Tuesday, June 23, 2009

நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்- என் முதல் நாவலின் முன்னுரை


என் முதல் நாவலான “நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்” கடந்தாண்டு நடந்த மலேசிய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருப்பது என் படைப்புக்கு ஏற்பட்ட அறிமுகமும் சிறந்த அங்கீகாரமே ஆகும்.

ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு விளிம்புநிலை பின்னனி கொண்ட குடும்பத்தில் வாழ்ந்து வளர்ந்து அந்தப் போராட்டங்களையும் சிறு சிறு சமரசங்களையும் கடந்து வந்த என்னுடைய புறச் சூழலின் உந்து சக்திதான் இந்த நாவல் உருவாதற்கான முதல் காரணம். என் குடும்ப கட்டமைப்பின் புறவெளி சிக்கலான தோட்டப்புற நகர வாழ்க்கையின் சாராம்சத்தின் அடிப்படையில் அமைந்தவைதான்.

1970களில் தொடங்கி 1995 வரை நீடித்து மேலும் ஒரு நீண்ட பயணத்தை வாழ்க்கையின் யதார்த்த தளத்தில் மேற்கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதை. புக்கிட் லெம்பு என்ற தோட்டத்திலிருந்து வெளியேறி பட்டண விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்ந்து, தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் குடும்ப மனிதர்களின் உளவியல் கூறுகளிலிருந்து வெளிப்படும் நினைவோடைகளாக கதை கொண்டு செல்லப்படுகின்றது. இவர்கள் மனித வாசல்களாக தொடர்ந்து ஒரு பிரமையில் நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

தோட்டப்புறத்திலிருந்த விளிம்பு போராட்டத்திலிருந்து தம்மைக் தற்காத்துக் கொள்ள நகர வாழ்விற்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன் என்கிற முறையில் இந்த நாவலின் கதையைத் தோட்டப்புறத்திலிருந்து தொடங்கி ஒரு பெரும் நகர்தலில் தம்மை சமரசப்படுத்திக் கொள்ளும் ஒரு குடும்பத்தின் சிதைவை மையமாகக் கொண்டவையாக அமைத்துள்ளேன்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக இந்த நாவல் வரவிருக்கிறது. நாவலின் அட்டைப் படம் யுகமாயினி இதழாசிரியர் சித்தன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில்

கே.பாலமுருகன்
மலேசியா