இடம்: தவுசிங் தமிழ்ப்பள்ளி(40 வருட வரலாற்றில் எந்த மாற்றமும் காணாத ஒரே தமிழ்ப்பள்ளி)
பெயர்: சந்திரன் வாத்தியார்
வயது: 32
அனுபவம்: தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் 8 வருடம், ஐந்து முறை கோபத்தில் மேலதிகாரியை அடிப்பதற்குப் பதிலாகத் தன் காலைச் சுவரில் உதைத்திருக்கிறார், ஒருமுறை அலமாரியிலிருந்து கோப்பை எடுக்கும்போது பாம்பு சீறியிருக்கிறது (சத்தம் உஸ் உஸ் உஸ்), ஏழு முறை மாடு துரத்தியிருக்கிறது, நான்கு முறை மாணவர்களைக் கொண்டு வருவதற்காகத் தோட்டம் முழுக்க ஓடியிருக்கிறார்.
போராட்டம்: எப்படியாவது அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி நகரத்துப் பள்ளிக்கு மாற்றலாகி போய்விட வேண்டும் என்கிற 5 வருட போராட்டம்.
இப்பொழுது சம்பவம் நடந்து கொண்டிருக்கும் வருடம்: 2010
மாலை மணி 2.00க்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வருகிறார்.
“தம்பி நீங்க நெனைச்ச மாதிரி எதும் நடக்கல”
“தெரியுமே. என்ன நடக்கும்னு. . .”
“இல்லெ, நானும் அரசியல் கட்சி மூலம் ஏதும் செய்யலாம்னு பாத்தேன். கேபள்லாம் பூட்டி பாத்தேன். எதுமே நடக்க மாட்டுது”
“ம்ம்ம்ம்”
மாலை மணி 2.20க்குத் துக்கம் விசாரணை முடிந்தவுடன் தலைவர் புறப்பட்டார். வழக்கம்போல அவரது கேபிள்கள் கழன்று விழுந்தன.
மாலை மணி 2.30க்கு சந்திரன் வாத்தியாருக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பள்ளிக்கூடத்திற்குப் பின்னால் இருக்கும் முருகன் கோவிலின் பாழடைந்துவிட்ட கொட்டகைக்குள் நுழைந்து கொண்டு சத்தமாக அழுதார். ஆண்கள் சத்தமாக அழுவது சந்திரன் சாருக்கே பிடிக்காத ஒன்றாயிற்றே. அந்தக் கொட்டகைக்குள் இருந்த பழங்காலத்துப் பல்லி வயோதிகக் குரலில் சோம்பலாகக் கீரிச் கீரிச் என சந்திரன் வாத்தியாரின் துக்கத்தில் கலந்துகொண்டது.
போராட்டம் 1: தலைமை ஆசிரியர் அறையின் கதவை அடைத்துவிட்டு இரகசியமாக எவ்வளவோ விளக்கிப் பார்த்து. அவர் காலையும் பிடித்து ஒரு நன்றியுள்ள ஜானியைப் போல நடந்து கொண்டும், கடைசியில் வருகிறது பதில்: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). சந்திரன் வாத்தியார் அன்றிலிருந்து கிழங்கு கஞ்சியைக்கூட உறிஞ்சி சாப்பிடுவதை விட்டுவிட்டார்.
போராட்டம் 2: நாக்கை மட்டும் இன்னமும் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதில் சந்திரன் வாத்தியாருக்கு ஒரு மாபெரும் கௌரவம் இருந்தது. மேலதிகாரியைப் பார்த்து ஜிங் ஜாக் ஜிங் ஜாக் ஜிங் ஜாக் எனக் கச்சேரியெல்லாம் முடித்துவிட்டு வாலாட்டிவிட்டு வருவதற்குள் சந்திரன் வாத்தியாருக்குக் களைத்துவிட்டது. மீண்டும் பதில் வருகிறது: Dukacita. Permohonan anda gagal.(தங்களின் விண்ணப்பம் தோல்வி). வாலில் நெருப்பைப் பற்ற வைத்துவிட்டு இதற்குப் பின்னனியிலுள்ள துரோகிகளை எரிக்க வேண்டும் எனத் தோன்றியும் சடாரென வழக்கம்போல உழைத்து உழைத்து தேயத் துவங்கினார், தமிழ் கலாச்சாரத்தின் பற்றாளர் சந்திரன் வாத்தியார்.
போராட்டம் 3: இதற்கு முன் பார்த்தவரைவிட ஒரு படி மேல் இன்னொரு மேலதிகாரி. இவர் ஒரு படி மேல் என்பதால் சந்திரன் வாத்தியார் கொஞ்சம் கடினமாக உழைக்க நேர்ந்தது.
“தம்பி! ஏன்பா மாற்றம் கேக்கறெ?”
“8 வருசமா இங்க இருந்துட்டென் சார். வீடு 1 மணி நேரம் தொலைவுல இருக்கு. இது மூனாவது தடவெ முயற்சி பண்றேன் சார். . கொஞ்சம் பாத்துக் கொடுங்களேன்”
ஒழுகிய வாய்நீரைத் துடைத்துக் கொள்ள மறந்த சந்திரன் மேலதிகாரியின் ஒரு புன்முறுவலுக்காக வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். புன்முறுவலும் சிரிப்பும் தலை ஆட்டுதலும் இந்த மாதிரி அதிகாரிகளிடமிருந்து தனித்து வைத்திருக்கிறது.
“தம்பி. புரியுது. உங்க மாதிரி பொறுப்புள்ள வாத்தியாருங்க, இந்தமாதிரி தோட்டப்பள்ளிங்களுக்கு வேணும்பா. இங்கயெ இருங்களேன்”
“சார். எனக்கு வேற அனுவபம் வேணும் சார். எத்தன வருசம் இங்கய இருக்க முடியும் சார்? மாத்திறதுக்கு உதவி செய்யுங்க சார், கெஞ்சி கேட்டுக்கறன்”
“சரி இருங்க. முக்கியமானவங்ககிட்ட இப்பயெ பேசிட்டு சொல்றென்”
அறைக்கு வெளியே சந்திரன் வாத்தியார் கொண்டு வந்த அவருடைய கோப்பு நாற்காலியிருந்து கீழே சரிந்திருந்தது. அதை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அறையிலிருந்து அழைப்பு வரக்கூடும் எனப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் வைத்திருந்த நாள் பாடக்குறிப்பு புத்தகம் எப்பொழுது வேண்டுமானாலும் நழுவக்கூடும்.
27.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: செம்பனை காட்டிலிருந்து தப்பித்து வந்த மாடு ஒன்று
பள்ளிக்குள் நுழைந்து செய்த அட்டகாசத்தில் இன்றைய திறனை மாணவர்கள்
அடையவில்லை.
28.06.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: இன்று மேலிடத்திலிருந்து திடீர் சோதனை நடந்ததால், பழைய
கோப்புகளை அள்ளி சுத்தப்படுத்தியதில், மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.
01.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: பாடம் தொடங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன் வகுப்பில்
நுழைந்த தலைமை ஆசிரியரின் சில கேள்விகளுக்கு மாணவர்கள் பதில்
அளிப்பதற்குள் பாடநேரம் முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை
அடைய முடியவில்லை.
02.07.2010
திறன்: 1.14 கேள்விகளுக்கேற்ப பதிலளிப்பர்
அடைவுநிலை: மாணவர் ஒருவரை அடித்துவிட்ட பிரச்சனையைப் பேசி
தீர்ப்பதற்காக வந்த பெற்றோரைக் கவனித்து அனுப்புவதற்குள் பாடவேளை
முடிந்தது. மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.
03.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்(திறன்
அதிரடியாக மாற்றப்பட்டது)
அடைவுநிலை: மாணவர்களில் 80 சதவிகிதம் இன்று பள்ளிக்கு வராததால்,
திறனை அடைய முடியவில்லை.
04.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: வகுப்பிலேயே மூத்திரம் பெய்துவிட்ட மாணவன் ஒருவனைச்
சுத்தப்படுத்துவதற்குள் இன்றைய பாடவேளை முடிவடைந்துவிட்டதால்,
மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.
மீண்டும் அறைக்குள்ளிலிருந்து அழைப்பு வந்தது. தனது பாடக்குறிப்பு புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு சந்திரன் வாத்தியார் உள்ளே நுழைந்தார். மேலதிகாரியிரிடமிருந்து அலட்சியமான பதில். வெளியே வந்ததும் சந்திரன் வாத்தியாரின் தலை கவிழ்ந்திருந்தது.
“. . . . . ங்களா. . “ ஏதோ கெட்ட வார்த்தையில் சத்தமாக முனகிவிட்டு வெளியேறினார். பள்ளியை வந்தடைந்ததும் தலைமை ஆசிரியர் வகுப்பை நடத்திக் கொண்டிருந்தார்.
“என்னப்பா ஆச்சி?”
“சார், இன்னும் ரெண்டு திறன் சரியா நடத்த முடியலே, இன்னிக்காவது முடிச்சடறென்”
“அதானெ. அவ்ள சீக்கிரம் உங்களால போய்ட முடியுமா என்ன. . “
06.07.2010
திறன்: 1.3 தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உரையாடுவர்
அடைவுநிலை: மாணவர்கள் இன்றைய திறனை அடைய சிரமப்பட்டனர். தனது
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அவர்களால் உரையாடவே முடியவில்லை.ஆகையால் மாணவர்கள் இன்றைய திறனை அடைய முடியவில்லை.
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா