Wednesday, May 5, 2010

சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் பயிற்றக பயிற்சி ஆசிரியர்களின் சிறுகதைகள் -சமூகக் குற்றங்களின் மீதான மிதவாதப் போதனைகள்


விமர்சனம்

சிறுகதைக்குத் தீர்க்கமான வரையறைகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் புதுமைப்பித்தனை படிக்காதவர்கள் சிறுகதை எழுத வேண்டாம் எனவும் ஒரு தார்மீகமான புரிதல் இலக்கிய உலகில் இருக்கிறது. எல்லாம் வரையறைகளையும் புரிதல்களையும் கடந்துதான் ஒவ்வொருமுறையும் சிறுகதை இலக்கியம் தனக்கான அடுத்த கட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. பாடத்திட்டம் சார்ந்து நடைமுறையில் இருக்கக்கூடிய சிறுகதை கற்பித்தல் இன்னமும் வரையறைக்குட்பட்ட இலக்கணங்களைக் கொண்டிருப்பதால், சில சமயங்களில் அதைக் கடந்த வாசிப்பும் தேடலும் இல்லாததால், மாணவர்களின் சிறுகதை முதிர்ச்சியைப் பெறாமல் ஒரு பழமைவாதப் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

எல்லாம் வரையறைகளையும் கடந்து வந்துவிட்டாலும் சிக்கல்தான். ஒரு வடிவம் இல்லாத எதையும் முதலில் கற்றுக் கொள்வபர்கள் சீக்கிரம் கற்றுக் கொள்ள இயலாத ஒரு தோல்வியைத் தழுவிவிடுவார்கள். ஆகையால் பாடத்திட்டத்தில் இருக்கும் இலக்கணங்களை முறையாகப் படிப்பதோடு அதே சமயம் அதற்கு அப்பாலுள்ள இலக்கிய தேடலையும் அடைவதன் மூலமே மாணவர்கள் சுதந்திரமான ஒரு இலக்கிய தேர்வையும் இரசனையையும் அடைய முடியும். (குறிப்பு: இன்னமும் தமிழக சீர்த்திருத்த கருத்துகளை விநியோகிக்கும் இலக்கியங்களைத்தான் நமது பாடத்திட்டத்தில் வைத்திருக்கிரார்கள் என்பதன் உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்- மாற்றம் தேவை எனத் தொடர்ந்து உரையாடுவதுதான் நமது களமாக இருக்க வேண்டும்)

இம்முறை ஆசிரியர் பயிற்றகம், சுல்தான் அப்துல் அலிம் வளாகத்தின் பயிற்சி ஆரியர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைப் பொதுவாக மதிப்பிடும்போது பலரும் சமூகத்தில் நிகழும் குற்றங்களை மிதமான அளவில் அணுகியிருப்பதோடு ஆங்காங்கே சினிமா தாக்கங்களும் தென்படுகின்றன. மேலும் குற்றங்கள் களைவதாகவும் அல்லது குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்குவதிலும் காட்டப்பட்ட கவனம் குற்றங்கள் நிகழ்வதற்கான காரணங்களின் அடிவேர்களை நோக்கிய மதிப்பீடுகள் குறைந்தே காணப்படுகின்றன.

பெரும்பாலான சிறுகதைகளில் அழகான வர்ணனைகளும் கற்பனைவாதங்களும் முன்வைக்கப்பட்டுருப்பது பாராட்டுதலுக்குரியது. மாணவர்களுக்கு ஒப்பீட்டு வர்ணனைகள் கைவந்திருப்பது கவனத்திற்குரியது. மேலும் வாசிப்பின் மூலம் ஏற்புடைய ஒப்பீடுகளையும் கதையின் மையத்தைச் சிதைக்காத வர்ணனைகளையும் பாவிக்க முடியும்.

சிறுகதையும் விமர்சனமும்:

