Wednesday, September 1, 2010

மேற்கத்திய சினிமா விமர்சனம்: Seven Pounds- ஒரு மனிதத்தின் ஏழு துண்டுகள்

( ஏழு பெயர்கள் , ஏழு மனிதர்கள், ஓர் இரகசியம்)

“நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்” என இருண்டிருக்கும் ஓர் அறையிலிருந்து பரவும் மெல்லிய பச்சை விளக்கொளியில் தின் தோமஸ் பேசிக் கொண்டிருக்கிறான். அது அவன் மரணிக்கப் போகும் கடைசி தருணம். அவனுடைய ஏழாவது துண்டுக்காக இன்னொரு உயிர் காத்திருக்கிறது. இப்பொழுது அவன் மரணித்தால்தான் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எமிலியைக் காப்பாற்ற முடியும்.

தின் தோமஸின் உடலின் ஏழாவது துண்டைப் பெறப்போகும் அந்த எமிலி, தின் தோமஸால் காப்பற்றப்படப்போகும் ஏழாவது நபர். யார் இந்த ஏழு மனிதர்களும்? ஏன் இவர்கள் எல்லோரும் தின் தோமசால் காப்பற்றப்படுகிறார்கள்? இவர்களுக்கும் தின் தோமசுக்கும் என்ன தொடர்பு? கதை மீண்டும் பின்னோக்கி நகர்கிறது. வெறும் உரையாடல்களும் எந்தத் திருப்பங்களுமற்ற சம்பவங்களும் எனக் கதை ஓர் இரகசியத்தைச் சுமந்துகொண்டு அதைப் பற்றிய தெறிப்புகளை உருவாக்காமலேயே தின் தோமசுடன் பயணிக்கிறது.

“கடவுள் ஏழு நாட்களில் இந்த உலகத்தைப் படைத்தார் எனப் பைபிள் சொல்கிறது. ஆனால் நான் ஏழு வினாடியில் என்னைத் தொலைத்திருக்கிறேன்” எனும் பின்னனி குரலில் தின் தோமஸ் உரையாட படர்ந்து விரியும் கடலில் நீந்தி கரையேறுகிறான். அவனைப் பின்தொடரும் ஏழு மரணங்களின் கதை அவனுக்குள் அடர்ந்த சோகங்களாகவும் வலிகளாகவும் நிரம்பி வழிகிறது. ஐ.ஆர்.எஸ் நிறுவனத்தில் பணிப்புரியும் தன் தம்பியான பென் தோமஸின் அடையாள அட்டையையும் அவனது அடையாளத்தையும் பயன்படுத்திக் கொண்டு போலியான இருப்புடன் அவனுக்கான ஏழு மனிதர்களைத் தேடி அலைகிறான். அவனுக்கு வேண்டியது அவனால் காப்பற்றாப்படப் போகும் ஏழு அந்நிய பெயர்கள். அந்தப் பெயர்களுடைய மனிதர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஒரு வாழ்வு கொடுக்க முனையும் ஓர் அசாத்திய இலட்சியத்துடன் இயங்குகிறான் தின் தோமஸ். ஆகையால்தான் தன் தம்பியின் அடையாளத்தைப் பயன்படுத்தவும் செய்கிறான்.

அது ஒரு இருண்ட சாலை. மஞ்சள் விளக்குகள் மட்டும் சாலையோரத்தில் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டு நின்றிருக்கின்றன. தின் தோமசும் அவனது மனைவியான சாராவும் காரில் வந்து கொண்டிருக்கிறார்கள். சாரா கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை தோமசிடம் காட்டுகிறாள். அந்த நேரம் பார்த்து தோமசுக்கு தொலைப்பேசியில் ஒரு குறுந்தகவல் வருகிறது. அதன் சத்தத்தைக் கேட்டதும் தொலைப்பேசியை எடுத்து குறுந்தகவலை வாசிக்கத் துவங்குகிறான். சாலையில் மிகக் கூர்மையான ஒரு திருப்பம் வருகிறது. திருப்பத்தில் வரும் ஒரு காரை மோதி தடம் புரளும் தோமசின் கார் பக்கத்து சாலையில் வந்து கொண்டிருக்கும் இன்னொரு காரையும் மோதுகிறது. எதிர்ப்பாராத கணத்தில் ஏழு நிமிடங்களிலேயே அந்தக் கொடூர விபத்து சாலையில் நிகழ்கிறது. தோமசின் மனைவி சாராவும் அந்த இன்னொரு காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே பயங்கரமான மரணத்தைச் சந்திக்கிறார்கள்.

கென் அண்டர்சன், நிக்கோல் அண்டர்சன், ஏல்லி அண்டர்சன், ஸ்டீவன் பிளிப்ஸ், மோனிக்கா மற்றும் சாரா ஜோன்சன்( தோமசின் மனைவி). இந்த ஏழு பெயர்களும் அவனுக்குள் குற்ற அடுக்குகளையும் துயரத்தின் கரங்களையும் உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றன. ஏழு உயிர்களை தனது சிறிது நேரத்தின் அலட்சியத்தில் கொன்றுவிட்ட குற்ற உணர்வு தோமசின் மனதினுள் ஆழமாக வேர்விடுகிறது. அந்தத் துர்சம்பவத்திலிருந்து மீள முடியாமல் தொடர்ந்து அவதிக்குள்ளாகிறான் தோமஸ். மனப்போராட்டத்தின் உச்சக்கட்டத்தை அடையும் தோமஸ் அவன் அழித்த ஏழு உயிர்களின் இழப்பைச் சரிப்படுத்த இன்னொரு ஏழு உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தீர்மானத்திற்கு வருகிறான்.

தன் குற்ற உணர்வின் வெளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் தன்னால் மரணித்த அந்த உயிர்களின் மரண ஓலங்களிருந்து ஓர் ஆத்ம திருப்தியின் மூலம் விடுப்படவும் அவனுக்கு வேண்டிய அந்த ஏழு உயிர்களைத் தேடுவதில் ஈடுபடுகிறான் தோமஸ். அவர்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களை வாழ வைப்பதன் மூலம் அவர்களின் சிக்கலான உலகிலிருந்து அவர்களை விடுதலை பெறச்செய்வதன் மூலம் தன் குற்ற உணர்வையும் கசப்பான தனது கடந்த காலத்தின் பதிவையும் நீக்கிவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறான் தின் தோமஸ். அவனால் காப்பாற்றப்படும் அந்த ஏழு நபர்கள் யார்? அந்தக் கொடூரமான விபத்து நிகழ்ந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தின் தோமஸ் அந்த ஏழு மனிதர்களுக்கும் தன்னை ஏழு துண்டுகளாகப் பரிசளிக்கிறான்.

1. அவனது தம்பியான பென் தோமசுக்கு தன் நுரையீரலைத் தானம் செய்து அவனைக் காப்பாற்றுகிறான்.

2. ஆறு மாதத்திற்குப் பிறகு ஹோலி எனும் குழந்தைகள் சேவை நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்மனிக்கு தனது லீவரை(Liver) தானமாகத் தருகிறான். அதன் பிறகுத்தான் தனது உடல் உறுப்பு தானத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் சில மனிதர்களைத் தீவிரமாகத் தேடுகிறான்.

3. பிறகு ஹாக்கி இளம் பயிற்றுனர் ஒருவருக்கு தன் சிறுநீரகத்தைத் தானமாகத் தருகிறான்.

4. தன் முதுகெலும்பின் ஒரு முக்கியமான எலும்பை நிக்கோல்ஸ் எனும் சிறுவன் ஒருவனுக்குத் தானமாகத் தருகிறான்.

மேற்கண்ட நால்வருக்கும் உடல் உறுப்பு தானம் செய்து அவர்கள் யாவரையும் பிழைக்க வைப்பதாகக் கதையின் ஓட்டத்தில் பின்னனியில் சொல்லப்படுகிறது. பிறகொருநாள் தான் இறப்பதற்கு 2 வாரம் இருக்கும் சமயத்தில் தின் தோமஸ் ஹோலிக்குத் தொலைபேசியின் மூலம் அழைத்து வேறு யாராவது உதவிக்காக ஏங்குபவர்கள் இருக்கிறார்களாக எனக் கேட்கிறான்.

ஹோலியும் தன் காதலனால் கொடுமைப்படுத்தப்படும் இரு குழந்தைகளுக்கான தாயான கொன்னியைப் பற்றி கூறுகிறார். அவளைச் சந்திக்க தின் தோமஸ் அவளது வீட்டிற்குச் செல்கிறான். அவளிடம் அவளுடைய காதலனைப் பற்றி கேட்டதும், தின் தோமசை அங்கிருந்து விரட்டுகிறாள். இந்தக் காட்சியில் இரு கதைப்பாத்திரங்களும் மிக இயல்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கொன்னி கணவனை இழந்த இளம் தாய் அந்நியன் ஒருவன் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டதை எண்ணி மேலும் தன் அந்தரங்கமான வாழ்வை உரசிப் பார்க்கும் கேள்விகளைக் கேட்ட தின் தோமசின் செயலைக் கண்டு பதற்றமடைகிறாள். தன் காதலனால் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களை மறைக்கிறாள். ஆனால் தின் தோமஸ் அவளை விடாமல் உனக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன், நீ உதவி செய்யப்பட வேண்டியவள் எனக் கெஞ்சுகிறான். தன்னால் அவள் உதவி செய்யப்பட்டு புது வாழ்க்கையை நுகர்வதற்கு அவளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் துடியாய் இருக்கிறான்.

5. கொன்னி அவளுடைய இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு கடைசியில் தின் தோமசின் கடற்கரையோர வீட்டிற்கு வந்து சேர்கிறாள். தன்னுடைய வீட்டை அவளுக்கே அன்பளிப்பாகத் தந்துவிடுகிறான் தோமஸ்.

அடுத்ததாக அவனுடைய கடைசி மனிதத்தின் இரு துண்டுகளைப் பெறப் போகும் இரண்டு மனிதர்களை நோக்கி நகர்கிறான் தின் தோமஸ். இறைச்சி விற்பனை செய்யும் நிறுவனத்தில் தொலைப்பேசி அழைப்புகளின் மூலம் ஆர்டர்களைப் பெறும் இடத்தில் வேலை செய்யும் கண் தெரியாத எசுராவைச் சந்திக்கிறான். எசுராவைப் பற்றிய விவரங்கள் தின் தோமசுக்குத் தரப்படுகிறது. எசுரா ஒரு மிகச் சிறந்த பியானோ இசையமைப்பாளரும்கூட. கண் தெரியாத எசுராவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் உரையாடுகிறான். எசுராவிற்கு தன் ஊனத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தி, இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு அவனுக்குள் ஆசையை முளைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தின் தோம்ஸ் அவனைப் பயங்கரமாகத் திட்டுகிறான். அவனுடைய ஊனத்தைக் கேலி செய்கிறான். அவனைக் கடுமையான விமர்சனத்தால் தாக்குகிறான்.

இந்தத் தொலைப்பேசி உரையாடல் காட்சியைப் பார்க்கும் யாவரும் தின் தோமசின் கடுமையான வார்த்தையால் வேதனைப்படவோ அல்லது எரிச்சலடையவோ வாய்ப்புண்டு. ஆனால் அதன் பின்னனியில் இருக்கும் தின் தோமசின் மனிதநேய குரல் மிகவும் அதிசயமானது. கண் தெரியாத எசுரா இந்தக் காட்சியில் மிக அற்புதமான எளிமையான முகப்பாவனையையும் நடிப்பையும் வழங்கியிருக்கிறார். குறிப்பாக கண்களின் மூலம் வெளிப்படுத்தப்படும் உணர்வுகள் மெய்சிலிர்க்க வைக்கும்.

6. இறப்பதற்கு முந்தைய சில மணி நேரத்திற்கு முன் தன் அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் எசுராவைத் தொலைப்பேசியின் மூலம் தொடர்புக் கொள்கிறான் தின் தோமஸ். உன்னை அன்று கடுமையாகத் திட்டியது நான்தான் எனவும், நீ மிகப் பொறுனையான நல்ல மனம் படைத்த மனிதன் எனவும் கூடிய விரையில் என்னிடமிருந்து உனக்கொரு பரிசு வந்து சேரும் எனவும் தோமஸ் கூறிவிட்டு அழைப்பைத் துண்டிக்கிறான். எசுராவிற்கு இறந்த பிறகு தன் கண்ணைத் தானம் செய்ய முடிவு செய்திருந்தான் தின் தோமஸ்.

தின் தோமசின் இறுதி தானத்தைப் பெறப்போகும் எமிலி போசாவுடன் ஆரம்பத்திலேயே தின் தோமசுக்கு நட்பும் அன்பும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவளுடன் அன்பைப் பகிர்ந்து கொள்பவனாக அவளிடம் மட்டும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்கிறான் தோமஸ். எமிலி போசா சொந்தமாக அச்சகம் வைத்துக் கொண்டு வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு வருபவள். அவளுக்கு இருதய கோளாறு இருக்கிறது. ரொம்ப நாள் வாழ முடியாத ஒரு சூழல் இருப்பதை அறிந்த தின் தோமஸ், அவளுக்குத் தன் இருதயத்தைக் கொடுத்து அவளை வாழ வைக்கலாம் என்கிற முடிவுக்கு வருகிறான். அவளுடன் பழகி, அவளைக் காதலிக்கவும் செய்கிறான்.

இருதய நோயால் அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்படும் எமிலிக்குத் துணையாக கடைசிவரை இருந்து அவளைக் கவனித்துக் கொள்கிறான். ஒருநாள் அவளே அவனை வீட்டுக்கு அழைத்து இருவரும் இரவு விருந்தில் கலந்துகொண்டு பேசி சிரித்து பொழுதை மகிழ்ச்சியுடன் கடக்கிறார்கள். அந்தச் சமயம் எமிலியின் பழுதைடைந்து போன பழைய அச்சு இயந்திரத்தைச் சரி செய்து அவளிடம் காட்டி அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறான் தோமஸ். நம் வாழ்க்கையில் மிக அற்புதமான கணம் எதுவென்றால் நம் அன்பிற்குரியவர்களை மகிழ்ச்சிப்படுத்தி பார்ப்பதுதான்.

இறுதியாக குளியல் அறையிலுள்ள நீர்த்தொட்டியில் பனிக்கட்டிகளை அள்ளிக் கொட்டி அதில் தண்ணீரை நிரப்பி அதில் மூழ்கி, சிறு வயதில் தான் பார்த்து வியந்த ஜெர்ரி மீன் மூலம் கடிப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறான் தின் தோமஸ்.

7. அதன் பிறகு அவனது இருதயம் எமிலிக்கு(ஏழாவது மனிதர்) மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றப்படுகிறது.

படத்தின் இறுதி காட்சியில் எசுராவின் இசை விருந்து கூட்டத்திற்கு எமிலி செல்கிறாள். எசுரா நன்றாக உலகையும் மனிதர்களையும் பார்த்து இரசிக்கும் வகையில் அழகான கண்களுடன் ஆனந்தமாகத் திகழ்கிறான். அங்கு எசுராவின் கண்களைப் பார்த்து வியப்புடன் கண்னீர் வடிக்கிறாள் எமிலி. படம் நிறைவடைகிறது. தின் தோமஸ் இறந்துவிட்டாலும் எசுராவின் மூலம் இந்த உலகைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். எமிலியின் மூலம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்படி ஏழு மனிதர்களிடமும் சிறு சிறு துண்டுகளாக தின் தோமஸ் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

படத்தில் தின் தோமசாக நடித்திருப்பது பிரபல ஆலிவுட் நடிகர் வில் ஸ்மித் (will smith) ஆகும். ஏற்கனவே பல நகைச்சுவை படங்களில் மிகவும் அபாரமாகத் தனது நடிப்பாளுமையை வெளிப்படுத்தியவர் வில் ஸ்மித். இந்தப் படத்தில் மிகவும் தீவிரமான வாழ்வை எதிர்கொள்ளவும், மனிதர்களை கண்டடையவும் வாழ்வை நகர்த்தும் யதார்த்தமான கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க நிகழும் உரையாடலில் மானுடத்தின் அன்பைக் காண முடிகிறது. தின் தோமஸ் போன்றவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் ஒரு கடவுளின் மனதைப் போல போற்றப்பட வேண்டியது.

குறிப்பு: இந்தப் படத்தை இன்னொரு பரிணாமத்திலும் வைத்துப் பார்க்க முடியும். தனக்குள் முளைத்துவிட்ட குற்ற உணர்ச்சியைச் சரிகட்டவே அந்த ஏழு மனிதர்களுக்கும் தின் தோமஸ் உதவுகிறான். அவனால் கொல்லப்பட்ட ஏழு மனிதர்களுக்கு நிகராக இன்னொரு ஏழு பேரைக் காப்பாற்றி ஏற்கனவே நிகழ்ந்துவிட்ட ஏதோ ஒரு விதியை அவன் சீர்ப்படுத்துவது போல இருக்கிறது.

இது மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு செய்யப்பட்ட சுயநலம் போல தெரிந்தாலும், அவன் அவனையே ஏழு துண்டுகளாப் பகிர்ந்தளித்து ஏழு பேரை வாழ வைத்திருக்கும் செயல் எல்லோருக்குள்ளும் இருக்கும் அசாத்தியமான மனிதநேயத்தின் உச்சக்கட்டமாக இதைத் தரிசிக்க முடிகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்திருக்கும் நல்லது கெட்டதில் எது உக்கிரமாக எழுந்தாலும், அது ஒரு சராசரியான மனிதனின் இயல்புகளுக்கு அப்பாற்பட்டுத்தான் தெரியும். மிக மிக நேர்எதிர்மறையான குறிப்புகள்.

இந்தத் திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க நேரும்போது, மனிதன் பலவகையான கொடூரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தாலும் நம்முடைய வரலாறு குருதியால் ருசிக்கப்பட்டதாக இருந்தாலும் ஓர் உயிரைக் காப்பாற்றும்போது அல்லது அதைக் காணும்போதும் நம் மனம் அடையும் அதிர்வு எந்த வன்முறையாலும் தகர்க்க முடியாததாகும் என நினைக்கத் தோன்றுகிறது. ஐரோப்பியாவின் சிறந்த வாழ்க்கை வரலாறுக்கான விருதை வென்ற இப்படம் ஒரு ஆழ்ந்த மனிதநேயத்தையும் அன்பையும் சொல்லிவிட்டுப் போகிறது.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா