Monday, April 12, 2010

சிறுகதை: எழுதத் தெரியாத ஒரு எழுத்தாளனின் கதையிலிருந்து

1
மாமா இன்று ஒரு முடிவுடன்தான் வீடுவரை வந்திருந்தார். வெயிலின் கடுமை அவரின் உடலில் வலிந்திருந்தது. மறுப்பதற்கும் முரண்படுவதற்கும் என்னிடம் ஓர் உடல்மொழி இருந்தது. அதன்படி எல்லாவற்றையும் நிகழ்த்துவதற்குத் தயாராக அமர்ந்திருந்தேன்.


“யேண்டா கிறுக்கன் மாதிரி பேசுறியாம்?”

“ஏற்கனவே ஆள் இருந்து வாழ்ந்த ஒரு வீடுத்தான் வேணும். . சும்மா புது வீட்டுலலான் என்னால இருக்க முடியாது மாமா. அவ்ளதான் சொல்லிட்டென்”

“இந்த எழுதற பொழைப்புக்கு ஏதாவது ஒரு வேலையெ செஞ்சா காசு கூட கெடைக்கும், அதுக்கு தகுந்த மாதிரி ஒரு பெரிய வீடா வாங்கியிருக்கலாம். எழுதி எழுதி மண்டெ ஓடி போச்சி போல. எழுத்தாளனா எழுத்தாளன்”

அவரை நேரெதிர்கொண்டு பார்ப்பதைத் தவிர்ப்பதன் வழியாக அவரை அலட்சியப்படுத்திவிடலாம். அம்மாவிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் துவங்கினார். சிறிது நேரத்திற்கு முன்புவரை வீட்டில் அடர்ந்திருந்த வெப்பம் மெல்ல கரைந்திருந்தது. ஒருவேளை அது என் உடலிலிருந்து அகன்றதாகவும் இருக்கக்கூடும்.

இரட்டைமாடி வீடு. 17-c – மேற்குப் பாலத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரம். விசாலமான அறைகள். விசித்திரமான கட்டுடல், எப்பொழுதும் அலையும் ஓர் இருளும் அமைதியும். இதுதான் நான் அடுத்த வாரம் குடிப்புகப் போகும் வீட்டைப் பற்றிய குறிப்புகள்.

“ஆள் இருந்த வீட்டுலதான் கனவும் இருக்கும்மா. . அங்கத்தான் அன்பு, ஆசை, கோபம், அழுகை, சிரிப்பு, தேம்பல், கதறல் எல்லாம் இருக்கும்”

பைத்தியக்கார சிந்தனை என்றார்கள். தலையசைத்துவிட்டு சிரித்தேன். பைத்தியம் என உறுதிப்படுத்தினார்கள். பணம் இல்லாதவன் ஏற்கனவே ஆள் இருந்த வீடுகளை வாங்குவது இயல்புதானே? இதிலென்ன அப்படியொரு ஆபாசமான சமரசத்தைக் கண்டார்கள் இவர்கள்? எவ்வளவு செலவானாலும் புது வீடுதான் உழைப்பிற்கு வலு சேர்க்குமாம்.

எனக்கு முதல் அடையாளங்களை உருவாக்குவதில் விருப்பமில்லை. அது அபாயக்கரமானது. ஏனோ தெரியவில்லை, ஏற்கனவே பதியப்பட்ட அடையாளங்களின் இருண்மையைத் தேடி அலைவதில் ஓர் அசாத்தியமான இன்பம் இருந்தது. அதை நோக்கி அதன் வால்களைப் பிடித்துக் கொண்டு அலைகிறேன். எனது சுயமே பிறர் சொல்லப்பட்டு உருவானது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொருமுறையும் எல்லோரும் என்னை அழைத்தார்கள். அவர்களின் அழைப்பு என்னை நோக்கி என்னை விரியச் செய்ததாக எனக்குள் குரலெடுத்து ஓடியது.

அப்பா அடிக்கும்போது சொன்னார், “நீ பண்றெ ஒவ்வொன்னும் பெரச்சனைத்தாண்டா. .”. அம்மா கவலைப்படும் சமயங்களிலெல்லாம் சொன்னார், “நீ ஏன்டா மத்தவங்கள மதிக்க மாட்டுறெ, எல்லாம் நீ செய்யற.“ நீ. . நீ . . நீ. . இதைவிட என்ன வேண்டும் என்னைப் பற்றி என் சுயத்தை அறிந்துகொள்ள.

ஏதோ புதுமைப்பித்தன் கதையில் வருவது போன்ற கேலியும் குதர்க்கமும்தான் என்னை பிறரிடமிருந்து பிரித்து வைத்திருந்தது. அம்மாவின் கேள்விகளுக்கு என்னிடம் ஒருவகை வினோதமான சுருக்கமான பதில் மட்டுமே இருந்தது. “நீங்க எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி உருவாக்கன ஒரு எச்சம்தான் நான், எனக்கு வேறெதுவும் தெரியல”.

“முதல்ல நாள் முழுக்க படிச்சி படிச்சி சாவறியெ. . அந்தப் புத்தகத்தெலாம் கொளுத்தனும்டா”. என விசனப்படும்போது அம்மாவின் அன்பை அப்படியே அள்ளி எடுத்துக் கொள்ளும் அனுபவம் சமரசத்திலும் வெறுமையிலும் கிடைக்கப்போவதில்லை. சராசரியாக இல்லாமல் இருப்பதற்கும் யாருடைய புனைவோ அல்லது கதையோ அவசியமாகத் தேவைப்படுகிறது. அர்த்தமற்று அலையும் எத்தனையோ ஊனமுற்ற கதைப்பபத்திரங்களை உருவாக்கிய தமிழ் எழுத்தாளர்கள் விரவிக் கிடக்கிறார்கள். எனக்குள் நான் முழுமையடையாத சந்தர்ப்பங்களில் எழுதத் தெரியாத சிந்தனை வரண்ட ஏதோ ஒரு எழுத்தாளனின் கதையிலிருந்து தப்பி வந்த அரைகுறை என என்னை நான் கற்பித்துக் கொள்கிறேன்.

2

அன்று புது வீட்டிற்கு போவதற்கு எல்லாமும் தயாராகிவிட்டது. பழைய வீட்டிலிருந்து நீங்குதல் என்பது எங்கே ஒரு கலையாவிடுமோ எனப் பயந்துகொண்டே இருந்தேன். இது குறித்து ஒரு சிறுகதை அல்லது கவிதைகள் எழுதிவிட்டால், உடலிலிருந்து விந்து பாயும் போது ஏற்படும் ஒரு சாந்தம், அமைதி, திருப்தி ஏற்படும் என நம்பினேன்.

பழைய வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருளாக லோரியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். எப்பொழுதோ சிறு வயதில் தூக்கியெறிந்த பொம்மைகளின் கால்கள், ரோதைகள் இல்லாத ஓட்டப்பந்தய கார்கள், பென்சில் பெட்டி என நான் ஒளித்து வைத்திருந்த என்னை மீட்டுக் கொண்டேயிருந்தன. எனக்குள் நடுக்கம் பரவிக் கொண்டிருந்தது. முழுமையற்று சுற்றித் திரிந்து கொண்டிருந்த நான் பழைய வீட்டின் மூலை முடுக்குகளில்லாம் கிடந்தேன்.

“ஏண்டா. . . எல்லாம் பொருளையும் எடுத்துக்கிட்டியா? ஒருவாட்டி சரி பார்த்துரு”

அம்மா அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது. காலியாகிவிட்ட எனக்குள் மீண்டும் நான் உள்நுழைந்தேன். இத்தகையதொரு அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லைத்தான். ஏனோ நான் வெறுமையாகிக் கொண்டே இருந்தேன்.

வெறும் வீடு. 25 வருடமாக எனது ஒவ்வொன்றையும் சேமித்து வைத்திருந்த வீடு. மீசைக்கார தாத்தா இறந்தபோது உடலை மட்டும் தூக்கியெறிந்த வீடு. அப்பா வீட்டை விட்டு ஓடியபோது அவரது துன்பங்களையும் மன உளைச்சல்களையும் மட்டும் வீசியெறிந்த வீடு. எல்லாரையும் எல்லாவற்றையும் வீணே சுமந்து கொண்டிருந்த வீடு. வெண்மையாகியிருந்த சுவர்களில் ஏதோ ஓர் உருவம் அசைந்து நெளிந்தது. அது முழுமையற்ற ஓர் உருவம். கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்குச் சுவரின்வழி தாவி குதித்தது. குழந்தைத்தனமான ஒரு பரவசம் அதன் வசம் இருந்தது. யாரோ ஒரு பைத்தியக்கார எழுதத் தெரியாத எழுத்தாளனின் மொக்கை கதையிலிருந்து தப்பி ஓடி வந்த ஒரு கதைப்பாத்திரமாக இருக்கக்கூடும். யாரும் கண்டுகொள்ளாத அல்லது வாசிக்காத அல்லது முடிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் கிடந்த விரக்தியைக் கொண்டிருப்பது போலவும் தெரிந்தது. வீடு முழுக்க அந்த உருவம் பரவியது.

“டே. . பாத்துட்டியா இல்லியா?”

“ம்மா. . நான் வரலம்மா. .இங்கயே இருந்துடுறேன்

-முடிவு-

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா