Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, December 6, 2014

சிறுநகர் கதைகள் : கவிதை 6, பகலின் வேடிக்கை

பகலின் ஒரு சோர்வான வேளையில்
சூடான தேநீருடன்
நகரத்தை வேடிக்கை பார்த்தப்படி
அமர்ந்திருந்து கொண்டு
வாழ்க்கையை அசைப்போட
எனது அனைத்துப் பலவீனங்களையும் அறிந்த
என் துன்பமான நேரத்தில் மட்டும்
என்னுடன் இருக்கப் பழகிய
ஒரு நண்பன் வேண்டும்.

என்னிடம் பேசவிட்டாலும்
பரவாயில்லை
எனது புகார்கள் குறித்து
அவனிடம் ஆட்சேபனை இருக்காது.

Monday, October 27, 2014

Small Town stories : Poem collection 1

கவிதை: ஒரு சிறுநகர் கதையிலிருந்து 1

எனது பூட்டியிருந்த அறையில்
எப்பொழுதும் புதியதாக ஒன்று இருப்பதேயில்லை.
அசையாமல் கிடக்கும் கட்டிலும், 
வெளுத்த போர்வையும்
பொம்மைப்படங்கள் ஒட்டிய அலமாரியும்
ஒரு கால் ஆட்டம்கண்ட நாற்காலியும்
தலைத்தொங்கிய ஒரு மேஜை விளக்கும்
சுவரில் தொங்கும் அப்பாவின் புகைப்படமும்.

எனது பூட்டியிருக்கும் அறையை
நான் இரகசியமாகப் பார்த்ததேயில்லை.
எனது கட்டில் சட்டென ஒரு பெண்ணாகிவிடக்கூடும்
எனது மேஜை விளக்குக் கைகளாகிவிடக்கூடும்
என் நாற்காலி ஒரு வயது முதிர்ந்த ஆணாகிவிடக்கூடும்.

எனது பூட்டியிருக்கும் அறைக்கதவை
நான் தட்டுவதேயில்லை.
சடாரென எனக்கு நானே உள்ளிருந்து
கதவைத் திறக்க நேரலாம்.

Wednesday, October 15, 2014

கவிதை: எதிர்ப்பாராத ஒரு மழைநாளில்


நான் அலட்சியமாகக் கவனித்துக்கொண்டிருந்த
ஒரு மழைநாளில்
கூடிவந்த சோம்பல்கள்
உடலைத் தீண்டி
தின்கையில்
வந்து சேர்ந்தன
நீ முன்பொருநாள் அனுப்பிய
அனைத்துக் காகிதக் கப்பல்களும்.

சொல்லத் தவறிய
உன் அனைத்து விளையாட்டுத்தனங்களும்
கவனியாமல் கடந்துபோன
உன் குறும்பு சிரிப்பும்
உயிர் பிழைத்துத் தப்பி
வந்திருந்தன.

கவிதை: கரை சேராதிருப்போமாக

கரையைச் சேர்ந்துவிடுவதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை ஆச்சர்யங்கள்.
கரையைக் கண்டுபிடிப்பதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை அனுபவங்கள்.
கரையின் திசையறிந்து சேர்வதைவிட
கரை அறியாமல் தேடுவதில்தான்
அத்தனை திருப்பங்கள்.


ஆகவே கரையைச்
சேராதிருப்போமாக.

கரை சேர்வது ஆபத்தானது.

நம்மை சோர்வாக்கிவிடும்
நம்மை ஆற்றுப்படுத்திவிடும்
நம்மை திருபதிப்படுத்திவிடும்
நம்மை நிதானமாக்கிவிடும்.
நம் பயணங்களை முடித்துவிடும்.

Thursday, December 26, 2013

பெருநகர் கவிதைகள் 2: விடைப்பெறுதல்

பெருநகர் கவிதை 2: விடைப்பெறுதல்

இலேசான மழையில்
இன்றொரு விடைப்பெறுதல்.
வெகுநாட்களுக்குப் பிறகு வந்து
உடனே திரும்பும் பெரியப்பாவாகவோ
அல்லது கடன் வாங்க வந்துவிட்டுப்
போகும் பெரிய மாமாவாகவோ இருக்கலாம்.

