Tuesday, September 28, 2010

ஒரு குழந்தை தன் குழந்தைத்தனத்தை இழக்கிறது
குழந்தைகள் இழந்துவரும் குழந்தைத்தனங்களும் சுதந்திரமும் என்பது அவர்களின் கைகளுக்கு எட்டாதவாறு தூரத்தில் வைக்கப்படும் கண்ணாடி பொருள்கள் போலவும் விஷ திரவங்கள் போலவும் ஆகிவிட்டது. எப்பொழுது வேண்டுமானாலும் உடையக்கூடும்.”

அண்மையில் ஒரு திருமண விருந்தில் பார்க்கக் கிடைத்த ஒரு தொடர் நிகழ்வு மனதை ரொம்பவே பாதித்துவிட்டது. எத்தனையோமுறை பார்த்தும் உணர இயலாத ஒன்றை மீண்டும் அதன் உள் அடுக்குகளில் நுழைந்து ஆழமாகப் பார்க்கும்போது குற்ற உணர்வே சட்டென மேலிடுகிறது. எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அப்பாவையும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தையும் வெகுநேரம் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனக்குள் தொடங்குவதற்குக் காரணம் தன் அப்பாவின் பிடியிலிருந்து தப்பிக்க அந்தக் குழந்தை எடுத்துக் கொண்ட முயற்சிகள்தான்.

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் அதிசயத்துப் பார்க்கக்கூடிய துடிப்பும் உடல் இயக்கமும் தூக்கலாகவே இருந்தது. கைக்கு எட்டாத ஒன்றையும் அதன் இடத்திலேயே வைத்து தன் பார்வைகளாலும் கண் அசைவுகளாலும் தொட்டுவிடக்கூடிய தீவிரம் குழந்தைகளுக்கு உண்டு. தன் அப்பாவிடம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த அலங்காரத் துணிகளைக் காட்டி காட்டி எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை அடக்குவதற்கு மட்டுமே அந்த அப்பா முனைந்துகொண்டிருந்தார். விரலை உதட்டில் வைத்து சத்தமாகஉஸ்என்றார். பதிலுக்குக் குழந்தையும் அதே போல செய்து காட்டிஉஸ்என்றது.

தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து அடுத்த நாற்காலிக்கு எகிறி குதிக்க முயன்ற குழந்தையின் கால்களைச் சடாரென பிடித்துக் கொண்டு அவர் மடியில் அமர வைத்தார். அது தொடர்ந்து தன் உடலை இலேசாக்கி அவரது பிடியிலிருந்து நழுவ முயன்றது. பெரியவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான வெறுப்புதான் குழந்தைகளின் மனதில் ஆழமாக வளர்ந்துவிடுகிறது. பிற்காலத்தில் பெரியவர்களின் சாதாரண அறிவுறையைக்கூட மாபெரும் அடக்குமுறையாகக் கருத வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. குழந்தை அந்த அப்பாவின் பிடியிலிருந்து தப்பித்து வரிசையின் கோடிக்கு ஓடி போய் அங்கிருந்து தன் அப்பாவை அழைத்தது. அவருக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்திருக்கும் போல, முகக் குறிப்புகளின் மூலம் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். குழந்தையும் அதே போல செய்து காட்டி மீண்டும் அவரை அழைத்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போனவர், தன் இருக்கையிலிருந்து எழுந்துபோய் அந்தக் குழந்தையின் கைகளைக் கிள்ளி அங்கிருந்து கடைசி வரிசைக்கு அழைத்துக் கொண்டு போனார். குழந்தை அழும் சத்தம் மண்டபத்தை இரண்டாகக் கிழித்து எறிந்தது. இதுதான் நான் குறிப்பிட்ட பெரியவர்களின் கட்டுப்படுத்தும் முறைக்கு எதிரான குழந்தைகளின் வன்முறை. தன் உச்சக் குரலில் அழுது தன் வெறுப்பைக் காட்டுவது.

இந்த நிகழ்வு தொடர்ந்து எனக்குள் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே உருவாகிவிட்ட துண்டிப்பு பற்றியே சிந்திக்க வைத்தது. முதலில் நம் சமூகத்தில் பெரியவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதே பெரிய சந்தேகமாக இருக்கிறது. ஒரு குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதில் நாம் காட்டும் அக்கறை, அந்தக் குழந்தையின் இயல்பைப் புரிந்துகொள்வதில் காட்ட மறுத்துவிடுகிறோம்.

நம் குழந்தைகள் இந்த உலகைக் காணும் அல்லது இந்த உலகத்தின் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கொண்டிருக்கும் தரிசனம் என்பதை எப்பொழுதும் நம்முடைய பழக்கப்பட்ட கண்களின் வழியாகத்தான் பார்க்கிறோமே தவிர அந்தக் குழந்தையின் கண்களின் வழியாக அந்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. குழந்தைகளுக்கான உலகைப் பார்க்கும் கண்களை நாம் இழந்ததைப் போல குழந்தைகளும் நம்முடைய(பெரியவர்களின்) அதீதமான கட்டுப்படுத்துதலால் தனது குழந்தைதனங்களையும் இழந்துவிட்டன. மீதி இருப்பது அறநெறியும் எதிர்காலத்தில் அவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தைப் பற்றிய தகவல்களும்தான்.

எப்பொழுதுமே பெரியவர்களின் பொதுபுத்தியின் வழியாகத் தீர்க்கமாக நிறுவப்பட்ட அறத்தின் மூலமாகத்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் மதிப்பிடுகிறோம். பெரியவர்களால் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைவிற்கு எதிராக செய்யப்படும் அனைத்தையும் குற்றம் எனவும் தகாத செயல் எனவும் பொதுவாக வரையறுத்துவிடப்படுகிறது. ஆகையால் குழந்தைகளும் தான் செய்த குழந்தைத்தனத்தை ஒரு குற்றத்திற்கு நிகரான செயலாகக் கருதி பெரியவர்களின் அடக்குமுறையைத் தன்னை அறியாமலேயே ஏற்றுக்கொள்கிறது. முதலில் பெரியவர்களுக்கு எது குழந்தைத்தனங்கள் என்பதையும் எது குற்றச்செயல் என்பதையும் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒரு குழந்தை கல்லை தூக்கி குளத்தில் எறிந்துவிட்டு கைத்தட்டி சிரித்தால், அது குழந்தைத்தனம். அதே கல்லைத் தூக்கி இன்னொரு குழந்தையின் தலையில் எறிந்துவிட்டுச் சிரித்தால், அது தவறான ஒன்று என உணர்த்த வேண்டிய செயல். குழந்தைக் கல்லை எடுப்பதையே தடுத்து நிறுத்த வேண்டும் என நினைப்பது ஒன்றை ஆரோக்கியமாக வடிவமைக்க முனைவதில் அடைந்திருக்கும் பலவீனம் என்றே சொல்லலாம். தன்னைக் கடிப்பதற்குத் துரத்தி வரும் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தும் அளவிற்காகவாது அந்தக் குழைந்தைக்கோ அல்லது சிறுவன்/சிறுமிக்கோ துணிச்சல் இருக்க வேண்டாமா? கல்லை எடுத்து தூக்கி எறியும் ஓர் அனுபவத்தையே நம்மால் தடை செய்ய முடியாது.

குழந்தைகளின் ஆர்பாட்டமும் ஓட்டமும் சத்தமும் இல்லாத குடும்ப நிகழ்வுகளையும் திருமணங்களையும் யாராவது விரும்புவார்களா? அப்படியும் விரும்ப நேர்ந்தால், அந்தச் சமூகத்தை அல்லது மனிதர்களை என்ன சொல்வது? எப்படித் தன் குழந்தையை தன்னால் உருவாக்கப்படும் அறத்திற்குச் சாதகமாக கட்டமைக்க வேண்டும் என்பதில் பெரியவர்கள் காட்டும் தீவிரம் நாளடைவில் அந்தக் குழந்தைக்கு வெருப்பையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. அந்த வெறுப்புணர்வே அதே அறங்களுக்கு எதிரான மன அமைப்பாக அமைந்துவிடுகிறது. பிறகென்ன? அதிலிருந்து தப்பிப்பதற்கு அவர்கள் செய்யும் அனைத்துமே குற்றச்செயல், வெறுக்கத்தக்க செயல் எனக் கருதப்படும். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

முதலில் நாம் குழந்தைகளுக்குச் சில நேரங்களில் நம் வழிக்காட்டுதலுடன் கூடிய சுந்ததிரத்தை வழங்க வேண்டும். பொது இடங்களில் அதன் ஆபத்தை அறியாமல் ஓட ஆசைப்படும் குழந்தைகளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கே அதன் பாதுகாப்பைச் சொல்லி சுதந்திரமாக ஓட விட வேண்டும். ஆனால் அவன் சுதந்திரமாகக் கத்திக் கொண்டு ஓடுவதையே குற்றம் எனவும் தடுக்க வேண்டிய செயல் எனவும் நினைப்பது குற்றம்தானே?

என்றாவது பெரியவர்கள் குழந்தைகளைப் பேச அனுமதித்ததுண்டா? எப்பொழுதும் அவர்களின் குரலை மீறிக் கொண்டு பெரியவர்களின் சொற்களே கடைசி ஒலிப்பாக இருக்க வேண்டும் என்பதே அறமாக இருக்கிறது. அவர்களுக்கான தேர்வு அவர்களுக்கு எப்பொழுதுமே வழங்கப்படுவதில்லை. திணிக்கப்படுவதே உண்மை.

ஏதாவது ஒரு திருமண அல்லது முக்கியமான நிகழ்வுகளுக்குச் செல்ல நேர்ந்தால், அங்குக் கட்டாயம் ஒரு குழந்தையையாவது பிடித்து ஓர் இடத்தில் அமர வைக்கும் முயற்சிகள் கடுமையாக நடந்துகொண்டிருக்கக்கூடும். மேலும், யாரோ ஒரு பெரியவரின் பார்வை கத்தியின் கூர்முனைபோல குழந்தைகளின் நடவடிக்கைகளின் மீது தொங்கவிடப்பட்டிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து அவர்களின் மீது விழக்கூடும் அளவிற்கு மிக மிகக் கூர்மையான பார்வை.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா