முன்பு ஒரு முறை பல நடிகர்கள்- இசை அமைப்பாளர்கள் என்று கலக்கல் செய்த படம் சுயம்வரம். வெகுவிரைவிலேயே ரசிகர்களால் மறக்கப்பட்ட படம். காரணம் சலிப்பு தட்டும் வகையிலான நடிகர்களை ஒட்டு மொத்தமாக நடிக்க வைத்து, அதைச் சினிமாவாகவே மாற்றிய சினிமா உத்திதான். அதே போல ஆனால் கொஞ்சம் மாறுதலான முயற்சியில் இயக்குனர்களெல்லாம் ஒன்று சேர்ந்து நடித்திருக்கும் படம்தான் மாயாண்டி குடும்பத்தார் படம்.
இந்தப் படத்தை மேம்போக்காக விமர்சனம் செய்யவே எனக்கு நேரமும் விருப்பமும் இருக்கிறது. ஆழ்ந்து விமர்சிக்க படத்தில் அப்படியொன்றும் கலை அம்சங்கள் இல்லை. இயக்குனர்களாக அவ்வளவு பரிச்சியமில்லாத நடிகர் பட்டாளம் கிராமத்திற்குச் சுற்றுலாவிற்குச் சென்றது போலத்தான் படத்தின் நடிகர்கள் தேங்கி நிற்கிறார்கள். “பருத்தி வீரன்” படத்தில் வரும் அசல் கிராமத்தான்களைப் பார்க்க முடியவில்லை. மாயாண்டியின் முதல் மருமகளைத் தவிர.
எல்லாம் கிராமத்து பழைய படங்களில் வருவதைப் போல (நாட்டாமைப் படம் உட்பட) இந்தப் படத்திலும் சொத்து விவகாரத்தால் பங்காளி பகை ஊடாடுகிறது. இரு குடும்பத்திற்கும் பழைய பகையால் படத்தின் தொடக்கக் காட்சியிலேயே திருவிழாவில் சண்டை. நம்மையெல்லாம் நம்ப வைக்க. மணிவண்ணன் மட்டும் ரொம்ப நல்லவராக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் பாத்திரத்தில் நல்ல அப்பாவாக, (“போங்கடா போங்கடா பிள்ளை குட்டிங்கள படிக்க வைய்யுங்கடா” தேவர் மகனில் கமல் சொல்வது போல) அங்குமிங்குமாக பழைய பாணியில் வலம் வருகிறார். பரிதாபத்தைக் கரைத்துச் சொட்டுவதற்காக படத்தின் பாதியில் கருகி இறந்தும் வைக்கிறார். இதை வைத்துதான் அவரின் கடைசி மகனின் பரிதாபங்களையும் அனுபவிக்கும் கொடுமைகளையும் அவனின் தியாகங்களையும் எளிதாக முன் வைக்க முடிகிறது.
ஒரு சில கதாபாத்திரத்தின் பங்கு ஆங்காங்கே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலவும் கைவிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பொண்வண்ணன் கதாபாத்திரம் சொற்ப காட்சியில் வந்து படத்தோடு சம்பந்தமில்லாமல் கரைவது போல இருக்கிறது. ஆனால் மிக எளிமையான நடிப்பு அவருடையது. அடுத்தப்படியாக சிமான் அவர்களைச் சொல்லியாகவே வேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் நடத்திய துணிகர செயல்களைப் போலவே படத்திலும் விவசாயிகளுக்கும் எளிய மக்களுக்க்கான போராட்டாவதியாக வலம் வருகிறார். அனேகமாக அவரே இயக்குனரிடம் இப்படியொரு கதாபாத்திரத்தைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும் போல. அவர் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே ‘அறுவை’ சொற்பொழிவு பாடலுடன் விஜயகாந்த் போல பிரச்சாரம் செய்கிறார். பாடல் வரிகள் வெறும் வரிகளாகவே சலசலவென ஓடி மறைந்துவிடுகிறது, இசையும்கூட. படம் முழுக்க நடிக்க முயற்சி செய்து தோல்விக் கண்டுள்ளார் சீமான். முகத்தில் எந்தச் சலனமும் இல்லாத கதாபாத்திரம். பிரச்சார மேடைகளில் மட்டும் அவருக்கேயுரிய குரல் தொனி.
படத்தில் நல்ல விஷயமே இல்லையா? இருக்கிறது. வழக்கம்போல ஒரு பைத்தியம்தான் வந்து நகைச்சுவை செய்வதாகக் காட்டியதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா? அல்லது எப்பொழுதும்போல ஒரு திருமணத்திற்குச் சென்று அங்கு ,மணப்பெண் ஓடி போக வேறு வழியில்லாமல் கதாநாயகி கழுத்தை நீட்ட, (எத்தனை படத்தில் பார்த்தாகிவிட்டது) அதை நல்ல விஷயம் என்று சொல்லலாமா?
இதில், மாயாண்டி விருமாண்டி என்று கிராமத்து பேர்களை (ஏற்கவனே விருமாண்டி படம் ஏற்படுத்திய பாதிப்பாக இருக்கலாம்) வலிந்து புகுத்திக் கொண்ட விதம் அசலான நடிப்பில் தெரியவில்லை. ஆக மொத்தம் மாயாண்டி குடும்பத்தார், இயக்குனர் பட்டாளம் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, பழைய பாணியிலேயே ஒரு பங்காளி கும்மாளம் போட்டுள்ளார்கள். அவ்வள்ளவுதான்.
கே.பாலமுருகன்
மலேசியா