விடைப்பெறுதல்
ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றது.
பொய்யான சிரிப்பு
அன்றாடங்களைத் தின்று சலித்த கண்கள்
உயிரிற்ற கையசைப்பு.
விடைப்பெறுதலுக்கு முன் துக்கமான ஒரு முகம்.
பெரிய மாமாவிற்கும் பெரியப்பாவிற்கும் யாராகினும்
விடைப்பெறுதல் எந்த நினைவுமற்று மறைகிறது.

எதையும் பெற்றுக்கொள்ளாமல்
எதையும் கொடுத்துவிடாமல்
பத்திரமாக முடிகின்றது.

- கே.பாலமுருகன்


Friday, January 11, 2013

கவிதை: ஆதாரமற்ற இரவொன்றின் கனவு


1
கனவுக்கும் நிசத்திற்கும் மத்தியில்
எத்தனை முறை திரும்புவது?
ஒவ்வொரு கணமும் ஆயிரம் கைகள்,
ஆயிரம் குரல்கள்.
தப்பித்து மீள்கையில்
பலநெடுங்காலத்தின் நோய்படுக்கை.

2
ஆதாரமற்ற இரவொன்றில்
எந்த அறிவிப்புமின்றி 
நிகழ்ந்துவிடுகிறது.

2
நிர்வாணமாய் அவிழ்ந்துகிடக்கின்றன
கடைசி நிமிடங்கள்.

Thursday, May 10, 2012

கவிதை: பொம்மைகளின் உரையாடல்


வட்டத்திற்குள்ளேயே சுழலும்
கரடி பொம்மையும்
கைத்தட்டினால் கூவும் பொம்மை குருவியும்
உதறினால் வெளிச்சம் கக்கும்
நெகிழி உருண்டையும்
கலர் கலர் நீர்த்துப்பாக்கிகளும்
கடைக்கு வெளியே நின்று

Thursday, December 29, 2011

கவிதை: ஆண்களின் கழிப்பறை

மன்னிக்கவும்
உள்ளே நுழைவதற்கு 30 சென் செலுத்தியாக வேண்டும்
வசூலிக்க ஆள் இல்லாவிட்டாலும் சிதிலமடைந்துவிட்ட மேசையின் மீதுள்ள
பழைய தகற குவளையில் நீங்கள் போடும் சில்லறைகள்
பேரோசையாகக் கேட்க வேண்டும்.

Tuesday, November 8, 2011

கவிதை: ஒரு சொல்லைக் கொன்றவுடன் அடக்கம் செய்யவும்

ஒரு சொல் ஊனமானதுடன்
தன் மீதான அனைத்து குரல்களையும் கொன்றுவிடுகிறது.
ஒரு சொல்லை எப்படி ஊனமாக்கலாம்?
பெரும் வாக்கியத்துக்குள் அர்த்தமற்று நுழைக்கலாம்
தனி வாக்கியத்தில் பிழையான பொருளுடன் உள்நுழைக்கலாம்
குறிலை நெடிலாக்கி நெடிலைக் குறிலாக்கி துணைக்காலைப் பிடுங்கியெடுத்து
சொல்லுக்குள்ளிருக்கும் எழுத்தை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றிச் சிதைக்கலாம்.
ஊனமான ஒரு சொல்லைப் பிறகெப்படிக் கொல்வது?

Monday, November 7, 2011

கவிதை: வீட்டில் இருப்பதைப் பற்றி

நான் எங்கேயும்  போவதற்கில்லை
ஆகையால் வீட்டில்தான் இருக்கிறேன்.
ஒவ்வொரு இரவுகளையும்
மௌனமாகக்  கவனித்தபடி இருக்கும்
நான் வழக்கமாக
வீட்டில்தான்  இருக்கிறேன்.
உறங்கி எழும்போது
நான் வீட்டில் இருப்பதை
மறப்பதில்லை.
எல்லாப் பொழுதுகளையும்
பாதுகாப்புடன் கடக்க
எனக்குத்  தேவை
நான் வீட்டில் இருப்பது.

