Thursday, June 3, 2010

எனக்குள் எரியும் ஒரு பிசாசைக் கொல்ல முயற்சிக்கின்றேன் எதிர்வினை: கருத்துத் திருட்டும்- சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அம்மையாரும்

முதல் பாகம்

(based on the true story)

எவ்வளவு அடக்கியும் இந்தப் பிசாசு அடங்க மறுக்கிறது. ஏற்கனவே வெறுக்கப்பட்டவர்களின் பட்டியலில் பலரின் பெயர் நிறைந்திருக்க, இப்பொழுது மீண்டும் பட்டியல் திறக்கப்படுகிறது, இன்னும் சிலரை அதில் உறுப்பினர்களாக்க. “இந்த மனதை வைத்துக் கொண்டு என்னத்தான் செய்வது” என்கிற நகுலனின் வரியைக் கொஞ்சம் திருடி, இங்கே இட்டு நிரப்பிக் கொள்கிறேன். கவனிக்கவும் சற்று முன்பு காரணமே இல்லாமல் நான் நகுலனைக் களவாடியிருக்கிறேன்.(கருத்துத் திருட்டு! ஆ! ஆ! ஆ!)

“பிழைப்புத் தேடி வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த எனது முந்தைய தலைமுறைக்கும், இன்றளவும் அதிகாரங்கள் துரட்டியடித்து பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் எனது மக்களுக்கும், இவர்களின் வாரிசாக இன்னமும் நேர்மையான அரசியலைப் பெற இயலாத சூழலில் மலேசியாவில் பிறந்து வளர்ந்து குடியுரிமை பெற்றிருக்கும் எனக்கும் இந்த எதிர்வினை கட்டுரையைச் சமர்ப்பிக்கின்றேன்.” ha ha ha ha ha ha ha

2003 வரை இலக்கிய பரிச்சியமே இல்லாதிருந்த நான், தற்செயலான விரிவுரையாளர் தமிழ் மாறனுடான சந்திப்பினாலும் புதுமைப்பித்தன், வண்ணநிலவன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் பிரதிகளை வாசித்துருவான வாசக மனதின் உந்துதலாலும் எழுதத் துவங்கினேன். வண்ணநிலவன், பாரதி, புதுமைப்பித்தனின் கருத்துகள் அல்லது எழுத்து எனக்கு எழுதுவதற்கான வலிமையை ஆர்வத்தைக் கொடுததது. அவர்களின் கருத்து சார்ந்து நான் புரிந்துகொண்ட புள்ளியிலிருந்து எனது உரையாடலை இலக்கியத்தைத் துவங்குகிறேன்.

ஆனால் எனக்குப் பெரிய பிரமிப்பு என்னவென்றால் பரிசுத்த ஆத்மாவான சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள் ஒரு நாள் ஆழ்ந்த கனவுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் தனது ஆழ்பிரக்ஞைக்குள் சர்யலீச காட்சி பிழைகளில் சிக்கிக் கிடந்த சமயத்தில் திடீரென ஓர் எழுத்தாளராகவோ அல்லது நூல் ஆசிரியராகவோ உருவாகிவிட்டார். விழித்ததும் ஒரு புத்தகத்தை எழுதி பிரசுரித்துவிட்டதுதான் மாபெரும் ஆச்சரியம். எந்தப் பிரயத்தனமும் இன்றி எந்தச் சலனமும் இன்றி உருவான இலக்கிய வடிவம் அவர் என அவர் “மிகச் சரியாகப்” புரிந்துகொண்டு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சிலர் இன்னமும் தவறான அவநம்பிக்கையில், அவரை ஓர் இலக்கிய பிரதியாக உருவாக்கியதில் ஏதாவது ஒரு பிரதியின் கருத்துகளுக்கோ அந்தப் பிரதியின் ஆழ்ந்த கலை எழுச்சிகளுக்கோ பங்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நீங்கள் அவரை அடையாளப்படுத்த நேர்ந்தால் இந்தச் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி ஒரு “கருத்துத் திருடர்” எனும் தீர்மானத்திற்கு வர நேரும். ஆகையால் நாம் இங்கே பிடிவாதமான சமரசத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர் எந்தக் கருத்தையும் சாராமல் அல்லது எதிர்க்காமல், எந்தவொரு பிரதியின் கருத்துகளையும் உள்வாங்கி தரிசிக்காத, மிக மிக உன்னதமான பரிசுத்த ஆத்மா.

