Sunday, July 12, 2009

Modenism-ஐ “நவீனத்துவம்” என்று சொன்னால் அவன் மடையன் - மறைமலை இலக்குவனர்

பினாங்கு மாநிலத்தின் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் பேராசிரியர் மறைமலை இலக்குவனர் அவர்களின் இலக்கிய சொற்பொழிவு பினாங்கின் பாலாய் ராக்யாட் என்கிற சந்தைக்கு மேலுள்ள மண்டபத்தில் நடந்தது. சீனி நைனா முகமது அவர்கள் பேராசிரியரை அழைத்து வந்து அவரின் சொற்பொழிவை அங்கு நடத்துவதற்கு வாய்ப்பளித்திருந்தார். (இதுவரை நிகழ்வு குறித்து அறிமுகம் மட்டுமே)

நிகழ்வில் தனது உரையைத் தொடங்கிய பேராசிரியர் ஒரு தி.மு.க கட்சியின் அரசியல் போதகர் போலவும் அல்லது தமிழ்த்துறையின் பேராசிரியரின் கற்றல் கற்பித்தல் பாடம் நடத்துவதற்கு நிகராகவும் தனது உரையை செவ்வனே ஆற்றினார்.

ஏன் அவர் தி.மு.க கட்சியின் அரசியல் போதகர் என்றேன்? சமூகத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு மட்டுமே வீரமிக்கவையாக இருக்க வேண்டும் இலக்கியம் என்று கடைசிவரை வாதாடினார். தி.மு.க பேச்சாளர்கள் இப்படித்தான் மேடை பேச்சில் இலக்கியம் வளர்ப்பார்கள். எனினும் உரையை முடிக்கும்போது திடீரென்று நல்லவராக மாறி, “எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள், வணங்கவேண்டியவர்கள்” என்றெல்லாம் பேசிவிட்டார்.

Modenism-ஐ “நவீனத்துவம்” என்று சொன்னால் அவன் மடையன் என்று மறைமலை இலக்குவனர் கூறினார். அதைப் புதுமை இயல் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்று பாடம் நடத்தினார். பேராசிரியர்கள் என்றாலே தான் படித்த பிற துறை சார்ந்த நுண்ணறிவுகளைக் கொண்டு மிக நேர்த்தியாக ஒப்புவிப்பார்கள். மேலும் பல பேராசியர்கள் நவீன இலக்கியவாதிகளின் மீது காத்திரமாக பாயக்கூடியவர்கள் என்று தனது பேச்சின் மூலம் நிறுபித்துள்ளார்கள்.

சரி மேலும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் நம்முடைய தமிழ்ப் பாரம்பரியத்திற்கு ஏற்புடைய வடிவமல்ல, அதை மேலை நாட்டிலிருந்து தூக்கிக் கொண்டு வந்து, தலையில் வைத்துக் கொண்டாடி, ஆர்பாட்டம் செய்து, தமிழ் சூழலைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்றும், மேலும் ஆசியா நாடுகளின் குடும்ப சிதைவும், மனச் சிதைவும் சாத்தியமில்லாதவை ஆகையால் நம்முடைய சமூக கட்டமைப்பு இன்னும் சிதையவில்லை என்று வாதிட்டார் பேராசிரியர். ஒருவேளை பினாங்கு(மலேசியாவின் மாநிலம்) வந்தவர், அழகிய பாலத்தையும், கவர்மிகு உல்லாச தளங்களையும் பார்வையிட்டவர் மலேசியா மிக புனிதமான எவ்வித சிக்கலும் இல்லாத நிலப்பரப்பு என்று சொல்லிவிட்டார் அல்லது எண்ணிவிட்டார் போல. அவருக்கு என்சார்பில் சொல்ல வேண்டியது நிறைய இருந்தது ஆனால் நவீன தமிழ் இலக்கியவாதிகளைப் புரிந்துகொள்வதில் ஒரு இறுக்கமான பாடத்திட்டத்தை வகுத்துக் கொண்டு இருப்பவருடன் வாதிட்டும், விவாதித்தும் பயனில்லை என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பினாங்கு பாலம் இதற்கு முன் காலை தொடங்கி மாலைவரை நெரிசலால் சிதைந்து இருக்கக்கூடிய, சாலை பதற்றங்களை ஏற்படுத்தகூடிய ஒரு தடம். இந்தச் சாலை நெரிசலே போதும் அதில் பயணிக்கும் தொழிலாளர்களின் அவசர பொழுதுகளைச் சிதைத்து அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிடும். இங்கிருந்து தொடங்கி அந்த மன உளைச்சல் வீட்டு உறவுகள்வரை தாவும்.

மேலும் 8 வயது சிறுமியைக் கடத்தி அவளின் யோனியில் கத்திரிக்காய், முள்ளங்கி போன்றவற்றைத் திணித்து பாலியல் வன்கொடுமைப்படுத்திய மனம் சிதைந்தவர்கள் இருக்கும் பல மனிதர்களை கொண்ட சமூகமும்தான் இங்கேயும் உள்ளன. பிறகெப்படி பேராசிரியர் மனச்சிதைவு இங்கில்லை என்று சொல்ல முடியும்? பேராசிரியர் புனிதமான சமூகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார், அவருக்கு என் வாழ்த்துகள் ஆனால் மனச்சிதைவும் குடும்ப சிதைவும் இன்னும் ஆசியா நாடுகளின் உக்கிரமடையவில்லை, அது மேலைநாட்டின் சமூக கட்டமைப்பு என்று சொல்வது நடைமுறை சார்ந்த சிந்தனையல்ல என்று கட்டாயம் சொல்ல முடியும். பிற நாடுகளுக்குக் கண்ணியமான சுற்றலாவை மட்டும் மேற்கொண்டால், அந்த நாட்டின் பின்னனியையும் சமூக வளர்ச்சியும் புரிந்துகொள்ள முடியாது. அதிகம் படித்துவிட்டதால் எல்லாம் நிலைகளையும் தனது கல்வி ஆளுமையைப் பயன்படுத்தி எந்தச் சமுகத்தையும் மதிப்பிட்டுவிட முடியாது.

அன்மையில் ஜொகூர் மாநிலத்தில் குழந்தைகளைப் பெற்று விற்கும் தம்பதிகளைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். குழந்தைகள் பார்க்கும்படி நேரடியாக புணர்ந்து பிள்ளைகளைப் பெற்று வேலைக்கு அனுப்புவதும் பிறருக்கு விற்றுப் பிழைக்கும் இந்தக் குடும்பம் இன்னும் சிதையவில்லை என்று பேராசிரியர் மறைமலை போல சாதரணமாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாமா? என்ன ஒரு அபத்தம்?

மேலைநாட்டு சமூகக் கட்டமைப்பில் மனச்சிதைவு இருப்பதால் அவர்கள் பின்நவீனத்துவம் சர்யலீசம் படைக்கிறார்கள், அப்படியானதொரு சூழல் இல்லாத நமது ஆசியா நாட்டில் ஏன் படைப்பாளிகள் பின்நவீனத்துவம் எழுத வேண்டும் என்று கேள்வி கேட்கிறார் மறைமலை. நாங்கள் பின்நவீனத்துவம் எழுதவில்லை, எங்கள் சமூகத்தையும் எங்களின் வாழ்வு சார்ந்த அனுபவங்களையும் எழுதி கொண்டிருக்கிறோம். இசங்கள் கிறுகெடுத்த பலரும் இந்த மண்ணிலிருந்து வரும் அசலை அசலாகப் பார்க்க பழகவில்லை. மேலைநாட்டின் வரவுகளையே முன்வைத்து எல்லாம் நிலப்பரப்புகளின் இலக்கியங்களையும் வாழ்வையும் பார்த்துக் கொண்டும் மதிப்பீட்டு கொண்டும் இருந்தால், முதலில் மலேசிய தோட்டப்புற சமூகத்தில், நகர் சார்ந்த வாழ்வின் நெருக்கடியில் ஒரு 6 மாதம் வாழ்ந்து பார்க்கட்டும்.
இன்னும் தொடரும்

கே.பாலமுருகன்
மலேசியா