Monday, January 5, 2015

மர்மத் தொடர் Part 1 : மலை உச்சியில் உறைகிற மௌனங்கள்


பதிவுப் புத்தகத்தை எடுத்து நீட்டிய பர்மா நாட்டைச் சேர்ந்த பணிப்பெண்ணின் கண்கள் உறக்கமில்லாமல் கறுத்துப் போயிருந்தன. கண்மணி குமாரை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பதிவு புத்தகத்தைத் திறந்தாள்.

‘குமரேசன் – 21.11.2013
மாலா     - 21.11.2013
முருகன் & சுகுமாறி 17.09.2013
சியோங் லீங் – 09.08.2013….

என இங்கு வந்து தங்கியவர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டிருந்தன. கண்மணிக்குச் சட்டென சந்தேகம் தட்டியது. அந்தப் பர்மா பணிப்பெண்ணைக் கவனித்தாள். ஒரு பழைய தகறக் குவளையில் குட்டையான ஒரு பெண்சில், அதனுடன் கட்டி வைக்கப்பட்ட ஒரு நீலப் பேனா. சுவரில் இந்த மலையின் பழைய படம் தொங்கவிடப்பட்டிருந்தது.

“குமார்…”
“என்னம்மா?”
“ஒரு வருசம் இங்க யாரும் வந்து தங்கல…இதைப் பாருங்க”

குமார் அந்தப் பதிவு புத்தகத்தை வாங்கிக் கவனித்தான். கடைசியாக வந்து தங்கியவனின் பெயர் குமரேசன், அதுவும் ஒரு வருடம் ஆகிறது. குமார் அந்தப் பர்மா பெண்ணிடம் மலாய் மொழியில் விசாரித்தான். அவளும் தட்டுத்தடுமாறியே பேசினாள்.

“சரிமா…விடு. அவங்க ஆட்கள் மொத்தமா குழுவா வந்து தங்குவாங்க அதனாலே குறிப்புப் புத்தகத்துலே எழுதறது இல்லையாம்”
“உண்மையாவா?”
“இது ரொம்ப பிரசித்திப் பெற்ற மலை…என்ன கவலை?”
“மனசுக்குச் சரியா படல…அதான் ரொம்ப யோசிக்கறன்…”
“ரொம்ப நாள் பிரிவுக்குப் பிறகு இப்பத்தான் சேர்ந்துருக்கோம் கண்மணி. இந்த்த் தனிமை வேறு எங்கயும் கிடைக்காது. மலையிலெ அடிக்கற குளிர், இதமான காற்று, ஆளே இல்லாத அமைதி. இதெல்லாம் எனக்கு வேணும் கண்மணி”