Thursday, June 25, 2009

ஆறாம் விரலும் புகை மண்டலமும்


நகரத்தில் நடப்பவர்களுக்கும், நிற்பவர்களுக்கும், அமர்ந்திருப்பவர்களுக்கும் ஒரு ஆறாம் விரல் இருப்பதைப் பற்றி எத்தனைப் பேருக்குத் தெரியும்? அந்த ஆறாம் விரல் முளைத்துவிட்ட மனிதர்கள் ஆயாசமாக நகரத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எந்த இடத்திலும் சட்டென்று பார்த்துவிடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அது என்ன ஆறாம் விரல்? புகைப்பவர்களின் கை இடுக்குகளில் உற்றுக் கவனியுங்கள் சிகரெட் துண்டு நெருப்பைக் கக்கிக் கொண்டு சாவகாசமாக வளர்ந்திருக்கும். அதுதான் அந்த ஆசாமிகளின் ஆறாம் விரல் என்று கவிஞர்கள் முதல் பாடலாசிரியர்கள்வரை வர்ணித்துக் கொள்கிறார்கள்.

மருத்துவமனைக்கு வெளியில், பேருந்து நிறுத்தத்தில், மேம்பாலத்தின் சரிவில், பேரங்காடியின் சுவர் நெடுக, நடைப்பாதையில் இப்படி நகரத்தில் நாம் நகரக்கூடிய எல்லாம் இடங்களிலும் புகைப்பவர்களையும் ஆறாம் விரல் நபர்களையும் பார்க்கலாம். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தம்மால் ஏற்படவில்லை என்ற பாவனையில் அவர்களை மறந்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்ட முகக்குறிப்புகளை வெளிப்படுத்திக் கொண்டு புகைத்துக் கொண்டிருப்பார்கள். புகை பிடித்தால் சிந்திக்க முடியும் என்று யார் சொல்லியிருப்பார்கள்? ஆறாம் அறிவுதான் பகுத்தறியும், ஆறாம் விரலும்கூடவா?

புகைப்பவர்களை யாராலும் தடுக்க முடியாது. ஒருசிலர் அவர்களிடமிருந்து விலகி நடப்பதையும், மூக்கைப் பொத்திக் கொண்டு நகர்ந்து கொள்வதையும் பார்க்கலாம். ஆக மொத்தத்தில் கெடுதி என்று தெரிந்தும் தாராளமாகப் புகையிலையை வாங்கவும் அதைப் பொது மக்கள் இருக்கும் நகரத்தில் சுதந்திரமாகப் புகைக்கவும் இங்கு எல்லாம் வசதிகளும் இருக்கின்றன. புகைப்பவர்கள் நிற்கும் இடத்தில் நன்றாகக் கண்காணித்துப் பாருங்கள். எங்காவது “புகைப் பிடிக்காதீர்கள்” என்ற அறிவிப்பு அட்டை தொங்கிக் கொண்டிருக்கும். அந்தப் புகைப் பிடிப்பவனின் அருகில் நின்று கொண்டிருக்கும் எல்லோரும் அந்த அறிவிப்பு பலகையைப் பார்த்திருப்பார்கள். இருந்தும் புகை மண்டலம் சூழ அந்த நடு வெயிலிலும் மக்கள் சாதாரணமாக தங்கள் கடமைகளில், நகர்வில் ஆழ்ந்து கரைந்து கொண்டிருப்பார்கள். அந்தப் புகைப் பிடிப்பவனையோ அந்தப் புகையைச் சுவாசிக்கும் சக மனிதனின் பாதிப்பு பற்றியோ யாருக்கும் அக்கறை இருப்பதாகக் கட்டாயம் தெரியாது.

“தம்பி! இந்த எடத்துலே சிகரேட் குடிக்காதீங்க!”

“அண்ணன்! நீங்க குடிக்கும் சிகரெட் மூச்சி திணற வைக்குது, தயவு செய்து புகைப் பிடிக்காதீங்க”

“யப்பா, தம்பி! அங்க பாரு புகைப் பிடிக்கக்கூடாதுனு போர்டு போட்டுருக்கு. . சிகரெட்டெ அணைச்சிருப்பா”

இப்படியெல்லாம் புகைப் பிடித்துக் கொண்டிருப்பவனை பார்த்து கேட்க யாருக்காவது தைரியம் வந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்களா? பார்த்திருந்தால் மகிழ்ச்சி. இருந்தும் பல இடங்களின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மறுத்து தனது ஆண்த்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காகவும் தனது செல்வாக்கைக் காட்டிக் கொள்வதற்காகவும் ஒருசிலர் புகைப் பிடித்து சக மனிதனை வெறுப்பேற்றுவார்கள். அந்த ஆறாம் விரல்காரர்களுக்குப் புகைப்பதிலும் சிகரெட்டைத் தனது விரல்களின் இடுக்குகளில் சுமந்து கொள்வதும் பெரும் பாக்கியமாகவும் நாகரிக உலகம் தரக்கூடிய சுயமரியாதையாகவும் தோன்றுகிறது. அவர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.

“ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்”

பள்ளிக்கூட சீருடையில் பேரங்காடியின் வெளிச்சுவரில் சாய்ந்து கொண்டு ஸ்டைலாகப் புகைப் பிடிக்கும் மாணவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? இனியாவது பாருங்கள், அந்த மாணவர்களுள் உங்களுக்குத் தெரிந்த நண்பரின் மகனோ அல்லது உங்களின் சொந்தக்கார பையனோ இருக்கலாம். அவர்களுகெல்லாம் குரு யாரென்று தெரியுமா? வேறு யாரும் இல்லை, நம்முடைய தமிழ் சினிமா கதாநாயகர்கள்தான். விரலால் சுண்டி வாயில் சிகரெட்டைக் கவ்விக் கொள்வதில் தொடங்கி பல ஆண்டுகளாகக் கதாநாயகர்கள் சிகரெட்டைக் கொண்டு செய்யும் சாகசத்தைதான் இன்று நம் மாணவர்களும் பின்பற்ற முயல்கிறார்கள். அதற்கு நகரம் பெரும் வசதியாக ஆகிவிட்டது. பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சுற்றித் திரியும் எல்லாம் மாணவர்களின் கைகளிலும் ஆறாம் விரல் முளைத்திருக்கும். அந்த ஆறாம் விரலுடன் நகரத்தில் எங்காவது இரகசிய இடுக்குகளில் தனக்கென்று ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு புகைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அது ஒரு புகை மண்டலம்.

பொது இடங்களில், கர்ப்பிணி பெண் இருக்கும் இடங்களில், சிறுவர்களுக்கு முன், பேருந்தில், இப்படி ஆறாம் விரல் மறுக்கப்படும் இடங்களிலும் தைரியமாகப் புகைப் பிடிக்கும் நபர்களை என்ன செய்யலாம் என்று நமக்கெல்லாம் தோன்றும். என்ன செய்வது? 4 மணி நேரம் அவர்களை அமர வைத்து கருத்தரங்கம் நடத்த முடியுமா? அல்லது காவல் துறையில் தெரிவிக்க முடியுமா? அல்லது நேருக்கு நேர் அவரிடம் சண்டையிட்டு முறையிட முடியுமா?

இன்றைய தினத்தில் நகரம் பெரும் புகை மண்டலமாக மாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பார்க்கும் திருப்பங்களிலெல்லாம் யாராவது ஒருவர் புகைப் பிடித்துக் கொண்டு ஆசுவாசமாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கடக்கும்போது அவர்கள் விடும் புகையை நீங்களும் கொஞ்சம் சுவாசித்துக் கொள்கிறீர்கள். அந்த ஆறாம் விரல்காரனின் அழிவில், மிகவும் நாகரிகமாக எல்லாம் வகையான ஒத்துழைப்புடனும் நாமும் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்கிறோம்.

“ஐயா அப்பாவுக்குக் கடையில போய் ஒரு சிகரெட் வாங்கிட்டு வந்துரு”

எங்கிருந்து தொடங்குகிறது இந்த அழிவு? அந்த வேரைப் பின் தொடர்ந்து சென்று பாருங்கள். எல்லாம் முடிந்தவுடன் நீங்கள் ஒரு நகரத்தில் வந்து நிற்பீர்கள். அருகில் நடக்கும் ஆளைக் கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு நகரம் புகையால் சூழப்பட்டிருக்கும். தடவி தடவித்தான் நடக்க முடியும். அப்படித் தடவும்போது அருகிலுள்ள நபரைத் தொட நேர்ந்தால், அந்த நபருக்கு ஆறாம் விரல் முளைத்திருப்பதை உணர முடியும். அந்தத் தருணத்தில் நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் நீங்கள் இருப்பது புகைக் கக்கும் மனிதர்களின் நகரத்தில் என்று.

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா