Tuesday, May 4, 2010

பழைய பட்டணமும் அப்போய் காப்பி கடையின் தெரு முனையும்

தெரு முனைக்கும்
அப்போய் கடைக்கும்
மத்தியில்
படுத்துக் கிடக்கிறது
ஒரு பழைய பட்டணம்.

அப்போய் காப்பி கடையின்
முன்வாசல் பலகை கதவுகளுக்கு
எண்கள் உள்ளன.
ஒவ்வொன்றாய் அடுக்கி வைக்கப்படும்
காலைப்பொழுதில் மெல்லிய
வாசம் பரவிக் கொண்டிருக்கும்.

கூலிம் பாலிங்
மெந்தக்காப்
கோலா கெட்டில்
போன்ற உட்பகுதிகளுக்குச் செல்லும்
பேருந்துகள் தெரு முனையில்
வந்து நின்றுவிட்டு
தடதடவென மீண்டும்
புறப்படும்.

துணிக்கடைகளின்
சோம்பல் வேலைகளுக்காக
சைக்கிளில் வந்துகொண்டிருக்கும்
சீனப் பெண்மனிகளுக்கு
எப்பொழுதும் அப்போய் கடையிலிருந்து
ஒரு புன்னகை தரப்படும்.

மஞ்சள்
சிவப்பு, பச்சை
கருப்பு என
எல்லாம் நெகிழிகளிலும்
பிதுங்கியவாறு எட்டிப் பார்க்கின்றன
காய்கறிகளும்
செவுட்டு தவுக்கே
கடையிலிருந்து கொண்டு வரும்
விரால்களும்.

திட்டு திட்டாக
இரைந்திருந்த கூட்டம்
தெரு முனைக்கு வந்ததும்
ஒரு காப்பி குடித்துவிட்டு
அப்போய் கிழவனிடம்
பேசிவிட்டுத்தான் நகர்கிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா