Monday, September 28, 2009

சிறுகதை: நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போகும் பாதையில்


1

பின் சீட்டில் மகன் அணிந்திருந்த இருக்கை வார் ஒரு விநோதமான ஒலியை எழுப்பியவாறு இருந்ததைச் சில கணங்கள் மட்டுமே சகித்துக் கொள்ள முடிந்தது. கொஞ்சமாய் கோபம் தலைக்கேறியதும் கண்ணாடியின் வழியாக அவனைப் பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்தான். முகம் அசதியில் சோர்ந்திருந்தது. கண்ணாடியில் முகத்தை அப்பியவாறு வெளியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மகளின் உடல் அசைவினூடாக அந்த ஒலி எழும்பியிருக்கலாம் போல. அவள் நிலைகுத்திய உடலுடன் வெறும் இரப்பர் காடுகளாக விரிந்திருக்கும் இருளை அவதானித்துக் கொண்டிருக்கக்கூடிய மனநிலையில் இருக்கிறாள் போல.

“சாந்தி! சாந்தி!”

சலனமில்லாத ஒரு திடமான இருப்பு.

“எம்மா. . வெளங்குதா இல்லையா?”

காருக்குப் பின்னாடி அமர்ந்திருந்த மகளின் வாயிலிருந்து வாநீர் மெல்ல ஒழுகத் துவங்கியது. அதை அவள் சரிசெய்து கொள்ளக்கூட எழ முயற்சிக்கவில்லை.  சீரான மூச்சிரைப்புக்கு நடுவே வாயிலிருந்து ஒழுகியவாறு இருந்த வாநீர் என்னவோ போல் இருந்தது.

“சாந்தி! ஏய் சாந்தி! ஏஞ்சிரு. . ஏய்”

இருளைக் கவனித்தாக வேண்டும். பாதை எங்குக் கொண்டு போய் கொண்டிருக்கிறது என்பதில் கூட பிசகல். கண்களுக்கு எட்டாத தூரம்வரைக்கும் வெறும் இருள் மட்டும்தான். செம்மண் பாதை அனேகமாக எங்காவது ஒரு குடியிருப்புப் பகுதிக்குத்தான் கொண்டு போய் எங்களைச் சேர்த்தாக வேண்டும். ஏனோ மனம் அதை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தது.

“சாந்தி! அப்பாக்குக் கண்ணு தெரிலம்மா. . ரொம்ப இருட்டிக்கிட்டு வருது. . கொஞ்சம் பாதெ சொல்றியா?. . ஓய்”

அவள் அமர்ந்திருந்த இருக்கைத் தனியாக கழன்று இரப்பர் காட்டுக்குள் புகுந்து கொண்டிருந்தது. கைகளை எக்கினேன் அவளைப் பிடித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில். என் கைகள் நீண்டு சுருங்கி வித்தைக் காட்டியதே தவிர அவள் காட்டின் இருளுக்குள் காணாமல் போகும் தருணத்தை எட்டிப் பிடிக்கவே இயலவில்லை.

“ஐயோ! அம்மா. . தனம். . காப்பாத்து. . சாந்தி!”

2



“ப்ப்பா. . ப்பா. . என்னாச்சி?”

கண்கள் இருளைச் சுமந்திருந்தது. எங்கோ இரப்பர் காட்டுக்கு நடுவில் கார் நின்றிருந்தது. சுற்றிலும் நடு நடுவே யார் யாரோ நின்று கொண்டு எங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போல தோன்றியது. மகள் கைகளைப் பற்றியிருந்தாள். அவள் முகம்கூட சரியாகத் தெரியவில்லை.

“ஏன்ப்பா காரெ நிப்பாட்டனிங்க?”

“நீ எங்கயும் போகலியா?”

அருகில் அமர்ந்திருந்த தனம், கடுகடுப்புடன் இருந்தாள். முகத்தைக் காளியாத்தா போல கடும் கோபத்துடன் வைத்திருந்தாள்.

“என்னாங்க. . உங்களுக்கு என்னா பாதைகூடவா தெரில? ஏதோ மச்சான் கிட்ட வந்துர்றேன். . நான் பொறந்து வளந்த மண்ணுனு பீத்திகிட்டிங்க. . இப்பெ எங்க இருக்கோம்னு தெரியுதா? காடுதான் சுத்தி முத்தும்”

காரை எங்கேயோ சடாரென நான் நிறுத்திவிட்டிருக்கிறேன். எப்பொழுது என்னை நான் காருக்குள்ளேயே பிரக்ஞையைத் தொலைக்கும் வெறும் போதையாகக் கருதியிருப்பேன்? இருள் ஒரு மாயையைப் போன்றது போல. எவ்வள்ளவுதான் இருளை உடைப்பது? தொடர் முயற்சியில் எங்கயோ இருளை விழுங்கியிருக்கக்கூடும்.


“நொண்டி கும்சு. . என்னா எஸ்டேட் அது? எங்க இருக்குனு சரியாத்தான் கேட்டிங்களா? உங்கள நம்பி வந்து இப்பெ மணி 11 கிட்ட ஆச்சி”

யார் பேசுவதையும் என்னால் சிலாகித்துக் கொள்ள இயலவில்லை. மனம் அடுத்து வந்து தன் முகத்தைக் காட்ட போகும் இருளைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. இரப்பர் காட்டையும் பார்த்துக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போகும் இருளையும் சுதாரித்துக் கொண்டு இரு பிளவுகளாக அவ்வப்போது போதையேறும் ஒருமுகப்படுத்துதலையும் சரிச்செய்து கொண்டு காருக்குள் அமர்ந்திருக்கும் நான் என்பதைக் கொஞ்சமாய் மறக்கவும் செய்தேன்.

“போன் பண்ணி பாருங்க. . வெளியெ எடுங்க. . இப்படியே போய்க்கிட்ட இருந்தா ஒன்னும் முடியாது.. போன் பண்ணுங்க உங்க மச்சானுக்கு”

மனைவி ஏதோ ஆணையிடுகிறாள் என்று மட்டும் உணர முடிந்தது. குரலிலிருந்து வெளியே கழன்று விழுந்த வார்த்தைகளின் தொனி அப்படித்தான் இருந்தன. பிறகு அவளே கைத்தொலைபேசியை வெளியே எடுத்தாள். யார் யாருக்கெல்லாம் தொடர்புக் கொள்ள முடியுமோ எல்லாவற்றையும் செய்து பார்த்தாள். மகள் தோல்பட்டையைக் உலுக்கியதும் காருக்குள் வந்துவிட்டது போல உணர்ந்தேன். அருகில் மனைவி அமர்ந்திருக்கும் இருக்கைக் காலியாக இருந்தது. கார் முழுவது வெறும் இருள்தான். மகளின் கைகள் மட்டுமே சிறிய ஒளிப்பரப்பில் என்னை நோக்கி நீட்டியவாறு இருந்தது.

“சாந்தி! சாந்தி! எங்க போற?”

மகள் கார் கண்ணாடியைத் திறந்து வெளியே குதித்தாள்.

3

“ஹலோ! ஹலோ! லைன் கிடைக்க மாட்டுதுங்க! என்னங்க! என்னங்க! என்னா இந்த மனுசன் பேய் மாதிரி உக்காந்துருக்காரு”

சடாரென நொண்டி கும்சு தோட்டத்திற்குப் போவதாக நான் நம்பிக் கொண்டிருக்கும் பாதைக்குத் திரும்பினேன். இன்னும் இருள் விலகவில்லை. கார் எந்தச் சலனமும் இல்லாமல் சீராக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சிறு வளைவிலும் இருள் என்னைச் சரியாக இயக்கி வளையவிடுகிறது. எங்காவது சாக்கடையில் போய் விழுந்திருக்கலாம், அல்லது மரத்தில் மோதி சாய்ந்திருக்கலாம். வினோதமாக எந்தத் தடங்கலும் இல்லாமல் காரின் சக்கரங்கள் யாரையோத் துரத்தும் நேர்த்தியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

“ப்பா காரெ எங்காவது நிப்பாட்டுங்க. . உஸ் வருது”

மகன் அலறினான். தூக்கத்திலிருந்து அப்பொழுதான் விழித்திருக்க வேண்டும். எப்பொழுதும் அவன் 9மணிக்கு மேல் உறங்கிவிடுவான். இன்று வேறு காரில் 2மணி நேரமாக அலைந்து கொண்டிருக்கிறோம்.

