Monday, June 16, 2008

கடைசி பேருந்து



கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!


மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!


சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!


பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருரூன்!


நகர மனிதர்களின்
சலனம்
காணமல் போயிருந்தது!
விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!


ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!


கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்!
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில். . .
ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது!


இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!


கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!


கே.பாலமுருகன்
மலேசியா

பாலைவனத்தில் பூக்களைத் தேடி



பாலைவனத்தில்
ஆகக் கடைசி
காதலன் நான் மட்டும் தான்!
வெகுத் தொலைவில்
காதலர்கள்
வீடு திரும்பிக் கொண்டிருப்பது
கானல் நீர்போல
தெரிகிறது!
இவையனைத்தும்
பிரமை! மாயை!
காதலி மீண்டும் மீண்டும்
தேற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறாள்
பாலைவனத்தில்
பூக்கள்
கிடைக்குமென்று!
காதலர்கள் என்றுமே
ஏமாற மாட்டார்கள்
என்று அவளுக்காக
இன்னமும்
பாலைவனத்தின் வெயிலில்
பூக்களுக்காக
நடந்து கொண்டிருக்கிறேன்!
இப்பொழுது
நானும் அவளும்
பாலைவனத்தின்
இருதுருவங்களில்!
சூன்யம் நிரம்பி
பிரக்ஞையையும்
இழந்துவிட்டேன்!
வெகு சீக்கிரத்தில்
பாலைவனப் பூக்கள்
கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில். . .