Wednesday, June 17, 2015

குற்றவியலின் தர்க்கங்கள்: ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும் சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது. காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்று நிலையிலும் விரிவான எல்லைகளுக்கு இடம் அளிக்கும் நாவல் என்னும் இலக்கிய வகையை வாசிக்கும்போது, புனைவுவெளியை உருவாக்கும் படைப்பாற்றலுக்கு முக்கியம் தந்து வாசிக்கவேண்டும் என்பது எனது வாசிப்பு முறை. இன்னும் சொல்வதானால், நாவலாசிரியர்கள் புனைவு வெளியை முதலில் உருவாக்கிக்கொண்டே காலம், பாத்திரங்கள் என்ற இரண்டிற்குள்ளும் நுழைகிறார்கள் என்பது எனது கணக்கு.
புனைவு வெளியையே தலைப்பாகக் கொண்டிருக்கிறது பாலமுருகனின் இரண்டாவது நாவல். ஆப்பே கடை தான் நாவலின் மையமான புனைவு வெளி. அரசாங்கம் கட்டிக்கொடுத்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கக் கூடிய ஆப்பே கடை, கொஞ்சம் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்ததால், உண்பதோடு உட்கார்ந்து பேசுவதற்குமான வசதிகொண்ட கடை என்பது அதன் இருப்பு.
வரலாற்றின் பகுதியாக ஆகிவிடும் ஒரு பேரரசின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சியை முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பாகச் சொல்வது வரலாறு. வரலாற்றைச் சொல்லும்போது காலவரிசையைப் பின்பற்றுவதும், இன்னாருக்குப் பின்னர் இன்னார் என வரலாற்று மாந்தர்களை நிறுத்துவதும் வரலாற்றாய்வாளர்கள் கவனம் செலுத்தும் முக்கியமான கூறு. புனைகதை ஆசிரியர் வரலாற்றாய்வாளரல்ல என்பதை உணர்ந்திருப்பதால், அதனைக் குலைப்பதிலும் அடையாளமற்ற பாத்திரங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார். புனைவின் நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கக்கூடியவை; அப்படி நிகழ்ந்திருக்கத் தேவையான காலச்சூழலும், சமூகக்குழுக்களின் முரண்பாடுகளும் இருந்தன என எழுதிக்காட்டுவதின் வழியே தான் தனது புனைவை நம்பகத்தன்மை கொண்ட பிரதியாக மாற்றுகிறார்.
ரப்பர்த் தோட்டத் தொழிலாளர்கள் என்பது மலேசியத் தமிழர்களின் கால் நூற்றாண்டுக்கு முந்திய அடையாளம். நிகழ்காலத்தில் இந்த முக்கிய அடையாளம் சிதைந்துவிட்டது. கல்விகற்ற சிறுபான்மையினர் அகதிமனநிலையிலிருந்து விடுபட்டுத் தேசத்தின் பொருளாதார வாழ்வின் அங்கமாக மாறிவிட்டனர். ஆனால் பெரும்பான்மைத் தமிழர்கள் நகரங்களில் சேவைப்பணியாளர்களாகவும், அன்றாடக் கூலிகளாகவும், பொறுக்கிகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சேவைப் பணியாளர்கள் , கூலிகள் நிலவும் பொருளாதார முரண்பாட்டில் தேவையான கூட்டம் எனக் கருதி அரசும் சமூகத்தின் மேல்தள மனிதர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பொறுக்கிவர்க்கத்து மனிதர்களின் செயல்பாடுகளும் தொடர்புகளும் ரகசியங்களும் ‘குற்றங்கள்’ என வகைப்படுத்தப்பட்டு ‘நீக்கப்பட வேண்டியவர்களாக’ முத்திரை குத்தப்படுகிறார்கள். பாலமுருகனின் இந்த நாவல் நீக்கப்பட வேண்டிய மனிதர்கள் – குற்றவாளிகள்- என வகைப்படுத்தப்பட்டவர்களின் சந்திப்பு மையமாக விளங்கிய ஆப்பே கடையின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சியை விரித்துள்ளது. பாஞ்சாங் சுரேஷ், கட்டைமணியம், முத்து அபாங் எனவும், ஆண்களால் வழி நடத்தப்பெற்ற குழுக்களின் நடவடிக்கைகளை விவரிப்பதோடு, சரசு என்னும் புரிதலும், தன்னம்பிக்கையுமிக்க பெண்ணின் வாழ்க்கையையும் கோடுகளாக்கிப் பரப்பியுள்ளது நாவலில். தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தல், பாலியல் உறவுகளுக்கு ஏற்பாடு செய்தல் வழியாகக் கிடைக்கும் பணம் உண்டாக்கும் வாழ்க்கை முறையையும், அதன் பின்னணியில் இருக்கும் அச்சமனத்தையும், பொது நடைமுறைகளுக்கு மாற்றான எதிர்நடவடிக்கைகளையும் பதிவாக்கும் பாலமுருகன், அதன் உணர்வுத் தளத்திற்குள் நுழையாமல் விவரித்துச் செல்கிறார். குறிப்பான நிகழ்வுகளை விரிவாக்கும் நோக்கத்தோடு ஒன்றிரண்டு மேசைப்பேச்சுகளை – விவாதங்களை – விரித்திருந்தால் அதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அப்போது படர்க்கைக் கூற்றுக்கு மாறாகப் பாத்திரங்களின் உரையாடல், உடல்மொழி, மனவோட்டம் என எழுத்துமுறை மாறியிருக்கும். அப்படி மாறும்போது பாத்திரங்களின் மீதான அவரது மதிப்பீடுகளும் உருவாகியிருக்கும். இதிலிருந்து கவனமாகவே பாலமுருகன் விலகியிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால் பாத்திரங்கள் எழுத்தாளரிடமிருந்தும் தப்பித்து அவர்களின் வாழ்வாகவும், வாழ்க்கையின் மீதான கேள்வியாகவும் நிற்கிறார்கள் . ஆப்பே கடை என்னும் குறிப்பான கதைக்களத்திலிருந்து மலேசியாவின் மொத்தப்பரப்பும் நினைக்கப்படும் பரப்பாக நாவலுக்குள் இடம்பெற்றுள்ளது. அத்தோடு அண்டைநாடுகளான சயாம், சீனம் ஆகியனவும் கதைப்பரப்பாகியுள்ளது. விரிவான காலம் மற்றும் வெளிகளைப் பாலமுருகன் எழுதும் மொழியின் வேகத்தின் மூலம் முன்னும்பின்னுமாக நகர்த்திக் குலைத்துப் போட்டு விறுவிறுப்பை உண்டாக்கியுள்ளார்.
எனது வாசிப்புப் பரப்பில் இந்த நாவலில் வரும் பாத்திரங்களையொத்த மனிதர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜெயகாந்தன் கதைகளிலும், சாருநிவேதிதாவின் படைப்புவெளிக்குள்ளும் தட்டுப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஜி. நாகராஜனின் புனைவுகளில் அதிகமாக வாசித்திருக்கிறேன். அந்த மனிதர்களின் மீது கொஞ்சம் இரக்கம் உண்டாக்க வேண்டும் என்ற தொனி ஜி. நாகராஜனுக்கு இருந்ததாகத் தோன்றியதுண்டு. ஆனால் பாலமுருகனின் எழுத்து அதிலிருந்து விலகி, இந்த மனிதர்களை உருவாக்கியது ஒரு தேசத்தின் திட்டமிட்ட பொருளாதார நடவடிக்கை எனக் கூறுகிறது. அவர்களின் தொழில்களாக மாறிய கூலிக்குக் கொலை செய்தல், கடத்தல், பாலியல் தொழில் ஏற்பு போன்றவற்றிற்கு அவர்கள் பொறுப்பல்ல; அவர்களை அப்படியான வாழ்க்கை வெளியில் தள்ளிய அமைப்புகளும், அவற்றின் கடந்தகால, நிகழ்காலத்திட்டமிடல்களுமே காரணங்கள் என்கிறது.
பாலமுருகனின் சிறுகதைகள், கட்டுரைகள் சிலவற்றைத் தமிழகத்திலிருந்து வரும் இடைநிலைப்பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அவரது சிறுவர் நாவலான மர்மக்குகையும் ஓநாய் மனிதர்களையும் மலேசியாவிற்குச் சென்றபோது தந்தார். அவைபற்றியெல்லாம் எழுதவேண்டும் எனத் தோன்றியதில்லை. இந்த நாவல் தனது களம், எழுத்துமுறை, எழுப்பும் கேள்விகள் என்பன மூலம் விவாதிக்கவேண்டிய நாவல் என்று தோன்றுகிறது. மலேசியா நாவல் வரலாற்றுக்குள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழ்நாவல் எழுத்துக்குள்ளும் முக்கியமான அடையாளத்தைப் பதித்துள்ளது என நினைக்கிறேன். படிக்க வேண்டிய நாவல்.
அ.ராமசாமி/ மலைகள்.காம்