Thursday, July 29, 2010

சிறுகதை: வெள்ளைக்குடையும் இரண்டாவது மழை நாளும்


இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

அன்றும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான சீனர்கள் மேட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டிருந்தனர். அப்பாவையும் அம்மாவையும் வீட்டின் மேற்கூரைக்கு அடியிலுள்ள சுயமாகக் கட்டி வைத்த வாங்கின் மீது அமர வைத்திருந்தோம். வீட்டை அப்படியே விட்டுச் செல்ல யாருக்கும் மனமில்லை. அக்கா பையனும் நானும் சாமி அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த நீரை அள்ளி வெளியே வீச வேண்டியிருந்தது. எத்துனை முயன்றாலும் தண்ணீர் சிறு சிறு ஓட்டைகளின் வழி உடைந்து உள்ளே வருவது உறுதியென தெரிந்தும் கைகள் ஓயாமல் இயங்கிக் கொண்டுதானிருந்தது.

“டெ. ஜோனி அடிச்சிக்கிட்டுப் போவப் போது. . கட்டி வச்சிருந்தான்”

அப்பாவால் உயரத்தில் அமர்ந்திருக்க முடியவில்லை. கால்களில் புண், மேலும் நீரிழிவு நோய் இருப்பதால் அவரைத் தண்ணீரில் இறங்க அனுமதிக்க இயலவில்லை. வெறுமனே வீட்டின் தரையில் தண்ணீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி, அவ்வப்போது எதையாவது ஞாபகப்படுத்தி எச்சரித்துக் கொண்டே இருந்தார்.

வீட்டில் அரை இருள் கவ்வியிருந்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையின் அடர்த்தி கம்பம் முழுவதும் ஒரு வரட்சியையும் அமைதியையும் பரப்பிவிட்டிருந்தது. முன் வாசல் கதவின் மேற்பரப்பை முட்டிக் கொண்டிருந்த நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த செங்கல்களை முட்டுக் கொடுத்திருந்தேன். அதை அடிக்கடி சரிப்பார்த்து கொள்ளவில்லையென்றால் நீர் ஓட்டம் சட்டென கதவைத் தள்ளிக் கொண்டு குப்பைகளையும் பூரான் பாம்புகளையும் சேர்த்து கட்டி இழுத்துக் கொண்டு உள்ளே வந்துவிடும்.

வீட்டிற்கு வெளியிலுள்ள சாலையில் யாரும் இல்லை. வெறும் தண்ணீர் மட்டும் சலசலத்துக் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் யாரோ வெள்ளை குடையைப் பிடித்துக் கொண்டு வருவது தெரிந்தது. மழையின் அடர்ந்த தூரலில் அந்த உருவம் கண்களுக்குச் சரியாகச் சிக்கவில்லை. கண்ணாடியை இறக்கி கூர்ந்து கவனித்தேன். மழைப் பெய்து எங்கள் கம்பத்தில் வெள்ளம் ஏறிவிட்டால் அருகாமையிலுள்ள
குடியிருப்பிலிருந்து அப்பாவிற்குத் தெரிந்த நண்பர்கள் உதவிக்கு வருவதுண்டு. ஒருவேளை கர்ணாவின் அம்மாவாக இருக்கக்கூடும் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறுக சிறுக அந்த உருவம் ஒரு வெள்ளைக் குடையாகவே பெருத்துவிட்டது போல இருந்தது. அருகில் வந்ததும் அது அனுராதாவின் தம்பி சாமியைப் போன்ற உருவம் எனத் தெரிந்துகொள்ள முடிந்தது.

அடர்ந்த மழை நாள் ஓர் ஆபத்திற்குரிய பொழுதாக இருக்கக்கூடும். சட்டென கண்ணாடியை அடைத்துவிட்டு மூச்சிரைக்க அம்மாவும் அப்பாவும் அமர்ந்திருக்கும் வாங்கிற்குக் கீழாகப் போய் நின்று கொண்டேன். உடல் முழுவதும் நடுக்கம் கூடியிருந்தது. பிறர் அதைக் குளிரால் ஏற்பட்டதென நினைக்கக்கூடும். வெளியில் நின்று கொண்டிருப்பது அனுராதாவக்கூட இருக்கலாம். அவளும் அவளுடைய தம்பி சாமியும் பார்க்க ஒரே மாதிரித்தான் இருப்பார்கள். வெறுமைக்கு அடியில் கால்கள் சிக்கியிருந்தன.குறும்பகுதி 1

அனுராதா குடும்பம் அன்றுதான் கம்பத்திற்குப் புதியதாக வந்திருந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து 4 வீடு தள்ளி ஒரு சீனக் கிழவனுடைய வீட்டிற்குப் புதியவர்கள் வரப்போகிறார்கள் என அம்மா சொல்லிக் கேட்டிருந்தேன். சிவப்பு ஆமைக் காரில் அவர்கள் வந்து சேர்ந்த நேரம் கம்பத்தில் அடர்ந்த மழைப் பெய்து கொண்டிருந்தது.

“இதுங்க வரும்போதே மழ பேயுது. எங்க உருப்படறது”

பக்கத்து வீட்டு அம்மாளு அக்கா அம்மாவிடம் கூறியதைக் கேட்க முடிந்தது. நான் ஆர்வத்துடன் அவர்களின் கார் நகர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தக் காரில் இரு பிள்ளைகள் இருப்பதைப் பார்க்க நேர்ந்த மறுகணத்திலிருந்து கம்பத்தில் புதிய சிறுவர்கள் வந்துவிட்டார்கள் என உள்ளுக்குள் குதுகலமாக இருந்தது.

“டேய். அதுங்ககூடல்லாம் போய் பேசி வெளாண்டுகிட்டு இருக்காதெ. என்னா?”

அந்த அம்மாளு அக்கா கண்களை அகலமாக விரித்து மிரட்டினார். நான் அம்மாவைப் பார்த்தேன். அம்மா ஏதோ முனகிவிட்டு உள்ளே போய்விட்டார். 4 வீடு தள்ளி குடிவந்திருக்கும் அனுராதாவின் குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர்தான். அவளுடைய அப்பா, அம்மா, அனுராதா, அவளது தம்பி சாமிநாதன். சாமிநாதனுக்கும் எனக்கு ஒரே வயது. அவனுக்கு அப்பொழுதே உடும்பு பிடிப்பதில் திறமை இருந்திருக்கிறது.

அன்று மாலை இலேசான மழைத்தூரல். சாமிநாதன் அவன் அக்காவுடன் எங்கள் வீடுவரை வந்திருந்தான். வெளியில் அவர்கள் ஒரு வெள்ளைக் குடையுடன் நின்றிருப்பதைக் கண்டதும் எனக்கு ஆர்வம் மிகுந்தது. கதைவைத் திறப்பதற்குள் அம்மாளு அக்காவின் தம்பி கணபதி அவர்களுடன் பேசத் தொடங்கியிருந்தான். அநேகமாக அவனுக்கும் அனுராதாவிற்கு ஒத்த வயதாக இருக்கலாம் போல. இருவரும் ஒரே உயரத்தில் இருந்தனர்.

“தோ. . இவந்தான் இந்த வீட்டுப் பையன். குமாரு.”

என்னைக் காட்டி கணபதி அண்ணன் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான். எனக்கு வெட்கமாக இருந்தாலும் அதைச் சமாளித்துக் கொண்டு சிரித்து வைத்தேன். இருவரும் மழையில் பாதி உடை நனைந்தவாறு அந்தச் சிறு குடைக்குள் நெருக்கமாக நின்றிருந்தார்கள். அனுராதா அணிந்திருந்த கருப்புப் பாவாடையின் விளிம்பிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மழையில் இலேசாக நனைந்திருந்த அவளின் கூந்தல் தலையோடு ஒட்டியிருந்தது.

“வந்திருச்சிங்களா? ஐயோ! வீட்டுப் பக்கமே சேக்கக்கூடாது”

அம்மாளு அக்கா கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தார்.


குறும்பகுதி 2

அனுராதாவின் வீட்டில் அந்த மரணம் நிகழ்ந்திருக்கக்கூடாது. அவளுடைய அப்பாவை அறையிலுள்ள சட்டத்திலிருந்து இறக்கினார்கள். கழுத்தில் நெறித்துக் கொண்டிருந்த புடவையும் விழிப் பிதுங்கிய அனுராதாவின் அப்பாவின் உடலும் மிரட்டலாக இருந்தது.

“பாய் எதாச்சாம் இருக்கா?”

கீழே விரிக்க அனுராதாவின் வீட்டில் பாய் இல்லை. சாமிநாதன் அறைக்குள் சென்று அம்மாவின் இன்னொரு புடவையைக் கொண்டு வந்து நீட்டினான். அவன் கண்களைக் கூர்ந்து கவனித்தேன். அவன் அழமால் எல்லோரையும் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான். எனக்கு வியப்பாக இருந்தது. எனக்குத் தெரிந்து பலர் சொல்லியிருக்கிறார்கள், அப்பா அல்லது அம்மா இறந்துவிட்டால் பிள்ளைகள் அழுவார்கள் என. சாமிநாதன் மட்டும் எப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறான்?

அனுராதா வீட்டிற்குள் யாரும் நுழையவில்லை. எல்லாரும் வெளியில்தான் நின்றிருந்தார்கள். அவளுடைய அம்மா சுவரின் மூலையில் அமர்ந்துகொண்டு யாருக்கும் கேட்காதபடிக்கு சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தார். அவள் வீட்டில் கவ்வியிருந்த அரை இருளில் எல்லாமும் பயங்கரமாகத் தெரிந்தது.

“செத்தவங்க வீட்டுலெ ஆவி இருக்கும். . வா போலாம்” என அம்மா என்னைப் பிடித்து இழுத்தார். அடை மழைப்பிடித்த போது எல்லாரும் அவரவர் வீட்டிற்கு ஓடினர். அனுராதாவின் மாமாவும் சித்தாப்பாக்களும் சேர்ந்து அங்கு ஏதோ செய்து கொண்டிருந்தனர். வெள்ளைக்குடையைப் பிடித்துக் கொண்டு சாமிநாதன் வெளியில் நின்றிருந்தான்.


இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

மழை இன்னமும் நிற்கவில்லை. வெள்ளத்தின் அளவு இலேசாகக் கூடியிருந்ததில் எனக்குள் பயம் அதிகரித்தது. வெளியில் அந்த வெள்ளைக்குடை மிதப்பது போல தெரிந்தது. கண்ணாடியைத் திறந்து பார்வையிடவும் தைரியமில்லை. அக்கா பையன் வந்து கேட்டான்.

“மாமா தாத்தாவையும் பாட்டியையும் கூட்டிட்டுப் போயிரலாமா? இது நிக்காது போல”

வேண்டாம் என மறுத்துவிட்டேன். மழை நின்றுவிட்ட பிறகு வெள்ளம் தனிந்துவிடும் என நம்பினேன். ஒவ்வொருமுறையும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. அப்பா அசதியில் உறங்கிவிட்டிருந்தார். அம்மா அவரின் தோளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். வாசலில் தெரிந்த வெள்ளைக்குடை எனக்கு மட்டும் தெரியக்கூடிய மாயையாக இருக்கக்கூடுமோ? அங்குப் பார்ப்பதைத் தவிர்த்துவிடவே நினைத்தேன். காட்சிகள் சுருங்க வெறும் வெள்ளைக்குடையும் மழைத் துளிகளும் கண்களில் தூரத் துவங்கின.

“டே! ஜோனியெ பாத்தியா?”

அப்பா திடீரென எழுந்ததும் முதலில் ஜோனியைப் பற்றித்தான் கேட்டார். ஜோனி எங்கள் வீட்டு நாய். 13 வருடத்திற்கும் மேலாக வீட்டில் வளர்கிறது. பலமுறை பக்கத்து கம்பத்தில் இருக்கும் மலாய்க்கார சிறுவர்கள் ஜோனியைக் கொல்ல நினைத்தும், அவர்களின் முயற்சிகளை முறியடித்து தப்பி வந்துவிடும் ஆற்றலுடையது ஜோனி. சாமிநாதனுக்கு எங்கள் வீட்டு ஜோனியை ரொம்ப பிடிக்கும். பலநாள் ஜோனியைத் தொட்டுப் பார்ப்பதற்காக முயன்றிருக்கிறான். ஆனால் அம்மாவும் அம்மாளு அக்காவும் அவனை உள்ளேயே விடுவதில்லை. எதாவது சொல்லி அவனை விரட்டி விடுவார்கள்.

கதவைத் திறந்து வெளியே செல்ல வாய்ப்பில்லை. வேறு எப்படி ஜோனியை அங்கிருந்து தூக்கிக் கொண்டு வரமுடியும் எனவும் தெரியவில்லை. எங்கேயோ தூரத்தில் ஜோனி குரைத்துக் கொண்டிருப்பது போல கேட்டது. அது பிரமையாகக்கூட இருக்கலாம்.

“டேய்! ஜோனி கொரைக்கரெ மாதிரி இல்லெ?”

அப்பாவிற்கும் அதே பிரமையாக இருக்கக்கூடும். புலம்பலுக்கு நடுவே கூரையில் தெரியும் சிறு ஓட்டையில் வெளியே பார்த்தார்.

