.jpg)
பாலியல் தொழிலாளியின் வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தின் பற்பல கிளைகள்தான் இப்படம். மற்றபடி அவர்களின் வாழ்வை நோக்கிக் கதறி அழுது சோகப்படும் எந்தத் தருணமும் காட்சியும் படத்தில் இல்லை. எல்லாமும் இன்னொரு காட்சிகளாக எந்த அலட்டலும் மிகையும் இல்லாமல் நகர்கின்றன. இப்படத்தில் வரும் எந்தக் கதாபாத்திரமும் புரட்சியோ, இலட்சியவாதம் கொண்டவர்களோ அல்ல.
படத்தின் கடைசி கட்டம்வரை நமக்குள் இருக்கும் தீமையின் ருசி எத்தனை வன்மமானது என நமையே உணரச் செய்கின்றது. ஒரு 12 வயது சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாகுவது பொதுப்புத்தியில் நாம் யாரும் விரும்பாத ஒரு விசயமே. ஆனாலும் ஒரு பெரிய பணக்காரனால் அந்தச் சிறுமி பாலியல் ரீதியில் என்னவோ செய்யப்படுகிறாள்; அதைப் படத்தின் இறுதிவரை சொல்லப்படவில்லை; இருப்பினும் அது என்னவாக இருக்கும் எனும் நுகர்வு வெறிக்கு ஆளாகி படம் முழுக்க அலைந்து கொண்டிருக்கும் மனப்பாண்மைக்கு ஆளாகியிருப்போம். அதைத் தெரிந்துகொண்ட அடுத்த கணமே 'இவனுக்கெல்லாம் இந்தத் தண்டனைக்கூட பத்தாது' எனச் சட்டென நியாயம் தீர்ப்பு வழங்கும் பொதுப்புத்திற்குத் திரும்பிவிடுவோம். நாம் எப்படிப்பட்ட வேடந்தாரிகள்?