீதக்கற்பனையில் நாம் இன்னொரு உலகத்தையே உருவாக்கி, பாத்திரங்களை உலவவிடமுடியும். ஆனால் அப்பாத்திரங்களின் உணர்வுகள் உண்மையானவை. மானுடப் பாத்திரங்களைப்போலவே எண்ணுபவை. கனவில் உரையாடுவதுபோல. மாய எதார்த்தத்தில் நாம் வாழும் உலகமே இடம்பெறுகிறது. ஆனால் எங்கோ ஒரு சில தெருக்களை அல்லது பூங்காக்களை அல்லது கட்டிடங்களை அல்லது மனிதர்களை நம் தேவைக்கு ஏற்றவகையில் அதீதமான குணாம்சங்களோடு புனைய முடியும். அந்தப் புனைவுதான் ஒரு படைப்பாளி முன்வைக்க விரும்புகிற விமர்சனம் அல்லது கிண்டல் அல்லது சீற்றம் என்று சொல்லலாம்.


இப்படித்தான் இந்த உத்தி செயல்படுகிறது. தமிழ்ச்சூழலில் இந்த உத்தி அறிமுகமான தருணத்தில், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் நடுவே அதீத அளவுக்கு ஆர்வம் பொங்கியிருந்தது. இப்போது சற்றே தணிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பின் நவீனத்துவப் பார்வை படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் மனஉலகையும் பார்வையையும் விரிவாக்கி வளப்படுத்தி இருக்கிறது. விளிம்பில் இடம்பெற்றிருந்த பல அம்சங்கள் இன்று மையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அலசி ஆய்வுக்குள்ளாவதை பின்நவீனத்துப்போக்கின் சாதனை என்றே நான் நம்புகிறேன்.

2. எத்தகைய சிறுகதைகள் உங்களைக் கவர்கின்றன?

ஒரு சிறுகதையின் முடிவுப்புள்ளி என்பது மிகமுக்கியமான ஒரு கணம் அல்லது தருணம். சில சிறுகதைகளில் இது ஒரு திருப்பமாக இருக்கலாம். அல்லது மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை தன் பயணத்தின் ஊடே மண்ணைத் தீண்டும் இறுதிக்கணமாக இருக்கலாம். ஓர் ஓவியன் தூரிகையால் இழுக்கும் கோட்டின் கடைசிப்புள்ளியாகவும் அமையலாம். அப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு ரகசியக்கதவாகச் செயல்படுகிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தைநோக்கி தாவவைத்துவிடுகிறது. இப்படி தளமாற்றங்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிற சிறுகதைகள் என்னை எப்போதும் கவர்கின்றன.

3. வளரும் இளம்எழுத்தாளர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல நினைக்கிறீர்கள்?

ஆலோசனை என்பதைவிட பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விஷயமாக ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். விரிவான வாசிப்பை விரும்புகிறவர்களாகவும் ஆழ்ந்த விவாதங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எழுத்துப் பயிற்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நம் சாதனைகளே நமக்கான தடைக்கற்களாக மாற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எழுத்தாளன் என்பவன் இடையறாது விண்ணிலேறி பறந்தபடி இருக்கும் பறவை போன்றவன். பறத்தல் ஓர் அனுபவம். பறத்தலே ஒரு வாழ்க்கை.

4. மலேசிய இலக்கியம் படைப்புகள் குறித்த உங்களின் பார்வை?

ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்கிற அளவுக்கு அதிக அளவில் நான் மலேசிய இலக்கயப்படைப்புகளை நான் வாசித்ததில்லை என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமாக உள்ளது.


குறிப்பு: இனியாவது புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் மீது உங்களின் வாசிப்பை முன் வைய்யுங்கள். மலேசிய இலக்கியம் இன்று அடைந்துள்ள நவீனத்துவ வளர்ச்சியும் படைப்பாக்க முயற்சிகளும் மிக முக்கியமான இடத்தை எட்டியுள்ளது.


நன்றி: அநங்கம் பிப்ரவரி 2009 இதழ்


-கே.பாலமுருகன்-

Tuesday, September 15, 2009

புரட்சியின் குறியீடு சே (விளிம்புநிலைகளின் எதிர்க்குரல்)

சே குவேரா என்கிற போராளியின் மிகவும் முக்கியமான புத்தகங்களில் "பொலிவியா நாட்குறிப்புகள்" மிக முக்கியமான பதிவுகளாகும். தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு முதன் முதலில் வெளிவந்த சே-வின் புத்தகம் இது. காலனியமும், ஏகாதிபத்தியமும் சுரண்டும் எல்லா நாடுகளையும் போல கியுபாவும் பொருளாதாரத்தில் சுருங்கிய நிலையிலும் விளிம்பு மனிதர்களை உற்பத்திக்கும் களமாகவும் இருந்ததைத் தனது புரட்சிக்கரமான எதிர்க்குரலில் மூலம் சுரண்டப்பட்டவர்களுக்காக ஒலிக்க்ச் செய்கிறார் சே.

-கே.பாலமுருகன்சே-பற்றிய அறிமுகம்


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்

•1929 ஜூன் 14 - பிறப்பு
•1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
•1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

•1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
•1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
oஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

•1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
oஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

•1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
oஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
•1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
oடிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

•1959
oஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
oஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
oஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
oஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
oமே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
oஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
oஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
oஅக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
oநவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

•1960
oஅக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
oநவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

•1961
oஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
oபெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
oஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரஙகில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

•1962
oமே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
oஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

•1963
oஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
oஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

•1964
oபெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
oமார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
oஅக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
oடிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

•1966
oநவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
•1967
oமார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
oஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
oஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
oசெப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
oஅக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
oஅக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

•1968
oஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய
நாட்குறிப்புகள் கியூபாவில் வெளியிடப்படுகிறது.

•1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

•1997
oஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
oஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
oஅக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
oஅக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.


மூலம்: வீக்கியோபிடியா

கே.பாலமுருகன்

Monday, September 14, 2009

மொழியும் இலக்கியமும் - மீண்டும் ஓர் உடைதல்

1. இது பின்நவீனத்துவமல்ல என்ற இரு கட்டுரை தொடரிலும் நம்முடைய பிந்தைய சமூகம் எப்படி பின்நவீனத்துவ கற்பிதங்கள் இல்லாமலே பின்நவீனத்துத்தில் கையாளப்பட்டிருக்கும் மொழி/அரசியல்/வாழ்வியல் கூறுகளை வாழ்ந்து சென்றிருக்கிறது என்று கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தேன். அது மேலும் தொடரும்.
2. இக்கட்டுரை மரபின் இறுக்கங்கள் பற்றியது. இருப்பின் அடையாளமும் அடையாளத்தின் இருப்பும் தற்கால அரசியல் சூழலின் மிகப்பெரிய சவால். அதை அதன் தன்மைகளுடன் புரிந்து கொண்டு விவாதிப்பதே சரியாகும்.
மொழி தனியான ஒரு மரபில் திடீரென்று தோன்றியது கிடையாது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் மரபு உருவாகிய பின்புலத்தில் சில வாழ்வியல் தர்க்கங்களும், வரலாற்று ஆக்கமும், நிலவியல்/ மனிதவியல் கூறுகளும், பல குறியீட்டுத் தன்மைகளும் என்று பலவேறான தளத்தில் வைத்து ஆழமாக விவாதிக்கவும் தேடவும் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளன. மொழியின் மீது பற்றும் அதீத இருப்பும் கொண்டதால் அதைக் கேள்விக்குள்ளாக்கும் போது மிகுந்த கோபமும் தடுமாற்றமும் ஏற்படுகின்றது.

நம்மைச் சார்ந்த எதையுமே நாம் ஆராயலாம், கேள்விக்குட்படுத்தலாம். இன்று தமிழ் உலக அளவில் வளர்ந்து திடமாக உருவாகவே பல அறிஞர்கள், மொழி ஆய்வாளர்கள் தமிழை விவாதப் பொருளாகவும், ஆய்க்குட்படுத்தியும், தேடலின் களமாகவும் அதைக் கட்டுடைத்து மீண்டும் கட்டுவதிலிருந்து வளர்த்துள்ளார்கள்.

"தமிழ்" சோறு போடுவதால் அதைக் கேள்விக்குள்ளாக்குபவனைத் துரோகி என்பது சரியன்று. தமிழை தொழிலாகவோ/ சோறு போடும் கருவியாகவோ பார்க்கக்க்கூடிய மதிப்பீடுகள், மிகப் பெரிய தவறு. இங்கு நமது கேள்வியும் வினாவும் மொழியைக் குறித்தும் மொழியின் மரபு குறித்து மட்டுமே. நிறுவப்பட்டவைகளை தலைமுறை தலைமுறையாக அப்படியே அதன் புனித கட்டுமானங்களுடன் ஏற்பது ஒரு வழி தோன்றலின் பின்பற்றுதல். அதற்கு முரணாகச் சிந்திக்கக்கூடியவன் அல்லது கேள்விகளை எழுப்பக்கூடியவன் சமூகப் பார்வையிலிருந்து வேறானவனாகவும் புறம்பானவனாகவும் காட்சிப்படுத்தப்படுவதும் அடையாளப்படுத்தப்படுவதும் மரபின் அரசியல். தவிர்க்க முடியாதவை.
ஒவ்வோரு காலமாற்றத்திலும் தமிழ் தனக்குரிய தனித்தன்மையுடன் தன்னை வளர்த்துக் கொண்டது. மரபை மீள்கட்டுமானம் செய்து கொண்டது. பல அறிவியல் புரட்சிகளை எதிர்க்கொள்ள தன் மரபை மீள் உருவாக்கம் மூலம் புதுப்பித்துக் கொண்டது. இன்னும் காலம் வளர வளர மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல தமிழ் தனக்கான தனித்துவங்களை மரபின் நீட்சியாக மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்.

நமது வாழ்வின் வெளிப்பாடுகளின் ஒரு வடிவம் மொழி. இன்னும் ஆழமாக மனிதவியல் கோட்பாடுகளில் வைத்து மதிபீட்டால், மொழி பிறருடன் தொடர்புக் கொள்ளக்கூடிய ஒரு வடிவம். அதன் தனித்தன்மையை இழக்கவிடாமல் பாதுகாப்பது மனிதனின் கடமையும்கூட. ஆனால் அதன் தனித்தன்மையின் உள் அமைப்புகளை வரலாற்றுச் சான்றுகளுடனும் எதார்த்தவாத அமைப்பியல்வாதங்களுடன் அணுகக்கூடிய முற்போக்குவாதம் மிக அவசியமானது.

மேலும் தமிழ் இந்துக்களால் மட்டும் பேசப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு மொழியல்ல. தமிழ் ஒரு தேசியம். இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் என்று பல இனத்தவர்கள் தங்கள் மதத்தை/கலாச்சாரங்களைப் பிராச்சாரம் செய்ய தமிழைப் பயன்படுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக எம்.ஏ நுக்மான் எழுதிய இக்கட்டுரையைப் பார்க்கவும்:

மொழியும் இலக்கியமும்- எம்.ஏ.நுக்மான்மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது.

பிறமொழி சொற்களை நீக்குதல் அல்லது அவற்றை தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழித்தூய்மையாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கு உரியதாக அன்றி பல்லின, பல்கலாச்சார சமூகத்திற்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். மறைமலை அடிகள் தமிழ் மொழி வளர்ச்சியை சைவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்த்தார்.

அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்தவர்களும் சைவர்களே. பின்னர் வந்த பௌளத்தர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், முஸ்லீம்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன்படுத்தினார்கள். எந்தவித கட்டுபாடுமின்றி வடச்சொற்களையும் பிறமொழி சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்றும், தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்தனர் என்றும் அவ்ர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972).

மொழிமாற்றம், வளர்ச்சிப்பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி, வெறும் உணர்ச்சி நிலை நின்று மறைமலை அடிகள் பிரச்சனையை நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கின்றது. பழைய சொற்கள் வழக்கிலிருந்து மறைவதும், புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழி வளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். சங்க காலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் வழக்கிறந்தன என்றால், தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது என்பதே பொருள். பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும்போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது.

ஆங்கிலம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பௌளத்தர்களும், சமணர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் தேவைகளுக்காகத் தமிழ் மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது. அதன் சொல்வளமும் பொருள்வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.

மறைமலை அடிகள் கருதுவது போல் பழந்தமிழ் மரபைச் சைவத்தமிழ் மரபாகக் காண்பதும், பிற பண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் தமிழின் அழிவாகக் கருதுவதும், தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருதுவதைப் பிற பண்பாட்டினர் மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும். கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும், கிறித்தவர் என்பதைவிட கிறிஸ்த்தவர் என்றும், இசுலாமியர் என்பதைவிட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அச்சமூகப்பிரிவினர் விரும்புவராயின் மொழி மரபிற்கு விரோதமானது எனக்கூறி தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்பதோடு ஒரு பல்லினச் சமூக நோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக்கூற வேண்டும்.


வழங்கியவர்: மா.சண்முகசிவா (அநங்கம் இதழ் ஆகஸ்ட்)


1. பேச்சு மொழி/ வட்டார மொழியைப் பற்றி ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் (சிறிது காலம் கழித்தே வரக்கூடும்- உடனடி பதில் சரியான முரண் ஆகாது)


2. அடுத்து (ஜெயமோகன் இணையத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருக்குறள் எப்படி கடவுள் மையமாக்கப்பட்டது என்ற சமணப் பார்வையின் ஒரு கட்டுரையுடன். . ) விவாதிக்க வேண்டிய ஒரு கட்டுரை அது


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி