Monday, March 1, 2010

மலேசியக் குட்டிக் கதைகளும் கதைச் சுருக்கங்களும்

கடந்த வருடம் அநங்கம் ஆகஸ்ட் இதழில் பிரசுரமான எனது, “ மலேசிய இலக்கியப் போட்டிகளின் அரசியலும் அலட்சியமும்” என்கிற கட்டுரையை வாசித்துவிட்டு மலாயாப்பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவு பேராசிரியர் சபாவதி அவர்கள் தொலைப்பேசியின் மூலம் அழைத்து கோபத்துடன் அந்தக் கட்டுரையில் நான் வைத்திருந்த எளிமையான சில கருத்துகளை மறுத்து விளக்கம் கொடுக்கத் துவங்கினார். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களின் இலக்கிய முயற்சிகளைக் கேலி செய்யாதீர்கள் எனவும் மலேசியத் தமிழ்ப்பத்திரிக்கைகள் இந்த நாட்டின் இலக்கிய முன்னேற்றத்திற்குப் பலவகைகளில் பங்காற்றியிருப்பதாகவும் அழுத்தமாகக் கூறினார். ஆனால் ஒரு நல்ல தரமான கதையை மலேசிய இலக்கியக் களத்தில் அறிமுகப்படுத்தவோ அல்லது பரிந்துரைக்கவோ அவருடைய திறனாய்வு தவறிவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது எனது பார்வை.

பேராசிரியர் அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் குறித்து என்னிடம் கருத்துகள் உண்டு. முக்கியமாக தங்களின் எந்தவொரு கருத்திற்கும் எல்லோரும் உடன்பட்டு செவி சாய்க்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது எந்தவொரு இயக்கம் அல்லது அமைப்பு குறித்து அல்லது அவர்களின் நடவடிக்கை குறித்து யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்கக்கூடாது எனச் சொல்வதும் என்னைப் பொறுத்தவரையில் ஓர் அபத்தமான உள்முரண். கருத்து சுதந்திரத்தை அதன் நுனியிலே வேறறுக்க முயல்வது அல்லது தனது கல்வி சார்ந்த தகுதியின் அடிப்படையிலான சொல்லாடல்களின் மூலம் மறுப்புத் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றி பலவீனத்தை ஏற்றுக் கொள்ளாமல் சாமர்த்தியமாக நழுவது ஆரோக்கியம் கிடையாது.

அன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகள் இலக்கியத்திற்காகவும் பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கவும் இலக்கிய களம் அமைத்துக் கொடுத்தது உண்மையான வரலாறு. அதை நான் மறுக்கவும் இல்லை. எடுத்துக்காட்டாக பவுன் பரிசுத் திட்டம், கதை வகுப்புகள், புதுக்கவிதை கருத்தரங்குகள். ஆனால் தற்போதைய சூழலில் இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளில் நிலைபாடுகளும் செயல்பாடுகளும் எப்படி இயங்குகிறது என்பதுதான் எனது கண்ணோட்டம். குறிப்பாகச் சொல்லப்போனால் மலேசிய இலக்கிய உலகில் சிறுகதை குறித்து தீவிரமான(மிதமாகவும்) விமர்சன மொழியைக் கொண்டவர் மூத்த எழுத்தாளர்களில் ரெ.கார்த்திகேசு அவர்களைச் சொல்லலாம். அடுத்ததாக? கதைச் சுருக்கங்களை வரிசைக்கிரமமாகத் தந்துவிட்டு அதை விமர்சனம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? குறைந்தது ஒரு கதையை வெறுமனே கொண்டாடுவதையும் பாராட்டுவதையும் நிறுத்திவிட்டு சம்பந்தபட்ட எழுத்தாளருக்கு இன்றைய சிறுகதை மொழி அடைந்திருக்கும் மாற்றுத் தலம் குறித்தும் கதைத் தேர்வில் கருத் தேர்வில் எழுத்தாளர் தவறவிட்டிருக்கும் கவனம், அல்லது இந்தக் கருவை வேறு எப்படியெல்லாம் புதிய மதிப்பீடுகளுடன் ஆக்கக்கரமான உத்திகளில் கையாண்டுள்ளார்கள் என்கிற விரிவான பார்வையாவது கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளில் விமர்சனம் என்கிற பெயரில் வெறும் கதைச் சுருக்கங்களை எழுதிவிட்டு (அதுவும் ஒரு கதைக்கு ஒரு பத்தி) நானும் ஒரு விமர்சகன் எனத் தப்பித்துக் கொள்கிறார்கள்.

மேலும் இப்பொழுதெல்லாம் “குட்டிக் கதைகள்” என்கிற வடிவமும் பரவலாகப் பத்திரிக்கைகளில் பிரசுரமாகின்றன. ஆனந்த விகடனின் வரும் ஒரு பக்கக் கதை இங்கேயும் மிகவும் நேர்மையாகப் பின்பற்றப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தெளிவாகுகிறது. சிறுகதை ஒரு பக்கங்களிளும் முடிவடையலாம் அல்லது 20 பக்கங்களைத் தாண்டியும் நீளலாம் என ஒரு சுதந்திரமான இறக்குமதி வரையறை சிறுகதைக்கு உண்டு. முதலில் ஒரு நல்ல சிறுகதை எப்படியிருக்கும் என்கிற அடையாளங்காணும் திறனையும் பரவலான வாசிப்பும் வளர்ச்சியடையாத சூழலில் இதில் சிறுகதைக்குப் பதிலாக அதன் மாற்று வடிவமாக சில சோம்பேறிகளுக்காக “குட்டிக் கதையும்” வந்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் “நறுக்குக் கதை” வந்துவிடவும் வாய்ப்புண்டு. அல்லது கடி ஜோக்குகளை, சின்ன கதை என்று மாற்றி பிரயோகிக்கும் அபாயமும் இருக்க வாய்ப்புண்டு.

விமர்சனங்கள் நிகழவில்லை என்பதற்கும் ஏன் விமர்சனங்கள் தீவிரமாக புதுப்பிக்கப்பட்ட பார்வையுடனும் கண்ணோட்டங்களுடனும் அக்கறை சார்ந்ததாக இல்லை எனக் கேட்பதற்குமிடையே உள்ள வித்தியாத்தை வெறும் முரணாக மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுமா அல்லது ஆயிரத்தில் இதுவும் ஒரு வெறும் குற்றச்சாட்டு எனப் புரிந்துகொள்ளப்படுமா என்பதே சந்தேகம்.

குறிப்பு: மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம் நடத்திய இந்தாண்டு பேரவைக் கதைகளில் என்ன நடந்தது? அதன் விமர்சனம் எப்படி இருந்தது குறித்து அடுத்த கட்டுரையில் பதிவாகும். மேலும் எழுத்தாளர் நா.கல்யாணி மணியம் கதையில் நிகழ்ந்திருக்கும் திருட்டுக் குறித்தும் பதிவாகும்)

(இனி எப்பொழுதும் பேரவைச் சிறுகதை போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என கடந்தாண்டே எடுக்கப்பட்ட முடிவினால் - இதில் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்படுத்திய சிறுகதை கவிதை போட்டி- 2009/10 மட்டும் விதிவிலக்காக ஆகிவிட்டது காரணம் மலேசிய இலக்கியப் போட்டிகளின் தரம் குறித்து எனக்கு ஏற்பட்ட சலிப்பையும் அதிருப்தியையும் பதிவு செய்யும் போது, தேசியப் பல்கலைக்கழகத்தின் இலக்கியப் போட்டிக்குக் கதையையும் கவிதைகளையும் அனுப்பி இரு மாதங்கள் ஆகியிருந்தன. அந்தக் குற்றத்திற்காக மேடையேறி அரசியல் "தலை"களிடமெல்லாம் கைக்குழுக்கும் மிகப்பெரிய தர்ம சங்கடம் இனி நிகழாது. இத்துடன் அதற்கெல்லாம் ஒரு முடிவு- தேசிய பல்கலைக்கழக ஏற்பாட்டுக் குழுவிடமிருந்து இந்தாண்டு பெற்ற பண முடிப்புகளில் பாதியை கெடா செமெலிங் அன்பு இல்லத்தில் நடத்தப்பட்ட போட்டி விளையாட்டிற்கும், மீதி பாதியைப் பள்ளியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தமிழ் மொழி வாரம் இலக்கியப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் வாங்கவும் செலவழித்துவிட்டதில் சிறு மகிழ்ச்சி. குறிப்பாக எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் எழுதிய மாணவர்களுக்கான சீனமொழி சிறுகதை மொழிப்பெயர்ப்பு புத்தகமான “மீன்குளம்” சிலவற்றையும் அன்பாளிப்பாக அவர்களைச் சென்றடைந்ததில், இனி நமது பாரம்பரிய நீதி இலக்கிய கதைக்களத்திலிருந்து விடுபட்டு புதிய வாசிப்பனுபவத்தைப் பெறுவார்கள் என நம்புகிறேன்.)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி மலேசியா