*ஒரு காலுடைந்த பழைய பெரிய சைக்கிள்...
*மூன்று பூந்தொட்டிகள்...
*தகரத்தின் சுருங்கிய நிழல்...
*கத்திரிப்பு வர்ணத்தின் முட்டிவரை இழுக்கப்பொட்டிருக்கும் காலுறையை அணிந்துகொண்டிருக்கும் ஹருண். . .
*வழிப்பாதையில் முதலையிடமிருந்து தினமும் தப்பி வரும் லிந்தாங். .
இதுதான் முஹமாதிய கிராமப்பள்ளியின் முகம். . .
உட்புற தீவான பெலித்தூங் எனும் கிராமத்திலுள்ள பழமையான ஒரு பள்ளியின் கதை இது. ஒரு காலக்கட்ட மக்களின் வாழ்வை ஆவணப்படுத்தும்போது இது போன்ற ஆரம்பப்பள்ளிகளின் இருப்பு நீக்க முடியாத வலுவான ஒரு ஞாபகத்தைக் கொண்டிருக்கும். வாழ்வின் எல்லா விதமான தொடக்கங்களையும் இங்கிருந்துதான் கற்றுக்கொண்டிருப்போம். அது போல இந்தோனேசியாவின் வறுமை தேசங்களில், மீதமிருக்கும் மக்களின் நம்பிக்கைகளின் நினைவாக முஹமாதியா கிராமப்பள்ளியைப் போல ஏராளமான பள்ளிகள் அங்கு இருக்கின்றன. அவைகள் யாவும் மாணவர்கள் போதாமையினாலும் ஆசிரியர்கள் இல்லாமையினாலும், பேரிடர்களாலும் மூடப்பட்டு வரும் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் உண்மை கதையை மையமாகக் கொண்டதுதான் முஹமாதியா கிராமப்பள்ளி.