Thursday, September 17, 2009

சமாட் சைட் மலாய் கவிதைகள் - தமிழில்: கே.பாலமுருகன்


1. அந்திம விருந்தாளி

ஓர் அந்திம விருந்தாளியாக வந்திருக்கிறோம்
பொழுதுகள் தீர்ந்ததும் திரும்ப வேண்டியதுதான்
வெறுங்கையுடன் வந்துவிட்டோம்
புறப்படும்போது கைகளில் பாவங்களையும்
தீரா ஆசைகளையும் சுமந்து கொள்வோம்

மீண்டும் திரும்புவதற்கான வழிகள் அறிந்து
வந்திருந்த அந்திம விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
பக்தியையும் இன்பத்தையும் கொண்டு செல்லலாம்
வழி மறந்து திசை தொலைத்த விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
சுமையாக வந்து சேரலாம்

ஒருவேளை
அந்திம விருந்தாளி
மனிதர்களைப் பார்த்துவிட்டால்
இருப்பிடத்தை மறந்து
பதவியையும் இனத்தையும்
கொண்டாடத் துவங்குகிறான்

ஓர் உயிர் ஓர் அணுவாக
வந்திருக்கிறோம்
அந்திம விருந்தாளியாக
விடைப்பெறும் கணத்தில்
பக்தியைக் கொண்டு
செல்லலாம்.

2. நூல் நிலையத்தின் உள்ளே

நூல் நிலையத்தின் உள்ளே
குறுகி போயிருந்த என்னைப் பார்த்து
ஒரு முதியவர் கூறினார் :
“கண்களை மூடிக் கொண்டு
புத்தகங்களைத் திறப்பதில்
அர்த்தமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து பார்”

நாளையலிருந்து
நான் நூல் நிலையத்தில் குறுகலாக
இருக்கப் இல்லை
அந்த முதியவரைப் பார்த்து
வெகுநாளாகியும்

இப்பொழுதுதெல்லாம்
நூல் நிலையத்தில்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
திறந்த கண்களுடன்
அந்த முதியவர்
இல்லாத நாற்காலியின்
வெறுமையைப் பார்த்தவாறே.

3. அலை

என் கால்களை
ஒருமுறை தொட்டுவிட்டு
போகும் அலையை
நான் மீண்டும்
அறிவதில்லை

4. வரம்

தேவையான அத்துனையும்
வரமளிக்கப்பட்டும்
அது கிடைக்காமலே
போவதுதான்
கடவுளின் மிக நெருக்கடியான
அன்பளிப்பு

சமாட் சைட் பற்றி

1986களில் பிரபல மலேசிய இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அப்துல் சமாட் பின் முகமாட் சைட் (சமாட் சைட்). 9 ஏப்ரல் 1935-இல் கம்போங் பலீம்பில் பிறந்த சமாட் சைட் இதுவரை இலக்கியத்தில் பல ஆசிய விருதுகளைப் பெற்றுள்ளார். சலீனா, இரவு வானம், காலை மழை என்று பல புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தீவுக்கு முன்பான நினைவுகள்’ என்கிற இவருடைய நாடகம் மலேசிய மலாய் நாடகத் துறையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. 2003-இல் இவருடைய கவிதைகள் “சுவரிலிருந்து வந்த குரல்கள்” எனும் தலைப்பில் பிரசுரமாகி மலேசிய மக்களின் கவனத்தைப் பெற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: அம்ருதா இதழ்
bala_barathi@hotmail.com

எழுத்தாளர் பாவண்ணனுடன் அநங்கம் இதழுக்காக கேள்வி/பதில்

அநங்கம் இதழ் 3க்காக (பிப்ரவரி 2009) எழுத்தாளர் பாவண்ணனை மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொண்டு சில கேள்விகளை முன் வைக்க வாய்ப்புக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுடன் ஏற்கனவே மின்னஞ்சலின் மூலம் நட்பு இருந்ததால், அதன் அடிப்படையில் அவருடன் இந்தக் கேள்வி/பதிலை நடத்தினேன்.

1. இன்றைய இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், மாய எதார்த்தம் போன்றவற்றின் பாதிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் பின்நவீனத்துவம் என்பது இலக்கியம் உட்பட்ட பிற அறிவுத்துறைகளையும் கலைத்துறைகளையும் மதிப்பீடு செய்கிற ஓர் உலகப்போக்கு. மாய எதார்த்தம் என்பது ஓர் இலக்கிய உத்தி. இரண்டுமே வேறுவேறானவை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவ்விரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்கிற அவசரம் நிலவியது. ஆனால் அந்த அவசரம் இப்போது இல்லை. ஆவேசங்கள் மெல்லத் தணிந்து, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் நிதானம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கைவந்திருக்கிறது. அதீத கற்பனை என்பது நம்முடைய கதைமரபில் தொடக்க காலத்திலிருந்தே இடம்பெற்று வந்திருக்கிற ஓர் அம்சம். நம் புராணங்களில் அது அழகான உத்தியாக நன்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
எதார்த்தவாதப் பார்வை நம் மண்ணில் காலூன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வாழ்க்கையை மண்ணின் தளத்தில் வைத்துப் பரிசீலிக்கிற எதார்த்த இலக்கியப் போக்கு உருவானது.


