5ஆம் திகதி கோலாலம்பூரில் வல்லினம் ஏற்பாட்டில் 4ஆவது கலை இலக்கிய விழா 4 நூல்களின் வெளியீட்டுடன் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. வல்லினம் ஆசிரியர் ம.நவீன், யோகி, சிவா பெரியண்ணன் மேலும் பல நண்பர்களின் ஒத்துழைப்புடன் விழாவை முன்னெடுக்க முடிந்தது. 2மணியைப் போல விழா ம.நவீனின் வரவேற்புரையுடன் தொடங்கியது. வல்லினம் பதிப்பகத்திற்கும் மற்ற பதிப்பகத்திற்குமான வித்தியாசத்தை முன்வைத்து, மற்ற மலேசிய எழுத்தாளர்கள் அதிகாரத்தின் முன் கூனி குறுகி நின்று புத்தகம் போடும் அவலத்தை அழுத்தமாகச் சொன்னார். புத்தகம் எழுதும் எழுத்தாளர்களுக்கு ரோயல்டி வழங்குவதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். அரசியல்வாதிகளை நம்பி புத்தகம் போடும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவை எப்படி அரசியல்வாதிகள் தங்களின் பிரச்சார மேடையாகப் பாவித்துக்கொள்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்.