நான், தேவராஜன், பச்சைப்பாலன், மூர்த்தி அவர்களும் உரையாடிக்கொண்டே அருமாகையிலுள்ள உணவகத்திற்குச் சென்றோம். எல்லோரும் உணவருந்தும்போது கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த “நடுநிசி நாய்கள்” படம் குறித்த உரையாடல் தொடங்கியது. சமீபத்தில் முகநூலில் அப்படம் குறித்து சிறிய விமர்சனம் செய்திருந்ததைப் படித்துவிட்டு எழுத்தாளர் பச்சைபாலன் தனியாகச் சென்று அப்படத்தைப் பார்த்து வந்தார். கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தை எந்தச் சலனமும் பதற்றமும் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒரு பார்வையாளன் இங்கு இல்லை என்பதுதான் பலவீனமே தவிர படமல்ல எனச் சொன்னேன். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் எழுதி தமிழில் அபாரமான சமூக ஒழுக்க நியதிகளுக்கு எதிரான பாய்ச்சலை ஏற்படுத்திய குறுநாவலான ரிஷி மூலத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்துகிறது.