Thursday, December 26, 2013

பெருநகர் கவிதைகள் 2: விடைப்பெறுதல்

பெருநகர் கவிதை 2: விடைப்பெறுதல்

இலேசான மழையில்
இன்றொரு விடைப்பெறுதல்.
வெகுநாட்களுக்குப் பிறகு வந்து
உடனே திரும்பும் பெரியப்பாவாகவோ
அல்லது கடன் வாங்க வந்துவிட்டுப்
போகும் பெரிய மாமாவாகவோ இருக்கலாம்.

விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும் யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று மறைகிறது.

எதையும் பெற்றுக்கொள்ளாமல்
எதையும் கொடுத்துவிடாமல்
பத்திரமாக முடிகின்றது.

- கே.பாலமுருகன்