“அப்பா.. காரெ நிப்பாட்டுங்க”

எங்கு நிறுத்துவது? இரப்பர் மரங்கள் அச்சுறுத்தலாக இருந்தன. காருக்கு மேலாக பார்வையை அலையவிட்டப்படி அகோரமாய் அரக்கர்கள் நின்றிருப்பது போல தெரிந்தது. காரின் விளக்கு வெளிச்சம் எனக்கு முன் ஆங்காங்கே அறுந்தும் பின்னர் இணைந்தும் ஓரளவிற்கு இருளைக் கடக்க உதவிக் கொண்டிருந்தது. காரை எங்கேயோ நிறுத்தினேன். இருளை அறுத்த ஒரு பரவெளி, கண்ணுக்கு எட்டியவரையில் மரங்களும் சூன்யத்தின் ஒலியும் மட்டும்தான்.

மகனை கீழே இறக்கிவிட்டு மனைவியும் அவனுடன் காரின் விளக்கு வெளிச்சம் படும் வளாகத்திலேயே முன்னகர்ந்தார்கள். அங்குதான் நீண்ட சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. சலசலவென நீர் ஓடும் சத்தத்தைக் கற்பனை செய்து கொண்டேன். ஒலி துறந்த வெறும் காட்டில் ஒலிகளை மனம் சுயமாக உருவாக்கிக் கொள்கிறது.

“சட்டுனு பேய்டா”

காரை அங்கிருந்து மெல்ல அகட்டினேன். முடிவு பெறாத பாதையாக எங்கேயோ எங்களை இழுத்துக் கொண்டு போனது நொண்டி கும்சுக்குப் போகும் அப்பாதை. மனைவி சோர்விலும் அதிருப்தியிலும் தலையைக் கவிழ்த்து அமர்ந்திருந்தாள். சாந்தி உறங்கிவிட்டிருந்தாள். மகன் அப்பொழுதுதான் இருக்கை வாரைச் சரிப்படுத்திவிட்டு அணிந்து கொள்கிறான்.

“என்னங்க இது? எங்கங்க போது இந்த ரோடு..? நீங்க பாட்டுக்குப் போயிகிட்டே இருக்கீங்க? எங்க வந்து நுழைஞ்சிங்க, எந்தப் பாதையிலே திரும்புனிங்க. . சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி போய்கிட்டு இருக்கீங்க”

அவள் கோபத்தின் உக்கிரத்தில் வார்த்தைகளை எறிந்தாள். அந்த இருள் அடர்ந்த காட்டில் அவளின் ஒலி மட்டும் அசுரத்தனமாக ஒலித்து மீண்டும் எங்கோ இரப்பர் பத்திகளில் கரைந்து தொலைந்தது.

“அப்பா பின்னாலெ யாரோ தொரட்டிக்கிட்டு வராங்கப்பா. . அப்பா வேகமா போங்கப்பா.. ஐயோ கொம்புலாம் இருக்குப்பா. . மாடு இல்லப்பா.. வேகமா போங்கப்பா. . நம்ப இங்கயே சாவப் போறம்ப்பா. . சட்டுனு போங்கப்பா”

தலைக்கு மேல் இருக்கும் பின்பக்கத்தைப் பார்க்கும் கண்னாடியில் எக்கிப் பார்த்தேன். என் மகள் சாந்திதான் காருக்குப் பின்னால் தலையில் கொம்புகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தாள். மூச்சிரைப்பு அதிகமாகியது. காரை வேகமாக செலுத்தினேன். மனைவி மீண்டும் வாநீர் வடிய வினோதமான ஒலியை எழுப்பியவாறு வயிறை மேலே எழும்பவிட்டு மீண்டும் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“அப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா. . ஏய் நில்லு. .”

முதுகில் யாரோ ஏறி உட்கார்ந்து கொண்டதும், தலை கணமானது. இருள்!

4

“அவரு பதில் சொல்லமாட்டாருங்க. . என்னமோ ஆச்சி. . இந்தப் பாதை எங்க போது? வழி தெரியாம மாட்டிக்கிட்டோம், பிளிஸ் உதவி பண்ணுங்களேன்”

மீண்டும் காருக்குள் வந்துவிட்டேன். யாரோ என் சன்னல் கண்ணாடி பக்கமாக மிகவும் நெருக்கமாக தலையை உள்ளே நீட்ட முயற்சிக்கும் பாவணையில் நின்றிருந்தார். விழிப்பு வந்தது போல உணர்ந்தேன். உறங்கியிருப்பேனா? பிறகெப்பட்டி காரை நிறுத்தியிருப்பேன்?

“என்ன தம்பி ஒரு நிலையிலே இல்லெ போல. . காரெ நிப்பாட்டனெ ஆனா ஒன்னும் பேச மாட்டறெ?”

அவருக்குப் பதில் சொல்ல விருப்பம் இல்லாதவனைப் போல அமர்ந்திருந்தேன்.

“நீங்க பாதையை உட்டுட்டு ரொம்ப தூரம் வந்துட்டீங்க. . இந்தப் பாதை எங்க போதுன்னு எனக்கும் தெரியாது. . அந்தக் காலத்துலே எஸ்டேட்டுக்கு எஸ்டேட்டு பல பாதைங்க போகுமாம். . இது எங்க போயி உடுமோ? எதுக்கு வம்பு.. ராத்திரி ஆச்சி வேற இங்க இருக்கறது அவ்வளவு நல்லது இல்ல தம்பி! பிள்ளிங்கள வேற வச்சிருக்கிங்க. . இந்தப் பாதையிலே பகல்லே யாரும் வரமாட்டாங்கெ”

“இப்பெ நாங்க வெளியாவறதுன்னா எப்படி? நொண்டி கும்சு எஸ்டேட்டுக்குப் போகனும்”

“பயப்படாதீங்க. . நீங்க வந்த பாதையிலெ இன்னும் 20 கிலோ மீட்டர் போனிங்கனா, வலது பக்கம் ஒரு கொட்டாய் தெரியும். . அங்க இன்னொரு வலைவு இருக்கறது யாருக்கும் அவ்ள சீக்கரம் தெரியாது. . அதனாலத்தான் இங்க வந்து விட்டிருச்சி உங்கள. அந்தப் பாதையில நுழைஞ்சி இன்னும் 15 கிலோ மீட்டர் போனிங்கனா அதுதான் நொண்டி கும்சு எஸ்டேட்டு”

“ஓ அப்படியாங்க. . அசந்து போயிட்டங்க. . பயமா வேற ஆச்சி. . சரி கெளம்பலாம் வாங்க. . வண்டிய எடுங்க”

காரை மீண்டும் அங்கிருந்து திருப்புவதற்காக தயார்ப்படுத்தினேன்.

“தம்பி கொஞ்ச நேரம் கீழ இறங்கி வா. . முக்கியமா பேசனும். . அம்மா. . கொஞ்ச நேரமா”

கார் கதவைத் திறந்தபோது இரப்பர் காட்டின் காற்று இலேசாக முனகியது. பூச்சிகளின் சத்தங்களைத் தவிர வெறோன்றும் இல்லை. அவருக்குப் பக்கத்தில் சென்றதும் ஏதோ பாதுகாப்புக் கிடைத்தது போல இருந்தது.

“தம்பி! நான் சொல்றதெ பதறாமெ அமைதியா பயப்படாமெ கேளு. . யாருக்கும் தெரியக்கூடாது. . நீ நிதானமா இருக்கறதுலாம் எல்லாமே இருக்கு! கார்லெ எத்தனை பேரு இருக்கீங்க?”

அவர் பேசியதை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அலட்டல் இல்லாமல் அவர் எதையோ சொல்ல முற்படுகிறார் என்பதை மட்டும் உணர முடிந்தது.

“நானு என் பொண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சார். . நாலு பேர். . ஏன் கேக்கறீங்க?”

“தம்பி நிதானமா இரு.. நான் சொன்னோன திரும்பி பாக்காதெ அவசரப்படாதே. . உன்னோட தைரியம்தான் இப்பெ உனக்குப் பலம். ஓகேவா?”

“சரி சொல்லுங்க”

“உன் கார்லே பின்னாலே 5ஆவது ஒரு ஆளு உக்காந்துருக்காங்க. .”

உடலின் சிலிர்ப்பைத் தாங்க முடியவில்லை. யாரோ தலையில் ஓங்கி அடித்தது போல உச்சந்தலை சிலிர்த்தது.

“ஒன்னும் பேசாமே நீ பாட்டுக்குக் காரெ எடுத்துக்கிட்டு இன்னும் 5 கிலோ மீட்டர் தாங்கிகிட்டு போ. . அதுக்கப்பறம் இடது பக்கம் காட்டுலே முனியாண்டி சாமி கோயிலு இருக்கு. . அதோட அவரோட எல்லை. . ஒன்னும் வராது. . எப்பவும் போல ஏறி போ. . மனசுல கடவுளெ நினைச்சிகிட்டு பின்னால பக்கம் கண்ணாடியெ பாக்காமெ போ”



என்னைக் கேட்காமலேயே கால்கள் நடுங்கத் துவங்கின. ஏதோ சமாளித்துக் கொண்டு அவர் உதிர்த்த அந்த நம்பிக்கை அளிக்கக்கூடிய சமாதானத்துடன் காரில் ஏறி அமர்ந்தேன். பின்பக்கம் பார்க்க மனம் உசுப்பினாலும் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். காரில் மனைவி முனகுவது மட்டும் கேட்டது. வெளியெங்கும் அகால சூன்யம். மரக்கிளைகளின் சலசலப்பும் இருளின் முணுமுணுப்பும் என்னைக் காரிலிருந்து வெளியே வீசுவது போல் தோன்றியது. மனம் இறுக கடவுளின் நாமங்களை உச்சாடனம் செய்து கொண்டே இடது பக்க காட்டைக் கவனித்துக் கொண்டே வந்தேன். முனியாண்டி சாமி கோவிலின் கோபுரம் தட்டுப்பட்டால் பிறவி பலனை அடைந்துவிடலாம் என்று பட்டது. என் பயத்தை வெளிகாட்டிவிடுவேனோ என்ற அச்சம் வேறு.

“தம்பி! திரும்பிப் பார்த்துறாதீங்க. . முனியாண்டி துணை இருப்பாரு”

இருள் உடையும் கணங்களினூடாக சற்று முன்பு பார்த்தவர் யார் என்கிற சந்தேகம் கிளைவிடத்துவங்கியது. அவர் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்? அவர் பெயர் என்ன? ஏதும் தெரியாமல் வெறுமனே காரின் சக்கரத்தை நம்பிக் கொண்டு போய் கொண்டிருந்தேன். மகள் சாந்தி ஏதோ முனகியவாறே எழுந்தாள். என் தோள் பட்டையை அழுத்தி என்னவோ கேட்கத் தயாரானாள்.

“அப்பா. . எங்கப்பா இங்க என் பக்கத்துலே உக்காந்திருந்த அந்தச் சீனப் பிள்ளையே காணம்?”

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com
நன்றி: திண்ணை

தமிழ்மணம் வலைத்தளத்தின் வார நட்சத்திரமாக ( 28.09.2009 – 05.10.2009) – உண்மையை விட்டு தப்பிக்க முடியாது

தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகியால் உலகளாவிய தமிழ்வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க அளவில் எழுதிவரும் ஒரு வலைப்பதிவர் இந்த வார நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த வகையில் இந்த வாரத்தின் நட்சத்திரமாக தமிழ்மணம் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சில சர்ச்சையில் சிக்கிக் கொண்ட பிறகே என் வலைப்பூ பரவலான கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. சில சமயங்களில் சர்ச்சையில் சிக்கிக் கொள்வதால் நன்மையும் இருக்கிறது போல.

http://www.tamilmanam.net/index.html

படைப்பிலக்கியம் – நவீனத்துவம் – மதிப்பீடுகள் எனும் தலைப்பில் என் வலைப்பூ “கே.பாலமுருகன்” இயங்கிக் கொண்டிருக்கிறது. என் படைப்புகள் குறித்த எனது பார்வை, மதிப்பீடுகள், கட்டுரைகள், அனுபவ பகிர்வுகள், எதிர்வினை கட்டுரைகள், வம்புச் சண்டை என இந்த வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் நட்சத்திர வாரம் அறிமுகம் மூலம் வலைப்பதிவைப் பற்றியும், வலைப்பதிவரைப் பற்றியும் புதிதாக பலரும் அறிந்துகொள்ள, அதன் மூலம் தகுந்த ஊக்கம் பெற இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப் படுகிறது. தற்கால சூழலில் இணையத்தளமும், இணையத்தள வாசிப்பும், வலைப்பதிவாளர்களின் பங்களிப்பும் அதீதமான அளவில் வளர்ச்சிப் பெற்று வருகின்றன.

உண்மை மிக கசப்பானது. உண்மையை விட்டு எவரும் ஓடவும் முடியாது என்று நம்புகிறவன் என்பதால், இந்தப் புரிதல் அன்மையில் ஏற்பட்ட ஒன்றாகவும் இருக்கக்கூடும். சில சமயங்களில் உண்மையைப் பூடகமாகவோ படைப்பாகவோ சொல்ல நேர்ந்துவிடுவதால், அந்த உண்மையைவிட்டு பலர் தப்பிக்க நினைக்கிறார்கள். பொய்யான பிம்பங்களுடன் உண்மைக்கு எதிராக வசைப்பாடுகிறார்கள், எல்லாம் நித்யம் என்கிற மாயையில், மொழி சார்ந்து மட்டும் இறுக்கமான தர்க்கங்களுடன், அரசியல் நெருக்கடி, வாழ்வின் பயங்கர பக்கங்களை, வாழ்வனுபவனுவத்தின் நிதர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு பரிபூரண கதாநாயகன் போல வலம் வர துடிக்கும் முயற்சிகளுடன் முன்னெடுக்கும் சிலரின் மனோபாவங்களுக்கு எதிரானதுதான் என் எழுத்து.

எனது பலவீனங்களை ஒப்புக் கொள்பவன் நான், ஆனால் என் பலவீனங்களைப் பார்த்து கேலி செய்பவர்கள் எனக்கு எதிரானவர்கள். தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பேசியவர்தான் என்னை உடல் வலிமையற்றவன் என்று எனக்கு நேர்ந்த தாக்குதல் குறித்து கேலி செய்தவர். மனிதனாக வாழ முடியாதவனுக்கு மொழி எதற்கு? மொழியின் நாகரிகம் எதற்கு? உண்மையை மறைத்துவிட்டு ஏதும் நடக்காததைப் போல உயர்ந்த இலக்கை வகுத்துக் கொண்டு என்ன இலக்கியம் படைக்கப் போகிறோம்? இலக்கியம் வாழ்வின் கசப்புகளையும், வலியையும், கொண்டாட்டங்களையும், மனித நுகர்வையும், வாழ்பனுபவங்களையும், முன்னோர்களின் பதிவுகளையும், அடிமைப்பட்ட கணங்களையும், நம் வாழ்வின் தரங்களைத் தாழ்த்திய அதிகாரங்களையும் சொல்வதாக, உண்மையுடன் சொலவதாக இருக்க வேண்டும். சொகுசான ஒரு நண்ணெறிப் பண்பை வகுத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வதல்ல இலக்கியம். (ஓவ்வொரு படைப்பிற்குப் பின்னனியிலும் வாழ்விற்குத் தேவையான பலவித கூறுகளும், உண்மைகளாக அதன் அடுக்குகளில் புதைந்திருக்கும். வாழ்வும் அப்படித்தான் வாழ்ந்து கழிகிறது, அதைத் தேடி கண்டடையும் அனுபவம் வாசகனைச் சார்ந்தது, எல்லாவற்றையும் பிரச்சாரம் செய்து வாழ்வை விற்பனை செய்ய அது என்ன நாடகமா?)

இன்று நாட்டிற்கு நாடு இலக்கியம் வேறுபடுவது எதனால்? ஈழத்து இலக்கியம் போல தமிழ்நாட்டு இலக்கியம் காத்திரம் கொண்டிருக்கவில்லையே ஏன்? லத்தீன் அமெரிக்க இலக்கியம் போல அமெரிக்க இலக்கியம் காத்திரம் கொள்ளவில்லையே எதனால்? ஆப்ரிக்கா பூர்வக்குடியின் காலனித்துவ வாழ்வு அடிமட்ட அடிமைத்தனத்தில் புரண்டி கசிந்ததே, அதை எந்த உயர்ந்த இலக்குடன் சொல்லப் போகிறோம்? ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்ற நீதி கதையுடனா? உண்மை சுடும். அதிலிருந்து தப்பிக்க, இலக்கியம் என்றால் இலக்கு இருக்க வேண்டும், நோக்கம் இருக்க வேண்டும், இலக்கணம் இருக்க வேண்டும், தொடக்கம் முடிவு என்று பாடம் கற்பித்துக் கொள்ளத் துவங்குகிறார்கள். அவர்களின் தப்பித்தல் இங்கிருந்து துவங்குகிறது.

ஆகையால் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் வாழ்பனுவம் வெவ்வேறு பின்னனியால், வெவ்வேறு வாழ்க்கை தரத்தால், வெவ்வேறு அதிகார நெருக்குதலால் மாறுப்பட்டு அதன் தளத்தில் அதன் உக்கிரத்தில், அதன் நிலைத்தன்மையுடன் தனது எல்லையை நுட்பத்துடன் ஒரு கதைச் சொல்லியாக விரித்துக் கொள்கிறது. இலக்கியம் அந்த வாழ்வின் நிசங்களை, யதார்த்தங்களை, உண்மையைச் சொல்லும் களமாகவே உலக நாடுகளில், ஈழத்து மண்ணில், புலம் பெயர் நாட்டின் நிலப்பரப்பில் பாவிக்கப்பட்டு வருகின்றன. எல்லாம் வெறும் புனைவு என்று பிறருக்குப் புத்திச் சொல்லி திரிவதல்ல இலக்கியம்.

எழுத்தாளர் அ.முத்துலிங்கம்: படைப்பு என்பது ஆமையின் குஞ்சுகள் போல, ஆமை முட்டையிட்டு, மணலில் தோண்டி முட்டைகளைப் புதைத்துவிட்டு வந்துவிடும். முட்டைகள் சொந்தமாகப் பொறிந்து, அதன் நுகர்வுத்தன்மைக்கேற்ப, கடலின் நெடியை உள்வாங்கிக் கொண்டு சுயமாகக் கடலை வந்து சேரும். அது போல் என் படைப்பு அதற்கான களத்தை சேர்ந்துவிடும், என் நுகர்வைக் கொண்டிருப்போர், என் படைப்பை வந்து அடைக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி: என் படைப்பு ஒரு சாவி. எல்லாம் பூட்டுகளையும் திறக்க முடியாவிட்டாலும், என் சாவி சில பூட்டுகளைத் திறந்துவிடும்போது, என் வாசகர்கள் என்னை வந்து அடைகிறார்கள்.

பொது நுகர்விற்காகவும், பிறர் விருப்பத்திற்கும் இலக்கியம் படைக்க துவங்கினால், அது போல ஒரு வியாபாரம் கிடையாது என்றே சொல்லலாம். அதற்குப் பதில் சந்தையில் மீன் வியாபாரம் செய்யலாம். நீ வகுக்கும் இலக்கிற்காக என்னால் வாழ முடியாது, அப்படியிருக்க நீ நினைப்பது போல பிறர் இலக்கியம் படைக்க, இலக்கியம் என்ன உன் அப்பன் வீட்டுச் சொத்தா? அல்லது இலக்கிய உரிமையை நீ வாங்கி விட்டாயா? படைப்புலகம் எழுத்துக்கு எழுத்து எழுத்தாளர்களுக்கு எழுத்தாளர் மாறுப்படும். மற்றுமொரு மாற்றுச் சிந்தனையுடன் இலக்கியத்தை அணுகும் ஒரு உலகலாவிய சூழல் இருக்க, இன்னும் பழமைப்பேசிகள் போல நம் இலக்கியத்தை பின்னுக்கு இழுக்கும் உத்திகளுக்குப் பலர் தயாராகவே இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நொடியும் வாசிப்பாலும் தெளிவாலும் நம்மை நாம் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. பழமை பேசிகளுக்கு வேண்டுமானால் அவர்கள் அறிவாளியாகவும், அவர்களின் உன்னத வடிவத்தை ஏற்காதவன் முட்டாளாகவும் தெரியக்கூடும். உண்மையை விட்டு நெடுந்தூரம் ஒரு கானல் நீரின் மேற்பரப்பில் மிதக்கும் அந்த ஆன்மாக்களுக்காக வருந்துவதைத் தவிர கொஞ்சம் விவாதமும் செய்து பார்க்கலாம். ஆனால் அதிலேயே நமது சக்திகளை விரையமாக்குவது வீண் என நினைக்கிறேன். Ignore and go. அவர்களை நிராகரித்துவிட்டு நமது புரிதலுடன் பயணிப்பதுதான் சாமர்த்தியம் என நண்பர் ஒருவர் கூறினார். உண்மை.

மீண்டும் வருவேன்
கே.பாலமுருகன்