‘நாள்தோறும் மனித சிந்தனைகள் பல பாய்ச்சல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மனித உறவுகள் சிக்கலாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை பல முகங்களுடன் வந்து அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. இவற்றை வளைத்து மொழிக்குள் கொண்டு வர வேண்டியது ஒரு படைப்பாளிக்கான சவால்’- சுந்தர ராமசாமி (டிசம்பர் 2002)
பத்து வருடங்களுக்கு முன் ஒரு படைப்பாளியின் சிறுகதையைப் படித்துவிட்டு இப்பொழுதும் ஒரு படைப்பாளி அதே மொழி இயல்புடன் அதே போக்குடன் ஒரு சிறுகதையை எழுதியிருக்க வேண்டும் என ஒரு சமூகம் கோருவது அபத்தமாகவே தோன்றுகிறது. சமூகம் அறிந்த மொழிக்குள் ஒரு படைப்பைக் கொண்டு வருவது ஒரு ஜனரஞ்சகத்தனமான மேலோட்டமாகப் பேசப்படும் இலக்கியமாகவே போய்விடும். ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகம் அப்பொழுது எதிர்க்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அடுக்குகளையும் கூர்ந்து கவனித்து வளைத்து அவனுக்குரிய ஒரு மொழிக்குள் கொண்டு வந்து வைக்கிறான். சமூகம் அவனுடைய கூறுமொழியின் தன்மைக்குள் தனது வாசக நிலைக்கேற்ப நுழைந்து ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இதைத்தான் சுந்தர ராமசாமியின் கூற்றும் விரிவாக்கிப் பேசுகிறது.
மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியன் அவர்கள் எழுதிய ‘வெதும்பல்’ சிறுகதையை அது பேசும் வாழ்வின் மூலம் முக்கியமானதொரு சிறுகதையாக உணர்கிறேன். விளிம்புநிலை மனிதர்களை ஏன் இலக்கியம் பேச வேண்டும் என்ற கேள்வியையும் விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி இலக்கியத்தில் பேசலாமா என்ற கேள்வியையும் கேட்டு கேட்டு சலித்துவிட்டது. இலக்கியம் அனைவருக்குமானது எனும் ஜனநாயகத்தைப் புரிந்து கொண்டாலே மொத்த வாழ்வின் அனைத்து அடுக்குகளையும் மனிதர்களையும் பேசும் உரிமை இலக்கியத்திற்கு உண்டு என்பதையும் உணர முடியும்.
அவ்வகையில் அ.பாண்டியன் தன்னுடைய ‘வெதும்பல்’ சிறுகதையில் இச்சமூகத்தின் விளிம்புநிலையில் வாழும் பால் திரிந்தோரின் அகவுணர்களையே முன்னிறுத்துகிறார். பெரும்பாலும் மலேசிய சிறுகதைகள் பால் திரிந்தோரைப் பற்றி எழுதியது மிகக் குறைவுத்தான். அப்படி எழுதியிருந்தாலும் அவர்களின் புறவாழ்வின் மீது சமூகம் எச்சமிடுவதைப் போலவும் அல்லது அவர்களின் மீதிருக்கும் பொது கசப்புகளை அல்லது தீண்டாமைகளை விலக்கும் பாணியிலான மேலோட்டக் கதைகளே வாசிக்கக் கிடைத்துள்ளன.
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புகளை நான் மூன்று வகையில் கவனிக்கின்றேன்.
1. விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வைப் பேசுவது.
அதாவது சமூகத்தின் விளிம்பில் பொது அக்கறையின்றி பொது கவனமின்றி பெரும்பான்மையினரால் சிறுமைப்படுத்தப்படும் மனிதர்களாக வாழ்பவர்களைத்தான் விளிம்புநிலை மனிதர்கள் என்கிறோம். இதுபோன்றவர்கள் சமூகத்தால் கிண்டலடிக்கப்படுவதைக் காட்டுவது, அவர்கள் ஒதுக்கப்படுவதைக் காட்டுவது நாள்தோறும் அவர்கள்படும் இன்னல்களைக் காட்டுவது போன்றவையே புறவாழ்வைப் பேசும் இலக்கியமாகும். இதை எழுதும் எழுத்தாளர்கள் தன்னை மேலானவர்களாக நிலைநிறுத்தி விளிம்புநிலை மனிதர்கள் மனித பரிதாபங்களுக்குரிய சாதாரண மனிதர்களாகவும் சித்தரிக்க முனைவார்கள். விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய அவர்களின் கூச்சல் ஓங்கி ஒலிப்பதாக அமைந்திருக்கும். இவர்கள் தன்னை முற்போக்கு இலக்கியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்வார்கள்.
2. பாதிப்புக்குள்ளாகும் விளிம்புநிலை மனிதர்களின் அகவுணர்வுகளைத் துல்லியமாக விவாதிக்க முயல்வது
இத்தகைய எழுத்தாளர்கள் தமிழில் தீவிரப் படைப்பாளர்கள் எனக் கருதப்படுகிறார்கள். விளிம்புநிலை மனிதர்களின் புறவாழ்வை ஒப்புவிப்பதன் மூலம் மட்டும் ஒரு தீவிரத்தன்மை உருவாகிவிடுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றாக அவர்களின் அகவாழ்வை ஒரு பொது உரையாடலுக்குக் கொண்டு வந்து பொதுபுத்தியைப் பாதிக்கச் செய்வதால் இத்தகைய எழுத்து தற்காலத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் இலக்கியக் குரலாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலும் எந்த வாசக உழைப்புமின்றி புரியவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கின்றன.