குறிப்பு: இந்தத் தொடர் யாவும் ஜெயமோகனுடன் இருந்த எனது தருணங்களின் பதிவு மட்டுமே. மற்றபடி ஜெயமோகன் கூறிய விசயங்களின் தொகுப்பாகவோ அல்லது மேற்கோளாகவோ இதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் பேசியதில் என் மீது படிந்த ஒரு சிறு தெறிப்பின் விளைவே இந்தத் தொடர்ப்பதிவுகள்.
தலைமை ஆசிரியர் ரவி அவர்களுடன் பூஜாங் பள்ளத்தாக்கிற்கு கீழேயுள்ள சிறு நகரத்தில் இருக்கும் ஒரு சீனக் காப்பி கடையில் அமர்ந்துகொண்டோம். திரு.ரவி அவர்கள் தீவிரமான தமிழ் தேடல் உள்ளவர். வங்காளத் தேசத்தில் தடை செய்யப்பட்ட ஒரு நாவலைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த நாவல் பிரதி ஆங்கில வடிவில் அவரிடம் இருப்பதாகவும் எனக்குப் படிப்பதற்குத் தருவதாகவும் கூறிக் கொண்டிருந்தார். சுவாமியும் ஜெயமோகனும் காலை மணி10.30 போல் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். பிறகு அனைவ்ருமாக முதலில் பூஜாங் அருங்காட்சியக மையத்திற்குள் சென்றோம். சோழர் காலத்தில் இங்குக் கிடைக்கப்பட்ட கற்கள், அவர்களின் வருகையைத் தெரிவிக்கும் தொல்லியல் பொருள்கள், சிலைகள், தடயங்கள் போன்றவை அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததை எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையிட்டார். பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றிய குறிப்புகள் தற்போதைய வரலாற்று பாடத்திட்டத்தில்கூட இடம்பெறாததை அவரிடம் கூறினேன்.
சிறிது நேரம் எல்லாம் பொருள்களையும் பார்வையிட்ட ஜெயமோகன் இது யாவும் சோழர் காலத்திற்குரிய தடயங்கள்/கலை அடையாளங்கள் கிடையாது எனவும் இவையனைத்திலும் சோழர் காலத்தின் நாகரிகமும் கலை வளர்ச்சியும் சிறிதும் வெளிப்படவில்லை எனவும் மறுத்தார். பெரும்பாலான சிலைகளிலும் தொல்லியல் பொருட்களிலும் வெளிப்படும் நேர்த்தியற்ற கலை வேலைப்பாடுகள் கிபி.1 அல்லது கி.மு 1 என்கிற நூற்றாண்டைச் சேர்ந்த அடையாளங்களாகக் குறிக்கப்படுகிறது எனக் கூறினார். பௌத்த மதத்தின் முக்கியமான குறியீடுகளான தாமரையும் யானையும் மீண்டும் மீண்டும் தொல்லியல் பொருள்களில் காணப்படுவதன் மூலம் இது பௌத்த காலக்கட்டம் உலகம் முழுவதும் பரவிய நூற்றாண்டைக் குறிப்பிடும் என அடையாளப்படுத்தினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் எந்தவித முழுமையான ஆய்வும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டார். வெளியே மூன்று இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் Candi எனச் சொல்லக்கூடிய சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்களின் கீழ் அடித்தளத்தை ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தோம். அதையும் பார்வையிட்ட ஜெயமோகன் இவையனைத்தும்கூட மிக மிகப் பழமையான பௌத்த கோவில்கள் கட்டப்பட்ட கோவில் கட்டிடங்களின் மிச்சங்கள் எனக் கூறினார். மேலும் தூண்களின் அடித்தளக் கற்களையும் அதன் நடுவில் இருக்கும் குழியையும் காட்டி இங்குத்தான் பௌத்த ஆலயங்களில் பயன்படுத்தப்படும் துபிகளை நடுவதற்கான இடம் எனக் குறிப்பிட்டார். மிகவும் ஆதாரப்பூர்வமான மறுப்புகளை நிகழ்த்திக் கொண்டே வந்து அங்குப் பதிக்கப்பட்டிருக்கும் வரலாற்றுக்கு முரணான கருத்தாக்கங்களையும் முன்வைத்தார். (பூஜாங் பள்ளத்தாக்குகளில் புதைந்து கிடக்கும் உண்மைகள் எனும் ஒரு தலைப்பில் ஜெயமோகனை விவாதிக்கச் செய்தால் உள்நாட்டில் நடந்திருக்கும் இருட்டடிப்புகளைக் கண்டுபிடித்துவிடலாம்.)
பிறகு அவ்வப்போது உலக அரசியலைத் தொட்டும் உலக அளவில் எளிய மக்களுக்கு எதிராக நடந்துவரும் ஒடுக்குமுறைகளைப் பற்றியும் பல தளங்களில் வைத்து பேசிக் கொண்டே இருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் எழுத்தாளர் கோ.புண்ணியவான் இல்லத்திற்கு உணவருந்த சென்றோம்.
மாலை: பினாங்கு காந்தி மண்டபத்தில் “இந்திய ஞான மரபும் காந்தியும்” என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஜெயமோகனை அறிமுகப்படுத்தி பேசிய மூத்த இலக்கியவாதி திரு.ரெ.கார்த்திகேசு அவர்கள் ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரம் நாவலைத் தொட்டுப் பேசி மிகச் சிறப்பாக அறிமுகப்படுத்தி வைத்தார். சுவாமியின் வகுப்பிற்கு வாடிக்கையாக வரும் பலர் அந்தச் சொற்பொழிவிலும் கலந்துகொண்டனர். எழுத்தாளர் திருமதி பாவை, தேவராஜுலு போன்றவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
காந்தி பற்றி குறிப்பிடுகையில் அவர் அஹிம்சை என்கிற கொள்கையை சமணப் பின்புலத்திலிருந்துதான் கற்றுக் கொள்கிறார் எனக் குறிப்பிட்டார். மேலும் காந்தியின் கூற்றுப்படி ஒவ்வொரு சமூகத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம் எனவும் ஒரு சமூகம் சிவில் சமூகம் இன்னொரு சமூகம் அரசியல் சமூகம் எனவும் கூறினார். காந்தி முழுக்கப் போராடியது அரசியல் சமூகத்திற்கு எதிராக அல்ல, மாறாக சிவில் சமூகத்தை மாற்றியமைக்கத்தான் போராட்டங்களை முன்னெடுத்தார் எனக் கூறினார். அரசியல் சமூகம் என்பது மக்களைப் பிரதிநிதித்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகையால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அரசியல் சமூகத்தையும் மாற்றியமைக்கலாம் எனக் கூறினார். தொடரும்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா