Friday, February 6, 2015

என்னை அறிந்தால்- திரைவிமர்சனம்

அஜித் சமீபமாக சினிமா கொண்டாட்டங்களை, சினிமா சார்ந்து கிடைக்கும் புகழ்களை, ஆர்ப்பாட்டங்களை விரும்பாத நடிகராகவே உலா வருகிறார். தன்னுடைய அனைத்து இரசிகர் மன்றங்களையும் களைக்கும்படி தைரியமாகச் சொன்னவர். சினிமா உலகம் அதுவும் கதாநாயகர்களின் கொண்டாட்டங்களை முன்னிறுத்தும் தமிழ்ச்சினிமாவில் இத்தகையதொரு முடிவை எடுப்பதற்கு ஓர் எளிமையான மனம் வேண்டும்.

அஜித் அவர்களை விஜய் இரசிகர்களின் மனநிலையிலிருந்து பார்ப்பதோ அல்லது விஜய்க்கு எதிரான மனநிலையிலிருந்து பார்ப்பதோ தவறாகும். நடிகர்கள் என்ன சினிமாவின் கடவுள்களா? அவர்கள் சினிமா தொழிலாளிகளே.

அதற்காக, அஜித் நடிக்கும் படங்களை அப்படியே போற்றிப்பாடவும் முடியாது. விமர்சனம் ஒட்டுமொத்த சினிமாவைக் குறித்து இல்லாவிட்டாலும் ‘என்னை அறிந்தால்’ கதையை விமர்சிக்கலாம் என்றே தோன்றுகிறது. கௌதம் மேனனின் முந்தைய படங்களான காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்றவற்றின் தாக்கம் இப்படத்திலும் இருக்கின்றன.

வேட்டையாடு விளையாடு படத்திலும் கதாநாயகி ஏற்கனவே திருமணமாகி குழந்தையுடன் இருப்பவராக அறிமுகமாகிறார். கமல் அவரை மறுமணம் செய்து கொள்கிறார். அதே போல என்னை அறிந்தால் படத்திலும் கதாநாயகி த்ரிஷாவும் ஓர் அம்மாவாகத் தோன்றுகிறார். ஆனால், இதில் அஜித் த்ரிஷாவைத் திருமணம் செய்வதற்குள் கொலை செய்யப்படுகிறார். வேட்டையாடு விளையாடு படத்திலும் கமல் தன் மனைவியை இழப்பதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது. இப்படத்திலும் அதே போல பின்னோக்கு உத்தியில் மனைவியாக ஆகவிருந்த த்ரிஷாவின் மரணம் சொல்லப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. ஒன்று,  அஜித் த்ரிஷாவின் மகள் மீது காட்டும் அன்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டுள்ளது. மாற்றனின் மகள் மீது காட்டும் அன்பைப் பெருந்தன்மை போன்ற அடையாளத்துடன் காட்டாமல் கதையோடு இயல்பாகப் பயணிக்க வைத்திருக்கிறார்கள். நான் வாழ்க்கை கொடுத்து தியாகம் செய்கிறேன் என்ற பாவனையெல்லாம் இப்படத்தில் வழிந்து காட்டப்படவில்லை. அடுத்து அஜித்துக்கும் அவரின் அப்பாவாக வரும் நாசருக்குமான புரிதல். நீ யாரென்று தெரிந்துகொள்ள பயணம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். இது வாழ்க்கை குறித்த ஒரு மகத்தான புரிதல். உன்னை நீ அறிய நீதான் முற்பட வேண்டும். வேறு யாரும் உன்னை யாரென்று உன்னைவிட ஆழமாகச் சொல்லமாட்டார்கள். நாசர் வந்து போகும் காட்சிகள் அசலானவை.

திரைக்கதை

ஒரு திரைக்கதையின் வேலை என்ன? இயக்குநர் தான் சொல்ல விரும்பும் கதையின் மீது பற்பல சம்பவங்களையும் உட்சம்பவங்களையும் ஏற்றி கதையைப் படம் முழுக்க நகர்த்திச் செல்வதுதான் திரைக்கதை என சுஜாதா தன் திரைக்கதை நூலில் சொல்கிறார். அதனை விறுவிறுப்பாகக் கொண்டு போக வேண்டும் என்பது பார்வையாளர்களின் விருப்பம் சார்ந்தவை. ஒரு நல்ல கதை மக்களை அடைய அதன் திரைக்கதை அமைப்பு வேகமும் ஆழமும் கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். சில சமயங்களில் தொய்வான திரைக்கதை நல்ல கதையைக் கொண்டிருந்தாலும் தோல்வியடைவதுண்டு. கதையில் எவ்வித சமரசமும் இல்லையென்றாலும் காலம் முழுவதும் பல இயக்குநர்கள் திரைக்கதையில் நிறைய சமரசம் செய்தே வருகிறார்கள். ஆனால், கௌதம் மேனன் அப்படிச் சமரசம் செய்பவராகத் தெரியவில்லை. கதையை நகர்த்த திரைக்கதையை மிகவும் இறுக்கமாகப் பிடித்து வைத்துக்கொள்கிறார்;

வெகுஜன இரசிகர்களின் இரசனைக்குள் அடங்காமல் ‘என்னை அறிந்தால்’ படம் திணறுகிறது என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அஜித் போன்ற மாஸ் கதாநாயகர் இப்படத்தில் கௌதம் மேனனுக்குரிய திரைக்கதையோடு பொருந்தி போவது அவருடைய உழைப்பைக் காட்டுவதோடு அவருக்கு வித்தியாசமான தோற்றத்தையும் இருப்பையும் கொடுக்கிறது. ஆனால், அஜித்தின் வழக்கமான இரசிகர்கள் ஏமாந்து போகிறார்கள். ஒரு நடிகனைத் தன் தொழிலைத் தன் விருப்பத்திற்கேற்ப செய்யவிடுவதே அஜித் இரசிகர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியவை ஆகும். தங்களின் மாஸ் விருப்பங்களை அஜித் மீது திணிப்பதால் அவரும் வேறு வழியில்லாமல் குண்டு சட்டியிலேயே குதிரையோட்டி குதிரையோட்டி இரஜினியைப் போல ஆக வேண்டிய நிலை உருவாகிவிடும். இன்றும் இரஜினி போன்ற நல்ல நடிகர் ஏன் சிறு வயது பெண்ணைக் காதலிப்பதைப் போல நடிக்கிறார்? வெகுஜன இரசனை அவர் மீது செய்த வன்முறையின் உச்சப்பட்சம் அது. காலம் முழுவதும் நான் என் இரசனையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால் சினிமா எப்பொழுதும் தன்னை மாற்றிக்கொள்ளாது.