இந்த வருடம் தீபாவளிக்கு முந்தைய சில நாட்களில் இரண்டு சம்பவங்கள் மனதை ஏதுமற்ற ஓர் உணர்வுக்குள் தள்ளிச் சென்றன. சில சந்தர்ப்பங்களில் நமக்கு முன் விரியும் காட்சிகளுக்குள் காலமற்ற ஒரு ஜடமாக நிலைத்துவிட்டு மீண்டும் தன்னிலைக்குத் திரும்பும்போது மனம் உணர்வற்றுப் போகிறது. எதையும் சிந்திக்க முடியாத இறுக்கம். பொதுவில் என் சோகத்தை நான் காட்டுவதில் எனக்கிருக்கும் தயக்கம்தான் அப்படியொரு மனநிலைக்குக் காரணம் எனப் பிந்தைய நாளில் தெரிந்துகொண்டேன். எத்துனை நேரம்தான் சோகத்தை வெறும் இறுக்கமாகவே காட்டுவது?
ஒருமுறை நண்பர் ஒருவர் என்றாவது நீ கதறி கதறி அழுதுருக்கிறாயா எனக் கேட்டார். அதற்கு ஒரு ஆழ்ந்த சோகம் காரணமாக வேண்டுமே என்றேன். ஒரு கதையைப் படிக்கும்போதுகூட அது நேரலாம் எனச் சாதாரணமாகக் கூறினார். கதை எழுதுபவனின் உச்சம் கதையை எங்குக் கொண்டு போய் கலையாக்குவதில் இருக்கிறதென்றால் வாசகனின் உச்சம் கதையில் நகைச்சுவை என்றால் சத்தமாகச் சிரிப்பதும் சோகமென்றால் கதறி கதறி அழுதுவிடுவதிலும்தான் இருக்கிறதோ எனத் தோன்றியது.
எளிய சம்பவங்களில் உறைந்துபோகும் தருணங்களில்கூட அந்தச் சோகம் எந்த அறிவிப்புமின்றி நமக்குள் நுழைந்து சலனமுற செய்து அழ வைக்கும். எந்தச் சாவு வீட்டிற்குச் சென்றாலும் அம்மா அழுவதை நான் பார்த்திருக்கிறேன். அது எல்லோரையும் போல பாவனைக்காகச் செய்யும் அழுகையல்ல. அப்படி அழுகையில் அம்மா அவரை அறியாமலேயே ஏதோ முணுமுணுக்கத் துவங்கியிருப்பார். உற்றுக் கேட்டால், அது இறந்தவருக்கும் அவருக்கும் உள்ள அன்பைப் பற்றியதாக இருக்கும். வாழ்வில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இறந்துபோன மனிதனின் சந்திப்பும் சாதாரணமான பேச்சும்கூட அன்றைய தினத்தில் மிகவும் அன்பான நெருக்கமான உறவைப் போல ஆகிவிட்டிருக்கும். அதற்கு ஒரே காரணம் அவன் இப்பொழுது இல்லாமல் போயிருப்பது. அம்மாவிடமிருந்துதான் நான் இதைக் கற்றுக்கொண்டிருக்கக்கூடும்.
முன்பெல்லாம் நான் சாவு வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தேன். அங்குச் செல்வதென்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். எல்லோரையும் போல உடனடியாகச் சோகத்தை வரவழைத்துக் கொண்டு வெளிப்படுத்துவது மிகச் சிரமமான காரியமாகக் கருதுவேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நான் சிரித்துவிட்டால், அங்குள்ள ஒட்டுமொத்த நிகழ்வின் தொனியே என்னால் நாசமாகிவிடும் என்பது போல் தோன்றும். ஆகையால் அம்மாவுடன் சாவு வீடுகளுக்குச் சென்ற போதெல்லாம் நான் குட்டையாக இருந்ததால் நான் தற்செயலாகச் சிரித்துவிடும் ஓசை கூட்டத்தில் உள்ளவர்களுக்கு எட்டாமல் போய்விடும். ரொம்ப காலமாகவே நான் தப்பித்தே வந்திருக்கிறேன். இருந்தபோதும் சாவு வீட்டில் சிறுவர்களுக்கு எந்த விதிமுறைகளும் கிடையாது என்பது கொஞ்சம் ஆறுதல். நமது கிழக்கிந்திய தத்துவத்தின் விளைவுகளெல்லாம் பெரியவர்களுக்குத்தானே.
