Saturday, March 7, 2009

தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்


“தோல்வியடைந்த ஒரு குறும்படத்தின் 2 கதைகள்”

By கே.பாலமுருகன்

குறும்படத்தின் கரு: கால நகர்வு அல்லது Mobility எனப்படும் கால மாற்றம் குழந்தைகளின் வெளியில்/வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. (1960-1980-1990 மற்றும் 2000 என்று 4 காலக் கட்டங்களில் குழந்தைகளின் வாழ்க்கைமுறை இதில் சில காலப் பிழைகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.)


மேலே இடம்பெற்றுள்ள இரண்டு காட்சி அமைப்புகளும் கால நகர்வில் குழந்தைகளா அல்லது குழந்தைகளில் கால நகர்வா என்ற சமக்காலத்து மதிபீட்டை மிகவும் எளிமையாக வெளிப்படுத்துவதாகும். (கூர்ந்து கவனித்தால் இந்தக் காட்சியமைப்பின் நம்பகத்தன்மையை அல்லது ஒருவேளை பலவீனத்தைக்கூட அறிந்து கொள்ளலாம்)

முதல் கதை: குறும்படத்தின் வெளி


அன்றைய இரவே குமார் அண்ணனை மோட்டாரில் சுமந்து கொண்டு நகரத்தை விட்டு 6 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் சென்ரோல் 14 தோட்டத்திற்குப் போக வேண்டிய சூழ்நிலையில் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தேன். குமார் அண்ணனுடைய பாட்டி இன்னமும் அந்தத் தோட்டத்தில்தான் இருக்கிறார் என்பது ஆசுவாசமாக இருந்தது. அவரை இப்பொழுது சந்திப்பது இருளின் அசௌகரிகங்களைக் கடந்தவையான கட்டாய நிகழ்வாகவே தெரிந்தது. அதனால்தான் இரவில் அந்தப் பாதையின் பீதியையும் கடந்து காட்டுப் பூச்சிகள் கண்களில் சொருகி கண்களிலும் மூக்கிலும் நீர் வடிய 14 சென்ரோல் தோட்டத்தைச் சென்றடைந்தேன். எனக்குப் பின்புறத்தில் அவ்வளவு நேரம் சலனமின்றி அமர்ந்திருந்த குமார் அண்ணனின் குரல் சென்ரோல் 14கில் நுழைந்தவுடன் பதற்றம் கொள்ள தொடங்கியிருந்தது. பாதை நெடுக அடர்த்தியான இருள்.

பாட்டி வீட்டின் தகரம் ரொம்பவும் கீழே இறங்கி குறுக்கு வெட்டாக ஓடிப் போய் உற்றத்தின் உச்சியில் இணைந்திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவுடன் குமார் அண்ணன் சொல்வதற்க்கு முன்பதாகவே அவராகவே தம்பி யார் என்று கேட்டு வைத்தார். பாட்டியின் மருமகள் அதற்குள் சில்வர் குவளையில் வரக் காப்பியுடன் வந்து நின்றுவிட்டார். வரக் காப்பி குடித்து பல நாட்கள் இருக்கலாம். சிரமப்பட்டுத்தான் குடித்தேன்.

“பாட்டி இந்த தம்பி ஏதோ படம் எடுக்க போதாம், எஸ்டேட் வாழ்க்கையெ பத்தி, அதான் கூட்டிட்டு வந்திருக்கென், பாலா. . என்ன வேணுமோ பாட்டிகிட்ட கேட்டுக்கோ, இவுங்கத்தான் இங்க பழைய ஆளு”

குமார் அண்ணன் வீட்டிலிருந்து வெளியேறி பாட்டியின் வீட்டையொட்டி மிக நெருக்கமாக நிற்கும் அடுத்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். தோட்டத்து வீடுகள் ஏன்தான் இவ்வளவு அடர்த்தியாக நெருக்கிக் கொண்டு இருக்க வேண்டும்? நகரத்தின் இடைவெளி இங்கு எதிலுமே இருந்ததில்லை போலும்.

“என்னா தம்பி இஸ்டேட் வாழ்க்க? இங்க என்னா இருக்கு படம் எடுக்கெ?”

“படம் இல்லெ பாட்டி. . குறும்படம்”

“அது என்னாயா குறும்பு படம்?”

“சும்மா கொஞ்ச நேரம் ஓடறெ படம் பாட்டி , ஒரு 10 நிமுசம். . சின்ன கதெ அவ்ளதான், சினிமா படம் மாதிரி இல்லெ. . சுலபமா எடுத்துரலாம்”

பாட்டியிடம் அதற்கு மேல் விரிவான விளக்கம் கொடுக்க தோன்றவில்லை. விளக்கம் அவசியமற்றதாகப் பட்டது. குறும்படம் என்பது குறுகிய படமாக மட்டுமே அறிந்து வைத்திருந்த எனக்கு விளக்கம் அறிவுநிலையைக் கடந்து விலகியிருந்தது. பாட்டி வீட்டைச் சுற்றிலும் அழகான காட்சிகளைப் படம் பிடிக்க முயன்றேன். குறும்படத்தின் ஆரம்பம் அந்தச் சிறுவன் வீட்டு ஜன்னலைத் திறந்து வெளியை நோக்குவது போன்ற காட்சி. ஸ்டோரி போர்ட்டு(story board) வரைந்து தயார் செய்தாகியும்விட்டது.

பாட்டி வீட்டின் ஜன்னல்கூட அதற்கேற்றால் போலத்தான் இருந்தது. ஜன்னலில் ஒரு கதவை மட்டும் திறந்துவிட்டால், 45டிகிரியில் ஒரு ஜன்னல் திறந்திருக்க அந்தச் சிறுவனின் பாதி முகம் காமிராவின் பதிவில் இடம் பெரும். இதுதான் தொடக்கம். ஒரு அரை நிமிடத்திற்கு இந்தக் காட்சியை மட்டும் பதிவு செய்யப் போவதாகத் திட்டம். குறும்படத்தில் ஓர் அழகான அமைதி இருக்க வேண்டும் என்று யாரோ கூறிய ஆலோசனையில்தான் இந்தக் காட்சி அமைப்பு.

“பாட்டி அந்த ஜன்னலெ தொறக்க முடியுமா? ஒன்னுதான் இருக்கா?”

“அதெ தொறக்க முடியாதுயா, வெளியெ கட்டெ வச்சி அடிச்சி பூட்டியாச்சு, பின்னாலெ கதவு இருக்கு, அதெ பாக்கறயா? வீட்டு உள்ளுக்கா படம் எடுக்கனும்?”

“ஒன்னு ரெண்டு காட்சிதான் பாட்டி, மத்ததெல்லாம் கித்தா மரத்துக்கிட்டதான். . அந்தப் பையனும் அவன் அம்மாவும் வீட்டுலேந்து காலைலெ கெளம்பி மரம் வெட்ட போற மாதிரி ஒரு 4-5 காட்சி எடுக்கனும்”

“அதுக்கென்னா நாங்க மரம் வெட்டர பத்திகிட்ட கூட்டிட்டுப் போறென், நாளைக்குக்கூட ஓகேதான்ப்பா. . காலைலெ 6மணிக்கெ வந்துரு”

“அப்பெ வீட்டுலெ எடுக்க வேண்டிய காட்சிலாம் பாட்டி?”

“மொதெ இங்கெ எடுத்துருலாம்ப்பா அப்பறம் அங்க போலாம்”

ஜன்னல் இருந்தும் இல்லாமல் போன சூழ்நிலையில், காட்சியமைப்பில் மாற்றம் நிகழ்த்த வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜன்னல் திறக்கப்படப் போவதில்லை. சிறுவன் அம்மாவுடன் மரத்துக்குப் போகும் காட்சியே போதுமானதாகப் பட்டது. இன்னும் 2 வாரத்தில் குறும்படப் போட்டிக்குப் படைப்பை அனுப்ப வேண்டிய குறுகிய கால நெருக்கடியில்தான் இந்தக் குறும்படத்தின் ஆரம்பம் நாளை நிகழப் போகிறது.

“பாட்டி, மாட்டுக் கொட்டாய்லாம் இருக்கா? ஒரு பெரிய கெணறு இருந்தாகூட ஓகேதான்”

பாட்டி சிறிது நேரம் உற்றத்தைப் பார்த்தப்படியே ஏதோ அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முனகிக் கொண்டார்.

“கெணறு இருக்குப்பா, கீழெ எறங்கி போனும், மாட்டுக் கொட்டாய் இருக்கு, ஆனா அதெ நம்பெ வேலுகிட்டதான் கேக்கனும், நாளைக்குக் கேட்டு வைக்கறென், இப்பெ வரியா, போய் கெணறு பாத்துட்டு வருவோம், இங்கதான் கீழெ பங்களாடேஸ்காரனுங்கெ தங்கிருக்கெ வீட்டுக்கிட்டதான் கெணறு”

பாட்டி வலக் கையில் ஒரு நீண்ட கைலாம்பைப் பிடித்துக் கொண்டு நடக்க அவரையே பின் தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியேறி நிலச் சருக்கலை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். இறக்கமான பகுதியென்பதால் சற்று தயக்கமாகவே இருந்தது. செம்மண்ணும் தார் சாலையும் விட்டுவிட்டு ஒழுங்கில்லாமல் தட்டுப்பட்டுக் கொண்டே இருந்தன. இருளை உடைத்துக் கொண்டு பாட்டியின் கைலாம்பின் ஒளி முன்னகர, மஞ்சள் விளக்கு எறிந்து கொண்டிருந்த சில வீடுகளின் வெளிச்சம் மட்டுமே பார்வையாக இருந்தது. தூரத்தில் ஒரு மோசமான சிறிய வீட்டைக் காண்பித்து, அதனை எட்டிய தூரத்தில் ஒரு கிணறையும் பாட்டிக் காட்டினார். பாதாளத்தைப் பார்ப்பது போல தோன்றியது. சிறுவர்கள் இங்கு வந்து விளையாடுவது போன்ற காட்சியமைப்பிற்கு அந்தக் கிணற்றின் தோற்றம் பயங்கரமானதாக பட்டது.

“இல்லெ வேணாம் பாட்டி, ரொம்பெ மோசமா இருக்கு, மாட்டு கொட்டாய் மட்டும் போதும், வாங்க போலாம்”

பாட்டி சிரித்துக் கொண்டே திரும்பி நிற்பது இருளில் இலேசாகத் தெரிந்தது.

“அங்கம்மாகிட்டெ கூட்டிட்டுப் போறென், பக்கத்து வீடுதான் அவுங்க ஒனக்கு எல்லாம் செஞ்சி தருவாங்கப்பா, அவுங்கெகூட நாளைக்கு மரத்துக்குப் போவாங்கெ”

மீண்டும் ஆசுவாசம். அவரிடன் வேறு ஏதாவது கேட்டு வைக்கலாம் அல்லது ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

“அங்கம்மா! தோ வாத்தியாரு தம்பி வந்துருக்கு, டவுன்லேந்து. ஏதோ ஒதவி வேணுமா”

அங்கம்மா அக்காவின் வீடு கொஞ்சம் நவீனப்படுத்தப்பட்டிருந்தது. உள்ளே அகலமான இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கம்மா அக்காவின் இரண்டு மகன்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருவன் நினைவு தப்பியவன் போல வித்தியாசமாகச் சிரித்துக் கொண்டே இருந்தான்.

“க்கா. . நான் ஒரு சின்ன படம் எடுக்க போறென், ஒரு 10-15 நிமுசம் படம்தான். எஸ்டெட்லெ சின்ன பிள்ளிங்க வாழ்க்கெ, எப்படி இருந்துச்சு, அவுங்க என்னானெ பண்ணுவாங்கெ. . இப்படி இதெ பத்திதான் ரொம்பெ சுருக்கமா”

“அப்படியா தம்பி! நல்ல விஷயம்தான். என்னா ஒதவி வேணும் சொல்லு”

“எங்க அக்கா மகனுங்கெ ரெண்டு பேரெ நடிக்க வைக்க போறென், மரம் வெட்ட போற மாதிரி நாளைக்குக் காலைலெ காட்சி எடுக்கனும்கா, அதுக்கு காண்டா வாளி, மரம் வெட்டறெ சட்டெ, அப்பறம் தீம்பாருலெ பால் கிளாஸ் தொடைக்கறெ மாதிரி காட்சிங்களாம் மொதெ எடுக்கனும்”

“அதுக்கென்ன, நாளைக்குக் காலைலெ 6மணிக்குலாம் அந்தப் பையனெ கூட்டிக்கிட்டு இங்கெ வந்துருங்கெ, என் பையனோடெ உடுப்பு இருக்கு, எங்க தீம்பர் பக்கம் கூட்டிட்டு போறென்”

அங்கம்மா அக்காவையும் அந்த முதல் காட்சியில் நடிக்க வைக்க சம்மதம் பெற்றுக் கொண்டேன். ஒருவழியாக பாதி வேலை முடிவடைந்ததைப் போல உணர்ந்தது. பாட்டியிடம் நன்றிக் கூறிவிட்டு, நாளை காலை அங்கம்மா அக்காவையும் என் அக்கா மகனையும் தயார் செய்து, பாட்டியின் வீட்டில் காட்சியமைப்பு தொடங்கும் என்ற முடிவுடன் குமார் அண்ணனுடன் சென்ரோல் 14 பாதையில் பால் தொழிற்சாலையின் நெடியின் தீவிரத்தைப் பொருட்படுத்தாது வீடு போய் கொண்டிருந்தேன்.


இரண்டாவது கதை : பலவீனமான காட்சியமைப்புகளும் மரணித்த வெளிப்பாடுகளும்மறுநாள் காலையில் 5.45க்கு, 8வயதே நிரம்பிய சிறுவனை அழைத்துக் கொண்டு அதிகாலையின் குளிரில் உடலெல்லாம் விரைத்துக் கொண்டே தோட்டத்திற்குச் சென்றுகொண்டிருந்தேன். இந்த மாதிரி நிறைய பயணங்கள் பிற்பாதியில் தொடர்ந்து கொண்டே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு குளிர் சட்டைகளை மொத்தமாக உடலில் சுத்திக் கொண்டு என் வயிற்றைப் பலமாகக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான் எனது குழந்தைகள் குறும்படத்தின் முக்கியமான கதாபாத்திரம். செண்ரோல் தோட்டத்தைச் சென்றடைந்ததும் அங்கம்மா அக்காவின் வீட்டின் முன்புறம் மோட்டாரை நிறுத்திவிட்டு அவரை பலமுறை அழைத்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் வீட்டுக் கதவைத் திறக்கும் போது வீடே களைகட்டிவிட்டது போல வெளிச்சமாக இருந்தது.

“குசுனிலெ இருந்தென் தம்பி, அதான் கேக்கலெ, வாங்க பசியாறெ செஞ்சிட்டேன்.சாப்டெ போலாம்”

அங்கம்மா அக்காள் அவருடைய மகனின்( நான் நினைவு தப்பியவன் போல காட்சியளித்தான் என்று குறிப்பிட்டிருந்த அவருடைய மகன்) சட்டையை எடுத்துக் கொடுத்தார். கோடு போட்ட வெள்ளை சட்டை. நீளமாக இருந்தது. நானும் சரியாகக் கவனிக்கவில்லைதான். அவரசமாக அந்தச் சட்டையை என் அக்காள் மகனுக்கு மாட்டிவிட்டுப் பார்க்கும் போது, அந்தச் சட்டை அவனுக்குத் தொடர்பே அற்ற நிலையில் உடலில் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்தபடியாக வெள்ளை வர்ணத்தில் சிலுவாரும் ஒன்று. எல்லாம் போட்டு முடித்த பிறகு அதே பையனுடைய காலணியையும் மாட்டிக் கொண்டான். இப்பொழுது என் நகரத்து அக்கா மகன் தோட்டத்து( நினைவு தப்பிய)சிறுவன் போல ஆனால் முகத்தைச் சுளித்துக் கொண்டு சோர்வாக நின்று கொண்டிருந்தான்.

எல்லோரையும் அழைத்துக் கொண்டு அங்கம்மாள் அக்காள் வேலை செய்யும் பத்தியைச் சென்றடைந்த பின்னர்தான் வீட்டிலிருந்து காண்டா வாளிகளைச் சுமந்து கொண்டு வெளியேறும் (அபத்தம் நிறைந்த தோட்டத்து அல்லல் வாழ்க்கையின் பதிவை) காட்சியமைக்க தவறிவிட்டேன் என்று தலையில் டமார் என்று ஒரு நினைவுறுத்தல். காமிராவைத் தயார் செய்வதற்குள் அங்கம்மா அக்காள் இரு காண்டா வாளிகளுடன் வந்து நின்றுவிட்டார். அடுத்து அங்கம்மா அக்காவும் சிறுவனும் பத்திக்குள் காண்டா வாளியுடன் நடந்து செல்வது போன்ற காட்சிகளை மூன்றுமுறை பதிவு செய்து முடித்துவிட்டேன். சிறுவன் கிளாஸ் மங்கைத் துடைப்பது போலவும் அதே நேரத்தில் காமிராவின் பிரேமில்(Frame) அங்கம்மா அக்காள் இடதுபுற ஓரத்தில் மரம் வெட்டும் காட்சியும் பதிவாகும்.(இந்தச் சம்பவங்கள் யாவும்-1960-ல் நடப்பது போலத்தான் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்)


முக்கியமான பலவீனம்: கிளாஸ் மங்கைத் துடைக்கும் அந்தச் சிறுவன்(அதுவும் 1960களில்) ஸ்பார்க் எனப்படும் பள்ளிக் காலணியை அணிந்து கொண்டு உலா வருவதை எடிட்டிங் செய்யும் போதுகூட நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.(1960களில் ஸ்பார்க் காலணியை அணிந்து கொண்டு சிறுவர்கள் கிளாஸ் மங்கைத் துடைத்தார்கள் என்று கூறினால், என்னைத் தொலைத்துக் கட்டிவிடுவார்கள் தோட்டத்து மக்கள்)

இந்தக் காட்சிகளுக்குப் பிறகு காமிராவை ஐந்தாவது மரமோரமாக நான் பிடித்துக் கொண்டு நிற்க, காமிராவில் அந்தச் சிறுவன் முதல் மரத்திலிருந்து நான்காவது மரம்வரை கிளாஸ் மங்கிலுள்ள கட்டிப் பாலை சேகரித்துக் கொண்டே காமிராவை நெருங்குவது போன்ற ஒரே தொடர் சம்பவம் எந்தவித ஓசையுமின்றி எடுக்கப்பட்டதோடு குறும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் முடிவடைந்து விட்டன. பாக்கிட்டிலிருந்து 10 வெள்ளியை எடுத்து அங்கம்மா அக்காவிடம் நீட்டினால் அவர் தவறாக எடுத்துக் கொள்வார் என்பதை முதலிலியே அனுமானித்துக் கொண்டு, அவருடைய அந்த நினைவு தப்பிய மகனின் கலர் சட்டையின் பாக்கெட்டில் திணித்து விட்டு அக்காவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு மீண்டும் மாலை வந்து மீதி காட்சிகளைப் படமாக்க வேண்டும் என்ற அடுத்த தீர்வுகளுடன் சென்றுவிட்டேன். வாழ்வின் எல்லாம் தருணகளும் ஒருவித தீர்வின் அடிப்படையில்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன போல.

வீடு திரும்பி கொண்டிருந்த சமயத்தில் சற்று முன்பு எடுத்த படக் காட்சிகளில் சிறுவனுடைய முகத்தில் வெளிப்படாத எந்த உனர்வும்( தோட்டத்து சிறுவர்கள் அதுவும் காலையில் பால் கிளாஸ் துடைக்கும் சிறுவர்கள் சுறுசுறுப்பாகவும் துடுக்குடன் இருப்பார்கள் என்று அம்மா சொல்லியிருக்கிறார்) இல்லாமல் வெறுமனே அதுவும் இரண்டுமுறை காமிராவை யதார்த்தமாகப் பார்த்துவிட்ட சிறுவனின் வெளிப்பாடுகள் குறும்படத்தின் கருவைப் பலவீனமாக்கிவிட்டது போல தோன்றியது. கடைசிவரை சிறுவனின் முகத்தில் எந்த வெளிப்பாடுகளும் தோன்றவில்லை. காலை நேரக் குளிர் அளித்த தடுமாற்றமும் பிறர் வேலையைத் தாமதிக்க வேண்டாம் என்ற அவசரமும் சிறுவனின் பாத்திரப் படைப்பின் நூதன பங்கை முக்கியத்துவப்படுத்தாமல் காட்சிகளைப் படமாக்குவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டேனோ என்ற நெருடல் தொடர்ந்து மனதில் நெளிந்து கொண்டிருந்தது.

மீண்டும் மதியம் கடந்த இரண்டு மணி நேரத்தில் இரண்டு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு துணைக்கு நண்பர் ஒருவரையும் சேர்த்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றேன். வழக்கம் போலவே தீர்மானத்தின்படி அங்கம்மா அக்காளும் அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். தோட்டத்திலுள்ள சிறுவர்களும் பெண்களும் படப் பிடிப்பைப் பார்ப்பதற்கு ஆவலாக அங்கம்மா அக்காவின் வீட்டில் கூடியதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.(இது வெறும் குறும்படம் மட்டுமே இதில் ஜிகினா வேலைபாடுகள் இல்லை என்பதை உணர்த்தவும் முடியாமல் தவித்தேன்) அக்கா மகன்கள் இருவரையும் நீல வர்ண சிலுவார்களை அணிவித்து, தலையில் நல்லெண்ணையை அதிக அளவில் அப்பிவிட்டேன்.( தோட்டத்துப் பையன்களுக்கு எப்பொழுதும் தலையிலிருந்து எண்னை வடியும் என்று பாரதிராஜா படங்களிலிருந்து கற்றுக் கொண்டதுதைவிட சொந்த அனுபவத்தில் பார்த்ததும் உண்டு)

அடுத்த காட்சி, தோட்டத்து வீட்டிலிருக்கும் இன்னொரு சிறுவன் குளிப்பதும் நண்பன் வந்து அழைக்கவே அவனுடன் விளையாட செல்வதும் பிறகு பத்தி காடுகளைக் கடந்து ஓடி விளையாடுவதும் என்று 1960களில் குழந்தைகளின் நடவடிக்கைகளை விளையாட்டுக்களைப் பதிவு செய்து முடித்து விட வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில். அதன் படியே நண்பன் வந்து அழைக்கும் போது (இரண்டாவது கதாபாத்திரம்)வீட்டின் சிறிய இருளிலிருந்து கிளம்பி வெளியே சென்று கதவோரமாக சாய்ந்து கொண்டு நண்பனை எதிர்கொள்ள வேண்டும். இதற்கிடையில் இருளிலிருந்து காமிராவில் தோன்றி கதவை நோக்கிச் செல்லும் இடைவேளையில் “தோ வந்துட்டெண்டா” என்ற ஒரு வசனத்தை அந்தக் கதாபாத்திரம் உச்சரிக்க வேண்டும். இந்தக் காட்சி மட்டும் 5முறை படமாக்கப்பட்டது. வீட்டுக்கு வெளியில் கூடிவிட்ட மக்களின் சலசலப்பு காமிராவில் அடிக்கடி பதிவாகிவிடுவதாலும், சிறுவன் ஒவ்வொருமுறையும் வசனத்தை உச்சரித்துக் கொண்டே காமிராவை வேகமாக கடந்து விடவே, “தோ. . “ என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் போது மட்டும்தான் கதாபாத்திரம் காமிராவில் இருக்கிறது, “வந்துட்டெண்டா” என்று உச்சரிப்பின் போது காமிரா வெறும் வீட்டின் இருளை மட்டும் வெறித்து நிற்பது சரியாக படாததாலும், அதே காட்சியைப் பலமுறை சரி செய்து எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுப் போனது.

