சீ.முத்துசாமி
எழுத்தாளர் சீ.முத்துசாமியை நான் கோலாம்பூரில் ஒரு நாவல் பட்டறையில்தான் சந்தித்தேன். அப்பொழுது அவருடைய ‘மண் புழுக்கள்’ நாவலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நூலாக வெளியிட்டிருந்தது. ஏற்கனவே பத்திரிகைகளில் நான் எழுதி கொண்டிருந்ததால் சீ.முத்துசாமி உடனே என்னை அடையாளம் கண்டு கொண்டார். அன்றைய வருடம் நான் அவரைச் சந்திப்பேன் என நினைக்கவில்லை. இலக்கியத்தில் எந்தச் சமரசமும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார். அவருடனான சந்திப்புத்தான் என் இலக்கியப் போக்கைக் கொஞ்சம் கூர் தீட்டி விட்டது என்றே சொல்லலாம். எந்தப் புகழ்ச்சிக்கு முன்னும் தன் தலையையோ முதுகையோ கழுத்தையோ கொடுக்காமல் என் பார்வைக்குக் கம்பீரமாகத் தெரிந்தார்.
தன் எழுத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரக்கூடாது எனப் பயப்படுபவர்கள் வெறும் புகழ்ச்சியை மட்டுமே விரும்பி திரிவார்கள். ஒரு நான்கு பேரைத் தன் எழுத்தின் பலத்தை மட்டுமே பேச வைத்துத் தன்னைப் போலியாக நிறுவிக்கொள்வார்கள். எப்பொழுதுமே தன்னைப் பாராட்ட உடன் சிலரை வைத்துக் கொள்வார்கள். இதுதான் இன்றைய இலக்கிய சூழல். ஆனால், நான் பார்த்தவரை தனித்து இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் சீ.முத்துசாமி. அவர் குழுவோடு இருந்து அல்லது நீடித்தோ நான் பார்த்ததில்லை. ஒரு சில நாட்களுக்குள் அவர் முரண்பட்டு நிற்பார். அவர் ஒரு தனித்த மரம். மண்ணைக் குடைந்து ஆழமாக வேர்விடும் தன்னிகரற்ற வனவேட்டை அவருடைய எழுத்துகள்.
அவரிடம் எப்பொழுதுமே எனக்கு சுமூகமான உறவு இருந்ததில்லை. நிறைய சண்டைகள், வாக்குவாதங்கள் மத்தியிலும் என்னால் அவரைப் பற்றி விமர்சித்துப் பேச முடிகிறது. விமர்சனங்களைக் கண்டு அவர் அஞ்சியதே இல்லை. 2007ஆம் ஆண்டில் அவருடன் நான் நெருக்கமாகப் பழகிய காலத்தில் அவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது அதுதான். தன் எழுத்தின் மீது விமர்சனமே வரக்கூடாது என ஒரு படைப்பாளி பயப்படவே கூடாது. அப்படிப் பயந்தால் அதனைச் சுற்றி அவன் ஒரு மாயை கோட்டையைக் கட்டிக் கொள்வான். யார் தன் மீது எதிர்மறையான விமர்சனத்தை எறிந்தாலும் அதனிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள காலம் முழுவதும் போராடி சாவான். அவர் வீட்டில் வைத்து சொன்னது. அப்பொழுதுதான் நான் தீவிரமாக எழுதத் துவங்கியிருந்தேன். விமர்சனங்கள் வரும் எனத் தெரிந்து கொண்டேன். இன்றளவும் என்னை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் என்னால் கொஞ்சமும் தீவிரம் குறையாமல் எழுத முடியும் என்கிற திடத்தை நான் இலக்கியத்தில் தொடர்ந்து இயங்குவதன் மூலம் பெற்றேன். அதற்கு சீ.முத்துசாமியும் ஓர் ஊக்கமாக இருந்தார் எனலாம்.
ஆனால், அவர் எப்பொழுதுமே ஒரு சிறு கருத்து முரண் உருவானாலும் அந்த உறவைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பமாட்டார். கடுமையான வார்த்தைகளால் நம் மனத்தைக் காயப்படுத்தக்கூடியவர். அதற்காக அவர் அஞ்சியதே இல்லை. இவையாவும் எழுத்தாளர் சீ.முத்துசாமியின் மீதுள்ள என் அபிமானங்கள். சமீபத்தில் அவருடைய குறுநாவல்கள் வெளீயீட்டில் கலந்து கொண்டேன். அன்புடன் வரவேற்றார். அவர் குரலில் ஒரு மாற்றம் இருந்தது. யாருடைய உதவி இல்லாவிட்டாலும் என்னால் இயங்க முடியும் என்கிற துடிப்பைத் தக்க வைத்திருந்தார்.
கோ.புண்ணியவான்
நான் எப்பொழுதும் கவலைப்படும் ஒரு விடயம் உண்டு. மலேசியாவில் இருக்கக்கூடிய மூத்தப் படைப்பாளிகள் அடுத்த தலைமுறையிடம் நேர்மையாக விவாதிக்கவோ அல்லது எங்களின் படைப்புகளைப் பாராட்பட்சமின்றி விமர்சிக்கவோ தயாராக இல்லை என்பதுதான். தனக்குத் தெரிந்த தனக்குப் பிடித்தவர்களிடம் மட்டும் தன் விமர்சனங்களை பேச்சின் வழி அல்லது மேடையின் வழி பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்னார் இன்னார் என்று பாராமல் ஒரு காலக்கட்டத்தில் வெளிவரும் படைப்புகளை ஆராய்ந்து வாசித்து விமர்சிக்கும் ஒரு மூத்தப் படைப்பாளியை இங்குப் பெற்றிருந்தால் வளமாக இருந்திருக்கும்.
கோ.புண்ணியவான், டாக்டர் சண்முகசிவா, ரெ.கார்த்திகேசு போன்றவர்கள் தங்களின் விமர்சனங்களை மேடையிலும் பேச்சிலும் முன் வைத்திருக்கிறார்கள். அதிலும் கோ.புண்ணியவான் அவர்களுடன் பழகிய காலத்தில் அவர் எப்பொழுதும் நம் எழுத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். காரில் பயணம் செய்யும்போது சிலாகித்துப் பேசுவார். கோ.புண்ணியவான் அவர்களை 2008ஆம் ஆண்டில் எழுத்தாளர் இயக்கம் தொடர்பான ஒரு வேலைக்காக நானே நேரில் சென்று சந்தித்தேன். அதுதான் அவருடனான முதல் சந்திப்பு. அதற்கு முன்பே அவருடைய நேர்காணலையும் படைப்புகளையும் 2006ஆம் ஆண்டில் காதல் இதழில் வாசித்துள்ளேன்.
எனக்குத் தெரிந்து, எழுத்தாளர் கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி போன்றவர்கள் எந்த இயக்கத்தினாலோ அல்லது சங்கத்தினாலோ உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. இதுவரையிலும் அவர்கள் எதையும் சார்ந்து இயங்கவில்லை. ஆனால், பல காலக்கட்டங்களில் சங்கங்களோடு இயந்து செயல்பட்டுக்கிறார்கள். இருவரும் கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தில் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், சங்கங்களைத் தாண்டியே அவர்கள் தன் ஆளுமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக கோ.புண்ணியவான் அவர்கள் புதுக்கவிதை சூழலில் நிறைய பங்களிப்புச் செய்துள்ளார். அவருடைய புதுக்கவிதை ஆய்வுகள் அக்கறைமிக்கது. பல்வேறு பிரிவுகளில் கவிதைகளின் பேசும்பொருளை முன்னிட்டு எளிய வாசகர்களுக்கும் புரியும்படி பேசக்கூடியவர்.
ஆனால், கோ.புண்ணியவான் இக்காலக்கட்டத்தில் இப்பொழுது எழுதி கொண்டிருக்கும் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து விமர்சனங்களை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதாக நினைக்கிறேன். கடந்த பல்லாண்டுகளாக மலேசியத்தமிழ் இலக்கியத்தில் தன் சரக்குகள் தீராமல் இன்னமும் தீவிரத்துடன் எழுதி வரும் ஒரே படைப்பாளியாகக் கோ.புண்ணியவானை மட்டுமே சொல்ல முடியும். இடைவெளிவிடாமல் அதே சமயம் இலக்கியத்தின் மீது தனக்கிருக்கும் ஆர்வம் குறையாமல் இயங்கி வருபவர். ஆனால், இத்தனை வருடங்கள் ஏன் அவர் இளம் படைப்பாளிகளைத் தீவிரமாக விமர்சிக்கவில்லை என்பதே என் கவலை. சமீபத்தில் அவருடைய வன தேவதை சிறுவர் நாவல் வெளியிடப்பட்ட போது மிகவும் மகிழ்ந்தேன். என் நாவலே வெளியிடப்படும் ஆவல் எனக்கிருந்தது. சிறுவர்களுக்குத் தாத்தாவாக இருக்க வேண்டியவர் ஒரு சிறுவனாகவே மாறி சிறுவர் நாவல் எழுதியிருப்பது எத்தனை ஆச்சர்யமான முயற்சி? ஆனால், கோ.புண்ணியவான் போன்ற மலேசிய மூத்த படைப்பாளிகள் சமீபத்தில் எழுதி வரும் இளம் படைப்பாளிகளின் மீது பாராபட்சமில்லாத விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மற்ற படைப்புகளைக் கூர்ந்து கவனித்து விமர்சித்து ஒரு புதிய புரிதலுக்கு அடுத்தக்கட்ட வாசகர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்திலிருந்து வந்து விமர்சிப்பவர்களைவிட கோ.புண்ணியவான் அல்லது சீ.முத்துசாமியால் மட்டுமே மலேசிய வாழ்வினூடாகப் பேசப்படும் இலக்கியங்களை இன்னும் நெருக்கமாக உணர்ந்து விமர்சிக்க முடியும் என்பது என் கருத்து.
- கே.பாலமுருகன்