இதற்கு முன் சுங்கை பட்டாணியில் அதாவது 2013 ஆம் ஆண்டு வரை வசித்தவர்களுக்கு நிச்சயம் பன்றி பாலம் எனச் சொன்னதும் தைப்பூசக் கோவிலுக்குப் பின்னால் இருந்த ஒற்றை பாலம் ஞாபகத்திற்கு வரும். இப்பொழுது அந்தப் பாலம் அங்கு இல்லை. இடித்துப் பெரிதாக்கி பெரிய சாலையை உருவாக்கிவிட்டார்கள். அப்பாதைப் பத்தானி ஜெயா/பெர்ஜாயா வசிப்பிடப் பகுதியையும் சுங்கை பட்டாணி நகரத்தையும் இணைக்கும்வகையில் கொஞ்சம் பரப்பரப்பாகவும் ஆகிவிட்டது.
பாலம் என்றால் எதோ போக்குவரத்துக்கு இக்கறையிலிருந்து அக்கறைக்குத் தாவ உதவும் ஒன்றாக மட்டும் இருந்துவிடுவதில்லை. பாலம் நம் வாழ்நாளில் நம் வாழ்க்கைக்குள் ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது. பல நினைவுகளைச் சேகரித்து வைத்திருக்கிறது. ஒரு காலக்கட்டத்தை எப்பொழுதுமே நினைவுப்படுத்தக்கூடியவை.
என் அம்மா கடந்த 1990களில் அந்தப் பாலத்தில்தான் தனது மினி சைக்கிளில் என்னை ஏற்றிக்கொண்டு பட்டணத்திற்குச் செல்வார். சீனர் வீட்டில் அம்மா வீட்டு வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வெள்ளிக்கிழமை நானும் அம்மாவுடன் சென்று ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுதெல்லாம் வேலை சீக்கிரம் முடிந்துவிட்டால் அம்மா என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அந்தப் பாலத்தைக் கடந்துதான் பொருள்கள் வாங்க சுங்கை பட்டாணிக்குச் செல்வார்.
ஈரம் சொட்டும் கைலியுடன் அம்மா சைக்கிளை மிதிக்க, என்னைச் சமாதானம் செய்யக் கொடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருளைக் கையில் கடவுளை ஏந்திக் கொண்டு வருவதைப் போல பயப்பக்தியுடன் பிடித்துக் கொண்டு நான் அமர்ந்திருக்க, இருவரும் அந்தப் பன்றி பாலத்தைக் கடப்போம். ஏதோ படகில் உல்லாசமாக ஆற்றைக் கடப்பதைப் போன்று பிரமையாக இருக்கும்.
பன்றி பாலம் உருவான கதை
சுங்கை பட்டாணி பொது பேருந்து நிருத்தம் பக்கமாக வந்தீர்கள் என்றால் ஒரு கறுப்பு ஆறு குறுக்காக ஓடுவதைப் பார்க்கலாம். குப்பைகள் மிதந்து செல்லும். ஒருவர்கூட அந்த ஆற்றை ஆயாசமாகப் பார்த்து இரசிக்கும் எந்தக் காட்சியையும் பார்க்க முடியாது. நம்முடைய அனைத்து அலட்சியங்களையும் ஒன்று சேர்த்தால் அது நிச்சயம் அந்தக் கறுப்பு ஆறாக இருக்கும்.
அந்த ஆற்றிற்கு மேலே குறுக்காக இரயில் தண்டவாளம் உண்டு. கரும்புகையுடன் இரயில் அவ்விடத்தைக் கடக்கும் காட்சியை அந்தக் கருப்பாறோடு சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும் மலேசியாவிலேயே காற்றுத்தூய்மைக்கேட்டில் சுங்கைப்பட்டாணி பட்டணம் இரண்டோ மூன்றாவது இடத்தையோ பெற்றிருக்கும் தகவல். அந்தக் கருப்பாறின் ஒரு பகுதியைக் கடக்கத்தான் 1900களின் ஆரம்பத்தில் அந்தப் பன்றி பாலம் கட்டப்பட்டது என ஒரு செய்தி உண்டு.