குறிப்பாக அவர் தனது சில நூல்களில் எழுதியுள்ள “கருத்துகளுக்கு” பதிப்புரிமை வாங்கி, அதைப் பதிவும் செய்துவிட்டார் என்பதும் உறுதி. காரணம் அவர் குறிப்பிட்டது போல கருத்துத் திருட்டு நிகழாமல் இருக்க வேண்டுமல்லவா. மேலும் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி கருத்துகளுக்கு வெளிநாடுகளில் கோடிக்கும் மேற்பட்ட தொகையில் காப்புரிமை வழங்கப்படுகிறது. அத்துனைச் “சுயமான சுத்தமான புதிய உற்பத்தியான” அவரது கருத்துகள் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவையாகும். (என்னையுமறியாமல் சிரிப்பு வரும்போதெல்லாம் பிறரைக் கேலி செய்து சிரிப்பது மிகக் கொடுமையான விஷயம் என்பதால் அடக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்)

முதலாவதாக சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அவர்கள், எனக்கும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்குமான உரையாடல் குறித்து சொல்லும்போது, அவரது கருத்துகளையே நான் அங்கு வாந்தியெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஜெயந்தியைப் புகழ்வதற்காக நான் அவரது “மிகப் பெரிய அறிவார்ந்த வாந்தியை. . மன்னிக்கவும் கட்டுரையைத் தேர்ந்தெடுத்ததாக வேறு குறிப்பிட்டிருந்தார். தனது கட்டுரைக்குப் புகழ் தேடுவதிலும் சில நியாயம் இருக்க வேண்டாமா? அதற்காக இப்படியா? ஜெயந்தியை இனி நான் வேறு தனியாகப் புகழ வேண்டுமா? அல்லது புகழ்ந்தால் அவர் எனக்கு 100 சிங்கப்பூர் டாலர் தருவதாகக் கூறிய ஒப்பந்தத்தையேதேனும் லஷ்மி தனது சர்யலீச கனவில் மறைந்திருந்து கண்டுவிட்டாரா? தொடர்ந்து பல முக்கியமான எழுத்தாளர்களால் விமர்சிக்கப்படும் அடையாளப்படுத்தப்படும் வகையில் நல்ல மதிப்பையும் பாராட்டையும் பெற்ற ஜெயந்திக்கு இந்தச் சாதாரண புகழ்ச்சியெல்லாம் அனாவசியம் எனத்தான் நினைக்கிறேன். லஷ்மிக்குள் இருக்கும் ஏதோ ஒரு புகை எரிந்து வெளிப்பட்டதன் விளைவாக அவர் இப்படியொரு கருத்தை முன்வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். உலகம் அறியாத அப்பாவியாக அல்லவா இருக்கிறார்.

அடுத்ததாக எனது உரையாடலை முன்வைத்து கருத்துத் திருடர் எனும் பட்டத்தையும் வழங்கியிருக்கிறார். அதென்ன கருத்துத் திருட்டு? யாராவது தன் சுயக் கருத்துகளைப் பிறர் எடுத்து விவாதிக்கக்கூடாது எனவும் அல்லது தனது கருத்துகளின் அடிப்படையில் யாரும் எந்த உரையாடலையும் நடத்த கூடாது எனவும் அல்லது என் கருத்துகள் எனதானது யாரும் அதைப் படித்துவிட்டு அதை உணரக்கூடாது எனவும் வாதிட்டுள்ளார்களா? முதலில் லஷ்மி மௌனம் கட்டுரையில் வெளியீட்டுள்ள கருத்துகள் முழுக்க முழுக்க அவருடையதுதான் எனவும் இந்தக் கருத்துகளை உருவாக்க அவர் எதையும் மேற்கோளாகக் கொண்டிருக்கவில்லை எனவும் நிருபிக்க இயலுமா?

மேலும் ஒரு மிகப் பெரிய அபத்தம் என்னவென்றால், மௌனம் இதழில் வெளிவந்த இவரது கட்டுரை இப்படித்தான் தொடங்குகிறது. “ கவிதையைக் கூட எளிதில் எழுதிவிடலாம். ஆயின், கவிதையைப் பற்றி எழுதுவது மிகவும் அருமையுடைய செயல் என்பது விக்ரமாதித்யனின் கருத்து.“ ஆக கவிதை குறித்து கவிஞர் விக்கிரமாதித்தியன் என்ன கருத்தை அல்லது புரிதலைக் கொண்டிருக்கிறார் என இவர் குறிப்பிட்டதன் பின்னனியில் எந்தவகையான “கருத்துத் திருட்டு” நடந்துள்ளது? கவிதையைப் பற்றி இவர் என்ன புரிந்து வைத்திருக்கிறார் என்பதுதான் இங்கு முக்கியமாகப் படுகிறதே தவிர விக்கிரமாதித்தியன் சொன்னதையெல்லாம் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள் மீள்வாந்தியெடுக்க வேண்டாம் எனவும் பலர் கேட்கக்கூடும். (கேட்டும் இருக்கிறார்கள்)

இலக்கியத் திருட்டு என்பதைப் பின்வருமாறு புரிந்துகொள்ளலாம்.

1. பிறர் எழுதிய கதையை அப்படியே எடுத்து தனது பெயரை இட்டு வெளியிடுவது
2. பிறர் கருத்தை முன்வைத்து எழுதியும், பின்குறிப்பில் அல்லது எங்காவது மேற்கோளாகத் துணைப்புரிந்தவர்களின் பிரதியையோ அல்லது பெயர்களையோ குறிப்பிடாமல் மறைப்பது
3. பிறர் சொன்ன கருவை அவருக்கே தெரியாமல் படைப்பாக்கி எந்த இடத்திலும் உந்துதல் பெற்ற மூலத்தின் அடையாளத்தை மறைப்பது/மறுப்பது
4. பிறர் எழுதியதைத் தன் சுய லாபத்திற்காக நூலாக்குவது
5. பிறரின் படைப்புகளைப் பிரசுரம் செய்து, அவர்களைச் சுரண்டி தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வது

எனக்கு அறிந்து இதை இப்படியும் வகைப்படுத்தலாம். அல்லது இதைவிடவும் கூடுதலான விளக்கங்கள் இருந்தால், தெரியப்படுத்துங்கள். கேட்டுக் கொள்கிறேன். ஆகையால் எனக்கும் ஜெயந்திக்கும் இடையிலான உரையாடலில் நான் இந்த நேர்காணலைத் தொடங்குவதற்கான காரணத்தை, “மௌனத்தில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி எழுதிய விமர்சனத்தை முன்வைத்தே” என இரு இடங்களில் குறிப்பிட்டுருக்கிறேன். அவரது அந்தக் கட்டுரை பிரசுரமாகாமல் இருந்திருந்தால் அப்படியொரு உரையாடலும் நிகழ்ந்திருக்காது எனவும் சொல்லியிருந்தேன். எங்கேயும் லஷ்மியின் கட்டுரையையோ அல்லது அவரது பெயரையோ நான் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. சிங்கப்பூர் லஷ்மி இதை நன்கு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் சுமாரான கருத்துகளைத் திருடும் அளவிற்கு எனக்குக் கருத்து பஞ்சம் ஏற்பட்டுவிடவில்லை. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் உங்களின் கருத்துகளுடன் உடன்படாத எதிர்வினைத்தான் அந்த உரையாடல் என்பதைக்கூட நீங்கள் புரிந்துகொள்ள மறுத்துள்ளீர்கள்.

அப்படியென்றால் இங்கே அதிகமாகத் திருடப்பட்டிருப்பது பாரதியும் புதுமைப்பித்தனும்தான் போல. இந்த முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்களும் புதுமைப்பித்தனின் படைப்புகளை வாசித்து ஆராய்ந்து, அவரது சுய உழைப்பைச் சுரண்டி புத்தகம் போட்டு சம்பாதித்துவிட்டார் எனவும், “அவரது மொழியில்” சொல்லலாம் போல. (இது அவரே முன்மொழிந்துள்ள கருத்துத் திருட்டுக்கான புதிய விளக்கத்தின் அடிப்படையில், எனது விளக்கமல்ல).

ஒரு படைப்பை விமர்சிப்பதென்பது, முதலில் அந்தப் படைப்பின் செய்திகளையும் அதன் கருத்துகளையும் உள்வாங்கி புரிந்துகொண்டு அந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் படைப்பு மொழியிலிருந்து விடுப்பட்டு விமர்சன மொழிக்குத் தாவும் ஓர் உத்தியாகும். பிரதியின் கருத்துகளைக் கொண்டுத்தான் விமர்சன மொழியில் நமது ஆக்கத்திறமையால் இன்னொரு விமர்சனத்தை அல்லது பார்வையை உருவாக்க முடியுமே தவிர பிரதியின் கருத்துகளை முற்றிலும் நிராகரித்துவிட்டு வெறுமனே ஒரு புரிதலை விமர்சனமாக முன்வைப்பது ஆரோக்கியமற்றது.

எடுத்துக்காட்டாக லஷ்மிக்குத் தெரியாத சில விஷயங்கள்:

1. based on the true event
2. based on the true story
3. inspired by novel
4. inspired by short story

இப்படிப் பல காரணங்களாலும் பல மூல படைப்புகளின் உந்துதல்களாலும் உருவான பல ஆக்கங்கள் உண்டு. ஒருவரின் கருத்தைப் பின்தொடர்ந்து அதனையொட்டி அதனை முன்வைத்து நம் புரிதலை உருவாக்குவதென்பது “கருத்துத் திருட்டு” ஆகாது என நினைக்கிறேன். முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி சொல்வதைப் பார்த்தால் மொழிப்பெயர்ப்பாளர்கள் எல்லோரும் திருடர்கள்தான்? ஒருவனின் மூலப் படைப்பை எடுத்து தனது பன்மொழி ஆற்றலைப் பயன்படுத்தி அதனை இன்னொரு பிரதியாக்குவதென்பது திருட்டு என்றே அவரது மொழியில் சொல்வதென்றால் உலகில் நிகழ்ந்துள்ள ஒட்டுமொத்த அரிய மொழிப்பெயர்ப்பு முயற்சிகளும் “கருத்துத் திருட்டென” அர்த்தமாகிவிடும் அபாயம் உண்டு. (மூலப் பிரதிக்கு உரிமையானவரின் அனுமதியில்லாமல் அல்லது அந்தப் பதிப்பகத்தாரின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் மொழிப்பெயர்ப்புகள் மட்டுமே திருட்டு எனப் புரிந்துகொள்ளலாம்)

மேலும் சிங்கப்பூர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி அவர்கள் ஜெயந்தி சங்கர் அவர்களை “ ஜெயந்தி சங்கரும் ஒரே பேட்டியை, ஒரே கட்டுரையைப் பல இணையத் தளங்களிலும் வெளியிட்டு உலக அளவில் பிரபலமாவதற்காகப் பல தளங்களிலும் புகைப்படங்களைப் பிரசுரிக்கச் செய்து ‘பிரமப் பிரயத்தனம்’ செய்து கொண்டிருக்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே தவறை அவரும் செய்திருப்பது அவருக்குத் தெரியாமல் இருக்கும் பரிதாபத்தை எப்படிப் புரிய வைப்பது எனக் குழப்பமாக இருக்கிறது. கடந்த மௌனம் இதழில் பிரசுரமான அதே கட்டுரையைத்தான் இவர் வல்லினம் அகப்பக்கத்திற்கும் அனுப்பி வைத்திருக்கிறார். (இந்தச் சுய முரணைக் கவனிக்கவும்)

அடுத்ததாக சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர் பாண்டித்துரையின் இரு வேறு கவிதைகளைக் குறிப்பிட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார். “இவரிடம் சிந்தனைத் தெளிவு இல்லாத காரணத்தால் கவிதைகளில் இருண்மை நிலவுகிறது. இதற்குச் சான்றாகத் தலைப்பில்லாக் கவிதைகளைக் கூறலாம்.இவரது கவிதைகளில் முரண்பாடுகள் உள்ளன. ஒரு கவிதை, “மனிதர்களை

எனக்குப் பிடிப்பதில்லை
அப்பன்னா நீ யாரு
நானா
ஆறு அறிவு மிருகம்
தேடிக் கொண்டிருக்கிறேன்” (பிரம்மா, ப-32)

என மனிதனை வெறுக்கிறது.
ஆனால், இவரின் மற்றொரு கவிதையோ,

“நான்
உறவுகளை
மனிதமாகவே பார்க்கிறேன்
அவர்களுக்குக் கிடைத்த
கௌரவமே உறவு” (பிரம்மா, ப-33)"
ஆக முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி கருத்துபடி ஒரு எழுத்தாளன் என்பவன் எந்தவகையிலும் தன் எழுத்தின் மூலம் முரண்படவே கூடாது. அவனுக்குக் கொடுக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து அவன் மீளாமல் பரிசுத்த ஆத்மாவாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை விநியோகம் செய்திருக்கிறார். இருவேறு சூழல் கொடுத்த மனநிலையில் பாண்டித்துரை இரு வேறான கவிதையை எழுதியிருப்பதைப் பெரும் குற்றம் போல வாதாடுகிறார் இந்தக் சமூகக் காவல்துறை அதிகாரி முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி அவர்கள். (ஆனால் இவரும் தனது எழுத்தின் மூலம் கருத்தின் மூலம் பல இடங்களில் முரண்பட்டிருப்பதைச் சற்று முன்பு விளக்கியிருந்தேன்). முரண்படுவதும் உடன்படுவதும், தன் எழுத்தின் மூலம் அவன் அடைப்படுவதும் விடுதலை பெறுவதும் அனைத்தும் அவனுக்கான உரிமை. அதைக் கண்டு இவர் ஏன் மன உளைச்சலுக்கு ஆளாகிறார் எனத்தான் புரியவில்லை.

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலஷ்மி அவர்களுக்கு, நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிறரின் இலக்கியச் சுதந்திரத்தைப் பறிப்பதிலும், அதைத் துன்புறுத்துவதிலும் அலாதிய பிரியம் உண்டு என்பதை உலகம் அறியும், நீங்கள் குறிப்பிடும் அந்த வந்தேறிகளின் கூட்டமும் அறியும். நான் எனக்காகப் பேசவும் இல்லை, என்னைத் தற்காத்துக் கொள்ளவும் பேசவில்லை.


பாகம் இரண்டில் பிரசுரமாகும் சூடான செய்திகள்:

1. அடையாள சிக்கலை உற்பத்திக்கும் மொழி
2. வேடந்தாங்கள் பறவைகள் இல்லாமல் லஷ்மியின் விமர்சனங்களும் இல்லை
3. புதுமைப்பித்தன் என்ன சிங்கப்பூர் குடிமகனா அல்லது முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி என்ன தமிழகத்து விமர்சகரா?
5. வந்தேறிகள் எனும் அடையாளத்திற்குப் பின் இருக்கும் புலம் பெயர்
அரசியலின் பார்வையைக் கொண்டிராத தட்டையான விமர்சனம்
இன்னும் பல.

-பாகம் 2 அடுத்த வாரம் மீண்டும் சூடான செய்திகளுடன் பிரசுமாகும்.-

குறிப்பு: எதிர்வினை நமது சக்தியை விரையமாக்கும், எனது படைப்புகள் உருவாதற்கான தருணங்களைப் பிடுங்கிக் கொள்ளும் என்றெல்லாம் தொலைப்பேசியில் மூலம் தயவு செய்து அறிவுரைகள் கூற வேண்டாம். அறிவுரைகளைக் கண்டாலே 10 அடி தள்ளி நிற்க வேண்டிய சூழ்நிலை.

thanks to
maunam magazine(malaysia)
vallinnam(malaysia e-magazine)

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா