அநங்கம் தற்காலிக இணைய இதழ்
டிசம்பர் இதழுக்கான சில படைப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
படைப்பாளர்கள் தங்களின் படைப்புகளை அநங்கம் முவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ananggam@hotmail.com
அநங்கம் அகப்பக்கம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆகையால் அதுவரையில் படைப்பாளர்கள் வாசகர்கள் இந்தத் தற்காலிக இணைய இதழில் அநங்கம் இதழ் படைப்புகளைக் காணலாம்.
கே.பாலமுருகன்
இதழாசிரியர், மலேசியா
Tuesday, February 2, 2010
விவாதங்களின் தொடர்ச்சி- தமிழ் மொழி விவகாரம் குறித்து
நேற்று 10மணியளவில் டிவி மூன்றில் இடம்பெற்ற கல்வி அமைச்சருடனான "கேள்வி பதில்" தொலைக்காட்சி நிகழ்வில், தற்பொழுது நாட்டில் பரப்பரப்பாக இருக்கும் தமிழ் மொழி எசு.பி.எம் தொடர்பான எந்த ஒரு விசயமும் பேசப்படாததும் விவாதிக்கப்படாததும் பலருக்கு அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி சார்ந்த எல்லாம் சமூகத்தின் பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்க வேண்டும் என எதிர்ப்பார்த்திருந்தேன். ஆனால். . ?
இந்தத் தமிழ் மொழி விவகாரம் குறித்து பலர் பலமாதிரியான கருத்தாக்கங்களையும் அணுகுமுறைகளும் கொண்டிருப்பதால், நேற்று இது குறித்து விவாதிக்கப்பட்டிருந்தால் விளக்கமளிக்கப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து புரிந்து கொண்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.
கடந்த என் பதிவில் இடம்பெற்றிருந்த கல்வி அதிகாரியும் நண்பருமான அவரது கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை வாசகரும் நண்பருமான திரு.தமிழ்வாணன் அவர்கள் தெரிவித்துள்ளார். பின்வருமாறு:
//அரசாங்கம் 12 பாடங்கள் எடுக்கலாம் என்று அறிவித்து//
தமிழ்வாணன்: 12 பாடங்கள் எடுக்கலாம். சரி. 12 பாடங்களுக்கும் சமமான முழு அங்கீகாரம் உள்ளதா? இதற்கு முன் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் இருந்த அங்கீகாரம் ஏன் தற்போது பறிக்கப் பட்டது?
//இந்தப் பிரச்சனை குறித்து தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லாததால் //
தமிழ்வானன்: யாருக்கு தெளிவான அணுகுமுறைகளும் புரிதல்களும் இல்லை? கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் 10 பாடங்கள் என்ற முடிவை எடுத்த போது இந்திய அல்லது சிறும்பான்மை இனத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளிடம் அல்லது அமைச்சர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிந்ததா? குறைந்த பட்சம் விளக்கம் கொடுத்து அனுமதி பெற்றதா? யாரின் கருத்தை அல்லது அனுமதியை பெற்றார்கள்? ஒரு நாட்டின் முக்கியமான கல்விக் கொள்கைகளில் செயல்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வரும் போது முழுமையான ஆய்வு வேண்டாமா?
// இந்தப் போராட்டம் மேலும் வலுவடைந்து பொது மக்கள் மத்தியில் வேறொரு விளைவை ஏற்படுத்தக்கூடும் //
தமிழ்வாணன்: ஆமாம் வேறொரு விளைவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் இவ்வாண்டு ஆரம்பத்தில் இடை நிலைப் பள்ளி தமிழ் ,இலக்கிய தேர்வு பாடங்களில் பிரச்சனை நிலவிய போதும் இவ்வாண்டு ஆரம்பத்தில் பல பெற்றோர்கள் அதிகமான மாணவர்களை தமிழ்ப் பள்ளிக்கு அனுப்பி ஆட்சியாளர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளனர்.
// இதுநாள் வரையிலும் கல்வி அமைச்சு தமிழ் இலக்கியப் பாடத்தை அங்கீகரிக்கவில்லைத்தான்//
தமிழ்வாணன்: மன்னிக்கவும் தவறான தகவல்.இதுநாள் வரை( கடந்த ஆண்டு வரை) தமிழ் இலக்கியப் பாட சிறப்பு தேர்ச்சி (இப்பாடங்களுக்கான கல்வி அமைச்சின் முழு அங்கிகாரம்)உள்ளூர் பல்கலைகழக நுழைவிற்கும், கல்விக் கடனுதவிக்கும்,அரசாங்க தொழிலுக்கும் மற்றும் தனியார் துறைக்கு தேர்வுக்கும் உதவியாயிருந்துள்ளது. தற்பொழுதுதான் இப்பாடங்கள் பத்துக்கும் மேற்பட்ட பாடங்களாக இருக்கும் பட்சத்தில் சில கல்வித் துறைக்கும், சில தொழில் தேர்வுக்கும் மட்டுமே பயன்பட அங்கீகரிக்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
//300 என்ற எண்ணிக்கையை 4000 வரை உயர்த்தியது பெரும் வெற்றி எனவும் அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே மொழி உணர்வு அதிகரிக்கவும் போராடியவர்கள் கல்வி இலாகாவையும் கல்வித் துறையையும் சார்ந்தவர்கள்தான் எனத் தெரிவித்தார்//
தமிழ்வாணன்: உண்மை.இவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.தமிழ்ச் சமூகம் இவர்களை என்றும் நன்றியோடு நினைவு கொள்ளும்.சில அரசு சார்பற்ற இயக்கங்களும் 90ஆம் ஆண்டுகளில் இம்முயற்சியில் இந்திய கல்வி அதிகாரிகளோடு கைகோர்த்து செயல்பட்டது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.
//மேலும் டத்தோ சாமிவேலு அவர்களும் இலக்கியப் பாடம் எடுத்த மாணவர்களுக்கு அந்தக் காலக்கட்டத்தில் இலக்கிய நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி செய்துள்ளார் என உண்மையையும் கூறினார். ஆனால் இதுநாள்வரையில் இது குறித்து எங்கும் விளம்பரம் செய்யப்படவில்லை எனவும் கூறினார்.//
தமிழ்வாணன்: ஒரு அமைச்சர் நன்னறிவும் ஒழுக்கமும் கற்றுத் தரும் இலக்கியப் பாடத்தினை தகுந்த ஆசிரியர்கள் கொண்டு பள்ளி நேரத்திலேயே அல்லது மிகுதி நேர பாடமாக பயிற்றுவிக்க உரிமை கோராமல், குறைந்த பட்சம் சலுகை என்ற அடிப்படையில் அரசாங்க மான்யத்தில் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பாட புத்தகங்களை உருவாக்க முயற்சிக்கவும் இல்லை.
தேர்வுக்கான நாவல்களை இலவசமாகத் தருவதற்கு பண உதவி(பிச்சை) செய்துள்ளார். இவரது இந்த தமிழ்ச் சேவையை கொடை வள்ளல் தனத்தை விளம்பரம் செய்யாதது தமிழ் சமூகம் அவருக்கிழைத்த துரோகமாகவே கருத வேண்டும்.
//அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டமாக மாறியிருப்பதால் இது குறித்து சில பெற்றோர்களிடம் கேட்டப்போது அவர்கள் இவ்வளவு பிரச்சனை என்பதால் என் பையன் தமிழே எடுக்க வேண்டாம் என்கிற எதிர்க் கருத்தைக் கூறுகிறார்கள் எனத் தெரிவித்தார்.//
தமிழ்வாணன்: உண்ணாவிரத போராட்டம் கல்வி அமைச்சின் முடிவுகளையும் அமலாக்கத்தையும் எதிர்த்து நடத்தப் பெறுகிறது என்பது யாவரும் அறிந்தது. இதில் தமிழ்ப் பற்றுள்ள எந்த பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எவ்வித பாதிப்பையும் கொண்டு வராது என்பது பாமரரும் அறிந்ததே.மேலும் அரசாங்க முடிவென்றால் அதனை விமர்சிக்க,அதிருப்தியை தெரிவிக்க கூடாது என்று பொருள்ளல்ல.
//மக்களுக்குச் சரியான முறையான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படாமலே போராட்டங்கள் வலுவடையும்போது அது குறித்து அவர்களுக்குப் பதற்றமும் குழப்பங்களும் எழுவது இயல்பு//
தமிழ்வாணன்: அதிகாரமும் அரசு யந்திரங்களின் உதவியும் உள்ள ஆட்சியாளர்களின் முடிவுக்கெதிராக கருத்துக்களை பொது மக்களிடம் தெரியவைப்பது, சில விசயஙகளின் உள் நோக்கத்தினை புரிய வைப்பது அல்லது தெளிய வைப்பது இலகுவான காரியமில்லை.தாய் மொழி,தமிழ்ப் பற்றுள்ள சில நாளிதழ்கள் ,சில வலைப்பதிவாளர்கள் மூலம் பல தடைகளை மீறி எங்களது போராட்ட குறிக்கோளை செயல்பாடுகளின் விளக்கங்களை தெரிவித்து வருகின்றோம்.சில பதிவாளர்கள் சற்று முயற்சி எடுத்து பொது மக்கள் அறிந்து கொள்வது விவேகமான செயலாக கருதப்படும்.
மேலும், கல்வி அமைச்சின் இக்கொள்கையானது எவ்வாறு அறிவியல் கலைத்துறை மாணவர்களை பாதிக்கின்றது என்ற தெளிவான விளக்கங்களோடும், திரு கே பாலமுருகனின் கேள்விகளுக்கும் விடைகளையும் விரைவில் கருத்துக்களாக வெளியிடுவேன்.மேற்சொன்னவையாவும் என் சுய கருத்துக்களே, இக்கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு. தமிழ்வாணன்.
நன்றி: வாசகர் தமிழ்வாணன்
சிலாங்கூர், கிள்ளான்
சிலாங்கூர், கிள்ளான்
Subscribe to:
Posts (Atom)