Friday, July 9, 2010

மலேசியாவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்படுவதில்லை

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான மலேசிய கல்வியின் உற்பத்தி என்கிற முறையில் நான் கண்டறிந்த ஒரு சில பலவீனங்களை இங்கு முன்வைக்கிறேன். இது ஏற்கனவே எனக்குள் ஒரு கேள்விக்குறியாக மட்டுமே இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சிலருடனான சந்திப்பிற்கும் கலந்துரையாடலுக்கும் பிறகு மலேசியாவில் இதுநாள் வரையில் முறையான சிறுவர் இலக்கியம் படைக்கப்படவில்லை. என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

முதலில், மலேசியக் கல்வி பாடத்திட்ட அமைப்பில் படைப்பிலக்கியத்தை ஒரு கூறாக இணைக்கவே இங்குப் பலத்தரப்பட்ட எதிர்ப்பு இருக்கிறது. படைப்பிலக்கியம் அனாவசியமான ஒன்றாகக் கருதப்பட்டு நிராகரிக்கவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுருக்கிறது. தேர்வை முதண்மையானதாக முன்னிறுத்தும் பொது குறிக்கோளைச் சிதைக்கும் அம்சமாகப் படைப்பிலக்கியத்தைக் கருதும் ஒரு கூட்டம் எப்பொழுதும் சிறுவர் இலக்கிய வெளி உருவாக்கத்திற்குத் தடையாக இருந்து வந்திருக்கின்றனர். ஆகையால்தான் இங்கு இலக்கியம் என்பது பெரியவர்களுக்குரிய மொழியில் பெரியவர்களின் உலகத்தைப் பற்றியதாக இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியத்தைச் சீரமைக்கவும் முறைப்படுத்தவும் கையாள வேண்டியதுதான் இலக்கணம் என்பதையும் இலக்கியம் என்பது மட்டுமே ஒரு மொழியின் ஆன்மா என்பதையும் புரிந்துகொள்ள யாரும் முன்வருவதில்லை. மேலும் மரபார்ந்து வழக்கத்தில் இருக்கக்கூடிய இலக்கியத்திற்குரிய அர்த்தமும் பொருளும்தான் பல நல்ல தரமான புதிய சிந்தனைகளும் புதிய இலக்கிய வடிவமும் தமிழுக்குள் வருவதற்குச் சிக்கலாக அமைந்துவிடுகிறது.(இந்தக் கருத்தை முக்கியமான ஒரு கல்வி பின்புலம் சார்ந்த அதிகாரி தெரிவித்தது). இதை முற்றிலும் நான் ஆமோதிக்கின்றேன். எப்பொழுதும் தமிழுக்குள் கொண்டு வரப்படும் புதிய சிந்தனைகளும் கோட்பாடுகளும், ஏற்கனவே தமிழில் உள்ள மரபார்ந்த அர்த்தங்களுக்கு எதிராகப் புரிந்துகொள்ளப்படுவதால், குறைந்தபட்சம் அதை விவாதத்திற்கு முன்மொழியும் சந்தர்ப்பங்களைக்கூட இழக்க நேரிடுகிறது.

ஆகையால்தான், கல்வி அமைச்சு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் படைப்பிலக்கியத்தைக் கொண்டு வந்தபோது நாடளவில் அதற்கு எதிர்ப்பு உருவாகியது. சிறுவர்களின் உலகம் கதையால் ஆனவை, பல கதைச் சொல்லிகளைக் கடந்து உருவானதுதான அவர்களின் பால்யக்கால மனங்கள் மற்றும் அவர்களின் உலகத்தில் கதைகளுக்குத் தனித்த இடங்கள் உண்டு எனும் புரிதலுக்கு முற்றிலும் மாறுப்பட்ட எதிர்வினைத்தான் படைப்பிலக்கியத்தைத் தமிழுக்குள் கொண்டு வரக்கூடாது என்று ஒட்டு மொத்தமாக ஏற்பட்ட குரல் எனக் கருதுகிறேன். கதைகளைச் சிறுவர்களின் உலகத்திலிருந்து நிராகரிப்பது மிகப் பெரிய வன்முறையென கருதுகிறேன். அவர்களின் இயல்பான மனங்களைச் சிதைத்து வெறும் சமூக ஒழுக்க பிண்டங்களாகப் பிரதியெடுக்கும் ஒருமுயற்சிதான் கதைகளையும், பாடல்களையும் அவர்களிடமிருந்து பறிக்கும் செயல்.