மரணம் குறித்து மிக நெருக்கத்தில் நான் உணர்ந்த சோகம் என்பது கோலாலம்பூர் தாத்தா இறந்துபோன சமயத்தில்தான். அன்று தலைநகரிலுள்ள ஒரு தேவாலயத்தில் ஒவ்வொருவாரமும் 25 வெள்ளி கொடுப்பார்கள் என்பதற்காக தாத்தா கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியவர். வீட்டில் நடக்கும் சண்டையின்போதெல்லாம் கைவாலி ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து, “பரலோகத்தில் இருக்கும் பிதாவே, இந்தப் பாவிகளை மன்னியுங்கள்” எனத் தண்ணீரை வானத்தை நோக்கி ஓங்கி வீசுவார். பிறகொரு நாட்களில், அதே தொனி, அதே கோபம், ஆனால் வார்த்தைகள் மற்றும் தாத்தாவிடம் மாற்றம் கண்டிருந்தது. “பரலோகத்தில் இருக்கும் பிதாவே இவர்களைத் தண்டியுங்கள், இவர்களுக்குச் சாபமிடுங்கள்” எனத் தாத்தா சபிக்கத் தொடங்கினார். கடவுளின் பெயரைச் சொல்லி சபிப்பதை அன்றுதான் நான் கேட்டிருந்தேன்.
என்னைக்கூட ஒருமுறை அவருடைய காலை மிதித்தற்காக சபித்திருந்தார். நடைமுறை பிரச்சனைகளிடமும் சவால்களிடமும் தோற்றுப்போகும்போதெல்லாம் தாத்தா கைவாலியைத் தூக்கிக் கொண்டு வெளியே போய்விடுவார். மதம் எதற்காக என்பது ஓரளவிற்கு எனக்குப் புரிய துவங்கிய காலக்கட்டம் அது. சுங்கைப்பாட்டாணியிலிருக்கும்போது தாத்தா காணாமல் போய்விட்டார் என்ற தகவல் வந்தது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் காணாமல் போயிருப்பதால் அந்த வலியே இன்னமும் அடுத்த தலைமுறைவரை நீங்காமல் இருக்கும் சமயத்தில் தாத்தாவும் ஒரு மதியத்தில் வீட்டிலிருந்து கிளம்பியவர் காணாமல் போய்விட்டதாகச் சொன்னது மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. 2007-ல் நான் எழுதிய “நடந்துகொண்டிக்கிறார்கள்” எனும் கதையில் தாத்தாவைப் பற்றி ஒரு பகுதியாகவே எழுதியிருப்பேன். பிறகொரு நாளில் தாத்தா மருத்துவமனையில் இறந்து கிடைக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு வந்து அங்கேயே இரு வாரங்கள் யாருமற்ற தனிமையில் இருந்து இறந்துவிட்டார் எனப் பக்கத்து கட்டிலிலுள்ளவர் சொன்னபோது அப்பொழுதுதான் கதறி கதறி அழுதேன். சொல்லப்போனால் அவருடைய மகன்கள்தான் அதைச் செய்திருக்க வேண்டும். 16 வயதில் நான் அப்படி அழுதது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. என்ன செய்வது அம்மாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கமாயிற்றே.
தேவாலயத்தில் கொடுக்கும் 25 வெள்ளியைக் கொண்டு தாத்தா சம்சு குடிக்கிறார் என்ற விசயம் தெரிந்ததும் அவர்கள் பணம் கொடுப்பதைத் தற்சமயம் நிறுத்தியிருக்கிறார்கள். மதத்தைப் பிரச்சாரம் செய்யுங்கள், அதுதான் புனித செயல் எனக் கூறியிருக்கிறார்கள். ஆனால் தாத்தாவோ சம்சுவிற்குப் பணம் தேடி அலைந்த கணத்திலே சாலையில் விபத்துக்குள்ளாகியிருக்கிறார் எனத் தெரிய வந்தது. மதம் எதற்காக என உங்களால் புரிய முடியும் என நம்பிக்கையால் அந்தச் சர்ச்சையான விசயத்தை இங்குப் பேசாமல் தவிர்த்துவிடுகிறேன். இன்றும் தாத்தாவின் அந்த மரணத்தை நினைக்கும்போதெல்லாம் மனம் உணர்வற்றுப் போகிறது.
தொடர்ந்து நண்பர்களின் அப்பா மரணித்த சமயங்களில் மீண்டும் அந்தச் சோகங்கள் என்னைத் திரும்பிப் பார்க்கின்றன. இரண்டுநாட்களுக்கு முன் நண்பர் விநோத் குமாரின் அப்பா இறந்த செய்தி இரவு 12மணிபோல என்னை வந்து சேர்ந்தது. காரணமே இல்லாமல் அந்த மனிதரை நினைத்து மனம் வலித்தது. இரண்டு வாரங்களுக்கு முன் அவரைப் பட்டணத்தில் பார்த்திருந்தேன். அவர் கட்டாயம் தீபாவளிக்கு வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தார். என்னுடைய நலத்தை ரொம்பவே விசாரித்தார். வேலை செய்யும் பள்ளிக்கூடம் முதல் இப்பொழுது தங்கியிருக்கும் வீடுவரை விசாரித்தார். விநோத் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் ஏதாவது இரண்டு வார்த்தை அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறு புன்னகை செய்யக்கூடியவர். அன்று அவருடைய இறப்புக்குப் போயிருந்தபோது நான் அம்மாவைப் போலவே உணர்ந்தேன். மிகவும் நெருக்கத்தில் நின்றுகொண்டு அவருடைய பிரிவை உணர்ந்தேன். காலம் காலமாக மரணத்தைப் பற்றிய பயத்தை நீக்குவதற்காகச் சொல்லப்பட்ட அத்துனைத் தத்துவங்களும் விநோத் கதறி கதறி அழும்போது பொய்யாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
வீட்டிற்கு வந்தபோது ஞானிகள் மீது கோபம் கோபமாக வந்தது. அவர்கள்தானே இருப்பவர்களுக்காகவும் இறந்தவர்களுக்காகவும் வருந்தாத ஜென்மங்கள்? அப்படியொரு மனதை எப்படி அவர்கள் பெற்றிருப்பார்கள்? கடவுள் கொடுத்த வரமா? நடைமுறையிலிருந்து தப்பி ஓடிய பிறகு இயலாமையின் மாற்று வடிவமா? எனக்குத் தெரிந்து விநோத் அன்பின் மீது மிகவும் வலுவான பிடிமானம் கொண்டவன். அன்பான மனிதர்கள் இழப்பின் போது எந்த வியாக்கியானமும் பேசமாட்டார்கள் என்பது உண்மைத்தான். கதறி கதறி அழுவார்கள். தன் சகோதரர்களைக் கட்டியணைத்து அப்பாவின் முன் நின்றுகொண்டு “அப்பான்னு கூப்டுங்கடா, அப்பான்னு கூப்டுடா கோபி” என விநோத் அழுதது எனக்கு வெறும் ஒப்பாரியாகத் தெரியவில்லை. அது ஓர் உயிரின் வலி. எந்தத் தத்துவப் புரிதலையும் கொண்டு சமாதானப்படுத்த இயலாத அன்பின் குரல். அந்தத் தருணத்தின் மிக நியாயமான காட்சி. கண்கள் கலங்கியபோது அப்பொழுது நான் குட்டையாக இல்லை, கூட்டத்திற்குத் தெரியும்படி நன்றாக வளர்ந்திருப்பதை மறந்திருந்தேன்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா