Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Friday, December 26, 2014

பெரும் வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கும் மலேசியா 2014 : ஆம் ஆண்டின் மூன்றாவது துயரமிக்க கணம்

"என் குடும்பத்தார் சிலர் கடைசியாக மேட்டுப் பகுதிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பினர். அவர்கள் அங்கு உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் பிழைத்துக் கொண்டோம் என்கிற தகவலும் அவர்களுக்குத் தெரியாது" கெராய் மருத்துவமனையின் இருளுக்குள்ளிருந்து வரும் குரல்கள்.

//bius melalui hidung) kepada seorang bayi dalam gelap untuk menyelamatkan nyawanya selepas generator di Hospital Kuala Krai kehabisan minyak hari ini.//

பிறந்த குழந்தையொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மின்சார நிறுத்தப்பட்டதால் கெராய் மருத்துவமனையில் பெரும் அவதி.




இன்று சுனாமி நினைவு நாள். கடந்த 10 வருடங்களுக்கு முன் 2004ஆம் ஆண்டு ஒரு இறப்பு வீட்டில் பஜனையை முடித்துவிட்டு புக்கிட் மெர்த்தாஜமிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தோம். (அப்பொழுது ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இருந்த காலம்) தொலைப்பேசியின் மூலம் உலகம் முழுக்க சுனாமி ஏற்பட்டதுள்ளதாக அறியப்பட்டோம். உடனே காரில் இருந்த ஒரு பக்தர் இந்தப் பூமிக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது என்றார். நான் வெளியில் பார்த்தேன். சுகந்தமான காற்றும் அமைதியுமே நிலவியிருந்தது. பிறகெப்படி இது கெட்ட காலம் எனத் தோன்றியது.

உலகில் இந்தக் கணம் எங்கோ ஓர் இறப்பு நடந்து கொண்டிருக்கலாம். ஒரு கொலை நடந்து கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை பிறந்து கொண்டிருக்கலாம். ஒரு நாட்டில் குண்டு போடப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் பட்டினியில் வாடிக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கலாம். இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது பொறுத்தே வாழ்வு. வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டிருப்பவனும் எல்லோருமே கடைசியாக உணர்வது வாழ்க்கை அத்தனை எளிமையானது அல்ல; வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து எல்லோருக்கும் பயம் உண்டு. குறிப்பாக மரணம் குறித்து அனைவருக்கும் தீராத ஒரு திகில் உள்ளுக்குள் உறைந்து போய்க் கிடக்கின்றது. அதிலிருந்து மீள பக்தி, கடவுள், தன்முணைப்பு, துறவு என மனித மனம் பல களங்களைத் தாண்டி வந்துவிட்டது. இதில் எது உண்மை எது பொய் என விவாதிக்கும் சூழல் இல்லாமல் தினம் தினம் ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சடாரென்று அன்று காரில் அமர்ந்திருந்த அவரும் ஒரு கார்ப்பரேட் சாமியாருக்குரிய பொய்யான சமாதானம் சொன்னதாகவே இப்பொழுது தோன்றுகிறது. ஏதோ ஓர் இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டால் போதும் நம்மை ஒரு பாதுகாப்பான சூழலில் அமர்த்திக் கொண்டுவிட்டோம் என மனம் அமைதியடைகிறது. ஆனால், இது போன்ற சுனாமியின் போது நல்லவன் கெட்டவன், சாமியார் பக்தன், அரசன் ஆண்டி எனப் பேதம் பார்க்காமல் அனைவரையும் அடித்துத் தள்ளித் துடைத்துவிடுகிறது இயற்கை.


பத்து வருடம் நினைவுகளைக் கடந்து நிற்கும் இன்றைய மலேசியா, திடீரென்று பெரும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் (கிளாந்தான், பேராக், பகாங், பெர்லிஸ் & திரங்காணு) பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக மலேசியாவின் வரலாற்றில் மிகக் கொடுமையான வெள்ளம் எனப் பேசப்படும் 1982ஆம் ஆண்டில் நடந்ததைவிட இவ்வாண்டின் வெள்ளம் பெரும் சரித்திரமாக மாறக்கூடும். இதுவரை 100,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளைத் துயர்த்துடைப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,000- தாண்டுகிறது.

Tuesday, October 7, 2014

ஒரு தொல்காப்பிய ஆளுமை : சீனி நைனா முகமது

கண்ணீர் அஞ்சலி

தெலுக் இந்தான் சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் நடக்கவிருக்கும் என்னுடைய சிறுகதை பட்டறைக்குக் கிளம்பி பேருந்தில் சென்று கொண்டிருந்த நேரம். சிறுவர் நாவல் தொடர்பாகப் பேசுவதற்காக நண்பர் மூர்த்தி அவர்களுக்குத் தொடர்புக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். சட்டென அவருடைய அழைப்புத் துண்டித்துக் கொண்டது. உரையாடல் பாதியிலேயே நிற்கக்கூடாது என்று எண்ணி மீண்டும் அழைத்தேன். மறுமுனையில் திரு.மூர்த்தி அவர்கள் சோர்வடைந்த குரலுடன் ஒரு துக்கச் செய்தியை வைத்திருந்தார். அழைப்புத் துண்டிக்கப்பட்ட இடைவேளையில் அவருக்கு இன்னொரு அழைப்பு வந்திருக்கிறது. மூர்த்தி அவர்கள் கணத்த குரலுடன்சீனி ஐயா இறந்துட்டாராம் பாலாஎன்றார்.

ஐயா காலமாகி பல நாட்களுக்குப் பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் தோன்றியது. மனத்திலிருந்து சுமையை எல்லாம் நேரங்களிலும் சட்டென எழுத்திற்குள் இறக்கி வைத்துவிட முடியாதுதான். எனது தந்தையார் இறந்து சில நாட்களே ஆகியிருந்த தருணம் அது.

சீனி ஐயாவுடனான உறவு எனது கல்லூரி காலத்திலிருந்தே தொடங்கியது. 2004ஆம் ஆண்டு விரிவுரைஞர் திரு.தமிழ்மாறன் அவர்கள் சீனி ஐயாவை இலக்கணப் பட்டறைக்காகக் கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தார். அதற்கு முன்பே ஐயாவைஉங்கள் குரல்இதழின் வழி ஓரளவிற்கு அறிந்திருந்தேன். தவறாமல் மாதந்தோறும் அந்த இதழை வாசித்தவர்களில் நானும் ஒருவன். அதை அவ்வப்போது விரிவுரையாளர்களிடம் சொல்லிக் கொள்வதிலும் ஒரு பெருமை இருக்கவே செய்தது.

ஐயா அவர்களிடம் விரிவுரையாளர்கள் அனைவரும் மிகுந்த மரியாதையோடு நடந்து கொண்டார்கள். அதிலும் திரு.தமிழ்மாறன் அவர்கள் எப்பொழுதும் வகுப்பில் சீனி ஐயாவைப் பல நேரங்களில் மேற்கோள் காட்டிய வண்ணமே இருப்பார். அன்று முதன் முதலாக சீனி ஐயாவின் இலக்கணப் பட்டறையில் கலந்து கொண்டேன். அத்துனை அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் பேசும் திறன் கொண்டவர்களை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. குரலில் எந்தத் தயக்கமும் இல்லாமல் கற்றோர் நிறைந்திருந்த சபையில் ஐயா பேசிக் கொண்டிருந்தார். அதுவரை அல்ல, எப்பொழுதுமே மனத்தோடு ஒட்டாத இலக்கணம் என்னைவிட்டுத் தூரமாகவே இருந்தது. ஆனால், அன்று ஐயாவின் உரை வழக்கமான ஒரு பாடமாக அல்லாமல் மிகவும் இயல்பாகவும் நகைச்சுவையுடன் இருந்தபோதே அந்த இடைவேளி குறைவதைப் போல உணர்ந்தேன்.