‘வெண்ணிற இரவுகள்’ படத்திற்கு முன்பு மலேசியத் தமிழ் சினிமாவின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்ததில்லை. அதற்கு மூன்று முக்கியமான காரணங்களை என்னால் கூற முடியும். ஒன்று, மலேசியத்தன்மை குறைந்து தமிழ்நாட்டு சாயல் அதிகமாகப் படிந்திருக்கும் நிலையில் அது மலேசிய சினிமா என்கிற அடையாளத்தை இழக்க நேர்ந்துவிடும். இரண்டாவது, போதுமான இயக்கப் பயிற்சியும் சினிமாவிற்கான நுட்பமான தேடலுமின்றி தேக்கநிலையில் கதை படமாக்கப்பட்டிருக்கும். மூன்று, பேய்க்கதையை விட்டால் வேறு வகையில் படம் செய்ய முடியாது என்ற பொதுநிலையாகும். இவை மூன்றையும் கொஞ்சம் உடைத்தது செந்தில் குமரன் முனியாண்டியின் ‘ஜெராந்துட் நினைவுகள்’, சஞ்சய் அவர்களின் ‘ஜகாட்’, பிரகாஷ் ராஜாராம் அவர்களின் ‘வெண்ணிற இரவுகள்’ மற்றும் ஷான் அவர்களின் ‘Sweet Dreams’ போன்ற படைப்புகள் ஆகும். இவர்களின் படைப்புகள், மலேசியத் தமிழ் சினிமா குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து வருவதை அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். ‘செம்மண் சாலை’ (2006) திரைப்படம், பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. ஆனால் அப்படம் தோட்டப்புற வாழ்க்கையையும் அந்த மனிதர்களையும் ஒரு நேசனல் ஜாகிராபி மனோநிலையிலேயே மிகவும் அந்நியத்துடன் காட்டிச் சென்றது.
இனி வரும் காலங்களில், மலேசியத் தமிழ்ப்படங்களின் விமர்சனத்தை நான் இரண்டாகப் பிரித்து முன்னெடுக்கவே விரும்புகிறேன். வெண்ணிற இரவுகளுக்கு முன், வெண்ணிற இரவுகளுக்குப் பின் என்ற அளவில் இனி மலேசியத் தமிழ்ப்படங்களைப் பிரித்தறியும் அளவிற்குப் பிரகாஷ் ராஜாராம் மெனக்கெட்டு ஒரு சிறந்த படைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.