மாணவர்களின் உளவியல் தத்துவங்களை நன்கு உணரக்கூடியவர்கள் மொழி, மரபு என்கிற கணமான மதிப்பீடுகளைக் கொண்டு சிறுவர்களைக் கட்டமைக்கிறோம் என்கிற பெயரில் அவர்களின் உலகத்தை வடிவமைக்க முயல மாட்டார்கள். மொழியின் மகத்துவத்தை உணர்த்தும் அல்லது பாடமாக நடத்துவதில் இருக்கின்ற தீவிரமும் நடவடிக்கைகளும் கதைகளால் ஆன அவர்களின் மனதை மீண்டும் கதைகளால் வளர்த்தெடுக்க முன்வருவதில் காட்டுவதில்லை. இதுவே சிறுவர்களின் மன அமைப்பிற்கு எதிரான வன்முறையாகக் கருதுகிறேன். பெரும்பாலான ஆசிரியர்கள் அவர்களுக்குப் பாடம் நடத்தவே முன்வருகிறார்கள். பாடம் முடிந்ததும் அன்று கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் வெறும் மனனமாகப் பதிக்கப்படுகின்றது. இதுவும்கூட தேர்வை முன்வைத்து உருவான ஒரு செயல்பாடுதான்.

மேலும் தற்பொழுது மட்டுமல்ல பலகாலங்களாக நடப்பில் உள்ள சிறுவர் இலக்கியம் குறித்து மதிப்பீடுகையில் இங்கு சிறுவர் இலக்கியமே இதுவரை படைக்கப்படவில்லை என்பதை உணர முடிகிறது. சிறுவர் இலக்கியம் என்பதற்குச் சிக்கலான புரிதலைக் கொண்டிருக்கும் பலர் சிறுவர்களைக் கதைப்பாத்திரங்களாகக் கொண்டிருக்கும் பெரியவர்கள் வாசிக்கக்கூடிய பிரதிகளைத்தான் கதைகளைத்தான் படைத்திருக்கிறார்கள். சிறுவர்களின் உளவியலுக்கும் மனம் செயல்படும் விதத்திற்கும் எதிரான, சற்றும் பொருந்தாத கதைகளைத்தான் சிறுவர்களுக்குக் கொடுத்து வருகிறோம்.

பெரும்பாலான சிறுவர் கதைகளில் இரண்டு விதமான கூறுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒன்று, அந்தக் கதையில் வரக்கூடிய சிறுவன் மிகச் சிறந்த ஒழுக்கச் சீலனாகவும் வெறும் நல்லதை மட்டுமே செய்யக்கூடிய உயர்த்தர நல்லவனாகவும் காட்டப்பட்டிருப்பான். அவனைச் சுற்றி எல்லாமும் மிகச் சிறந்ததாகவும் கொஞ்சம்கூட சிறுவர்களுக்கே உரிய எவ்வித குறிப்புகளும் சேட்டைகளும் விளையாட்டுத்தனங்களும் இன்றி, புனிதமான படைப்பாக முன்வைக்கப்பட்டிருப்பான். இவ்விதமான கதையைப் படிக்கும் மாணவர்களுக்கு நெறித்தவறாத நன்னெறிப் பண்புகளை மட்டும் முன்வைக்கும் இடம்தான் கதைகள் எனும் புரிதல் ஏற்படும். ஆகவே கதை எனும் சிறுவர்களின் கனவு மெல்ல விலகி ஒரு நன்னெறி பிரதியாக மட்டும் நிறுவப்பட்டிருக்கும்.

அடுத்ததாக, சிறுவர் கதையில் வரக்கூடிய சிறார் கதைப்பாத்திரங்கள் பெரும்பாலும் பெரியவர்களால் அறிவுரைக்கப்படுபவர்களாவும், அல்லது கதையில் வைத்து சீர்ப்படுத்தக்கூடியவர்களாகவும் காட்டப்பட்டிருப்பார்கள். சிறுவர் கதைகளில் சிறுவர்கள்தான் முதண்மை கதைப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் இங்குப் பெரும்பாலான சிறுவர் கதைகளில் பெரியவர்கள்தான் கதைநாயகர்களாக வந்து சிறுவர்களைச் சீரமைக்கிறார்கள், சீர்ப்படுத்துகிறார்கள். ஆகவே இங்கும் கதை என்பது அறிவுரைக்கப்படும் இடமாகவும் சீர்ப்படுத்தும் பிரதியாகவும் சிறுவர்களிடமிருந்து விலகி நிற்கிறது.

இலக்கியப் பாடத்தையும் நன்னெறிப்பாடத்தையும் ஒன்றாக நடத்தக்கூடிய இயல்புதான் இங்கு நடைமுறையில் இருக்கின்றது. கதைகளில் நன்னெறிகளைப் போதிப்பதில் தவறில்லை, ஆனால் அதையே முதண்மையாக முன்வைத்து பூதாகரமாகக் காட்டி கதைக்குள்ளிருக்கும் நிதர்சனமான தன்மைகளைச் சாகடிக்கக்கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு கல்வி அதிகாரி அடிக்கடி இப்படியான ஒரு வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருப்பார். “என் கட்சிக்காரனான சரவணன் என்கிற சிறுவனை எப்பொழுது ஜெயிக்க வைக்கப் போகிறீர்கள்? எப்பொழுது அவனைக் கதைநாயகனாகக் காட்டப்போகிறீர்கள்? எப்பொழுது அவன் அவனது கதையைக் கொண்டாடப் போகிறான்? எப்பொழுது அவன் அடர்த்தியான சமூக ஒழுக்கப் போதனைகளுக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தை நுகரப்போகிறான்?

மேலைநாட்டு சிறுவர் இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் வெறும் மாயங்களை வைத்தே உலகச் சாதனைகளை அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக harry potter நாவலை எழுதிய R.K.Rowling. இரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு சுவருக்குள் இன்னொரு உலகம் இருப்பதைப் பற்றி இத்துனை மகத்துவமான கற்பனையை உலகமே வியக்கும் வகையில் படைத்துக் காட்டி, மேலும் அதில் இளையோர்களையும் சிறுவர்களையும் அவர்களின் சுயம் களையாமல் காட்டிப் படமாக எடுத்திருப்பதும் பாராட்டக்கூடிய முயற்சியாகும். மேலும் சிங்கப்பூரில் குழந்தைகளுக்கென பிரத்தியேகமாகப் பல சிறுவர் கதை நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

78 வயது நிரம்பிய வே.இராமசாமி(சிங்கப்பூர்) 55க்கும் மேற்பட்ட குழந்தைகள் நூலகளை எழுதி அவற்றுள் 25 புத்தகங்கள் தமிழ் மாணவர்களுக்கு துணைப்பாட நூலாக இருக்கின்றன. மேலும் சிங்கப்பூரில் ஆசிய குழந்தை நூல் விழா அவ்வப்போது நடத்தப்படுகிறது, மேலும் சிறுவர் இலக்கியம் குறித்தான இரண்டுநாள் பட்டறைகளும் நடத்தப்படுகிறது. மலேசியாவில் இன்னமும் ஆசிரியர்களின் கைகளில் ஈசாப் நீதி கதை நூல்களும், காகமும் நறியும் நன்னெறிக் கதை புத்தகங்களும்தான் இருக்கின்றன. உலக அளவில் சிறுவர்களுக்கான இலக்கியம் அடுத்தக்கட்டத்தை நோக்கி அவர்களின் கதைகளை அவர்களின் உணர்வுகளைச் சொல்லக்கூடிய களமாக மாறி வருகையில் மலேசியாவில் பல இடங்களில் இன்னமும் ஆமையும் முயலும் மட்டுமே நன்னெறிப் பிம்பங்களாகப் போதிக்கப்படுகின்றன. பரிதாபத்திற்குரிய நம் மாணவர்கள் அவர்களின் சுய உணர்வுகள் பற்றி தெர்ந்துகொள்ளாமல், அவர்களின் உலகத்தில் நடப்பதைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் சமூகம் கொடுத்திருக்கும் ஆமை முயல் முகமூடிகளை அணிந்து கொண்டு ஏக்கமாக வகுப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

பாப்பா பாடல்களை எழுதி படைத்து வரும் முரசு நெடுமாறனின் பங்கு சிறுவர்களின் இலக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். பாடல்களையாவது எங்கோ தமிழ்நாட்டில் இருந்து எழுதும் கவிஞர்கள் போடுவார்கள் என ஏங்கித் தவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டிலேயே முரசு நெடுமாறன் எழுதி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கான கதைகள்தான் எழுதப்படுவதில் மிகப்பெரிய தேக்கத்தை அடைந்திருக்கிறோம்.

“என் கட்சிக்காரனான சரவணனுக்கு எப்பொழுது அவனுக்குரிய கதை கிடைக்கும்?” சிறுவர் கதைகள் எழுதுவதற்கு முதலில் அந்த எழுத்தாளன் ஒரு சிறுவனின் மனநிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் சிறுவர்களின் உளவியல் கூறுகளை நன்கறிந்திருக்க வேண்டும். ஒரு சிறுவனை வெறும் நல்லவனாக மட்டும் காட்டும் மரபிலிருந்தும் வெறும் நன்னெறிகளைப் போதித்தால் போதும் என்கிற மரபிலிருந்தும் விடுப்பட வேண்டும். தற்போதைய சமூகத்தில் நிதர்சனத்தில் சிறுவர்களின் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் கதைகள் எழுதப்பட வேண்டும், அதே வேளையில் பொதுவான ஒழுக்க நெறிகளை மீறாத சிறுவர்களும், கற்பனை வளம் நிரம்பிய சிறுவர்களும் உருவாக்கப்படும் வகையிலும் புதிய கதைகள் எழுதப்பட வேண்டும். சிந்திப்போமாக.


நன்றி: கலந்துரையாடல் அங்கம்
கல்வி அதிகாரி
சக படைப்பாளர்கள்

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா