Monday, May 5, 2014

சிறுகதை: வேட்டை நாய்

சரசு அக்கா தலையை ஒருபக்கமாகச் சாய்த்து முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைப் பார்த்தாள். அதுவொரு இரக்கமற்ற பார்வை. சதையைத் தின்னத் துடிக்கும் பசி மிகுந்த வேட்டை நாயின் பார்வையை ஒத்திருந்தது. கண்களை நாலாதிசையிலும் உருட்டியப் பிறகு தொண்டை கிழியக் கத்தினாள். ஒருவாரத்திற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் சரசு அக்காவிற்குப் பேய் பிடித்திருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வேனிற்குள்ளேயே அலறினாள். அநேகமாக அருகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நகக்கீறல் சதையைப் பதம் பார்த்திருக்கக்கூடும். காயூ பாலாக் பாதையைக் கடந்துபோகும்வரை பீதி அனைவரின் முகத்திலும் உறைந்திருந்தது. சரசு அக்கா நாற்காலி மெத்தையை அழுத்திப்பிடித்து தன் உடலை மேலே தூக்க முயன்றாள். கால்கள் இரண்டையும் முடிந்தவரை பரப்பிப் பார்த்த பிறகு அது முடியாதபோது பாதி நாக்கு பல்லுக்கிடையில் சிக்கித் திணறியது. தொண்டைக்குள்ளிருந்து அலறியபோது அவளுடைய குரல் ஆணினுடையதாக மாறியிருந்தது. உச்சத்தை அடைந்து அடைப்பட்டு குமுறியது.

அவர்களுக்கு அது வாடிக்கையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன் இப்படிப் பேய்ப்பிடித்த சுகுனா அக்கா பிறகு தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப் போனது பெரும் மிரட்டலாக எல்லோர் மனத்திலும் அப்பிக் கொண்டது. சுகுனா அக்காவின் கணவன் ஓடிப்போனதிலிருந்து அவள் பித்துப் பிடித்துதான் இருந்தாள். பிறகு பலகை தொழிற்சாலையில் லைனில் வேலைச் செய்யும் குமாருடன் தொடர்பு இருந்து அதுவும் 2-3 மாதத்தில் பிரச்சனையாகிப் போனதால் அவள் மனம் உடைந்துதான் இருந்தாள். குமாருடன் உறவில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக அவளுக்குப் பேய்ப்பிடிப்பதும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு அடிக்கடி பேய்ப்பிடித்து அலற ஆரம்பித்திருந்தாள். அவளுடைய பழைய காதலன் தான் செய்வினை செய்துவிட்டான் என்றும் அதனால்தான் அவளைப் பேய்ப்பிடித்து ஆட்டுகிறது என்றும் பரவலாகப் பேசிக்கொண்டார்கள். பேய்ப்பிடிப்பது முதலில் ஒரு அதிர்ச்சியாக இருந்து பிறகு ஒரு வாடிக்கையான சடங்காக மாறியிருந்த காலக்கட்டம் அது. அதைப் புரட்டிப்போட்டது சுகுனா அக்காவின் மரணம்தான்.