எப்படி பார்த்தாலும் கதாபாத்திரங்களின் நடிப்பு வெறும் நடிப்பாகவே எல்லாம் காட்சிகளிலும் நின்றுவிடுகிறது. வேறு வழி? போட்டிக்காக எடுக்கப்படும் எந்தப் படைப்பாக இருந்தாலும் இப்படித்தான் அவசரத்தில் பல கூறுகளை விட்டுக் கொடுத்துவிடும் போல. அதே போல பல காட்சிகளில் வெளிப்பாடுகள் சிதறிக் கொண்டே இருந்தன. அழகான தோட்டத்து மரப் பத்திகளையும் ஆற்றையும் பதிவு செய்வதில்கூட அவசரம் இருக்கத்தான் செய்தது. இதில் நகரச் செயற்கைத்தனங்கள் நிரம்பிய இரண்டு சிறுவர்களைத் தோட்டத்தில் அலையவிட்டது, வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்குக் கோமனம் கட்டி வேடிக்கைப் பார்ப்பது போலவே இருந்தது.

அடுத்த ஒரு வேடிக்கையான காட்சி ஒன்று பலமுறை கட் அவுட் செய்து வெறுப்பில் படமாக்கப்பட்டது. இரண்டு சிறுவர்களும் “கிளெங் கிளெங் கிளெங்” என்றுக் கத்திக் கொண்டே காமிரா இருக்கும் மரத்திற்கு வந்து சேர்ந்தவுடன் “ வாடா கித்தா கொட்டெ பொருக்கலாம்” என்று உச்சரித்துவிட்டு, கித்தா கொட்டைகளைச் சேகரிக்கத் தொடங்க வேண்டும். சரியாக காமிரா இருக்கும் மரத்தை நெருங்கியவுடன் அந்த வசனங்களை மறந்துவிடுகிறார்கள் அல்லது காமிராவைக் கடந்த பிறகு அந்த வசனத்தை உச்சரித்துக் கொள்கிறார்கள். இப்படிப் பலமுறை ஏற்பட்டதால் எனக்கே தலை சுற்றி போனது. இறுதியில் சரியாக அந்த மரத்தை நெருங்கும் போது “வாடா கித்தா தோப்பு பொருக்கலாம்” என்று முதல் கதாபாத்திரம் கூறிய போது சிரிப்பு ஒருபக்கம், வேறு வழியின்றி வசனப் பிழையைப் பொருட்படுத்தாது அதே காட்சியைப் படமாக்க வேண்டிய வேடிக்கை குறும் படத்தின் இயக்குனரான என் நிலை ஒருபக்கம். அங்கிருந்த கித்தா மரங்களுக்குப் பற்கள் இருந்திருந்தால் வாய்விட்டு சிரித்திருக்கும்.

அதிகபடியான வசனங்களே இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளைப் படமாக்கிக் கொண்டே போனேன்.இப்படியாக தோட்டத்துக் காட்சிகள் முடிவடைந்த பிறகு அடுத்த வாரம் ஸ்காப்ரோ தோட்டத்திற்குச் சென்று 1980களில் சிறுவர்களின் விளையாட்டுமுறையையும் வாழ்க்கைமுறையும் 4 நிமிடக் காட்சிகளில் பதிவு செய்துவிட்டேன். முதலில் அந்தத் தோட்டத்தில் படம் எடுக்க விட மறுத்துவிட்டார்கள். பிறகு என் அப்பாவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு(அப்பா வாழ்ந்த தோட்டம் என்பதால் அவரையொட்டி நல்ல அபிமானங்கள் இருந்தது) படக் காட்சிகளை எடுத்துக் கொண்டேன். பேப்பர் பட்டம், ஆற்றில் மீன் பிடித்தல், செம்பனை மட்டையில் சவாரி( 1980களின் தொடக்கத்தில்தான் செம்பனை நடுவு தொடங்கியது)

1980களில் அங்கு இருந்த வீடுகள் எதுவும் நடப்பில் இல்லாததால், மீதமிருந்த ஒரேயொரு வீட்டை(அதுவும் பள்ளியின் ஸ்டோர் அறையாகப் பயன்படுத்தப்பட்டது) தற்காலிகமாக ஒரு காட்சியைப் பதிவு செய்ய மட்டும் பயன்படுத்திக் கொண்டேன். இரண்டாவது கதாபாத்திரம்( 1960களில் இரண்டாவது கதாபாத்திரமாக தோன்றிய அதே சிறுவன்தான்) அந்த வீட்டின் முன்புறத்தில் அமர்ந்து கொண்டு சிவப்பு தோள் கொண்ட பென்சிலில் எதையோ வரைந்து கொண்டிருக்கிறான், அவன் பக்கத்தில் சாக்குப் பையும் ஒரு பிளாஸ்டிக் குவளையில் வரக் காப்பியும் இருக்கும். வழக்கம் போல முதல் கதாபாத்திரம் “வாடா வெளையாட போலாம்” என்று அழைத்துக் கொண்டே ஓடிவர (வரக் காப்பியை அப்படியே வைத்துவிட்டு) இரண்டாவது கதாபாத்திரம் அவனுடன் சென்றுவிட வேண்டும்.

முக்கியமான பலவீனம்: இந்தக் காட்சியிலும் சிறுவர்களின் தலையில் அதிகமான எண்ணையை வடியவிட்டது, கதாபாத்திரத்தின் முகச் சுளிப்பும் அசௌகரிகமும் அப்படியே பதிவாகியுள்ளது. தொடர்ந்து பதிவின் பின்னனியில் பள்ளியின் தோட்டக்காரர்( படம் எடுக்க அனுமதி கொடுத்த கொடை வள்ளல்) உடன் வந்திருந்த நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது இடம் பெற்றிருப்பது.

இப்படிப் பலவிதமான பலவீனங்களை அடுக்கிக் கொண்டே போனால், என் “குழந்தைகள்” குறும்படம்தான் உலகிலேயே மிக மோசமான குறும்படம் என்கிற நிலைக்கு ஆளாகிவிடும் போல. குறுகிய படமாக இருந்தாலும் பலவீனங்கள் நிரம்பியிருந்தாலும் இந்தக் குறும்படம் பல நல்ல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியது என்றுதான் பெருமிதம் அடைந்து கொள்கிறேன். அங்கம்மா அக்காளும் அவருடைய குடும்பமும், குமார் அண்ணனின் பாட்டி, பள்ளி தோட்டக்காரர் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறும்படம் என்கிற கலைக்கு அப்பால்கூட நான் நுட்பங்களைப் பார்ப்பத¨விட மனிதர்களைதான் பார்க்கிறேன். ஏன்?

மீண்டும் ஒரு பலவீனமான குறும் படம் எடுக்க ஏதாவது ஒரு தோட்டத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் எடுக்கப்பட்ட இந்தக் குறும்படத்தை மீண்டும் அங்கம்மா அக்காவுடன் அமர்ந்து கொண்டு பார்த்துச் சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு மோசமான குறும் படம் எனக்குக் கற்றுக் கொடுத்தது இவ்வளவுதானா?

ஆக்கம்: கே.பாலமுருகன்

மலேசியா