“அவசரம் ஒன்னும் இல்லையே?” எனக் கேட்டுக்கொண்டே சொற்களால் இரம்பம் போடும் இவனிடம் மாட்டி 2 நிமிடங்கள் ஆகின்றன. சிறுநீர் முட்டிக்கொண்டிருந்த கணம். அலுவலகத்திலேயே சிறுநீரை அடக்குவதில் எனக்குத்தான் திறமை அதிகம். ஆனால், இப்பொழுது அந்த எல்லையைத் தாண்டி 5 நிமிடத்திற்கு மேல் ஆகிறது.
சிறுநீரை அடக்குவதற்குத் தனியாக அறிவெல்லாம் தேவையில்லை. தம் கட்டுவதில் வல்லுனராக இருக்க வேண்டும். அவசரத்தை முகத்தில் பளிச்சென்று காட்டக்கூடாது. வழிந்து வரவழைத்துக் கொள்ள எப்பொழுதும் ஒரு பொய்யான நிதானம் தேவை. முட்டிக்கொண்டு வந்தாலும் கழிப்பறைக்குச் செல்ல முடிவெடுத்த பிறகு ஓடக்கூடாது. ஏதோ சாதாரணமாக எழுந்து நிதானமாக நடக்க வேண்டும். நீர் அருந்துவதில் கூடுதலான கஞ்சத்தனம் செய்தாக வேண்டும். அடுத்ததாகக் கழிப்பறைக்குப் பலமுறை எழுந்து சென்றுவிட்டு வருபவரைப் பார்த்துச் சிரிக்கவே கூடாது. அடுத்து நமக்கு அது நேரிடலாம்.
“நீங்களே சொல்லுங்களேன் ப்ரோ…”
எனக்கு முன் நின்று கொண்டிருந்த அவன் தொடர்ந்து புகார்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனால் நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்கிற ஏற்பாடு மட்டுமே. நான் கேட்கிறேனா என்பதில்கூட அவனுக்கு அக்கறை இல்லை. என்னிடம்தான் சொல்ல வேண்டும் என்ற திட்டமும் அவனிடம் இல்லை. இதே நேரத்தில் வேறு யார் அவன் கண்ணில் பட்டிருந்தாலும் அவன் இதே போலத்தான் பேசியிருப்பான். டைக் கட்டிக்கொண்டு ஒரு கண்ணாடி போட்டிருந்தால் உலகத்திலேயே அவன் மட்டும்தான் புகார்களைப் பெறத் தகுதியானவனைப் போல எல்லாம் பொதுபுத்திகளும் நம்புகின்றன.
“ரெண்டாவது கல்யாணம் தப்பா? சொல்லுங்க ப்ரோ? நான் என்னா வச்சிக்கிட்டேவா இன்னொன்னு தேடிக்கிட்டேன்? யேன் இவுங்களாம் இப்படி இருக்காங்க?”
“ஐயோ! எதுமே தப்பில்லை. போதுமா? அப்பறம் பேசுறேன்”
“என்னா ப்ரோ? இப்படிப் பேசுறீங்க? நான் என்னா தப்பு பண்ணேன் சொல்லுங்க?”
“நீங்க எந்தத் தப்பும் பண்ணலை ப்ரோ. இப்ப நான் உடனே போகலைனா, அப்புறம் உண்மைலே இங்கத் தப்பாயிடும்”
அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டு விட்டால் போதுமென அவனிடமிருந்து விடைப்பெற்றேன். அவன் முன்னே கொஞ்சம் நேரம் யாராவது நிற்க வேண்டும். அதற்கு நான் ஆளில்லை என்று தப்பித்தேன். இன்னுமொரு 30 அடியில் கழிப்பறை. உடனே அடக்கிக் கொண்டிருந்த சிறுநீரை வெளியேற்ற வேண்டும். வழக்கமாக குளிரூட்டி அறையில் 10 மணி நேரம் வேலை செய்பவர்களின் அவதியும் அவசரமும் வெளியில் உள்ளவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைத்தான். அதுவும் மழைக்காலம் என்றால் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லும் அவதியும் அலுப்பும் சொல்ல முடியாதவை. வெய்யில் படாத வாழ்க்கை. எப்பொழுதும் சில்லென்ற உடல். ஏறக்குறைய தோல் மறுத்துப் போய்விட்டது என்றே சொல்லலாம். அதனால்தான் என்னவோ 'சூடு சுரணை இல்லாமல் தோல் தடிச்சிப் போச்சி' என எங்களைப் போன்றவர்கள் சிலர் திட்டித் தீர்க்கின்றனர்.