தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.எம் தமிழ் மொழி மீட்புக்குழு தமது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. திரு.வேங்கடம் அவர்களின் தலைமையில் இந்த உண்ணாவிரதம் இன்று முழுவதும் நடத்தப்படும்.
விவரங்கள் பின்வருமாறு:
எஸ்.பி.எம். தேர்வில் தமிழ், இலக்கியப் பாடங்கள் மற்ற பாடங்களுக்கு இணையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழ், தமிழ் இலக்கிய மீட்புக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். எதிர்வரும் தைப்பூச நாளன்று நாடெங்கிலும் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாக்களின்போது போராட்டவாதிகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
அண்மையில் தமிழ், தமிழ் இலக்கியம் குறித்துக் கல்வி அமைச்சரோடு நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்படுகிறது.
“இந்தப் போராட்டம் நாடெங்கிலும் தைப்பூச நாளன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று போராட்டக் குழுவின் தலைவர் ஆ. திருவேங்கடம் தெரிவித்தார். பத்துமலை தைப்பூச விழாவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.இக்குழுவினர் தமிழ்க் கடவுள் முருகனுக்குத் தமிழ்க் காவடி எடுக்கவுள்ளனர்.
உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை மணி 3 வரை மற்றும் பால் குடம் 3.30 க்கு மீட்புக் குழுவினர் சார்பாக எடுக்கப் படுகின்றது. பொது மக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இணைந்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இரு மாற்றுக் கருத்துகள்:
கல்வி சார்ந்த ஒரு முக்கியமான நபரிடம்(பெயர் வெளியீட விரும்பாத) இந்தப் போராட்டம் குறித்து கேட்டறிந்தபோது:
அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்துவிட்டப் பிறகும் இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்தார். இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான், ஆனாலும் மொழி உணர்வுமிக்க மாணவர்கள் 300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்.
மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் இப்பொழுது எழுந்திருக்கும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார். மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு எனவும் கூறினார்.
மேலும் கலைத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் 10 பாடத்திற்குள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுத்தால், கட்டாயமாக அந்த இரு பாடங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர்க்ள் தனது மேற்கல்வி துறைக்கு தமிழ் மொழி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்பும் வரையறையும் இல்லாவிட்டாலும், தனது மொழி மீதான பற்றைத் தெரிவிக்கும் பொருட்டு 10 பாடங்களுக்கு அப்பாற்பட்ட 11 ஆவது பாடமாக அவர்கள் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார். இதுநாள் வரையில் அறிவியல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தமிழை எடுத்ததன் விளைவாக அவர்கள் அந்தப் பாடத்தை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணையவும் அல்லது தமிழ் மேற்படிப்பைத் தொடரவும் பயன்படுத்தி வந்தனர் என்பதும் உண்மை. ஆனாலும் பல்கலைக்கழகங்களில் தமிழில் மேற்படிப்பைத் தொடர கலைத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கே அதிகமான வாய்ப்புகள் உண்டு காரணம், பாடக் கணகெடுப்பில் தமிழுக்கு இன்னபிற மொழிப்பாடங்களோ அல்லது சரித்திரம் போன்ற ஏற்புடைய கலைத்துறை பாடங்களே சேர்த்து மதிப்பிடப்படும், அறிவியல் துறைப் பாடங்கள் பெரும்பாலும் அறிவியல் தொடர்பான மேற்கல்விகளுக்கே பயன்படுத்தப்படும்.
ஆகையால் விவரமான அணுகுமுறையில்லாத இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்கனவே தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டிருந்த மொழி உணர்வுமிக்க மானவர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிய வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார். இதற்கு முந்தைய இவர்களின் போராட்டம் வெற்றியடைந்தது மிகவும் பாராட்டதலுக்குரியது, மேலும் சரியான நோக்கத்தை முன்வைத்துத் தெளிவாக முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் மொழி மீட்புக்குழு நடத்திக் கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்திலிருந்து வாசகரும் மீட்புக்குழுவின் உறுப்பினருமான திரு. தமிழ்வானன் அவர்களைத் தொடர்புக் கொண்டபோது அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு:
முழுமையான அங்கீகாரம் கிடைக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும், ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகமும் மானவர்களின் தேர்வுப் பாடங்களிலேயே சில கட்டாயங்களையும் நிபந்தனைகளையும் வைத்திருக்கும்போது 10 பாடங்களையே அங்கீகரிப்போம் என்ற அறிவிப்பு தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் பாதிக்கும் என்று தெளிவாகப் புரிய வருகிறது. ஆகையால்தான் இந்தப் போராட்டம் தொடர்கிறது.
விவாதங்கள் தொடரும். . . .
எனது கேள்விகள்:
தமிழுக்கான அங்கீகாரம் வேண்டி தொடரும் இந்தப் போராட்டம் குறித்து என்னிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கடந்த முறை கோலாலம்பூரில் நடந்த கவன ஈர்ப்புப் பேரணியிலும் நான் கலந்துகொண்டேன். ஆனால் இந்தப் போராட்டத்தின் இன்னொரு முகத்தை அவசியம் நான் விவாதிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. முழுக்க முழுக்க தமிழ் மொழிக்காகக் கேட்கப்படும் இந்த அங்கீகாரம் எந்தவகைச் சேர்ந்த மாணவர்களை முன்வைத்து கட்டமைக்கப்படுகிறது? எல்லாம் பாடங்களிலும் “ஏ” பெறப்போகும் மாணவர்களின் மேற்கல்விக்காகவும், அவர்கள் அடுத்து தொடரவிருக்கும் கல்விக்காகவே எல்லாம்வகையான கேள்விகளும் எதிர்க்குரலும் முன்வைக்கப்படுவதாக ஒரு சந்தேகம் எழ வாய்ப்புண்டு. (இந்தப் போராட்டத்திற்கு நமது சிறுபாண்மை இனத்தவரின் மொழியை மீட்கும் முகமும் இருக்கிறது)
ஏற்கனவே “ஏழு ஏ” என்கிற மிகப்பெரிய போதை நமது சமூகத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. ஏழு ஏ என்பது ஒட்டு மொத்த வரையறைகளாகப் பாவிக்கப்பட்டு ஒரு வன்முறையான பிரயோகமாக அமலுக்குள் இருக்கின்றன. சோதனை முடிவுகள் வந்ததும் அந்த “ஏழு ஏ” வேட்டையில் யார் வெற்றிப் பெற்றார்களோ அவர்களுக்கே மாலைகள், மரியாதைகள், விருதுகள் என சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கொண்டாடுகின்றன. அவர்களின் வேட்டைக்குப் பலியாகாமல் ஏழு ஏ எடுக்க முடியாமல் போன மாணவர்களுக்காக எதுவும் செய்ய இயலாத ஒரு இயலாமைத்தான் எஞ்சுகின்றன. ஏ பெறும் மாணவர்களுக்காகப் போராடும் எல்லாம் தரப்பினரும், குடும்ப பின்னனியாலும், வறுமையின் பீதியினாலும் உள/மன அமைப்பின் காரணமாகவும் ஒவ்வொருமுறையும் சம அளவில் நடத்தப்படும் சோதனைகளில் தோல்வியடையும் மாணவர்களுக்காக என்ன செய்திருக்கிறது?
அவர்களைப் பொருத்தவரையில் கல்வி என்பதும் கற்பது என்பதும் ஒரு போராட்டமான பாதையின் அமைப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது, அவர்களிடம் எந்தவகையிலும் தமிழ் கல்வி என்றும் பிற கல்வி என்றும் கற்பிக்க இயலாது. அந்த மாதிரியான மாணவர்கள் எதிர்க்கொள்ளும் குடும்ப சிதைவும், குடும்ப பொருளாதாரத்தின் அமைப்பும், குடும்ப பண்பாட்டு அரசியல் அமைப்பும் பாதிப்பும், உள /உடல் பலவீன பாதிப்பும் என அத்துனைப் பிரச்சனைகளும் நீண்டதொரு ஆய்வுக்குட்படுத்தி அவர்களை மீட்க வேண்டிய காலக்கட்டத்தில் இருந்தும் அதைப் பற்றி விழிப்புணர்வு ஏதுமில்லாமல், அதெல்லாம் ஆசிரியர்களின் பொறுப்பு என வகைப்படுத்தி புறக்கணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது.
“JPA scholarship” கடனுதவியை முன்வைத்து கேட்கப்படும் பல கேள்சிகளுக்குப் பின்னனியில் இருப்பது இந்த உதவியைப் பெறப்போகும் பல ஏ-க்கள் பெற்ற மாணவர்களே. அப்படியானால் அங்கீகாரம் தேவை என்பது இந்த வகை மாணவர்களுக்கே! ஒருவகையைச் சேர்ந்த மாணவர்களை நோக்கியே அதாவது ஏ என்கிற மதிப்பீட்டை நோக்கியே மீண்டும் மீண்டும் நமது பார்வை விரிகிறது. “பி” அல்லது போராடி “சீ” பெற்ற மாணவர்களுக்காக ஒரு சிறு பாராட்டையாவது வைத்திருக்கிறீர்களா?
skor A என்பது ஒரு மிட்டாய் போல வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. மேலும் skor A எனும் வியாபாரமும் விரிவடைந்து உக்கிரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பல ஆசிரியர்கள் skor A எனும் வியாபாரத்தளத்தின் வியாபாரிகளாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்ததாக நம் நாட்டில் போதிக்கப்படும் தமிழ் இலக்கிய பாடத்தின் தரம் குறித்து மதிப்பீடு செய்தால், இன்னமும் அதன் பாட அமைப்புகள் எந்த மாற்றமும் இல்லாமல் எந்தப் புதுப்பித்தலும் இல்லாமல், பழையதை வைத்தே நடத்திக் கொண்டிருப்பதும் அதிருப்திக்கரமான விஷயம்தான். சமூகமும் இந்தச் சமூகத்தின் தனிமனிதனும் தற்போது எதிர்க்கொள்ளும் சவால்கள் பல தளங்களில் மாற்றம் அடைந்து வருகையில் சமூகத்தையும் சமூக மனிதர்களின் வாழ்வையும் பிரதிப்பலிக்கக்கூடிய இலக்கியம் சற்றும் தொடர்பே இல்லாமல் தமிழகத்தின் பிரச்சார போக்குகளை இறக்குமதி செய்து இங்குள்ள மாணவர்களுக்கு நடத்துவது, பெரிய தோல்வி. இதை முதலில் சரிக்கட்ட யாராவது விவாதிப்பார்களா? நம் மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலையும் தூர நோக்கு வலிமையையும் வளர்தெடுக்கக்கூடிய நல்ல தரமான இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்து மாணவர்களின் கற்றலில் இணைக்க வேண்டும். தமிழகச் சூழலுக்கும் அங்குள்ள சமூகத்தின் சீர்த்திருத்திற்காக எழுதப்பட்ட நாவல்களையும் கதைகளையும் இலக்கியமாகக் கொண்டாட மலேசிய மாணவர்கள் என்ன தமிழகத்தின் பிரதிகளா? நமது வாழ்க்கைமுறை வேறு, நமது பிரச்சனை வேறு, நமது சமூகம் வேறு எனப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
விவாதங்கள் தொடரும்
கே.பாலமுருகன்
மலேசியா சுங்கைப்பட்டாணி