‘தீவிரமான விசயங்களை ஓர் எல்லைக்கு மேல் எளிமைப்படுத்த முடியாது. எல்லைக்குமேல் எளிமைப்படுத்துவது அதன் நுட்பங்களைச் சிதைப்பதாகும். கடுகாக மாற்றப்பட்ட கடல்; கடலல்ல, கடுகுதான்’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002)
நாம் எப்பொழுதும் வாழ்க்கைக்கு ஓர் அலாரம் கொடுத்து வைத்திருக்கிறோம். அது நம் அன்றாடங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே அலறிக் கொண்டிருக்கின்றன. அதில் ஏற்படும் ஒரு சிறிய கீறலும் நம்மை அதிர செய்கின்றது. சட்டென நம்மைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. நம் வாழ்வை
அலசி மதிப்பீடு செய்கிறது. காலை முதல்
இரவு வரை ஒரே மாதிரி தொடங்கி ஒரே மாதிரி முடியும் எதுவுமே தீவிரம் கிடையாது. வாழ்வை ஒரு
கணம் அசைத்துப் பார்க்கும் அக்கீறலே எளிமைப்படுத்த முடியாத தீவிரமாகப் பார்க்கிறேன். சாதியும், சாதி இழிவும், சாதியினால் உருவாகும் சமூக இடைவெளியும் எளிமைப்படுத்த இயலாத விசயங்களாகும். தலித் இலக்கியம் கவனத்திற்குரியதாக மாறத் துவங்கிய காலத்திலிருந்தே தலித் சமூகம் தொடர்பான பிரக்ஞை மறுக்க முடியாததாக எல்லாம் மனங்களிலும் நிலைக்கொள்ளத் துவங்கின. தலித் இலக்கியம்
மூன்று வகையான முன்னெடுத்தல்களை உருவாகியுள்ளன.
1. தலித்துகளின் மீதான இழிவுகளை உரையாடுதல்
சாதி, குலத்தொழில் எனப்
பலவகைகளில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் மீது மேல்வகுப்பு மனிதர்கள் உருவாக்கும் இழிவுகளைத் தமிழ் சிறுகதைகள் பல உரையாடியிருக்கின்றன. மேல்தட்டு வர்க்கத்தினர் தன் சாதி ஆதிக்கத்தை எளிய மக்களின் மீது விதித்து அதன்பால் உருவாக்கிய வன்முறைகளைப் பதிவு செய்த கதைகள் ஏராளம் தமிழில் வந்துள்ளன. அன்பாதவன் என்கிற
எழுத்தாளர் தன் கதைகளில் ஆதிக்க சாதியினரின் முகங்களைக் கிழித்துக் காட்டியுள்ளார். அதுவரை மௌனமாகப் பின்பற்றப்பட்டு வந்த ஆதிக்க மனங்களைக் கொஞ்சம் சீண்டிப் பார்த்தது என்றே சொல்லலாம். ஆனால், இதுபோன்ற
எழுத்து அதிகாரங்களை உடைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் தீண்டாமை கொடுமைகளையும் மட்டுமே ஒப்புவித்தன. அப்போதைய தமிழ் சிறுகதை சூழலில் இத்தகைய கதைகள் மிகவும் நேர்மையாகக் கருதப்பட்டன. ஆனால், புனைவுத் தன்மை
அத்தனை பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை என்றும் சிலர் கருத்துரைத்திருக்கின்றனர். ஆனாலும் தலி எழுத்தாளரான உஞ்சை ராசன் போன்றவர்களின் பழி, தனிக்கிராமம்
போன்ற கதைகள் புனைவுலகிலும் சிந்தனை மரபிலும் பெரும் தாக்கத்தை உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
2. தலித்துகளின் பண்பாட்டு அடையாளங்களைப் பதிப்பது
இத்தகைய சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் பண்பாட்டு அடையாளங்களையும் பதிப்பதில் கவனம் செலுத்தின. அதுவரை மேல்தட்டு
வர்க்க இலக்கியவாதிகளால்கூட உரையாடப்படாத தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்வியல் அடையாளங்கள், பண்பாட்டுக் கூறுகளைப் பதிப்பதில் அதிகம் கவனம் செலுத்திய எழுத்தாளர்கள் அப்பொழுது தீவிரமாகச் செயல்பட்டார்கள்.
3. தலித் சாதியினர் எதிர்க்கொள்ளும் இழிவுகளின் மீதிருக்கும் பொதுபுத்தியை விமர்சித்தல்
ஆதவண் தீட்சண்யா அவர்களின் ‘லிபரல்பாலயத்து மக்கள்’ சிறுகதை தலித்துகளை
மறுகண்டுபிடிப்பு செய்து அவர்களை மேன்மையானவர்களாக நிறுவும் முயற்சியாகும். அவருடைய மொழி அங்கதங்களைத் தாங்கிக் கொண்டு தலித்துகளை இழிவானவர்களாகப் பார்க்கும் பொதுபுத்தியைக் கிண்டலடித்துச் செல்கிறது. அவருடைய கதைகளில்
புகார்களோ அல்லது புலம்பல்களோ இல்லாமல் இருப்பதே தலித் இலக்கியம் சந்திக்கும் புதிய மாற்றமாகக் கருதுகிறேன். கூறுமொழியிலும் பேசும்பொருளிலும் ஆதவண் தீட்சண்யா தலித் சிறுகதைகளில் ஓர் அழுத்தமான ஊற்றை உருவாக்குகிறார். இதுபோன்ற ஓர் அலை பிறகு 2000 ஆண்டுகளில் தலித் இலக்கியம் உள்வாங்கிக் கொண்ட மாறுதலாகப் பார்க்கிறேன்.