குறும்பகுதி 3

அனுராதா குடும்பம் வந்த பிறகு பெய்த கனத்த மழை அது. ஒரு வாரம் இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. மழையின் மூன்றாவது நாளில் வழக்கம் போல வெள்ளம் ஏற்பட்டது. சாமிநாதனுக்கு இது அதிர்ச்சியாக இருக்கக்கூடும். அவன் அம்மா அவனைத் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டு வெளியே வருவதைப் பார்த்தேன். அவன் அழுது கொண்டிருந்தான். அன்றுதான் சாமிநாதன் அழுவதைப் பார்த்தேன்.

அம்மாளு அக்கா அந்த வெள்ள நிலையிலும் அவர்களைப் பார்த்து ஏதோ கூறிவிட்டு காரி துப்பினார். எனக்கு அப்பொழுதும் அவர்களின் இருப்பு பற்றி கவலையாக இருந்தது. சாமிநாதன் அழுதுகொண்டே எங்கள் வீட்டைக் கடந்து சென்றான். அவன் முகத்தில் ஏக்கம் தெரிந்தது. அன்றென்னவோ மழை கடுமையாகத்தான் இருந்தது. அனுராதாவை அழைத்துக் கொண்டு வர அவரின் அம்மா மீண்டும் மேட்டுப் பகுதியிலிருந்து கீழே இறங்கினார். சாமிநாதன் மேட்டில் பலருக்கு மத்தியில் தனியாக நின்று கொண்டிருப்பான் போல.

அனுராதாவின் அம்மாவின் கால்கள் சதக் சதக் என தண்ணீருக்குள் மூழ்குவதும் மீண்டும் எழுவதுமாக இருந்தது. அம்மாளு அக்கா வீட்டை நெருங்கியதும் அந்த அம்மா சட்டென நின்றார். பலம் கொண்டு கால்களை உயர்த்தி முன்வாசல் கதவை ஓங்கி ஓர் உதைவிட்டார்.

“கழிச்சில போவ. உன் வாயில புழு பூத்து சாவெ” எனக் கூறிவிட்டு வேகமாக நடந்தார்.


குறும்பகுதி 4

அம்மாளு அக்கா இங்குக் கம்பத்திற்கு வந்து 6 ஆண்டுகள் இருக்கும். அன்றாடம் இரவில் அவருக்கும் அவளின் கணவனுக்கும் சண்டை நிகழ்வது அந்தச் சீனக் கம்பத்தில் அங்குமிங்குமாக குடியிருக்கும் எல்லாம் இந்தியர்களுக்கும் பெருத்த அவமானமாக இருக்கும். வீடு புகுந்து இருவரையும் அடித்து நொருக்க வேண்டும் எனக்கூட மேட்டு வீட்டு பாபுஜி அங்கள் சொல்லியிருக்கிறார். இருவரும் பேசிக் கொள்ளும் கெட்ட வார்த்தைகள் சுளிர் சுளிரென காதுகளைக் கிழித்துக் கொண்டு குருகி உள்நுழைந்து இம்சைப்படுத்தும்.

“உங்கம்மாளே. . . கட்டையிலெ போறவனெ”
“ஆமாம் நான் வச்சிருக்கென், நீ பாத்தியா?”

அநேகமாக அவர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்திருந்தால் அவர்களின் காதுகளில் இரத்தம் வடிவது உறுதி. அம்மாளு அக்கா வெளியே எங்காவது நடக்க நேரிட்டால் எல்லோரும் அவளுக்கும் அவளுடைய கணவனுக்கும் நடந்த சண்டையைப் பற்றி கேட்டுக் கொள்வார்கள். அது நாளுக்கு நாள் அவளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆகையால் எல்லோர் மீதும் வெறுப்புக் கொள்வதற்கு அவளிடம் ஏதாவது அர்த்தமற்ற காரணங்கள் இருக்கவே செய்கின்றன. வீதியில் நடக்கும் போதெல்லாம் அவமதித்துப் பேசி திட்டுவதற்கும் வசைப்பாடுவதற்கும் கிடைத்தவர்கள் அனுராதாவின் குடும்பத்தார்தான்.

மேல் வீட்டு மணியம் அண்ணனுக்கும் அம்மாளு அக்காவிற்கும்தான் அடிக்கடி வாக்குவாதம் முற்றிவிடும். இருவரும் தன் சுய வாழ்க்கையின் பலவீனங்களைப் பேசி அவமானப்படுத்திக் கொள்வார்கள். மேல் வீட்டு மணியம் அண்ணன் அன்று கொஞ்சம் கடுமையாகவே பேசிவிட்டிருந்தார். நானும் அம்மாவும் தவுக்கே கடையில் மேகி மீ வாங்குவதற்காகக் குடையைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம். கணத்த மழைக்கு நடுவே மேல் வீட்டு மணியன் அண்ணன் அம்மாளு அக்காவின் பின்கொண்டையைப் பிடித்து சாலையில் தரதரவென்று இழுத்து வந்து சாக்கடையில் தள்ளிவிட்டார்.

“டெ.. . செத்துருவடா நீ. அந்த அனுராதா அம்மாவுக்கு புருசன் இல்லன்னு போய் படுத்துக்கிட்டியாம்? உண்மையெ சொன்னா பொத்துக்கிட்டு வருதாடா நாயெ.” அம்மாளு அக்கா சாக்கடையிலிருந்து எழுந்து நின்றாள். அவளுடைய கால்கள் வழுவை இழந்திருந்தன.

“நீ வந்து எட்டிப் பாத்ததானெ? வாயெ மூடு. சும்மா கதை அளக்காதெ. உனக்கு என்ன வந்துச்சி?” மணியம் அண்ணன் கையில் இப்பொழுது ஒரு கட்டையை வைத்திருந்தான்.

“பறைச்சிகூட உறவு வச்சிக்கிட்டு எவன் வீட்டுல நீ தைரியமா கை நனைப்பெ?”

கம்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் அம்மாளு அக்கா சொன்னதைக் கேட்டார்கள். அம்மாளு அக்கா தளர்ந்திருந்த தன் கைலியைத் தூக்கிக் கட்டியவாறு வேகமாக நடந்தார்.

மறுநாள் அனுராதாவின் வீட்டில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்திருந்தன. சாமிநாதனின் வாயில் நுரை தள்ளியிருந்ததைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. சின்ன பிள்ளைகள் செத்துக் கிடப்பதைச் சின்ன பிள்ளைகள் பார்க்கக்கூடாது என அம்மா என்னை அனுராதா வீட்டுப் பக்கமே வரவிடவில்லை.

இரண்டாவது மழை நாளின் ஒரு மதியத்தில்

அது நடந்து முடிந்து 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. பக்கத்து வீட்டு அம்மாளு அக்காவின் கணவன் ஓடிப் போனப் பிறகு அம்மாளு அக்காவும் எங்கோ ஜோகூர்பாருவிற்குச் சென்றுவிட்டிருந்தார். அதன் பிறகு அவரைப் பற்றி தகவல் ஏதும் வருவதில்லை.

“டெ. . ஜோனிய பாருடா. . அது கத்தற மாதிரி இருக்கு”

அப்பாவிற்கு இனியும் சமாதானம் தேவைப்படாது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஜோனியைத் தூக்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் காட்டினால் மட்டுமே அவருடைய தவிப்பு அடங்கும். வெளியில் தெரியும் அந்த வெள்ளைக்குடையைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டாம் என முன்கதவை மெல்ல திறந்து வெளியேறினேன். அம்மாளு அக்காவின் வீட்டில் இருளின் அடர்த்தி வீட்டை முழுமையாகப் போர்த்தியிருந்தது. வெளியிலிருந்து அடித்துக் கொண்டு வந்த குப்பைகள் மூட்டைகள் எல்லாம் அவளின் வீட்டிற்குள் நுழைந்து அடைத்துக் கொண்டன.

ஜோனியை அடைத்து வைத்திருந்த கூண்டு சற்று மேலே தூக்கி வைத்து கட்டப்பட்டிருப்பதால் கொஞ்சம் எக்கினால் மட்டுமே ஜோனியை அங்கிருந்து காப்பாற்ற முடியும். வீட்டின் பின்புறத்திலுள்ள அந்த அறைக்கு வந்தேன். பாதிக்கு மேல் இருளுக்குள் காணாமல் போயிருந்தது. மேலே கட்டப்பட்டிருந்த கூண்டிற்குள்ளிருந்து சத்தம் குறைந்திருந்தது. கதவைத் தாராளமாகத் திறந்துவிட்ட பிறகு உள்ளே நுழைந்தேன். மெல்லிய வெளிச்சத்தில் கூண்டிற்கு அருகே அனுராதாவின் அம்மாவும் அப்பாவும் வாயில் நுரையுடன் சாமிநாதனும் நின்றிருந்தார்கள்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-bamalurugan.blogspot.com/