Tuesday, September 29, 2009

“நான் காட்டிக் கொடுக்கவில்லை” – கருணாவின் பேட்டி

தமிழீழ துரோகி, காட்டிக் கொடுத்த கருணா, புலிகளின் யுத்த தந்திரங்களை அம்பலப்படுத்திய தூரோகி என பலவாறு அடையாளப்படுத்தப்பட்ட முன்னால் விடுதலை புலி இயக்கத்தின் போராளி கருணாவின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கே வழங்கியிருக்கிறேன்.

இந்தப் பதிவு எந்தச் சார்புத்தன்மையும் இல்லாமல், வாசகர்களின் பொதுப்பார்வைக்காக மட்டுமே இடப்படுகிறது. கருணா சொன்னவைகள் உண்மையா பொய்யா என்ற விவாதத்தை முன்னெடுக்க இந்தப் பதிவு உதவக்கூடும். உண்மை நிலவரம் அறிந்த வாசகர்கள் / பொது மக்கள் கருணாவின் இந்த வாக்குமூலத்தை எதிர்த்து தங்களின் கருத்துகளை அனுப்பி வைக்கலாம் அல்லது இங்கேயே பதிவிடலாம்.

அண்மையில் மலேசியாவில் கிடைக்கப்பெறாத அம்ருதா எனும் இதழிலிருந்து இந்தப் பேட்டியை மீண்டும் டைப் செய்து இங்கே கொடுத்துள்ளேன். நன்றி.


இலங்கையில் யுத்தம் உக்கிரமாக இருந்த காலகட்டத்தில் எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் அங்கு சென்றிருந்தார். தன் நண்பர் ஒருவரின் மகளின் திருமணத்துக்காகச் சென்றிருந்தவர் இலங்கை தமிழ் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், முன்னாள் போராளிகளையும் என பலரையும் இப்பயணத்தில் சந்தித்துவிட்டு திரும்பியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் முக்கியத் தலைவர்களில் யாராவது ஒருவரையாவது சந்தித்துவிட வேண்டும் என்னும் தோப்பிலின் முயற்சி, அவர்கள் யுத்தப் பகுதியில் இருந்ததால் நிறைவேறவில்லை. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்த, விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இருந்து பிரிந்து அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த கருணாவையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறார்.



தோப்பில்: யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் முஸ்லீம் மக்கள் வெளி யேற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் பெருமளவு முஸ்லீம்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? முஸ்லீம்கள் செய்த தவறு என்ன?

கருணா: முஸ்லீம்கள் எதுவித தவறும் செய்யவில்லை, ஐயா. தவறு மேற்கொள்ளப்பட்டது தலைவரால்தான். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் முஸ்லீம்கள் நல்ல ஆதரவு வழங்கி வரவேற்றார்கள். தங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழர்களோடு சேர்ந்து அவர்களும் ஒத்துழைத்தார்கள். ஆனால், புலிகள் இயக்கம் இதை சரிவர கையாளவில்லை. அப்பொழுது இருந்த சில போராட்ட அமைப்புகள் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் விரிசல்களை ஏற்படுத்த சில சதித் திட்டங்களை மேற்கொண்டது. இந்த நோக்கத்தில் 18 வருடங்களுக்கு முன்பு இஸ்ரேலில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட சிலர் வந்து கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.

அந்த சதிகள் எல்லாம் பிற்காலத்தில் அம்பலமாகியிருக்கிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ராணுவத்தை ஆங்காங்கே குவிப்பதற்காக புலிகளால் நிறைய படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்தான் முஸ்லீம்களும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். முஸ்லீம் மக்கள் தாக்கப்படுவது அதிகரித்த பொழுது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. அவர்கள் வேறு வழியில்லாமல் அரச படைகளால் உருவாக்கப்பட்ட சில ஊர்க்காவல் படை என்ற பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதனால், முஸ்லீம் மக்கள் தங்கள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கிறார்கள் என்று புலிகள் கருதினார்கள். எனவே, யாழ்ப்பாணத்தில் எவரும் இருக்க இயலாது என்று வெளியேற்ற முற்பட்டார்கள். அந்த நேரத்திலும் நான் அதை எதிர்த்தேன். நான் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவன். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் கதைக்கிற ஒரு சகோதர இனத்தை வெளியேற்றுவது இயலாத விடயம் என்று நான் சொல்லிப் பார்த்தேன். அதை யாரும் கேட்கவில்லை. முஸ்லீம்களை, சகல உடமைகளையும் பறித்துப் போட்டு உடுத்தியிருந்த உடுப்போடு அனுப்பிவைத்தார்கள் யாழ்ப்பாண மக்கள். அந்நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். அதை நாங்கள் எதிர்த்தோம் என்றாலும் அதை நிறுத்தும் அளவுக்கு எங்களுக்கு வலு இருக்கவில்லை. ஆனாலும், முஸ்லீம்கள் வெளியேற்றம் சரித்திரத்தில் ஒரு அழியாத வடுவாக வரப்போகிறது என்று எங்கள் ஆலோசனைகளை சொன்னோம்.

இக்காலகட்டத்தில், இந்த வெளியேற்றத்தின் ஊடாக வெளி நாட்டில் இருந்து பயிற்றுவிக் கப்பட்டு வந்திருந்தவர்கள் தங்கள் சதித் திட்டங்களை செயல்படுத்தி கலவரங்களை உண்டாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்தவர்கள் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். உண்மையில் அதையெல்லாம் செய்தது வெளிநாட்டு சக்திகள். 85ஆம் ஆண்டு இது மேற்கொள்ளப்பட்டது.

தோப்பில்: கிழக்கு மாகாணத்தில் பெரும்பகுதி தமிழர்கள் இருக்கிறார்கள் அடுத்து முஸ்லீம்களும் அதற்கடுத்து சிங்களவர்களும் இருக்கிறார்கள். இந்த மூன்று இனங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாத இனங்கள். இந்த மூன்று இனத்தவர்களையும் இணைப்பது மாதிரியான ஒரு ஆட்சி முறையை ஏன் ஏற்படுத்த முடியாது?

கருணா: நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; பிரபாகரன் ஏற்றுக்கொள்ள மாட்டார், ஐயா. கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கும் வட மாகாணத் தமிழர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. வெள்ளையர்கஷீமீ வந்த காலத்தில் யாழ்ப்பாண ராச்சியம், கண்டி ராச்சியம், கோர்ட் ராச்சியம் என்று மூன்று ராச்சியமாக இருந்தது.
வெள்ளையர்கள் காலத்தில் யாழ்ப்பாண தமிழர்கள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு தங்களின் கல்வியறிவை வளர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது கிழக்கு மாகாண மக்கள் கொஞ்சம் பின்தங்கி இருந்தாங்க. கிழக்கு மாகாணத் தமிழர்கள் விவசாயத்திலும் முஸ்லிம்கள் வர்த்தகத்திலும் ஈடுப்பட்டிருந்தார்கள். கல்வியறிவு பெற்றிருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது அதிகார மையங்களின் முக்கியமான பதவிகளில் இருந்தார்கள். நீதிமானாக, மருத்துவராக, வக்கீலாக எல்லாமாக இருந்தார்கள். அதனால் கிழக்கு மாகாண மக்களை அடிமைப்படுத்தும் ஏகாதிபத்தியம் அவர்களிடம் இருந்தது. இந்தியாவில் பிராமணர்கள்தான் எல்லா அதிகார மையங்களிலும் இருக்கிறார்கள்; மலையாளிகள்தான் இருக்கிறார்கள் என்ற பிரச்சினை இருப்பது போல், இங்கும் இருந்தது. எங்கட அப்பாவுக்கு அப்பா அதைப் பற்றி கதைப்பார். எங்கட காலத்தில் அது கொஞ்சம் குறைவாக இருந்தது. அப்படியான எண்ணக்கரு இப்பொழுதும் இருக்கிற ஏகாதிபத்திய பழமைவாதிகள், மாகாணம் பிரிவதை விரும்பமாட்டாங்க. மாகாண சபை பிரிந்து இருப்பதால் எதுவித பாதிப்பும் வரப்போவதில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.


தோப்பில்: புலிகள் அமைப்புக்கு இன்று ஏற்பட்டிருக்கிற பின்னடைவுக்கு, நீங்கள்தான் காரணம் என ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது, நீங்கள் அவர்களது யுத்த வழிமுறைகளையும் மறை பிரதேசங்களையும் காட்டிக் கொடுக்கிறீர்கள் என்று.

கருணா: அது எனக்கு தெரியும், ஐயா. நான் காட்டிக்கொடுக்கிற ஒரு ஆளாகத்தான் இன்று சுட்டப் படுகிறேன். விடுதலைப் புலிகளை எதிர்க்கிற ஆட்களை துரோகிகள், காட்டிக் கொடுக்கிறவர்கள் என்று சொல்வது இயக்கத்தில் ஒரு மரபு. ஏன் ஒருவன் வெளியேறுகிறான் என்று தளத்தில் உள்ள மக்கள் பிரச்சினையைப் பற்றி ஆராயமாட்டாங்க. கிழக்கு மாகாணத்தவர்கள் துரோகம் செய்து போட்டார்கள் என்று வடக்கு மாகாணத்தவர்கள் சொன்னார்கள். உண்மையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. யுத்தத்தில் அழிந்து கொண்டிருக்கிறதுக்கு ஒரு முடிவு வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் வெளிக்கிட்டோம், ஐயா.

நன்றி

அம்ருதா செப்டம்பர் இதழ் (இந்தியா)
வலைப்பூ தொகுப்பு : கே.பாலமுருகன்