நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த கொசு சட்டென நுழைந்துவிடும். நீங்கள் என்னை எங்காவது பார்த்திருக்கக்கூடும். தைப்பிங் நாலு ரோடு பக்கம் எந்த மூலையிலாவது என்னை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். கழுத்துப்பட்டை ஒன்றை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு முன்சட்டையின் கீழ்ப்பகுதியில் பிதுங்கி நிற்கும் தொப்பையுடன் முகமும் தலையும் வியர்த்துக்கொட்ட முன் சொட்டையில் மிஞ்சியிருக்கும் கொஞ்சம் முடியும் ஒட்டிப் படிந்திருக்க உணவுக்கடைகளிலோ அல்லது ஓல்ட் டவுன் கோபி கடையிலோ சிலருடன் என்னைப் பார்த்திருக்கக்கூடும்.
நாளை எனக்கு ஒரு குறிப்பிட்ட நெட்வர்க்கில் அதிகம் சாதனை படைத்ததற்காக ‘டமைண்ட்’ விருது கிடைக்கவிருக்கிறது. அதனால் ஏன் நான் என் காருக்குள் நுழைந்துவிட்ட ஒரு கொசுவுடன் போராட வேண்டும் எனும் கேள்வி என் பின் மண்டையை ஓங்கி அடிக்கிறது. 5 வருடத்தில் என் இரண்டு கால்களும் ஒரு பம்பரமாகி சுழன்றதை அருகாமையில் இருந்து உணர்ந்திருக்கிறேன். டைமண்ட் விருது என்பது அத்துனைச் சாதாரணமானது அல்ல. எம்.எல்.எம் வியாபாரத்தில் ஆக உயர்ந்த நிலை. எனக்கொரு விலையுயர்ந்த கார் பரிசாகக் கிடைக்கும். அதை நான் மேடையில் ஏறி வாங்கும்போது என் முகத்தில் இன்னும் மேலே செல்ல வேண்டும் என்ற குரூரம் தெரியக்கூடும். ஆனால் இப்பொழுது இந்தக் கணம் என் காருக்குள் என் அனுமதியில்லாமல் நுழைந்த இந்தச் சிறிய கொசுவை நசுக்கிவிட வேண்டும். அதுவே மிகச்சிறந்த விருது என நினைக்கிறேன்.