Friday, July 18, 2008

சிங்கப்பூர் வருகையும் எஸ்.ராமகிருஷ்ணனூடான சந்திப்பும்-2008





சிங்கப்பூர் நூலகம் ஏற்பாடு செய்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்வையொட்டி அவருடைய 8 சிறுகதைகள் முழு தொகுப்பாக பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியீடப்பட்டு பரவலான வாசிப்பிற்குச் சென்றிருந்தது. ஒருவேளை அன்றைய நிகழ்வில் அந்தக் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று தோன்றியது. ஒரு சில கதைகள் தவிர்த்து மற்ற கதைகளை நான் இன்னமும் படிக்கவில்லை. பாண்டித்துரையிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். தலைப்புகள் வித்தியாசமாக இருந்தன. பிறகு நூலகத்திலுள்ள ஒரு பகுதிக்கு பாண்டித்துரை அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர் கண்ணன் அவர்களும் எங்களுடன் இனைந்திருந்தார். தரையில் அமர்ந்து கொண்டோம்.


அந்த நூலகத்தில் தரையில் அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆதலால் எனக்கு எந்தவிதமான சங்கடமும் ஏற்படவில்லை. (மலேசியாவில் எங்கள் ஊரில் தமிழ் புத்தகங்கள் அல்லாத பொது நூலகத்தில் நாற்காலியில் அமர்ந்துதான் பழக்கம்)


புத்தகத்தைத் திறந்ததும் முதலில் எந்தக் கதை பக்க அளவில் குறைவாக இருக்கிறது என்று தேடினேன். அதுதான் வசதியாக இருக்கும். அந்தரம் என்ற கதை மட்டும்தான் கண்களில் பட்டது. பாண்டித்துரை அவர் நண்பருடன் பேசிக் கொண்டிருக்க நான் மட்டும் அந்தரத்தில் நுழைந்து கொண்டிருந்தேன். மழைத் துளி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி வாழும் அந்தக் குடும்பத்தின் மனநிலைகளின் விவரிப்பாக கதை நகர்கிறது. அவர்கள் மட்டும் புலம் பெயராமல் அந்த மழைத் துளியின் இரகசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகக் காத்திருக்கிரார்கள். கதை அவ்வளவாக பிடிப்படவில்லை. பாண்டித்துரையும் அதையேதான் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் பெரும்பாலும் எளிமையானதாக இருந்தாலும் சில சமயங்களில் அவர் கூறும் மனித வாழ்வின் அகநெருக்கடிகள் நம்மையும் கடந்து நிகழ்வது போல தெரிகிறது. ஆழ்ந்து வாசிக்க வேண்டும்.


நூலகத்து அதிகாரியின் குரல் ஒலி பெருக்கியிலிருந்து கிளம்பி எங்களை நெருங்கியது. எஸ்.ராம்கிருஷ்ணன் வந்துவிட்டார் வாசகர்களை வரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். என்னால் நம்பமுடியவில்லை. என்னை பிரமிக்க வைத்த ஓர் ஆளுமையைச் சந்திக்கப் போகிறேன். என்னை அதிகமாகப் பாதித்த எழுத்தாளரை மிக அருகில் பார்க்கப் போகிறேன். பாண்டித்துரையுடன் உள்ளே நுழைந்ததும் எஸ்.ராமகிருஷ்னன் வாசகர்களுடன் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார். மிகவும் எளிமையான தோற்றம். துணையெழுத்து தொகுப்பில் நான் பார்த்த எஸ்.ரா அவர்களின் முகத்தி தெரிந்த கோபம் களைந்து அவர் மிகவும் எளிமையாக தென்பட்டார். சிரித்துக் கொண்டே பேசினார். முன் வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் முனைவர் லட்சுமி அழைத்தார். எழுந்து அவரிடம் சென்றபோது, ஜெயந்தி சங்கர் அங்குதான் அமர்ந்திருந்தார். முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. சக எழுத்தாளினி என்று சொல்வதைவிட மூத்த அனுபவமுள்ள எழுத்தாளினி என்றே அவரை அடையாளப்படுத்த விரும்புகிறேன். சீனக் கலாச்சாரத்தின் மீதும் சீன இலக்கியங்கள் மீதும் ஆய்வு மனப்பான்மை கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். அவருடைய புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். நான் சீ.முத்துசாமி எழுதிய மண் புழுக்கள் நாவலை அவரிடம் கொடுத்தேன். பிறகு எஸ்.ரா பேசுவதற்காகத் தயாரானார். அப்பொழுதுகூட என்னால் சில விஷயங்களை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தேன்.


-நானும் அந்த வெயிலை உணர்கிறேன்-


எஸ்.ராமகிருஷ்ணன் பேசத் தொடங்கியபோது மனம் அவருடன் நடக்கத் தொடங்கியது. அவர் என்னையும் சேர்த்து அவரது கடந்த கால இராமநாதபுரத்தின் வாழ்வை நோக்கி அழைத்துச் சென்றார். இதுவரை நான் காணாத ஓர் அழகியல் அவருடைய கடந்த வாழ்க்கையில் படிந்து கிடந்தது. அதை அவர் எப்படி மீட்டெடுத்து மறுபுனைவு செய்தார் என்பதில்தான் இன்று எஸ்.ராமகிருஷ்ணன் என்ற ஆளுமையின் வெற்றி அடங்கியிருக்கிறது எனலாம். முதலில் காமிக்ஸ் புத்தகத்தில்தான் அவருடைய வாசிப்பு தொடங்கியதாம். படங்கள் இல்லாத புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வமில்லாத அவர் அதிலும் சாகசம் இல்லாத புத்தகம் புத்தகமே இல்லை என்கிறார். புத்தகம் என்றால் அதில் ஏதாவது சாகசம் இருக்க வேண்டும். ஆதலால்தான் சாகசத்தைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன் என்கிறார். அன்றைய தினங்களில் ஒரு நாளில் 5 காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பவர் எஸ்.ரா அவர்கள். என்னுடைய ஆரம்பகால வாசிப்பை நினைவுப்படுத்தினார்.


மலேசியாவில் பத்து டுவா எனும் கம்பத்தில் இருக்கும்போது சீன மொழியில் வெளிவரக்கூடிய காமிக்ஸ் புத்தகங்கள் என் அம்மாவிற்கு அடிக்கடி நிறைய கிடைக்கும். அவர் ஒரு சீன வீட்டில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்ததால் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் எனக்காக அந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து சேர்ப்பார். அந்தப் புத்தகங்களிலுள்ள கதாபாத்திரங்களின் உரையாடல்கள் சீன மொழியில் இருந்ததால் எனக்கு ஒன்றுமே புரியாது. ஆனாலும் அந்த உரையாடல்களையும் கடந்து அவர்களின் சாகசப் பாணி முகத்தில் தெரியும் சாகச துடிப்பு என்று அந்த நட்சத்திரங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. எங்கள் வீட்டு கீழ்த்தளத்தில் அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் கிளிந்து அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் நிறைந்திருக்கும். அவர்களின் முகம் இன்னமும் எனக்குள் சாகசப் பாணியிலேயே உயிர்த்திருப்பதை எஸ்.ராமகிருஷ்ணன் மூலம் நான் தெரிந்து கொண்டபோதுதான் அவருக்கு மிக அருகாமையில் நடக்க தொடங்கினேன்.


இப்பொழுது அந்த வீடு இல்லை. ஆனாலும் இல்லாத எங்கள் வீட்டின் கீழ்த்தளத்தில் ஏதோ ஒரு மூலையில் அந்தச் சாகச கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது.


எஸ்.ராமகிருஷ்ணன் கிராம வாழ்க்கையைப் பற்றி அவர் சொல்லும்போது அவர் வீட்டுப் பெண்களின் வெளிப்படாத உலகத்தைப் பற்றி மிக அழகாக கூறினார். சமையலறையில் ஒலிக்கும் அவருடைய அம்மாவின் பாடல்கள், ஏதோ ஒரு கன்னியில் தொடங்கி ஏதோ ஒரு கன்னியில் முடிவடையும் அந்தப் பாடல் வரிகள் என்று பெண்களின் வெளிப்படாத உலகம் விசித்திரமிக்கவை என்றார். எஸ்.ரா அவர்களின் வீட்டில் எப்பொழுதும் எல்லாரும் வாசித்துக் கொண்டேதான் இருப்பார்களாம். அதனாலே அங்கே வாசிப்பது என்பது ஒரு தினசரி வேலையாகவே நடந்து கொண்டிருக்குமாம். அதுமட்டுமில்லாமல் அவர்கள் வீட்டிலுள்ள கரும்பலகையில் வாசித்த புத்தகங்களைப் பற்றி எழுதி வைப்பார்கள். காலையில் எழுந்ததும் மற்றவர் அதை வாசிப்பார்களாம். இதனாலேயே யார் கரும்பலகையில் புத்தகங்கள் பற்றி எழுத போகிறார்கள் என்ற போட்டி ஏற்படுவதோடு வாசிக்க வேண்டும் என்ற மனப்பான்மையும் போட்டியுணர்வும் இருக்கும் என்றார்.


எஸ்.ரா அவர்களுடைய வாசிப்பு இந்த மாதிரியான சூழலிலிருந்து தொடங்கியிருப்பது அது அவருக்குக் கிடைத்த மிக அதிசயமான வாழ்வு என்று தோன்றுகிறது. எங்கள் வீட்டிலெல்லாம் முன்பு யார் படித்தும் நான் பார்த்ததில்லை. அப்பா மாந்திரிக ஈடுபாடு உள்ளவர் என்பதால் அவ்வப்போது ஜாதகப் புத்தகம் பொருத்தங்கள் பார்க்கும் குறிப்பு புத்தகங்கள் மேலும் ஒன்று இரண்டு ஆன்மீகப் புத்தகங்கள் படிப்பார். எங்கள் வீட்டில் இருந்த புத்தகங்களிலேயே அதி மேதாவித்தனமான புத்தகங்கள் என்றால் துர்கை அம்மன் முருகப் பாடல்கள், தேவராப் பாடல்கள் புத்தகங்கள்தான். மஞ்சள் கறை பட்டு எப்பொழுதும் சாமி மேடையிலேயே இருக்கும்.


'நான் இராமநாதபுரத்தில் இருந்தபோது - நான் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பது முடிவற்ற வெயிலின் காட்சிதான்' என்று எஸ்.ரா அவர்கள் கூறும்போது அந்த வெயிலினூடே அதன் வாசலில் கொண்டு வந்து என்னை நிறுத்தினார்.


'எங்க ஊர்லெ வெளில நிண்டு பாத்தா பக்கத்துலே கண்ணுக்கு எட்டன தூரம்வரைக்கும் எதுமே இல்லை, வெறும் பனை மரங்களும், அப்பறம் எங்கோ கேட்கும் பறவையின் குரலும், தலைக்கு மேல அடிக்கும் வெயிலும்தான், இரவில்கூட சூரியன் இருக்கும் ஆனா கண்ணுக்குத் தெரியறது இல்ல. . நாங்க வெயில பழகிக்கிட்டோம், யாரும் அதை வெறுக்கல, இத்தனைக்கும் மேல வெக்கையைப் பத்தி யாராவது வெளியூர்லேந்து வந்து சொன்னாதான் எங்களுக்கே தெரியும், நாங்க அந்த வேர்வையுடனும் வெக்கையுடனும்தான் இருக்கோம் ஆனா எங்க கண்ணுல அது தெரியாது, அது ஒரு ருசி மாதிரி, நான் பிறந்த பிறகு பார்த்த முதல் காட்சியே வெயில்தான்'


எஸ்.ராமகிருஷ்ணனுடைய வெயிலை நான் அவரின் வார்த்தைகளில் பார்த்தேன். மற்றவர்கள் பார்த்தார்களா என்று தெரியவில்லை. அதன் உக்கிரத்தில் அவர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார். அந்த வெயில் சுடவில்லை. அவரைச் சுற்றி ஒரு கடந்த காலத்தைப் பிண்ணியிருந்தது. அந்த வெயிலை அந்த வெக்கையை நான் உணர்ந்தேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெயில் எந்த அளவிற்குப் பரவியிருக்கிறது எப்பொழுதுமான இருப்புடன் எரிந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தபோது நான் வேறொரு உலகத்திற்கு வந்துவிட்டதைப் போல இருந்தது. எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எனது கையைப் பலமாகப் பற்றிக் கொண்டு வெயிலின் வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தார்.


'எங்க வீட்டு தண்ணீ பானைலாம் வெயில்லதான் சூடு ஏறும். நீங்க அந்தப் பானையே தொட்டிங்கனா அதுல வெயில் இருக்கும், குடிக்கிற தண்ணீல வெயில் இருக்கும், வீட்டுல விளைஞ்ச காய்கறில வெயில் இருக்கும் இப்படி எல்லாத்தலையும் வெயில் ஒரு பகுதியா இருக்கும், இப்படியொரு புறச்சூழல்ல அகச்சூழல்லதான் வளர்ந்தேன்'


அது வெறும் வெயிலல்ல. அது ஒரு வாழ்க்கை. வாழ்க்கையைப் பிரதிபலிப்பதுதானே இலக்கியம். எஸ்.ரா அவர்கள் இன்று தமிழில் உருவாக்கிக் கொண்டிருப்பது வெயிலைப் போன்ற இலக்கியம்தான். இன்று என்னிடம் இருக்கும் துனையெழுத்து, கதா விலாசம் , தேசாந்திரி என்று அவருடைய தொகுப்புகளிலெல்லாம் அந்த வெயில் என்னுடன் பேசுகிறது. என்னுடன் வாழ்கிறது. எஸ்.ரா அவர்கள் என் அறையில் கொண்டு வந்து போட்ட வெயில் அவ்வளவு சாதரணமானதல்ல. அவருடைய தேசாந்திரி கட்டுரை தொடர்களை வாசித்தபோது வாழ்க்கையில் பயணப்படுவது எந்த அளவிற்கு அவசியம் என்று உணர்ந்தேன். அதிலும் நம்முடன் வரக்கூடிய அந்த வெயில் அதைவிட முக்கியமாகவே தோன்றுகிறது.


எஸ்.ராமகிருஷ்னன் மேலும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து சுவார்ஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய அண்ணன் கொடுத்த பாரதியார் கவிதைகள் புத்தகம் அவரின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றம் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.


'பாரதியார் கவிதைகளையெ படிக்க படிக்க உடல்ல ஒரு மாற்றத்தையே அது உண்டு பண்ணும், உடல்ல இன்னொரு பாகம் முளைத்திட்டதைப் போல, மூன்றாவது கை முளைத்திட்டதை போல, இப்படிப் படிக்க படிக்க ஏதோ ஒன்னு தோணும் ஆனா என்னானு புரியாது. . பாரதியார் கவிதைகள் எழுத்தை நோக்கி ஆழமான பாதிப்பை உருவாக்கியது'


பாரதியார் கவிதைகளை என்னுடைய கல்லூரி காலத்தில் பாடத்திற்காகப் புரட்டிப் பார்த்ததுண்டு. மற்றபடி ஆய்வுக்காக ஒரு சில கவிதைகளை வாசித்தத்துண்டு. ஆனால் என்னை அதிகமாகப் பாதித்த அவருடைய பரசிவ வெள்ளம் என்ற கவிதைதான். நண்பர் ஒருவர் அதைப்பற்றி கூறியதால் அதைத் தேடி படித்தேன். எஸ்.ரா போன்ற ஆளுமைக்குள்ளும் பாரதியார் வாழ்ந்து கொண்டிருக்கிரார் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.


நீர் வீழ்ச்சியைப் போல எஸ்.ராமகிருஷ்ணன் எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் ஓவ்வொன்றும் எனக்குள் முளைத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்குக் கால்கள் இருந்தன, உடல் இருந்தது, கைகள் இருந்தன. அன்றைய இரவு ஜெயந்தி சங்கர் என்னிடம் உங்களுடைய கதைகளைப் படிக்கும்போது எஸ்.ரா அவர்களின் தாக்கம் அதில் தெரிகிறது என்றார். இரண்டு வருடத்திற்கு முன்பே எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவருடைய எழுத்தின் மூலம் எனக்குள் நுழைந்துவிட்டார். ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எல்லோருக்கும் ஒருவரின் பாதிப்பு இருக்கும் என்று அவரே கூறினார். உண்மைதான். என் அளவுக்கு ஒரு டால்ஸ்டாய் இல்லாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணன் இருக்கிறார் என்றபோது தமிழ் எழுத்தாளர்கள் மீது ஒரு பெரிய அக்கறையும் அன்பும் ஏற்படுகின்றன.


மீண்டும் தொடரும்


கே.பாலமுருகன்

மலேசியா

Wednesday, July 16, 2008

சிங்கப்பூர் வருகையும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பும்-2




சிங்கப்பூர் நூலகம் ஏற்பாடு செய்திருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் நிகழ்வையொட்டி அவருடைய 8 சிறுகதைகள் முழு தொகுப்பாக பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியீடப்பட்டு பரவலான வாசிப்பிற்குச் சென்றிருந்தது. ஒருவேளை அன்றைய நிகழ்வில் அந்தக் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாம் என்று தோன்றியது. ஒரு சில கதைகள் தவிர்த்து மற்ற கதைகளை நான் இன்னமும் படிக்கவில்லை. பாண்டித்துரையிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். தலைப்புகள் வித்தியாசமாக இருந்தன. பிறகு நூலகத்திலுள்ள ஒரு பகுதிக்கு பாண்டித்துரை அழைத்துச் சென்றார். அவருடைய நண்பர் கண்ணன் அவர்களும் எங்களுடன் இனைந்திருந்தார். தரையில் அமர்ந்து கொண்டோம்.
புத்தகத்தைத் திறந்ததும் முதலில் எந்தக் கதை பக்க அளவில் குறைவாக இருக்கிறது என்று தேடினேன். அதுதான் வசதியாக இருக்கும். அந்தரம் என்ற கதை மட்டும்தான் கண்களில் பட்டது. பாண்டித்துரை அவர் நண்பருடன் பேசிக் கொண்டிருக்க நான் மட்டும் அந்தரத்தில் நுழைந்து கொண்டிருந்தேன். மழை துளி ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதையொட்டி வாழும் அந்தக் குடும்பத்தின் மனநிலைகளின் விவரிப்பாக கதை நகர்கிறது. அவர்கள் மட்டும் புலம் பெயராமல் அந்த மழை துளியின் இரகசியத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகக் காத்திருக்கிரார்கள். கதை அவ்வளவாக பிடிப்படவில்லை. பாண்டித்துரையும் அதையேதான் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் பெரும்பாலும் எளிமையானதாக இருந்தாலும் சில சமயங்களில் அவர் கூறும் அக நெருக்கடிகள் நம்மையும் கடந்து நிகழ்வது போல தெரிகிறது. ஆழ்ந்து வாசிக்க வேண்டும்.
நூலகத்து அதிகாரியின் குரல் ஒலி பெருக்கியிலிருந்து கிளம்பி எங்களை நெருங்கியது. எஸ்.ராம்கிருஷ்ணன் வந்துவிட்டார் வாசகர்களை வரும்படி கேட்டுக் கொண்டிருந்தார். என்னால் நம்பமுடியவில்லை. என்னை பிரமிக்க வைத்த ஓர் ஆளுமையைச் சந்திக்கப் போகிறேன். என்னை அதிகமாகப் பாதித்த எழுத்தாளரை மிக அருகில் பார்க்கப் போகிறேன். பாண்டித்துரையுடன் உள்ளே நுழைந்ததும் எஸ்.ராமகிருஷ்னன் வாசகர்களுடன் அமர்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார். மிகவும் எளிமையான தோற்றம். துணையெழுத்து தொகுப்பில் நான் பார்த்த எஸ்.ரா அவர்களின் முகத்தின் கோபம் களைந்து அவர் மிகவும் எளிமையாக தென்பட்டார். சிரித்துக் கொண்டே பேசினார். முன் வரிசை இருக்கையில் அமர்ந்து கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் முனைவர் லட்சுமி அழைத்தார். எழுந்து அவரிடம் சென்றபோது, ஜெயந்தி சங்கர் அங்குதான் அமர்ந்திருந்தார். முதலில் என்னால் அடையாளம் காண முடியவில்லை. சக எழுத்தாளினி என்று சொல்வதைவிட மூத்த அனுபவமுள்ள எழுத்தாளினி என்றே அவரை அடையாளப்படுத்த விரும்புகிறேன். சீனக் கலாச்சாரத்தின் மீதும் சீன இலக்கியங்கள் மீதும் ஆய்வு மனப்பான்மை கொண்ட ஒரு தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். அவருடைய புத்தகங்களை என்னிடம் கொடுத்தார். நான் சீ.முத்துசாமி எழுதிய மண் புழுக்கள் நாவலை அவரிடம் கொடுத்தேன். பிறகு எஸ்.ரா பேசுவதற்காகத் தயாரானார். அப்பொழுதுகூட என்னால் சில விஷயங்களை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தேன்.
தொடரும
கே.பாலமுருகன்

Monday, July 14, 2008

சிங்கப்பூர் வருகை-எஸ்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு-1



சிங்கப்பூர் வந்து சேர்ந்ததும் அங்குள்ள மனிதர்கள் கொஞ்சம் விலகியே கானப்பட்டார்கள். இரண்டு பேரிடம் தேசிய நூலகத்திற்குச் செல்ல வழி கேட்டேன். ஆளுக்கு ஒருதிசையில் வழி காட்டிவிட்டு (ஒருவேளை சிரித்துக் கொண்டே) நழுவிவிட்டார்கள். ஒரு சீனந்தான் பிறகு சரியான பாதையைச் சுட்டிக் காட்டினான்.
பாண்டித்துரை (நாம் இதழின் ஆசிரியர்) அங்கு வந்து சேரும்வரை நூலத்தினுள்ளே உழாவிக் கொண்டிருந்தேன். கையில் ஒரு கறுப்பு பேக்குடன்.யாராவது சந்தேகம்படும்படி என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்களா என்று அவ்வப்போது தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்துக் கொண்டேன்.
எல்லோரும் தரையிலும் நாற்காலியிலும் நின்று கொண்டும் வாசித்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியொரு பிரமாண்டமான நூலகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்றுதான் கூறவேண்டும்.ஓவியக் கலை பகுதியிலுள்ள புத்தகங்களை அலசிப் பார்த்தேன். காலங்களின் நிறங்கள் என்ற புத்தகம் அதிசியிக்க வைத்தது. அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதவுகளின் தோற்றம் இடத்திற்கு இடமும் காலத்திற்குக் காலமும் மாறுப்பட்டுக் கொண்டே வந்தது. அந்தக் கதவுகளின் நிறங்கள் காலத்தைவிடவும் மக்களின் வர்ணங்களைத்தான் பிரதிப்பலிப்பதாகப் பட்டது.
பாண்டித்துரை வந்ததும் நூலகத்திற்கு வெளியிலுள்ள கடையில் அமர்ந்து குளிர்பானம் அருந்தினோம். உயிரேழுத்து இதழை எனக்காக ஒன்று வாங்கி வந்திருந்தார். அதில் என் சிறுகதை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. பார்த்ததும் மகிழ்ச்சி.புதுமைப்பித்தன் சொல்வது போல இரும்பு நாகரிகம் ஒன்றை கண்ணாடி நாகரிகமாகப் பார்த்தேன். நெடுக வளர்ந்து அந்தக் கண்ணாடி உடலில் கவர்ச்சியான இயந்திரங்களும் அந்த இயந்திரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களும் எங்கும் இருந்தார்கள். மலேசியாவிலும் இது போல இருக்கிறதுதான். இருந்தாலும் வளர்ச்சி நிலைகளில் எங்கேயாவது வேறுபாடுகள் உருவாகியிருக்கக்கூடும்.பாண்டித்துரை இரவல் பெற்ற புத்தகங்களை ஒரு இயந்திரத்தின் வாயில் நுழைத்தார். எட்டிப் பார்த்தேன். உள்ளே அதைப் பெற்றுக் கொள்ள யாரும் இல்லை. "books recieved" என்ற பதில் இயந்திரத்தின் முகத்தில் பளிச்சிட்டது. இயந்திரம் புத்தகங்களை விழுங்கிக் கொண்டது. அவ்வளவுதான் இரவல் பெற்ற புத்தகங்களைத் திரும்பி தரும் உத்தி.சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு அவரே என்னை தமிழ்ப் புத்தகங்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றார். மீண்டும் ஒரு பிரமிப்பு எனக்காகக் காத்திருந்தது புத்தக அடுக்குகளின் இடுக்குகளில். மொத்தமாக தமிழ் புத்தங்கங்களை இப்படியொரு எண்ணிக்கையில் நான் பார்த்ததில்லைதான். கைகளில் தொட்ட முதல் புத்தகமே பிரமிள் படைப்புகள் என்று போட்டிருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் கண்ணபிரான் அவர்களும் எங்களுடந்தான் இருந்தார். பிரமிள் படைப்புகள் தரமானவை என்று ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒன்றைப் புருவம் உயர்த்திக் கூறினார். தீவிர எழுத்தாள்கள் எழுத்தாளர்கள் எல்லாரின் புருவத்தையும் உயார்த்ட்திவிடுவார் பிரமிள். போறாமையாகா இருந்தது. எங்கள் ஊரில் இந்த மாதிரி புத்தகங்கள் கிடைப்பது அரிது.
ஒவ்வெரு புத்தகங்களையும் தொட்டுப் பார்த்தேன். எங்கோ மனம் வலித்தது. பெரிய இடைவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முனைவர் லட்சுமி அவர்கள் என் கையில் வைத்திருந்த பிரமிள் படைப்புகள் புத்தகத்தை வாங்கிக் கொண்டார். இரவல் பெறப் போவதாகக் கூறினார். பிரமிள் கையிலிருந்து நழுவுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

-தொடரும்-
கே.பாலமுருகன்