Monday, January 31, 2011

ஸ்பானிஷ் சினிமா விமர்சனம்: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும் உயிருடன் புதைக்கப்படுதலும்

(நன்றி: தீராநதி: ஜனவரி மாத இதழ்)
ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

Rodrigo cortes இயக்கத்தில் வெளியான “உயிருடன் புதைத்தல்” எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன். பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது.

மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம்.

சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார். அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது.

ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான். அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும், கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது.