Wednesday, September 29, 2010

கவிதை: கனவிலிருந்து விடுப்படுதல்

வியர்த்த உடலுடன்
அந்தக் கனவுக்குள்ளிருந்து வெளியேற
நேர்ந்தது.
கனவிலிருந்து விடுப்படும்போது
மரணமொன்று முதுகில்
ஒட்டிக் கொண்டு வீடுவரை வந்திருந்தது.
திடீரென ஒருநாள் அது காணாமலும்
போயிருந்தது.

பிறகொரு நாட்களில்
என்னைச் சுற்றிய துர்சம்பவங்களினூடாக
எப்பொழுதோ என்னுடன் கனவிலிருந்து
தப்பித்த அந்த மரணத்தை நுகர்ந்தேன்.

மழைக்காலத்தில்
அப்பாவிற்கு நிகழ்ந்த இரண்டுவார
குளிர்காய்ச்சலின் கொடூரத்தில்.

பக்கத்து வீட்டிலிருக்கும்
நல்லம்மா பாட்டி
இறந்தபோது.

சுசீலா அக்காவின் மகன்
பீக்குட்டையில் விழுந்து
10 நாட்கள் உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த சமயத்தில்.

அம்மணி அக்காளின் கணவனைக்
காணாமல் அந்த வீடே 15 நாட்கள் அவரைத்
தேடி அலைந்த கணத்தில்.

மீண்டும் ஒரு கோடையில்
அப்பா வளர்த்த கோழிகளெல்லாம்
செத்தொழிந்தபோது.

அன்று வெகுநேர
உறக்கத்திற்குப் பிறகு
வியர்த்த உடலுடன்
ஒரு கனவிலிருந்து வெளியேற நேர்ந்தது.

ஆக்கம்: கே.பாலமுருகன்