கடந்த வாரம் பெத்தாலிங் ஜெயாவிலுள்ள சிவா பெரியண்ணனின் வாடகை வீட்டுக்குப் போயிருந்தேன். சிவாவின் மேல்மாடி அறைக்குள் நுழையும்போதே சட்டென அதன் இருளும் சோர்வும் சிங்கப்பூர் பாலாஜி சொன்ன ஆத்மாநாம் தற்கொலை சட்டென ஞாபகத்திற்கு வந்தது. பாலாஜியின் வீட்டிற்கு மேல்மாடியில்தான் கவிஞர் ஆத்மாநாம் வசித்திருக்கிறார். யாருடனும் பேசாமல் எப்பொழுதும் மௌனமாக வந்து இருக்குமிடம் தெரியாமல் அவ்வப்போது கரையும் நிசப்தமான வெளி ஆத்மாநாமுடையது என அவர் சொன்னார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலாஜி அவர் தூக்குப் போட்டுக்கொண்ட அறையில் படுத்திருந்ததாகவும் கூறினார்.