1. முதல் பரிசுக்குரிய கதை: தொப்புல் கொடி: இந்தக் கதையின் மையவாதம் தனது தாய் என்கிற உறவின் மகத்துவத்தைத் தேடி நகர்வதாக இருக்கிறது. தாயின் பெறுமை என்பது சொல்ல சொல்ல தீராத ஒரு வசீகரமும் அன்பும் நிரம்பிய கதைவெளியாகும். இருப்பினும் அதைப் புதிய கவித்துவமான மொழியிலும் புதிய சொல்லாடல்களுடனும் புதிய பாணியில் சொல்ல முயற்சிப்பதே கால மாற்றத்திற்குரிய வளர்ச்சி. இக்கதையில் கதையின் கருவைவிட கதையை நகர்த்திச் செல்லும் மொழியானது மிகவும் எளிமையாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருப்பதுதான் கதைக்கு வலு சேர்க்கின்றது. இன்னும் இலக்கிய உலகத்தில் அறியப்படாத ஒரு மாணவரின் கதைமொழி இத்துனை யதார்த்தமாகவும் எளிமையாகவும் அமைந்து வந்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயம். எ.கா: “ஸ் . . ஸ். . ஸ். . “ பக்கத்து வீட்டு “ப்ரஸர் கூக்கர்தான்” எனக் கதையைத் துவங்கியிருப்பது கதைகளத்தை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்திருப்பது போல இருக்கிறது. இதை இன்னமும் மொழி சோடனைகளுடன் அலங்காரங்களுடன் வேறு மாதிரியாகவும் சொல்லக்கூடும், ஆனால் கதையாசிரியர் கதைமுழுக்க எளிமையைக் கையாண்டிருப்பது கதையின் கருவை ஒரு கலை வெளிப்பாடாக நம் மனதில் ஆழப்பதிக்கிறது. மேலும் சொற்தேர்விலும் வாக்கிய அமைப்பிலும் இந்தக் கதையாசிரியர் தன்னை உயர்த்திக் கொள்ள இன்னும் தூரம் அதிகமாக இருக்கிறது. தீவிரமான வாசிப்பும் மூத்த எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் என இவர் தன்னை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. இரண்டாவது பரிசுக்குரிய கதை: இறந்தும் வாழ்வார்: மிக நீளமானதொரு கதை. ஆங்காங்கே வர்ணனைகள் மிகவும் நயமாகப் புகுத்தப்பட்டிருக்கின்றது. ஒவ்வொன்றையும் இரசித்து இரசித்து சலித்து போகும்போதுதான் எளிமையையும் அழகியலையும் மனம் அடையும் என்பார்கள். அதுபோல இக்கதையாசிரியர் தன் மொழியின் மூலம் எல்லாவற்றையும் இரசித்து இரசித்து களைப்படைகிறார். பால்ய நண்பணின் வாழ்க்கை குறித்து விரியும் கதைக்குள், இளமை பருவமும், உழைத்த கணங்களும், நண்பனின் பிரிவும், பிறகொரு நாள் அவரின் மரணமும் என கதை நிகழ்காலத்திலிருந்து தவறி தவறி வழக்கமாகச் சொல்லப்பட்ட ஒரு இறந்தகாலத்தை அடைகிறது. நண்பனின் மரணத்தினால் ஏற்பட்ட வெறுமையைத் தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதிலிருந்து மீண்டும் உயிர்பெறச் செய்கிறார் சதாசிவம். அதீதமான மிகைகளை எழுத்துக்குள் கொண்டு வராமல் வெறும் வர்ணனைகளின் மூலமே கதையை ஒரு மனவெளிக்குள் வைத்துச் சொல்லிவிட்டு செல்லும் பாணி சிறப்பாக கைவந்திருக்கிறது. ஆரம்ப எழுத்தாளனுக்கு வர்ணனைகளும் காட்சி படிமங்களும், சம்பவ விவரிப்புகளும் ஆழமாகப் பெற்றிருக்க வேண்டும் என்பார்கள். இங்கிருந்துதான் அந்தக் கதையாசிரியர் கதையின் அடுத்த அடர்த்தியான மொழிக்குள் நுழைய முடியும். அந்த வகையில் இந்தக் கதையாசிரியருக்கு அந்த மூன்று விஷயங்களும் நன்றாக அமைந்துள்ளது. அதே சமயம் அதீதமான வர்ணனைகளும் விவரிப்புகளும் கதையின் யதார்த்தங்களைச் சிதைத்துவிடும் என்பதையும் உணர வேண்டும். வாசிப்பே சிறந்த பயிற்சி.

3. மூன்றாவது பரிசுக்குரிய கதை : கலியுகத்து குண்டலகேசி : வரவேற்க்கப்பட வேண்டிய சிறுகதை. மொழிவளம் மேலும் வலுவடைந்தால் நல்ல சிறுகதையாக அடையாளப்படுத்தலாம். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். சிறுகதை காப்பிய கதைப்பாத்திரத்தின் குறியீட்டின் மூலம் அண்மைய சமூகத்தின் குற்றத்திற்க்கு எதிரான குறியீடாக மாற்றி எழுதியிருப்பது வரவேற்க்கத்தக்க முயற்சி. ஆனால் மேலும் கதையின் ஓட்டத்தை எவ்வித சினிமாத்தனமும் இல்லாமல் வளர்ப்பதன் மூலம் வெற்றிப் பெறலாம். கணவனைத் திருத்த முயலும் மனைவியென்பது சினிமாவில் பார்த்து சலித்துவிட்ட ஒரு கதைப்பாத்திரம் என்பதால் என்னவோ அப்பாத்திரத்திரம் வலுவாக மனதின் நிற்க மறுக்கிறது.

4. நான்காம் பரிசுக்குரிய கதை: எங்கே எனது விடியல்? அரவாணியின் உலகத்தையும் அவர்களுக்கு இச்சமூகம் தராத அங்கீகாரத்தின் கொடுமையையும் நோக்கி பேசும் இக்கதை அவர்களின் மறுவாழ்விற்குப் போதனைகளைப் பரிந்துரைக்கும் வகையைச் சேர்ந்தது. கதையின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதால் கதையின் கரு வளர்க்கப்படாத குறைபாடு தெரிகிறது. தேர்ந்தெடுத்த கதைக்கரு இக்கால நடைமுறைக்கு மிக அவசியமானது.

5. ஐந்தாம் பரிசுக்குரிய கதை: காவேரியின் கண்ணீருக்குப் பலன் : சித்தியின் கொடுமையை நோக்கி நகரும் குடும்பக் குற்றங்களை/வன்முறையைச் சித்தரிக்கும் கதை. மொழிநடை கதையுடன் பயணித்துள்ளது. மேலும் வளர்த்தால் சிறந்த எழுத்தாளருக்குரிய மொழிநடையைப் பெறலாம்.

6. ஆறாம் பரிசுக்குரிய கதை: ஏழு கம்பிகள் : சிறுகதைக்கான உத்தி முறையில் சிறு மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கும் இக்கதை சமூகக் குற்றங்களுக்கான சீர்த்திருத்த எழுத்து வகையைச் சேர்ந்தது. சிறையில் இருக்கும் மகன் தன்னுடைய தோல்வியடைந்த வாழ்வின் மீதான கசப்புகளையும் வலிகளையும் கடிதமாக அம்மாவிற்கு எழுது அனுப்புவதுதான் கதையின் மையம். கதை முழுக்க கடித உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போதனை மொழியும் அதன் சார்ந்த வாக்கிய அமைப்புகள் கதையின் யதார்த்தத்தைப் பலவீனப்படுத்தாமல் இருக்க வேண்டும்.


சில ஆறுதல் பரிச்சுக்குரிய கதைகள்:

ஏமாந்து போன மனசு : கல்லூரியில் பயிலும் மாணவியை மையப் பாத்திரமாகக் கொண்டு தன் குடும்பத்தின் அதிகார இருப்பான தந்தையின் குற்றங்களை ஆராயும் ஒரு வழக்கமான கதை. சீர்த்திருத்தத்தை நோக்கி கதை கொண்டு வரப்பட்டாலும் கதையின் முடிவு ஏமாற்றத்தை நிறுவுகிறது. சமூக யதார்த்தங்களைக் கதையின் முடிவில் காட்டியிருப்பதைப் பாராட்டலாம். மொழிவளம், மொழிநடை மேலும் வலுப்பெற வேண்டும். சில இடங்களில் பேச்சு மொழி யதார்த்தமாக அமைந்துள்ளது.

 கடல் மணலைத் தொடும் அலை : பேய் சினிமாவை அதிகமாகப் பார்த்ததன் விளைவில் மலர்ந்த ஒரு மர்மக் கதை. மர்மம் என்றாலே ஒரு பேய் வீடும் அல்லது பேய் உடலுக்குள் புகுந்த கதைப்பாத்திரமும் வருவது போல வழக்கமாக இக்கதையிலும் அது நிகழ்ந்துள்ளது. காதல் நட்பு இதற்கிடையில் ஒரு பேய் தனது இறந்தகாலத்தை விவரிக்கிறது. கற்பனை ஆற்றலை நல்ல யதார்த்தமான கதையில் செலுத்தினால் நல்ல கதையை எழுத முடியும். அல்லது அது பேய் கதையாக இருந்தாலும் பேயை முன்னால் நிறுத்தி எல்லாருக்கும் காட்டி நகைச்சுவையாக மாற்றிவிடக்கூடாது. பேய் என்பதை ஓர் உணர்வாக எல்லாம் மனதிலும் பாய்ச்சலாம். முயற்சி தொடர வேண்டும்.

 உலகம் அழிந்துவிட்டது : ஒவ்வொரு மனிதனும் செய்யும் குற்றங்களினால்தான் உலகமும் இயற்கையும் அழியத் துவங்கியிருப்பதாக சொல்லும் ஒரு கதை. வட்டி முதலையிடம் சிக்கிக் கொண்டு தனது உயிரை இழக்கும் ஒரு பெண்ணின் குடும்பத்தைப் பற்றிய கதையாக இருந்தாலும் பல இடங்களில் ஏற்கனவே இதே மையக்கருவை வைத்து எடுக்கப்பட்ட ஒரு சினிமாவை ஒத்திருக்கிறது. வில்லன் கதைப்பாத்திரம் வளர்க்கப்பட்ட விதம் கதாநாயகனையும் கரைத்து ஒரு புள்ளியாக்கி மிக தந்திரமான காத்திரமான செயற்கையான படைப்பாக உள்ளது. நமது இலக்கியம் வெகுஜன சினிமாவின் பிடியிலிருந்து விடுபடுவதே முதல் ஆரோக்கியமான நகர்வாக இருக்கும் என நினைக்கிறேன்.

கதைகளை எழுதிய அனைத்து பயிற்சி ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். உங்களில் யார் தீவிரமான வாசிப்பை மேற்கொண்டு தனது கதை உணர்வை அடையாளப்படுத்துவதற்குத் தொடர்ந்து எழுதியும் விவாதித்தும் முன்னேறி வருகிறீர்களோ, அவர்களே நிலைக்க முடியும். வெறும் போட்டிகளுக்கு மட்டும் எழுதும் எழுத்தாளர்களாக ஆகிவிட வேண்டாம் என்பதே எனது எதிர்பார்ப்பு.

விமர்சனமும் எழுத்தும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா