Sunday, July 19, 2015

இன்று நேற்று நாளை: திரைப்படம் ஒரு பார்வை

காலம் என்பதன் அர்த்தம் என்ன? அது ஒரு ஜடப்பொருள் இல்லை. அசையவில்லை. தெரியவில்லை. ஆனால், அளக்க முடிகிறது. வினாடி, நிமிடம், நேரம், வருடம், மாதம், நூற்றாண்டு என காலத்தை அளக்க மட்டும் முடிகிறது. காலத்தின் அளவையை எது ஆதாரப்படுத்துகிறது? என்கிற அடுத்த கேள்விக்குப் பதில் நாம்தான். நம் முன்னோர்கள்தான். நம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக தோல் சுருங்கி, உருவம் மாறி, உடல் தளர்ந்து மூப்பெய்தி இறந்துபோகும் நம் வீட்டுப் பெரியவர்கள்தான் காலத்தின் அளவையை உறுதிப்படுத்துபவர்கள். காலம் என்கிற ஒன்று மாயை இல்லை என்பதனை அவர்களின் மூப்பெய்தலே நிறுபித்துக் கொண்டிருக்கிறது. ஒரு செடி மரமாவதில் காலம் ஒளிந்திருக்கிறது. ஒரு மரம் முதிர்ந்து சாய்வதில் ஒரு காலம் நிரூபணம் ஆகின்றது. ஒரேயொரு மாயம் என்னவென்றால் பிறப்பதற்கும் இறப்பதற்கும் மட்டும் சரியான காலத்தை நிர்ணயிக்க முடியாது. அது நடந்து முடிந்த பிறகே நேரம் கணிக்கப்படுகிறது. ஆகவே, பிறத்தலும் இறத்தலும்விட வாழ்தலே மிக முக்கியம். பிறந்ததற்காக வாழ்ந்து சாவதைவிட, இறந்த பிறகும் நம் வாழ்தலை உலகம் நினைவுக்கூறும் வகையில் வாழ்ந்து சாக வேண்டும் என்பதையே காலம் ஒவ்வொரு கணமும் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட காலம் குறித்த விவாதங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் நடந்ததில்லை. இறந்தகாலத்தை மறத்தல், எதிர்காலத்தைக் கணிக்க முடிதல் போன்ற விசயங்களைத் தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. பீட்சா 2 கூட எதிர்காலத்தை ஏதாவது ஒரு கலை வடிவத்தின் மூலம் அந்த வீட்டில் தங்கியிருப்பவர்கள் விட்டு செல்கிறார்கள் என அமானுஷ்யமாகவும் சிந்திக்கும் வகையிலும் கொடுத்திருக்கும். ஒரு மனித வாழ்வின் நடந்த முடிந்தவை, நடப்பவை, நடக்கப் போகுபவை என மூன்றைப் பற்றியும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இன்று நேற்று நாளை படம் தந்திருக்கிறது. இப்படம் காலத்தை விவாதிக்கவில்லை; ஆனால், காலத்தில் நிகழ்காலமே அவசியம் என உணர்த்துகிறது.

டைம் மிஷன் என்றதும் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஆங்கில சினிமாக்களின் தழுவலோ காட்சிகளோ இடம்பெற்றுவிடும் என நினைத்துதான் படத்தைப் பார்க்கத் துவங்கினேன். ஆனால், இயக்குனர் ரவிகுமார்(அறிமுகம்) ஓர் அறிவியல் புனைக்கதையை அசலாக  தமிழ்ப்படுத்தி இயக்கியுள்ளார். சிக்கலான கதையைக் குழப்பமே இல்லாத திரைக்கதையின் வாயிலாக சிறுவர்கள் படத்தைப் பார்த்தாலும் புரியும் அளவிற்குத் தந்திருப்பதுதான் அவருடைய சாமர்த்தியம். அவருக்கு ஈடாக எடிட்டிங், கலை, பின்னணி இசை, நடிப்பு என அனைத்துப் பகுதிகளும் சமமாக உழைத்திருக்கின்றன.


இப்படம் மலேசியத் திரையரங்குகளில் ஓடவில்லை என நினைக்கிறேன், ஆனால் சென்னையில் படம் நல்ல வெற்றி. எங்கேயும் சோர்வளிக்காத ஒரு திரைக்கதையையும் புதுமையான ஓர் அனுபவத்தையும் நாடித்தான் மக்கள் திரையரங்கம் செல்கிறார்கள். அத்தகைய தேவையைப் புரிந்து கொண்டு இக்கதையை ஒரு திரைக்கதை குழுவே விவாதம் நடத்தி உருவாக்கியிருக்கிறது. கதை ந்மக்கு எப்பொழுதும் கிடைத்துவிடும், ஆனால் அதனைத் திரைக்குக் கொண்டு வருவதற்குத்தான் பயிற்சியும் உழைப்பும் தேவை. அதனை இயக்குனர் ரவிகுமார் மிகுந்த கவனம் செலுத்தி செய்திருக்கிறார்.


அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம். குடும்பத்துடன் பார்க்க வேண்டியப் படம் எனச் சொல்லி குடும்பங்களையும் உறவுகளையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் தமிழ்ப்படச் சூழலில் இப்படம் உண்மையில் குடும்பத்தோடு பார்க்க வேண்டியப் படமாக இருக்கிறது. இரட்டை அர்த்தங்கள் கொண்ட பார்ப்பவர்களை முகழ் சுழிக்க வைத்து செய்யப்படும் மூன்றாம்தர நகைச்சுவைகள் இல்லை.

ஒளியைவிட வேகமாகப் பயணிக்க முடியும் என்றால் நாம் நிகழ்காலத்தைவிட்டு இறந்தகாலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பயணிக்க முடியும் என்பதைத்தான் இந்த அறிவியல் புனைக்கதை முன்னிறுத்துகிறது. இதனையே கிரிஸ்டப்பர் நோலன் தன்னுடைய 'இண்டர்ஸ்டீல்லர்' படத்திலும் காலம் என்பதற்கும் புவி ஈர்ப்பு சக்திக்குமான தொடர்பை அறிவியல் விவாதமாகக் கொடுத்திருப்பார். இருப்பினும் அந்த அறிவியலைத் தாண்டி மனித உறவுகளின் ஆழத்தை மையப்படுத்தி படத்தை முடிப்பார்.  இன்று நேற்று நாளை படமும் மிகவும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அறிவியலைத் தாண்டி தத்துவார்த்தமான ஒரு பார்வைக்குள் வந்து நிற்கிறது. இறந்தகாலத்திற்குச் சென்று அதன் சம்பவத்தில் ஏதேனும் ஒன்றை மாற்றினாலும் நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, சோகத்திலோ, மகிழ்ச்சியிலோ போய் முடிய வாய்ப்புண்டு என்பதனைச் சொல்ல விழைந்தாலும், நிகழ்காலமே நிஜம் அதில் நாம் எடுக்கும் நல்ல முடிவுகளே நம் வாழ்க்கையை வழிநடத்தவிருக்கிறது என்பதையே இயக்குனர் படத்தில் ஆழமாக விதைக்கிறார்.

Tuesday, July 14, 2015

காக்கா முட்டை- அ.ராமசாமி அவர்களின் விமர்சனப் போக்குடன் ஒரு கண்ணோட்டம்

//இரக்கமற்ற நிலையில் குறுகிய இடங்களில் மூத்திர நெடியும்,அடைத்து வைக்கப்பட்ட பொருள்களும், சதா வெயில் தீண்டும் வெற்றுக் கூரைகளும் என ஆற்றோரங்களிலும் குப்பங்களிலும் தன் குடிசை வீட்டில் கிடைக்கும் சிறிய இடத்தில் வாழ்ந்து கழிக்கும் அடிமட்ட வேலைகள் செய்து, நகரத்தின் விளிம்பில் கண்டுக்கொள்ளப்படாமல் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்கள் உலகமயமாக்கலின் முன் எப்படிப் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்பதை  ‘காக்கா முட்டை’ சொல்லிச் செல்கிறது.// அம்ருதா இதழில் பிரசுரமான எனது திரைவிமர்சனத்தின் நீக்கப்பட்ட  பகுதி.

திரைப்படங்களை அதன் அரசியல் போக்குடன் அது தொட்டுப் பேசும் சமூக சூழலுடன், படமாக்குவதிலுள்ள தமிழ்ச்சினிமாவின் உள்ளார்ந்த நிலைபாடுகளுடன் இணைத்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தமிழ் சினிமாவை அது பேசும் நிஜத்துடன் முழுவதுமாகப் பொறுத்திப் பார்க்க முனையும்போது ஒரு சராசரி பொதுபார்வையாளனுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஒரு முழுமைக்கான நெருக்கம் அப்படத்தில் எதிர்பார்க்கும் அளவில் இருக்காது. ஆனால், அப்படத்தின் நேர்மை என்ன என்பதைத் தீர்மானிக்கும்போது, இயக்குனர், தயாரிப்பாளர், பொது அரசியல் என்பதனை ஒட்டி விமர்சிக்க இயல்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு இவையிரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி  'ஒளிநிழல் உலகம்' எனும் தன் சினிமா கட்டுரை நூலில் இதனை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லாம் சினிமாக்கள்ளும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. அப்புனைவு அப்படத்தின் நிகழ்வுடன் ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. எடுத்துக்காட்டாக 'சென்னை அன்புடன் வரவேற்கிறது' எனும் படத்தின் நிகழ்வு என்னவென்றால் சென்னை நகர் சூழலில் கிராமங்களிலிருந்து வந்து வேலை செய்யும் மேன்ஷன்வாசிகளின் அலைக்கழிக்கப்படும் வாழ்க்கை. அந்த நிகழ்வை/கருத்தை மையமாகக் கொண்டு அத்தகைய சில நண்பர்களின் மேன்ஷன் வாழ்க்கை புனைவாகக் கட்டியெழுப்பப்படுகிறது. ஆனால், இப்படத்தின் வெற்றி என்னவென்றால் இயக்குனர் ஏற்படுத்திய புனைவு அவருடைய சினிமா கருத்துடன்/நிகழ்வுடன் எந்த நெருடலும் இல்லாமல் இயந்து நிற்கிறது. உண்மைக்கு மிக நெருக்கத்தில் புனைவைக் கொண்டு வைக்கிறார். மையத்தைவிட்டு விலகாமல் அவ்வாழ்க்கையுடன் நம் பொதுபுத்தியும் அலைக்கழிக்கப்படுகின்றது.