மன இயக்கங்களையும் புதிர்களையும் சிக்கல்களையும் எதார்த்த வாழ்விலிருந்தே கண்டடைகிற குறிப்புகள் வழியாகவும் படிமங்கள் வழியாகவும் எதார்த்தவாத இலக்கியப் படைப்புகள் முன்வைக்கத் தொடங்கின. ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியின் முடிவில் இக்குறியீடுகளும் படிமங்களும் பழகிவிட்டன என்பது ஒரு காரணம். சிக்கல்களின் தீவிரத்தை உணர்த்த எதார்த்தவாதம் போதுமான அளவுக்கு இடம் தரவில்லை என்பது இன்னொரு காரணம். புதிய குறியீடுகளையும் படிமங்களையும் கண்டடைகிற ஒரு மனநெருக்கடிக்கு ஆளானார்கள் படைப்பாளிகள்.


இதன் விளைவாக அதீத கற்பனை உத்திகள் பயன்பாட்டுக்கு வந்தன. இது எதார்த்தவாதப் பார்வைக்கு எதிரான ஒன்றல்ல. எதார்த்தவாதப் பார்வையின் எல்லையில் கண்டறியப்பட்ட இன்னொரு கிளைப்பாதை. மாய எதார்த்தவாதப் படைப்பகள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலில் உருவாகின. அந்நாடுகளின் அரசியல் சமூகச்சூழல்களும் நெருக்கடிகளும் மாய எதார்த்தவாத உத்திகளைக் கையாளும் வேகத்தை அந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தந்தன என்பது மிகையான கூற்றாகாது. நம் கதைமரபின் அதீதக் கற்பனைக்கும் மாய எதார்த்தத்துக்கும் இடையே ஒரு சில நுட்பமான வேறுபாடுகள்மட்டுமே உண்டு. அதீதக்கற்பனையில் நாம் இன்னொரு உலகத்தையே உருவாக்கி, பாத்திரங்களை உலவவிடமுடியும். ஆனால் அப்பாத்திரங்களின் உணர்வுகள் உண்மையானவை. மானுடப் பாத்திரங்களைப்போலவே எண்ணுபவை. கனவில் உரையாடுவதுபோல. மாய எதார்த்தத்தில் நாம் வாழும் உலகமே இடம்பெறுகிறது. ஆனால் எங்கோ ஒரு சில தெருக்களை அல்லது பூங்காக்களை அல்லது கட்டிடங்களை அல்லது மனிதர்களை நம் தேவைக்கு ஏற்றவகையில் அதீதமான குணாம்சங்களோடு புனைய முடியும். அந்தப் புனைவுதான் ஒரு படைப்பாளி முன்வைக்க விரும்புகிற விமர்சனம் அல்லது கிண்டல் அல்லது சீற்றம் என்று சொல்லலாம்.


இப்படித்தான் இந்த உத்தி செயல்படுகிறது. தமிழ்ச்சூழலில் இந்த உத்தி அறிமுகமான தருணத்தில், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் நடுவே அதீத அளவுக்கு ஆர்வம் பொங்கியிருந்தது. இப்போது சற்றே தணிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பின் நவீனத்துவப் பார்வை படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் மனஉலகையும் பார்வையையும் விரிவாக்கி வளப்படுத்தி இருக்கிறது. விளிம்பில் இடம்பெற்றிருந்த பல அம்சங்கள் இன்று மையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அலசி ஆய்வுக்குள்ளாவதை பின்நவீனத்துப்போக்கின் சாதனை என்றே நான் நம்புகிறேன்.

2. எத்தகைய சிறுகதைகள் உங்களைக் கவர்கின்றன?

ஒரு சிறுகதையின் முடிவுப்புள்ளி என்பது மிகமுக்கியமான ஒரு கணம் அல்லது தருணம். சில சிறுகதைகளில் இது ஒரு திருப்பமாக இருக்கலாம். அல்லது மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை தன் பயணத்தின் ஊடே மண்ணைத் தீண்டும் இறுதிக்கணமாக இருக்கலாம். ஓர் ஓவியன் தூரிகையால் இழுக்கும் கோட்டின் கடைசிப்புள்ளியாகவும் அமையலாம். அப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு ரகசியக்கதவாகச் செயல்படுகிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தைநோக்கி தாவவைத்துவிடுகிறது. இப்படி தளமாற்றங்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிற சிறுகதைகள் என்னை எப்போதும் கவர்கின்றன.

3. வளரும் இளம்எழுத்தாளர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல நினைக்கிறீர்கள்?

ஆலோசனை என்பதைவிட பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விஷயமாக ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். விரிவான வாசிப்பை விரும்புகிறவர்களாகவும் ஆழ்ந்த விவாதங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எழுத்துப் பயிற்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நம் சாதனைகளே நமக்கான தடைக்கற்களாக மாற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எழுத்தாளன் என்பவன் இடையறாது விண்ணிலேறி பறந்தபடி இருக்கும் பறவை போன்றவன். பறத்தல் ஓர் அனுபவம். பறத்தலே ஒரு வாழ்க்கை.

4. மலேசிய இலக்கியம் படைப்புகள் குறித்த உங்களின் பார்வை?

ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்கிற அளவுக்கு அதிக அளவில் நான் மலேசிய இலக்கயப்படைப்புகளை நான் வாசித்ததில்லை என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமாக உள்ளது.


குறிப்பு: இனியாவது புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் மீது உங்களின் வாசிப்பை முன் வைய்யுங்கள். மலேசிய இலக்கியம் இன்று அடைந்துள்ள நவீனத்துவ வளர்ச்சியும் படைப்பாக்க முயற்சிகளும் மிக முக்கியமான இடத்தை எட்டியுள்ளது.


நன்றி: அநங்கம் பிப்ரவரி 2009 இதழ்


-கே.பாலமுருகன்-