Thursday, August 18, 2011

கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை


1
சுவரோடு ஒரு தூசியைப் போல
படிந்து கிடப்பவர்களும்
படுக்கைக்குள் குழி விழுந்து
மூழ்கிப் போனவர்களும்
சன்னல்களின் இடுக்குகளில்
தன் மூச்சுக் காற்றை
ஒளித்து வைத்தவர்களும்
ஒளி இழந்த கண்களுக்குள்
ஆயிரமாயிரம் இரவுகளின்
தனிமையைப் பத்திரப்படுத்தியவர்களும்

Thursday, May 5, 2011

ஒரு தலைமுறையின் சாபம்

பல நெடுங்காலம்
மிகவும் கவனத்துடன்
கூர்மை மங்கிய பொழுதுகளில்
தனக்கு முன் வந்துபோன
அத்துனைப் பருவங்களையும் வெறித்துக்கொண்டிருந்தார்
முனிமா பாசார் முனியாண்டி.

கவுச்சி வாடையும்
சொருகப்பட்டிருக்கும் கோடாரி சுருட்டுகளும்
தவறுதலாக விட்டுப்போயிருந்த
நாலு நம்பர் தாட்களும்
மம்டி சாராயமும் என
ஒவ்வொரு தலைமுறையும்
சாபத்தில் நீள்கின்றன
முனியாண்டிக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு
இந்தத் தேசம் ஒரு விடுதலைக்குத் தயாராகியிருந்தது.
ஈட்டியையும் கோடாரியையும் கொண்டு வந்தவர்கள்
மெல்ல மெல்ல தகர்த்தனர்.
இருந்த இடம் தெரியாமல்
மறுநாள் காலையில்
முனிமா பாசார் முனியாண்டி
காணாமல் போயிருந்தார்.

சுருட்டு வாசம்
குதிரை காலடி சப்தம்
சாட்டையடி
சாராய வாடை என
அங்கிருந்தவர்களுக்கு
மீதமாக இருந்தது
வெறும் பிரமை.

கே.பாலமுருகன்

Sunday, April 24, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 13, 2011

கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்-2

1. வித்தைக்குப் பிறகும்

வித்தைக்குத் தயாராகும்
சிறுமிக்குப் பிறர் வியக்கக்கூடிய
அதிசயம் அல்லது கோமாளித்தனம் தேவைப்பட்டது.

நாக்கைச் சுழித்து
கருவிழி இரண்டையும்
இடம் மாற்றி அசைத்து அசைத்து
முன்பல்வரிசையை உதடுக்கு வெளியில் வைத்து
சத்தமாகச் சிரிப்பதன் மூலம்
ஒரு வித்தையைக் காட்டிவிட்ட மகிழ்ச்சி
சிறுமிக்கு.

Tuesday, April 5, 2011

சமீபத்திய கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்

கவிதை 1
கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின்
பாதி உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு

Friday, November 19, 2010

கவிதை: துறவு

1
எனக்கு முன்
மௌனத்திருந்த காலம்
முதன் முதலாய்
நீண்டகால இருப்பை
தொலைத்துக் கொண்டிருந்தது.

2
சன்னலுக்கு வெளியே
நான் காத்திருந்த ஒரு காலம்
எங்கேயோ சென்றுவிட்டிருந்தது.

3
தனது பருவத்தை
முடித்துக்கொண்ட
காலம்
வெறுமையுற்று
திரும்புதலுக்காக அலைந்து திரிந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா

Wednesday, September 29, 2010

கவிதை: கனவிலிருந்து விடுப்படுதல்

வியர்த்த உடலுடன்
அந்தக் கனவுக்குள்ளிருந்து வெளியேற
நேர்ந்தது.
கனவிலிருந்து விடுப்படும்போது
மரணமொன்று முதுகில்
ஒட்டிக் கொண்டு வீடுவரை வந்திருந்தது.
திடீரென ஒருநாள் அது காணாமலும்
போயிருந்தது.

பிறகொரு நாட்களில்
என்னைச் சுற்றிய துர்சம்பவங்களினூடாக
எப்பொழுதோ என்னுடன் கனவிலிருந்து
தப்பித்த அந்த மரணத்தை நுகர்ந்தேன்.

மழைக்காலத்தில்
அப்பாவிற்கு நிகழ்ந்த இரண்டுவார
குளிர்காய்ச்சலின் கொடூரத்தில்.

பக்கத்து வீட்டிலிருக்கும்
நல்லம்மா பாட்டி
இறந்தபோது.

சுசீலா அக்காவின் மகன்
பீக்குட்டையில் விழுந்து
10 நாட்கள் உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த சமயத்தில்.

அம்மணி அக்காளின் கணவனைக்
காணாமல் அந்த வீடே 15 நாட்கள் அவரைத்
தேடி அலைந்த கணத்தில்.

மீண்டும் ஒரு கோடையில்
அப்பா வளர்த்த கோழிகளெல்லாம்
செத்தொழிந்தபோது.

அன்று வெகுநேர
உறக்கத்திற்குப் பிறகு
வியர்த்த உடலுடன்
ஒரு கனவிலிருந்து வெளியேற நேர்ந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்

Wednesday, June 16, 2010

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்

எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா.

Tuesday, May 4, 2010

பழைய பட்டணமும் அப்போய் காப்பி கடையின் தெரு முனையும்

தெரு முனைக்கும்
அப்போய் கடைக்கும்
மத்தியில்
படுத்துக் கிடக்கிறது
ஒரு பழைய பட்டணம்.

அப்போய் காப்பி கடையின்
முன்வாசல் பலகை கதவுகளுக்கு
எண்கள் உள்ளன.
ஒவ்வொன்றாய் அடுக்கி வைக்கப்படும்
காலைப்பொழுதில் மெல்லிய
வாசம் பரவிக் கொண்டிருக்கும்.

கூலிம் பாலிங்
மெந்தக்காப்
கோலா கெட்டில்
போன்ற உட்பகுதிகளுக்குச் செல்லும்
பேருந்துகள் தெரு முனையில்
வந்து நின்றுவிட்டு
தடதடவென மீண்டும்
புறப்படும்.

துணிக்கடைகளின்
சோம்பல் வேலைகளுக்காக
சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்
சீனப் பெண்மனிகளுக்கு
எப்பொழுதும் அப்போய் கடையிலிருந்து
ஒரு புன்னகை தரப்படும்.

மஞ்சள்
சிவப்பு, பச்சை
கருப்பு என
எல்லாம் நெகிழிகளிலும்
பிதுங்கியவாறு எட்டிப் பார்க்கின்றன
காய்கறிகளும்
செவுட்டு தவுக்கே
கடையிலிருந்து கொண்டு வரும்
விரால்களும்.

திட்டு திட்டாக
இரைந்திருந்த கூட்டம்
தெரு முனைக்கு வந்ததும்
ஒரு காப்பி குடித்துவிட்டு
அப்போய் கிழவனிடம்
பேசிவிட்டுத்தான் நகர்கிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, April 16, 2010

கவிதை: மாய்த்தலும் மேய்த்தலும்

1
ஒரு விசுவாசியின்
இறுதி வழிப்படுதலோடு
எல்லாம் அடிமைத்தனங்களும்
முழுமையடைகின்றன.

2
ஒரு அடிமையை
உற்பத்திக்க
முதலில் கற்றுத்தர வேண்டியது
விசுவாசத்தை.

3
தனது கடைசி
நாவையும் பிரயோகித்து
எல்லாவற்றையும்
வழித்துவிட்ட விசுவாசம்
துளையிட்டுத் தேடத்துவங்கியது
முதலாளியின் காலடியையும்
அக்குளையும்.

4
அரசியல் கட்சிகளின்
விசுவாசம்
மிகப்பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டன
ஏழைகளும் தீபாவளி பொட்டலங்களும்
விருந்துபரிப்பும் இருக்கும்வரை.

5
துடைத்துவிட்டப் பிறகு
தூக்கியெறியப்பட்டன
விசுவாசமும் நேர்மையும்.

6
தலைவர்களின் மலத்தில்
மொய்க்கின்றன
நன்றியுணர்வும் சமூக உணர்வும்.
தண்ணீர் சுழற்றப்படாத
கழிவறைத் தொட்டியின் வெண்மையில்
தலைவாறும் சில அடிமைகளின்
முகங்கள்.

7
மேய்ச்சலுக்கு
அவிழ்த்துவிட்டது போல
தேர்தலுக்கான பெயர் பட்டியல்.

8
தலைவருக்காக
சில வேண்டுதல்கள்
நிறைவேற்றப்பட்டன.
கடவுள் மொட்டையடித்து
மயிலிறகைத் தந்தருளினார்
எண்ணெய் தடவி.

9
மாய்த்தலுக்குப் பிறகும்
விழிக்கின்றன
மேடைவாதிகளின் எச்சில் துளிகள்.

10
சமூகம்
சமூகம்
சமூக
சமூ
ச
பை
ப்பை
குப்பை.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா