Friday, October 9, 2009

மழைக்கால கவிதைகள்

1
துக்கம் பிடித்த
ஓர் இரவில்
வந்து சேர்ந்தது
மழைக்காலம்.
அம்மா தகற வாளியை
தூக்கிக் கொண்டு ஓடுகிறார்
மழையைச் சேமிக்க.
மங்கிய உறக்க
பிரக்ஞையுடன்
சொட்டு சொட்டாக
எனக்குள் சேமித்துக் கொண்டிருந்தேன்
இன்று தொடங்கிய மழைக்காலத்தை.

2
நனைந்த குடைகளின்
மேற்பரப்பிலிருந்து
ஒழுகிகொண்டிருந்தது
அன்றைய மழைக்காலம்.
எவ்வளவு உதறியும்
அடைமழையென
குடையின் உடலில்
தேங்கிக் கிடக்கிறது
துளிதுளியாய்
நான் சந்தித்த ஒரு மழைக்காலம்.

3
கோடையின் இறுதியை
விழுங்கிக்கொண்டு
வந்தது போன வருடம்
என்னைவிட்டுச் சென்ற
மழைக்காலம்.
சன்னலின் வழியே
மழையை எக்கிப் பிடிக்க முயன்ற
என் பால்ய முயற்சிகளை
மீண்டும் தொடர்கிறேன்.
வேறொரு மழைக்காலம்
வேறோரு சன்னல்.
புதிய மழை.
உதிர்ந்து வீழ்கிறேன்
மழைத்துளிகளில்.

thanks: vaarththai magazine september

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி
bala_barathi@hotmail.com