மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார், வ.சுப.மாணிக்கம் வழியில் தமிழ் பயின்றவர். பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் கூட. கடாரத்திலுள்ள பூசாங்க் பள்ளாத்தாக்கின் வரலாற்று ஆவணங்களை நேரில் காண்பதற்காக எழுத்தாளர் கோ.புண்ணியவான் மூலம் இங்கு வந்திருந்தார். 2 மணி நேரம் சுங்கைப்பட்டாணியில் அவரது உரையை ஏற்பாடு செய்திருந்தோம். வெறும் சொற்பொழிவாக மட்டும் இருக்காமல் பார்வையாளர்களை தனது நகைச்சுவை உணர்வின் மூலமும் அருமையான நாட்டுப்புறப்பாடல் வழியாகவும் கவரச் செய்தார்.
மேலும் இந்தாண்டு இளம் ஆய்வாளர் விருதையும் தமிழக அரசு அவருக்கு அறிவித்திருக்கிறது. சுங்கைப்பட்டாணியிலுள்ள பொதுமக்களும், தலைமை ஆசிரியர்களும், விரிவுரையாளர்களும், ஆசிரியர் பயிற்றகத்தின் மாணவர்களும், பொது அமைப்புகளின் செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டுப்புற பாடல்களின் கட்டமைப்புகளையும் இயல்பாகவே தமிழிலுள்ள சில வரையறுக்கப்பட்ட எழுத்திலக்கணங்களை அது மீறும் விதத்தையும் நகைச்சுவை பாணியில் விளக்கமளித்தார். குறில் உயிரெழுத்துக்கு ஒரு மாத்திரை இருப்பது தமிழக்கணமாகும் ஆனால் நாட்டுப்புறப்பாடலில் அதன் மாத்திரை அளவு இலக்கணத்தைக் கடந்து மீறி செல்லும் அழகியலைப் பாடிக் காட்டி விளக்கினார்.
மேலும் கடாரத்து வரலாற்றைச் சார்ந்து ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். புதுவையில் கடாரம் கொண்டான் எனும் பகுதியிலிருந்து வந்திருப்பதால், அதனுடன் வரலாற்றுத் தொடர்புடைய கடாரத்தின் மகத்துவத்தையும் ஆவணங்களையும் நினைவுக் கூர்ந்து பேசினார். இணையத்தில் அதிக ஆற்றலுடைய இவர் இணையம் கற்போம் எனும் நூலையும் எழுதியுள்ள மு.இளங்கோவன் இணையம் உலகின் மிகச் சிறந்த ஆயுதம் எனக் கூறுகிறார். எல்லாம் மாயைகளையும் கட்டுடைத்து விடக்கூடிய ஆளுமை இணையத்திற்கு இருப்பதாகக் கருதுகிறேன் எனவும் கூறினார்.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி